Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மண்டனர் – ஸரஸவாணி தம்பதியை வென்றது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஒரே கார்யக்காரர் வீட்டுக்கு ஒரே சும்மா – நிலைக்காரர் போய்ச் சேர்ந்தார்! மண்டனமிச்ரர் குமரிலபட்டரைபோல மாற்றுக் கட்சிக்காரரை மதித்து வரவேற்கும் குணமுள்ளவராக இல்லை. வேத கர்மாக்களை விட்டுவிட்டு ‘ஞானம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஸந்நியாஸிகள் என்றால் அவருக்குக் கட்டோடு பிடிக்காது. அவர்களைப் பார்த்தாலே பாபம் என்று நினைத்தார்! அந்த வீட்டுக்கு அழையா விருந்தாளியாக ஆசார்யாள் போய்ச் சேர்ந்தார், ‘எத்தனை விரோத பாவம் கொண்டவரானாலும் நாம் ஸத்ய தத்தவத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாமலிருக்கப் படாது’ என்று கருணையிலே!

அன்றைக்கு பார்த்து மண்டனமிச்ரர் வீட்டில் ச்ரார்த்தம்! இப்படியொரு பித்ரு கர்மாவில் ஸந்நியாஸியைப் பார்த்தால் இரட்டிப்பு பாபம் என்று அவர் நினைத்திருப்பார்!

‘ச்ராத்தம்’ என்றால் ‘ச்ரத்தையோடு செய்யப்படுவது’ என்று அர்த்தம். நிஜமாகவே அப்படி உள்ளே மண்டனமிச்ரர் பண்ணிக்கொண்டிருந்தார். அநாசார வாடை எதுவும் உள்ளே வரக்கூடாதென்று வாசற் கதவைச் சாத்தியிருந்தது.

ஆசார்யாள் எப்படியும் அவருக்கு அனுக்ரஹித்தே தீருவது என்று வந்திருந்தார். அதனால் ஒரு வேடிக்கையான விதத்தில் உள்ளே போய்விட்டாரென்று கர்ண பரம்பரையாகக் கதை இருக்கிறது.

அக்காலத்தில் சாணார்களுக்கு ஒரு வித்தை தெரியுமாம். தென்ன மரத்தின் அடிபாகத்தில் ஒரு மந்த்ரம் சொல்லி அடிப்பார்களாம். உடனே அது துவண்டு, வளைந்து, உச்சி பூமியைத் தொடுமாம். அந்த உச்சியிலே சாணான் ஏறிக்கொள்வான். அங்கே காய் பறிப்பதோ, கள் இறக்குவதோ தான் கார்யத்தைப் பண்ணிக்கொள்வான். அப்புறம் எந்தப் பக்கம் இறங்க நினைக்கிறானோ அப்படி அந்த மரம் திரும்பி, வளைந்து, உச்சியால் பூமியைத் தொடும்படி மந்த்ரம் போடுவானாம். மரம் அப்படியே பண்ணியவுடன் ஸுலபமாக இறங்கிவிடுவான்.

மண்டனமிச்ரரின் அகத்துக்கு வெளியில் ஒரு தென்ன மரம் இருப்பதை ஆசார்யாள் பார்த்தார். அந்தப் பக்கமாக ஒரு சாணான் போவதையும் பார்த்தார். அவனிடம் போய், “உன் வித்தையை எனக்குச் சொல்லிக் கொடு” என்று கேட்டுக் கொண்டார். வித்யா ஸ்வீகரணத்தில் பெரியவன்-சின்னவன் என்ற பேதம் கூடாது என்ற சாஸ்த்ரக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் எளிமை ஆசார்யாளுக்கு இருந்தது. அப்படித்தான் ஸர்வஜ்ஞரானார். அவனும் சொல்லிக் கொடுத்தான். அப்புறம் ஆசார்யாள் அந்த வித்தையால் தென்ன மரத்தை வளைத்து ஏறிக்கொண்டு, அது வீட்டு உள்பக்கம் திரும்பி, முற்றத்தில் தம்மை இறக்கி விடும்படிப் பண்ணினார்.

