Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீ ஆண்டாள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

ஸ்ரீ ஆண்டாள்

முன்பு திரேதா யுகத்தில் விதேக நாட்டில் மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசலலை அமைத்தற்பொருட்டுக் கலப்பை கொண்டு பூமியை உழுகையில், அவ்வுழுபடைச் சாலிலே ஸ்ரீ தேவியின் அமிசமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் தன் புத்திரியாகப் பாவித்துச் சீதையென்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அச்சீதையை அயோத்தி வேந்தன் தசரதனுக்குக் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் மணந்து, மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தார். ஸ்ரீ தேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செயல்கள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டி திருமாலின் அவதாரமாகிய இராகவனுக்கு இனிய துணைவியானாள்.

அதுபோலவே, பின்பு கலி யுகத்தில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் இறைவனுக்கு மலர் மாலை கட்டித் தருவதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் துளசி மலரில் (A. H. 9-ஆம் நூற்றாண்டில்) நள ஆண்டு ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமையன்று பூர நட்சத்திரத்தில் பூமிப்பிராட்டியார் அமிசமாய்ப் பெண் குழந்தை தோன்றியது. அங்ஙனம் அவதரித்த அப்பெண் குழவியை நந்தவனத்தில் பார்த்த பெரியாழ்வார் பெருங்களிப்புக் கொண்டு, அக்குழவியைத் தமது மகளாகப் பாவித்துக் கோதை எனப் பெயரிட்டு வளர்க்கலாயினார்.

இந்நிலவுலகின்கண் திருமாலடியவர்களாக அவதரித்து, ஆழ்வார்களெனச் சிறப்பித்துக் கூறப்பெறும் பன்னிருவருள், பரமனைப் பக்தியினாலும் நாயகி பாவத்தினாலும் சொல்மலர்களாகிய பாமாலையைச் சுவைபடச் சித்தரித்ததோடு அமையாது, தாமே நாயகியாக வேண்டும் எனும் எண்ணத்தோடு, அரங்கனை ஆராதித்து, அவனை நாயகனாகவும் அடைந்துய்யும் பேறு பெற்ற செல்வியே இக்கோதையாவாள். வில்லிபுத்தூரார், கோதை என்னும் அப்பெண் குழவிக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து, பரமஞானத்தைப் போதித்தார்.

தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி இளமை தொடங்கி எம்பெருமான் பக்கலிலே பக்திப் பெருவேட்கை கொண்டு, அவனையே தாம் மணஞ்செய்து கொள்ளக் கருதி, அப்பிரானது பெருமைகளையே எப்பொழுதும் சிந்தித்தல், துதித்தல், முதலியன செய்து வாழ்ந்த கோதையார், நாடோறும் விட்டுசித்தர் என்னும் பெரியாழ்வார் வடபெருங்கோயிலானுக்குச் சார்த்துதற்காகக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாத காலத்து எடுத்துத் தம் குழலிலே தரித்துக் கொண்டுஅப்பெருமானுக்கு, 'நான் நேரொத்திருக்கின்றோனோ'எனச் சிந்தித்தல் வழக்கம். மாலை சூட்டிக்கொள்ளுதலுடன் சிறந்த அணிகலன்களை அணிந்து, உயர்ந்த பட்டாடையை உடுத்தித் தம்மை அலங்கரித்து, அவ்வொப்பனையழகைக் கண்ணாடியிலே கண்டு, தந்தையார் காணாதவாறு மலர் மாலையைக் களைந்து முன்போலவே செண்டாகச் சுற்றிப் பூங்குடலையினுள்ளே வைத்துவிடுதல் அவரது தினசரி வழக்கம். இதனை

அறியாத ஆழ்வார் அம்மாலையைக் கொண்டு சென்று இறைவனுக்குச சாத்திவர, பெருமானும் விருப்புடன் அதனை ஏற்றருளினான்.

இங்ஙனம் பல நாட்கள் சென்றபின் ஒருநாள் வெளியிற் சென்ற ஆழ்வார் விரைவில் வீட்டிற்கு எழுந்தருளிய பொழுது, மலர்மாலையைக் கோதை சூடியிருத்தலைப் பார்த்துக் கோபங்கொண்டு கடிந்துரைத்து, அன்று வடபத்திரசாயியாகிய இறைவனுக்கு மாலை அணியக் கொடாமல், அத்திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்ததற்கு மனம் வருந்தியிருந்தார். அற்றை நாளிரவில் இறைவன் ஆழ்வாரது கனவில் வந்து, மாலை கொணராததற்குரிய காரணத்தை வினவி அறிந்து, பின்னர், 'அவள் சூடிக்கொடுத்த மாலையே நறுமணமிக்கு, நமது உள்ளத்திற்கு நனிவிருப்பமானது;ஆதலின் இனி அத்தன்மைத்தான மாலையையே நமக்குக் கொண்டு வருவாய்'என்றருளி மறைந்தனன்.

