Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பாராயது

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

பாராயது

திருக்கடல் மல்லை

மாமல்லப்புரத்திற்குத் திருக்கடல்மல்லை என்று பெயர். இவ்வூரில் பகவான் தலையிவ் படுத்துக்கொண்டு இருக்கிறான். அதனால் அவருக்கு 'ஸ்தலசாயீ' என்று திருநாமம். புண்டரீகர் என்ற மகரிஷி ஒருவர் இருந்தார். அவர் பக்தியோடு கொண்டு வந்த மலரை அணிந்துகொள்ள பகவான் விரும்பினான். அதனால் பாற்கடலில் பாம்பணையை விட்டு இங்கு வந்து கடற்கறையில் பள்ளி கொண்டான். அடியார்களிடம் அன்பு கொண்டவனன்றோ அவன். உத்ஸவருக்கு 'உலகுய்ய நின்றான்' என்று திருநாமம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருக்கடல் மல்லையில் திருமாலைக் கண்டேன்

1088. பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்

படுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட

சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்

சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும் பினை,

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்

புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,

காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

காண்டவ வனம் எரித்தவன் கடல்மல்லையில் உள்ளான்

1089. பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்

பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி

மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை

என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்றன்னை

நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்

கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை

1090. உடம்புருவில் மூன்றென்றாய் மூர்த்திவேறாய்

உலகுய்ய நின்றானை, அன்றுபேய்ச்சி

விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து

விளையாட வல்லானை வரைமீகானில்

தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்

தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,

கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

கண்ணபிரான் ஊர் கடல்மல்லை

1091. பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்

பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான் நோக்கின்,

ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை

அந்தணர்தம் தமுதத்தைக் குரவைமுன்னே

கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்

கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்

காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

மல்லரைக் கொன்றவன் ஊர் கடல்மல்லை

1092. பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்

பாலகனா யலிலையில் பள்ளியின்பம்

ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன

ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,

தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்

பொய்யறைவாய் புக்பெய்த மல்லர்மங்கக்

காய்ந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

வராகவதாரம் எடுத்தவன் வாழ்விடம் கடல்மல்லை

1093. கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்

கிளர்பொறிய மறிதிரிய வதனின்பின்னே

படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு

பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற

இடந்தானை, வளைமருப்பி னேனமாகி

இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்

கடநதானை, எம்மானைக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

நினைப்பவரின் உள்ளத்தில் நிலையாக வாழ்பவன்

1094. பேணாத வலியரக்கர் மெலியவன்று

பெருவரைத்தோ ளிறநெரித்தன்றவுணர்கோனை,

பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்

பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை

ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான்றன்னை

உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,

காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

கமலக்கண்ணன் இடம் கடல்மல்லை

1095. பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்

பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை

தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யமென்னும்

தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,

என்ணானை யெண்ணிறந்த புகழினானை

இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட

கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

வேதங்கள் கண்டவனைக் கமல்மல்லையில் காணலாம்

1096. தொண்டாயார் தாம்பரவு மடியினானைப்

படிகடந்த தாளாளற் காளாயுயத்ல்

விண்டானை, தென்னிலங்கை யரத்தர்வேந்தை

விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,

பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து

வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்

கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்

கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

தீவினைகளின் வேர் அறும்

1097. படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்

படவெகுண்டு மருதிடைபோய்க் பழனவேலி,

தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்

தாமலைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,

கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்

கலிகன்றி யலிசெய்த இன்பப்பாடல்,

திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்

தீவினையை முதலரிய வல்லார்தாமே.

அடிவரவு - பார் பூண்ட உடம்பு பேய் பாய் கிடந்தான் பேணாத பெண் தொண்டு படம் - நண்ணாத

 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அன்றாயர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நண்ணாத
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it