இது கர்ணபரம்பரைக் கதை. சங்கர விஜயங்களில் யோக சக்தியால் உள்ளே போனார் என்று இருக்கும்.

இவர் உள்ளே போனபோது ப்ராம்மணர்களை போஜனத்துக்கு அமர்த்துகிற கட்டம். அந்த ப்ராம்மணர்கள் யாரென்றால் மஹா பெரியவர்களான இரண்டு பேர். ஒருவர் மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் ஆதாரமான ஸூத்ரத்தைச் செய்த ஜைமினி மஹர்ஷி. மற்றவர் ஜைமினிக்கு ஸாமவேதம் உபதேசித்த குருவான ஸாக்ஷாத் வ்யாஸாசார்யாள். மண்டனமிச்ரரின் அநுஷ்டான ச்ரத்தையை மதித்து அவர்களே கண்ணுக்குத் தெரியும்படி ப்ராம்மணார்த்தத்துக்கு வந்திருந்தார்கள்.

ஸர்ப்பம் எதுவும் அண்ட முடியாமல் பரீக்ஷித்து எத்தனையோ பந்தோபஸ்துப் பண்ணிக் கொண்டிருந்தும் தக்ஷகன் என்கிற நாகராஜன் எலுமிச்சம் பழத்தில் ஒளிந்து கொண்டு அவனிடம் போனானல்லவா? அப்படி மண்டனமிச்ரர் மஹர்ஷிகளை வைத்துக்கொண்டு பந்தோபஸ்தாக பித்ரு கார்யம் பண்ணியும், அவர் கண்டாலே கரித்த இந்த ஸந்நியாஸி மூடின கதவை மீறி அவரிடம் போய்ச் சேர்ந்தார்! தக்ஷகன் விஷத்தைச் செலுத்தப் போனான். இவர் ஞானாம்ருதத்தைச் செலுத்துவதற்காகப் போனார்!

“இந்த சமயத்தில் திடீரென்று ஸந்நியாஸிப் பயல் வந்து குதித்திருக்கிறானே!” என்று மண்டனமிச்ரருக்கு மஹா கோபம் வந்தது. “எங்கேயிருந்து, முண்டி?” என்று சத்தம் போட்டார். முண்டி என்றால் மொட்டைத் தலைக்காரன். ஸௌள ஸம்ஸ்காரம் பண்ணி வைக்கிற குடுமியை ஸந்நியாஸி அறுத்துப் போடுவதால் மீமாம்ஸகர்கள் அவனை ‘முண்டி’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

‘எங்கேயிருந்து வந்து தொலைஞ்சே?’ என்கிற அர்த்தத்தில் இவர், ‘எங்கேயிருந்து, முண்டி?’ என்று கேட்டார்.

ஆசார்யாள் வேண்டுமென்றே அதற்கு வேடிக்கையாக அர்த்தம் பண்ணிக்கொண்டு பதில் சொன்னார். சரீரத்தில் எங்கேயிருந்து ஆரம்பித்துக் கேச விஸர்ஜனம் என்று அவர் கேட்டதாக வைத்துக்கொண்டு, “கழுத்திலிருந்து முண்டி!” என்றார். ஸந்நியாஸிகள் கழுத்துக்குக் கீழ் முண்டனம் செய்துக்கொள்ளக் கூடாது.

இதேபோல மண்டனமிச்ரர் மேலே மேலே கேட்ட கேள்விகளுக்கும் ஆசார்யாள் வேறுவிதமாக அர்த்தம் பண்ணிக்கொண்ட மாதிரியே வேடிக்கையாக ‘டக் டக்’கென்று பதில் சொல்லிக்கொண்டு போனதாகப் புஸ்தகங்களிலிருக்கிறது. ச்ருதி வாக்யங்களைத் தாங்கள்தான் ஸரியாகப் புரிந்துகொண்ட அப்படி அர்த்தம் செய்ய வேண்டுமோ அப்படிப் பிரித்து, சேர்த்துப் பண்ணுவதாக மீமாம்ஸகர்களுக்குத் தற்பெருமை உண்டு. அப்படிப்பட்ட மீமாம்ஸகருடைய வார்த்தையிலேயே இரண்டு அர்த்தம் கண்டுபிடித்து ஆசார்யாள் பதில் சொல்லிக்கொண்டு போனார்!