பின்பு துயில் நீங்கப்பெற்ற விட்டுசித்தர் தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கொண்டு அவளுக்கு, 'ஆண்டாள்'என்றும் மாதவனுக்குரிய மலர் மலையைத் தாம் சூடிக்கொண்டு பார்த்துப் பின்பு கொடுத்தது காரணமாக, 'சூடிக்கொடுத்த நாச்சியார்'என்றும் திருப்பெயரிட்டு அழைத்துவந்தார்.


ஆண்டாள் தமது பருவம் வளருந்தோறும் இறை அறிவும் பக்திகளும் உடன்வளர்ந்து வரப்பெற்று, தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் விருப்பமாகக் காதல் அதிகரித்தவராகி, இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் கூடாதிருக்க முடியாது என்னுங் கருத்துடன் கண்ணனது பிரிவை ஆற்றாத ஆயர் மங்கையர் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிப்வராய், அவ்வெண்ணத்தைத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின்மூலமாக இறைவனிடத்து விண்ணப்பஞ்செய்து வாழ்ந்திருந்தார்.

இந்நிலையில் பெரியாழ்வார் கோதையாரது மணவினையைப்பற்றிப் பேசத் தொடங்கிய காலையில், ஆண்டாள், 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்'என்று சொல்ல, பட்டர்பிரான், 'பின்னை எங்ஙனம் நிகழ்வது?'என்று கேட்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார், 'யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்'என்றுரைத்தார்.

பின்பு கோதையார், தந்தையாகிய பட்டர்பிரானிடம், 'நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள இறைவனுடைய பெருமைகளை விளங்க எடுத்துக் கூறியருளவேண்டும்'என வேண்ட, அவரும் அவ்வாறே விரித்துக் கூறினார். அங்ஙனம் அருளிச்செய்து வருகையில், ஆண்டாள் வடமதுரையில் எழுந்தருளியுள்ள கண்ணபிரானது வரலாற்றைக் கேட்டவளவிலே மயிர்சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது வரன் முறையைச் செவிமடுத்தபொழுது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலையழகரது வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்று, திரு அரங்கநாதனது பெருமை செவிப்பட்டவுடனே அளவற்ற இன்பமடைந்து நின்றார். அவர்களுள் அரங்கநாதனிடத்தே மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து அவ்வமலனையே எப்பொழுதும் எண்ணியிருந்தார் கோதையார்.

கோதையாருக்குத் திருவரங்கநாதன்பால் உண்டான விருப்ப மிகுதியை அறிந்த பட்டர்பிரான், தமது மகளின் மனம் மகிழ,

"குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம்நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கைநோக்கிக்

கடல்நிறக் கடவுள எந்தை அரவணைத் துயிலும்"

திருவரங்கத்தின் வரலாற்றினைத் தெரிவித்தார்.

கோதையாரும் திருவரங்கநாதனைக் குறித்து,

"கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே"

என்பார். பின் கோதை நாச்சியார் தம் ஆற்றாமையைத் தணித்துக்கொள்ள எண்ணி வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபெருங்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதித் திருப்பாவையைப் பாடியருளிப் பின்பு பதினான்கு திருமொழிகளைப் பாடியருளினார். இதற்கு நாச்சியார் திருமொழி என்று பெயர்.

ஆழ்வாரும், 'நம்பெருமான் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ?'என்றெண்ணியிருக்கையில், திருவரங்கச் செல்வன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி,

"உமது திருமகளைக் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு வாரும். அவளை யாம் ஏற்போம்"என்றருளினார். பின்பு திருவரங்கநாதர் கோயிற் பரிவாரமாகியுள்ளவர் கனவிலும் தேன்றி, "நீவிர் குடை, கவரி, விருந்துகள், வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போய், பட்டர் பிரானாருடைய அருமைச் செல்வியாகிய கோதையை அவரது தந்தையாருடன் நம்பால் அழைத்து வருவீராக"என்று பணித்தருளினன். பிறகு பாண்டிய நாட்டிறையோனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி, "c பலருடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டநாதருடைய மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக"என்றருளினன். கோதையாரும் தாம் அன்றிரவு பலவகைக் கனவுகளைக் கண்டதாகத் தோழியிடம் கூறினாள்.

அக்கனவில் திருமணவினைகள் அனைத்தையும் முறையே கண்டதாகப் பத்துப் பாடல்களில் அவர் பாடியுள்ளார். அவற்றுள்,

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்"

என்பதும் ஒன்று.

