Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நும்மைத் தொழுதோம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

நும்மைத் தொழுதோம்

திருவிந்தளூர்

இவ்வூரைத் திருவழுந்தூர் என்றும் கூறுவர். இது மாயவரத்தின் அருகில் உள்ளது. இங்கு ஸ்ரீரங்கநாதர் ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டிருக்கிறார். இவரைப் பரிமளரங்கன் என்று கூறுவர். இவ்வூருக்குச் 'சுகந்தவனம்' என்று வடமொழியில் பெயர் உண்டு. காவிரிக் கரையில் அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் திவ்விய தேசங்களுள் இது கீழ்க் கோடியில் இருக்கிறது. திருமங்கையாழ்வார் இவரைச் சேவிக்க வந்தார். அப்போது கோவில் காலம் முடிந்துவிட்டபடியால் சன்னிதிக் கதவு மூடப்பட்டது. பகவானை சேவிக்கமுடியவில்லையே என்று துடித்த ஆழ்வார், 'வாழ்ந்தே போம் நீரே' என்று பகவானைக் கூறிய இடம் இவ்வூர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருவிந்தளூர்ப் பெருமானே! எம்மைக் காப்பாற்று

1328. நும்மைத் தொழுதோம் நுந்தம்

பணிசெய் திருக்கும் நும்மடியோம்,

இம்மைக் கின்பம் பெற்றோ

மெந்தாய் இந்த ளூரீரே,

எம்மைக் கடிதாக் கரும

மருளி ஆவா வென்றிரங்கி,

நம்மை யருகால் காட்டி

நடந்தால் நாங்க ளுய்யோமே? 1

இந்தளூராய்! இரக்கம் காட்டு

1329. சிந்தை தன்னுள் நீங்கா

திருந்த திருவே! மருவினிய

மைந்தா, அந்த ணாலி

மாலே! சோலை மழகளிறே,

நந்தா விளக்கின் சுடரே!

நறையூர் நின்ற நம்பீ,என்

எந்தாய்! இந்த ளூராய்!

அடியேற் கிறையு மிரங்காயே. 2

அயலார் ஏசுகின்றனர்: அருள் செய்வாய்

1330. பேசு கின்ற திதுவே

வைய மீரடி யாலளந்த,

மூசி வண்டு வரலும்

கண்ணி முடியீர், உமைக்காணும்

ஆசை யென்னும் கடலில்

வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்

ஏசு கின்ற திதுவே

காணும் இந்த ளூரீரே! 3

எம்பெருமானே! நீரே வாழ்ந்து போம்

1331. ஆசை வழுவா தேத்து

மெமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்

தேச மறிய வுமக்கே

யாளாய்த் திரிகின் றோமுக்கு,

காசி னொளியில் திகழும்

வண்ணம் காட்டீர், எம்பெருமான்

வாசி வல்லீர் இந்த

ளூரீர்! வாழ்ந்தே போம்நீரே! 4

எங்களுக்கு நீரே பெருமாள்!

1332. தீயெம் பெருமான் நீரெம்

பெருமான் திசையு மிருநிலனு

மாய்,எம் பெருமா னாகி

நின்றா லடியோம் காணோமால்,

தாயெம் பெருமான் தந்தை

தந்தை யாவீர், அடியேமுக்-

கேயெம் பெருமா னல்லீ

ரோநீர் இந்த ளூரீரே! 5

எல்லோரையும் போல் என்னையும் நினையாதீர்!

1333. சொல்லா தொழிய கில்லேன்

அறிந்த சொல்லில், நும்மடியார்,

எல்லா ரோடு மொக்க

வெண்ணி யிருந்தீ ரடியேனை,

நல்லா ரறிவீர் தீயா

ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,

எல்லா மறிவீ ரீதே

யறியீர் இந்த ளூரீரே! 6

பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள்

1334. மாட்டீ ரானீர் பணிநீர்

கொள்ள எம்மைப் பணியறியா

வீட்டீர், இதனை வேறே

சொன்னோம் இந்த ளூரீரே,

காட்டீ ரானீர் நுந்த

மடிக்கள் காட்டில் உமக்கிந்த,

நாட்டே வந்து தொண்ட

ரான நாங்க ளுய்யோமே. 7

தங்கள் வண்ணத்தைக் காட்டக்கூடாதா?

1335. முன்னை வண்ணம் பாலின் வண்ணம்

முழுதும் நிலைநின்ற,

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்

வண்ண மெண்ணுங்கால்,

பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்

புரையுந் திருமேனி,

இன்ன வண்ண மென்று காட்டீர்

இந்த ளூரீரே! 8

எந்தையே! திருமேனி வண்ணத்தைக் காட்டுங்கள்

1336. எந்தை தந்தை தம்மா

னென்றென் றெமரே ழேழளவும்,

வந்து நின்ற தொண்ட

ரோர்க்கே வாசி வல்லீரால்,

சிந்தை தன்னுள் முந்தி

நிற்றிர் சிறிதும் திருமேனி,

இந்த வண்ண மென்று

காட்டீர் இந்த ளூரீரே! 9

அமரர்க்கும் அமரராவர்

1337. ஏரார் பொழில்சூழ் இந்த

ளூரி லெந்தை பெருமானை,

காரார் புறவில் மங்கை

வேந்தன் கலிய னொலிசெய்த,

சீரா ரின்சொல் மாலை

கற்றுத் திரிவா ருலகத்து,

ஆரா ரவரே யமரர்க்

கென்று மமர ராவாரே. 10

அடிவரவு: நும்மை சிந்தை பேசு ஆசை தீயெம் சொல்லா மாட்டீர் முன்னை எந்தை ஏரார் -- ஆய்ச்சியர்.
  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கவளயானை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஆய்ச்சியர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it