மண்டனமிச்ரருக்கு அவமானமாகி, ஆத்திரம் தலைக்கேறியது. ஆனால் ச்ராத்த காலத்தில் ஏதும் அஸம்பாவிதம் நேராமல் ஜைமினியும் வ்யாஸரும் அவரை ஸமாதானப்படுத்தினார்கள். ஆசார்யாளின் பெருமை தெரிந்தவர்களானதால், “ஸந்நியாஸியை விஷ்ணு இலையில் அமர்த்துவது சாஸ்த்ர ஸம்மதமேயானது. ஆகையால் இவரை அப்படி உட்கார வைத்து பிக்ஷை பண்ணு. அதுதான் யுக்தம்” என்று சொன்னார்கள்.

ப்ராம்மணார்த்தக்காரர்கள் யாரானாலுமே அவர்கள் சொல்வதை மீறக்கூடாதென்று சாஸ்த்ரம். இவர்களோ மஹா பெரியவர்கள். என்ன பண்ணுவது? வேறே வழியில்லாமல் மண்டனமிச்ரர் வேண்டா வெறுப்பாக ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணி, ” பிக்ஷைக்கு உட்காரணும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஆசார்யாள், “நான் அன்ன பிக்ஷைக்கு வரவில்லை. வாத பிக்ஷைக்கு வந்திருக்கிறேன். குமாரிலபட்டர் சொல்லி வந்திருக்கிறேன்” என்றார்.

பட்டர் பேரைச் சொன்னதும் மண்டனமிச்ரரின் த்வேஷ பாவம் மாறிற்று. “முதலில் இந்த பிக்ஷையை ஏற்றுக் கொல்லனும். அப்புறம் வாதம் செய்வோம்!” என்றார்.

நல்லபடியாக திவஸம் முடிந்தது. வ்யாஸரும் ஜைமினியும் வந்தபடியே போனார்கள்.

அப்புறம் ஆசார்யாளும் மண்டனமிச்ரரும் வாதம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தீர்ப்புச் சொல்ல, மத்யஸ்தமாக யாரை வைத்துக் கொண்டார்களென்றால், மண்டனமிச்ரரின் பத்னியான ஸரஸவாணியைத்தான்.

“யாரோ ஊர்ப் பெண்டுகளையும் கிளிகளையும்கூட தேர்ந்த சாஸ்த்ர ஞானமுள்ளவர்களாக இவர் ஆக்கியிருக்கிறாரென்றால் இவருடைய ஸொந்தப் பத்னி மஹா பண்டிதையாகத்தானே இருக்க வேண்டும்?” என்பதால் ஆசார்யாள் அவளுடைய மத்யஸ்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பார் என்று சொல்லலாம். இது மாநுஷமாகச் சொல்வது. அவதாரம் என்று பாத்தால் ஆசார்யாளுக்கு மண்டமிச்ரர் ப்ரம்மாவே என்றும், ஸரஸவாணி வித்யாதி தேவதையான சாரதையே என்றும் தெரிந்திருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தீர்ப்புக்கு யார்தான் கட்டுப்பட மாட்டார்கள்.

ஸரஸவாணிக்கு ஒரு தர்மஸங்கடம். இரண்டு பேரில் ஒருத்தர் தோற்றுப் போனதாக அவர் தீர்ப்புக் கொடுக்க வேண்டிவரும். ‘பர்த்தாவை அப்படிச் சொல்வது முறையாயில்லை; ஒரு ஸந்நியாஸ ச்ரேஷ்டரைச் சொல்வதும் நன்றாயில்லையே!’ என்று பார்த்தாள். ‘நம் வாயால் ஒன்றும் சொல்லவேண்டாம்’ என்று நினைத்து ஒரு யுக்தி செய்தாள். இரண்டு பேருக்கும் புஷ்ப ஹாரங்களை அர்ப்பணம் பண்ணிப் போட்டுக்கொள்ளச் சொல்லி, “யாருடைய ஹாரம் வாடாமலே இருக்கிறதோ அவருக்கே ஜயம்” என்று சொன்னாள்.