பாண்டிய வேந்தன் வல்லபதேவனும் ஏவலாயரைன் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் நடுவிலுள்ள நெடுவழியில் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தரிட்டும், தோரணங்கட்டியும், வாழை கமுகு நாட்டியும் நன்றாக அலங்கரித்து, நால்வகைச் சேனைகளையும் கொண்டு ஆழ்வார் பக்கல் வந்து சேர்ந்து, இறைவன் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். பின்பு கோயிற்பரிவார மாந்தர் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கத்து அமலன் காட்சி அளித்துக் கூறிய செய்திகளை அறிவித்தனர்.

பட்டர்பிரானார் இறைவனது அன்பினை வியந்து பாராட்டினார். பின்னர் மறையவர்கள் பலர் பல புண்ணிய நதிகளினின்று நீரினைக் கொண்டு வந்தார்கள்.

கோதையாருடைய தோழிகள் அந்நீரினால் கோதையாரை ஆட்டி, பொன்னாடை உடுத்திவிட்டுப் பலவாறு ஒப்பினை செய்தபின், தோழியர் புடைசூழக் கோதையார் சென்று தமக்கென அமைந்த மணிச்சிவிகையில் ஏறினார். ஏனையோர் பல்லக்கிலும், தேர் முதலிய ஊர்திகளிலும் சென்றார்கள், மற்றும் பலர் கோதையாருடைய சிவிகைக்கு முன்னும் பின்னுமாக நடந்து சென்றார்கள்.

இங்ஙனம் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்துப் பலர், "ஆண்டாள் வந்தாள்!சூடிக் கொடுத்த சுடர்க் கொடி வந்தாள்!சுரும்பமர் குழற் கோதை வந்தாள்!திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!பட்டர்பிரான் புதல்வி வந்தாள்!வேயர் குல விளக்கு வந்தாள்!தென்னரங்கம் தொழும் தேசி வந்தாள்!"என்று முன்னே கட்டியங் கூறிச் செல்வாராயினர். அரசன், பட்டநாதர் முதலாயினருடன் கோதையாரின் சிவிகை திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்து, பெரிய பெருமாளுடைய முன்மண்டபத்தை அடைந்தது. பின்பு கோதையார் பெருமாளைச் சேவிக்கப் பண்ணுவிக்கையில், அத்திருமாலின் அழகு இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறுபோல ஆண்டாளைக் கவரத் தொடங்கியது. சூடிக்கொடுத்த நாச்சியார் சிலம்பு ஆர்க்க, சீரார் வளையலிப்ப, கொடியேரிடையாட, காதளவு மோடிக் கயல்போல் மிளிருங் கடைக்கண் பிறழ, அன்னமென்னடை கொண்டு அருகிற்சென்று, இன்பக் கடலில் ஆழ்ந்து திருவரங்கன் திருவடி வருடக் கருதி, நாகபரியங்கத்தை மிதித்தேறி, நம்பெருமானது திருமேனியின் கண்மறைந்து, அவனை என்றும் பிரியாதிருப்பவளாயினார்.

அங்ஙனம் அரும்பேறு பெற்றதைத் தரிசித்து ஆழ்வாரும், அவரது சீடனான வல்லபதேவனும் ஏனையோரும் வியப்புற்றிருக்கையில், திருவரங்கமுடையான் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகிலழைத்து, 'கடல் மன்னனைப் போன்று நீரும் நமக்கு மாமனாராய் விட்டீர்'என்று முகமன் கூறித் தீர்த்தம், திருப்பரியட்டம், மாலை திருச்சடகோபம் முதலியவற்றை வழங்கி, 'வில்லிபுத்தூர் உறைவானுக்கே தொண்டு பூண்டிரும்'என்று திருவாய்மலர்ந்து விடை கொடுத்தருளினன். ஆழ்வாரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று முன்போலவே இறைவனுக்கு மாலை அணிவிப்பதில் ஈடுபடுதலுடன் ஆர்வமென்பதோர் பூவையும் இட்டுக் கொண்டு எண்பத்தைந்து ஆண்டுகள வாழ்ந்திருந்து, இறைமையின் இருப்பிடத்தை அடைந்தார்.

ஸ்ரீ ஆண்டாளால் பாடப்பெற்ற பாடல் தலங்கள்:1. திருவரங்கம்,2. திருக்கண்ணபுரம்,
3. திருமாலிருஞ்சோலைமலை, 4. ஸ்ரீவில்லிபுத்தூர்,5. திருவேங்கடம், 6. துவாரகை,
7. வட மதுரை, 8. திருவாய்பாடி,9. திருப்பாற்கடல் முதலியனவாகும்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பெரியாழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தொண்டரடிப்பொடியாழ்வார்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it