Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நந்தா விளக்கு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

மூன்றாம் பத்து

நந்தா விளக்கு

திருநாங்கூர்

திருமணி மாடக் கோயில்

சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்கு ஏழு கல் தொலைவில் திருநாங்கூர் இருக்கிறது. நூற்றெட்டு திவ்வியதேசங்களும் அடங்கிய பதினொருதிவ்வியதேசங்கள் திருநாங்கூர்ப் பகுதியில் இருக்கிற்ன. அவற்றுள் மணிமாடக் கோயிலில் இருக்கும் எம்பெருமானைப் பற்றியது இப்பாசுரம்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே! மணிமாடக் கோயிலை வணங்கு

1218. 'நந்தா விளக்கே! அளத்தற் கரியாய்!

நரநா ரணனே! கருமா முகில்போல்

எந்தாய், எமக்கே யருளாய்,' எனநின்று

இமையோர் பரவு மிடம்,எனத் திசையும்

கந்தா ரமந்தே னிசைபா டமாடே

களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,

மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 1

கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்

1219. முதலைத் தனிமா முரண்தீர வன்று

முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,

விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி

வினைதீர்த்த வம்மா னிடம்,விண் அணவும்

பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப்

பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,

மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 2

திருமகளைத் தழுவியவன் இடம் திருநாங்கூர்

1220. கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று

கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்

இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ

டணைந்திட்ட வம்மா னிடம்,ஆ ளரியால்

அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்

அணிமுத்தும் வெண்சா மரையோடு பொன்னி

மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 3

கருடவாகனனின் மணிமாடக் கோயிலை வணங்கு

1221. சிறையார் உவணப்புள் ளன்றேறி யன்று

திசைநான்கும் நான்கு மரிய, செருவில்

கறையார் நெடுவே லரக்கர் மடியக்

கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நல்வேதர்

ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 4

கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்

1222. இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு

இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,

தழைவாட வன்தாள் குருந்த மொசித்துத்

தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,

குழையாட வல்லிக் குலமாட மாடே

குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,

மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்,

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 5

பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்

1223. பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப்

பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்

உண்ணா முலைமற் றவளாவி யோடும்

உடனே சுவைத்தா னிடம்,ஓங்கு பைந்தாள்

கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக்

கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,

மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 6

காளியன்மீது நடனமாடியவன் இடம் திருநாங்கூர்

1224. தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத்

தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,

இளைக்கத் திளைத்திட டதனுச்சி தன்மேல்

அடிவைத்த அம்மா னிடம்,மா ததியம்

திளைக்கும் கொடிமா ளிகைசூழ் தெருவில்

செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று, முன்றில்

வளைக்கை துளைப்பாவை யர்மாறு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 7

கிளிகளும் வேதம் பாடும் திருநாங்கூரை வணங்கு

1225. துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்

துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா

இளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம்

விளைவித்த வம்மா னிடம்,வேல் நெடுங்கண்

முளைவா ளெயிற்று மடவார் பயிற்று

மொழிகேட் டிருந்து முதிராத வின்சொல்,

வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 8

தேவர்கள் பணியும் மணிமாடக்கோயிலை வணங்கு

1226. 'விடையோட வென்றாய்ச்சி மென்தோள் நயந்த

விகிர்தா! விளங்கு சுடராழி யென்னும்,

படையோடு சங்கொன் றுடையாய்!'எனநின்று

இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்

பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத்

தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்,

மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்

மணிமாடக் கோயில் வணங்கென் மனனே! 9

இத்தமிழ்மாலை பாடுவார் சக்கரவர்த்தி ஆவார்

1227. வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர்

மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு,என்றும்

தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்கோன்

கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,

கண்டார் வணங்கக் களியானை மீதே

கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,

விண்தோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்

MKc ருலகாண் டுவிரும் புவரே. 10

அடிவரவு: நந்தா முதலை கொலை சிறை இழை பண் தலை துளை விடையோட வண்டார் -- சலங்கொண்ட.


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கள்வன்கொல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  சலங்கொண்ட
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it