வாதம் ஆரம்பிக்கும்முன் இரண்டு பேரும் ஒரு நிபந்தனை செய்துகொண்டார்கள். ஆசார்யாள் ஜயித்தால் மண்டனமிச்ரர் க்ருஹஸ்தாச்ரமத்தையும், அக்னி ஹோத்ராதி அநுஷ்டானங்களையும் விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டும்; மண்டனமிச்ரர் ஜயித்தால் ஆசார்யாள் ஸந்நியாஸத்தை விட்டுவிட்டு க்ருஹஸ்தராகிக் கர்மாநுஷ்டானமெல்லாம் பண்ணவேண்டும், என்று. சுத்த பரஹ்மசர்ய மூர்த்தியான ஆசார்யாள் ஒருநாளும் ஒப்புக்காகக் கூட ‘நான் க்ருஹஸ்தனாகிறேன்’ என்று சொல்லியிருக்க மாட்டார் என்பதால் இன்னொரு தினுஸாகவும் சொல்வதுண்டு. அதாவது, தாம் தோற்றுப்போனால் ‘மரணாந்த ப்ராயச்சித்தம்’ பண்ணிக்கொள்வதாகச் சொன்னார் என்பார்கள். ப்ராணன் போகும்வரை ஆஹாரத்தைத் தொடுவதில்லை, ஜல பானம் பண்ணுவதில்லை என்று உபவாஸமிருப்பதுதான் ‘மரணாந்த ப்ராயச்சித்தம்’. தம்முடைய ஸந்நியாஸ சரீரத்தைக் கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்வதைவிட அதை த்யாகமே பண்ணத்தான் ஆசார்யாள் நினைப்பார் என்பதால் இப்படிச் சொல்வது.

வாதம் ஆரம்பித்தது. முன்னே வ்யாஸருக்கும் ஆசார்யாளுக்கும் நடந்தமாதிரி இதுவும் இரண்டு பண்டித பர்வதங்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மோதிக் கொள்வதாயிருந்தது. இருபத்தியோரு நாள் இப்படி வாதம் நடந்தது.

கர்மா, பக்திகளால் முடிவாக ஞானத்தையே அடைய வேண்டுமென்று ஆசார்யாள் ச்ருதி, யுக்தி, அநுபவங்களால் நன்றாக எடுத்துக் காட்டினார். பக்தியின் அன்பு, அப்புறம் அன்பும் நிறைந்து அடங்கிப் போகிற அத்வைத ஞானத்தின் சாந்தம் இவற்றால்தான் ஜீவனுக்குப் பூரணத்வம், இதுவே வேதங்களில் பரம தாத்பர்யம் என்று காட்டினார். அந்த அன்புக்கும், சாந்திக்கும் இருப்பிடமாக உள்ளவரே ஸந்நியாஸி; அவன் கர்மத்தை விட்டவனென்பதால் நிந்திக்கத் தக்கவனல்ல என்று காட்டினார்.

‘அக்னிஹோத்ர அக்னியை அணைத்தவன் வீரஹத்தி தோஷத்திற்கு ஆளாகிறான்’ என்ற தைத்திரீய ப்ராஹ்மண வசனம் போலுள்ள வேத வாக்யங்களைக் கொண்டு கர்மாவை விட்ட ஸந்நியாஸியை தூஷிப்பது ஸரியேயில்லை. அந்த வாக்யங்களெல்லாம் ப்ரவிருத்திக்கே பக்குவமாயிருப்பவனை உத்தேசித்தவைதான். அப்படிப்பட்டவன் கர்மாவைவிட்டு இஷ்டப்படிக் கீழே போய் வீணாவதைத்தான் தடுத்திருக்கிறது. கர்மாவைவிட்டு மேலே நிவ்ருத்திக்குப் போகிறவனோ வெளி அக்னியைத் தன்னுடைய ஞானாக்னியில்தான் ஆரோபித்துக் கொண்டு (ப்ரதிஷ்டை செய்துகொண்டு) அதை மேலும் ஜ்வலிக்கச் செய்கிறானேயொழிய அணைத்து விடவில்லை. ஸம்ஸார வ்ருஷத்தில் பழுத்த பழமாகிக் காம்பறுந்து விழும் கனியாக இருப்பவன் அவன். அரும்பும், பூவும், காயுமாக உள்ள மட்டும் ஸதா கார்யம் பண்ணிக் கொண்டு, ஜலத்தை உறிஞ்சிக்கொண்டு, ஸூர்ய ரச்மியை க்ரஹித்துக்கொண்டு, இதழ் இதழாக, கலர் கலராக ஆகிக் கொண்டு, ஸைஸிலும் தினந்தினம் பெரிசாகிக்கொண்டு, ருசியிலும் கசப்பு-துவர்ப்பு-புளிப்பு என்று ருசி மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அப்பொழுது ஸம்ஸார வ்ருக்ஷத்திலிருந்து அறுக்கப் பார்த்தால் ஒரே அழுகையாய்த்தான் இருக்கும். காம்பிலிருந்து ஒரேயடியாக ஜலம் கொட்டும். ஆனால் அப்புறம் இப்படிக் கார்யம் பண்ணிப் பண்ணியே கசப்பு-துவர்ப்பு-புளிப்பெல்லாம் போய் ஒரே மதுரமாகிக் கனிந்துவிட்ட பிறகு பழத்தை யாராலும் வ்ருக்ஷத்தில் இருத்தி வைக்க முடியாது. துளிக்கூட ஜலம் சொட்டாமல் காம்பு இற்று அது அப்படியே விழுந்து விடும். நிவ்ருத்திதான்! அப்புறம் அதற்கு ஒரு கார்யமுமில்லை. அதுமாதிரி, ஞான பக்குவம் பெறும் வரையில் சாஸ்த்ர ப்ரகாரம் ஸதா கார்யம் பண்ணிக் கசப்பான, துவர்ப்பான, புளிப்பான அநுபவங்களையெல்லாம் நன்றாக அநுபவித்து, நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே போகவேண்டியதுதான். ஆனாலும் ப்ரேமையின் மாதுரயத்தில் நிறைந்து எல்லாம் ஒன்றாகப் பார்க்கிற ஞானப் பழமான பின் ஸகல கார்யத்தையும் விடவேண்டியதேயாகும். உள்ளேயிருக்கிற அத்வைத ஞானமே வெளியில் ஸகல ப்ராணிகளையும் ஒன்றாகப் பார்த்து ஸமமாகப் பெருகும் ப்ரேமையாக ஆகிவிட, அப்படியே சும்மாயிருந்து கொண்டிருக்க வேண்டியதுதான். ‘எல்லா ப்ராணிக்கும் நான் அபய ஸ்தானமாக இருப்பேன்’ என்று ப்ரைக்ஷோச்சாரணம் பண்ணி ஸந்நியாஸியாகிறவன் இந்த அன்புக்கும் சாந்திக்குமே இருப்பிடம். அதற்கு ஏறுவதற்குத்தான் இத்தனை ஸ்வதர்ம கர்மாக்களும். இவ்விஷயங்களை ஆசார்யாள் எடுத்துச் சொன்னார்.

‘தம்முடைய ஸித்தாந்தம் ஸரியில்லை. ஆசார்யாள் சொல்வதுதான் ஸரி. ஜயம் அவருக்குத்தான்’ என்று மண்டனமிச்ரர் புரிந்துகொண்டார். தோற்றுப் போனதற்காக இல்லாமல் மனஸாரவே ஞான மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆனாலும் ஸரஸவாணியை மத்யஸ்தமாக வைத்துவிட்டதால் அவள் முடிவு சொல்ல விடுவதுதானே மரியாதை? அதனால் சும்மாயிருந்தார்.

அவளும் ஹாரத்தைப் போட்டு அது முடிவு சொல்லட்டும் என்றுதானே விட்டிருந்தாள்? இப்போது என்ன ஆயிற்றென்றால் மண்டனமிச்ரரின் ஹாரம் வாடிப் போயிற்று!

பதி ஸந்நியாஸியாகிறாரென்றால் ஒரு பத்னிக்கு எப்படியிருக்கும்?

அதனால், பத்னி என்பவள் பதியின் அங்கமே ஆகையால் தன்னையும் ஆசார்யாள் ஜயித்தாலே ஜயம் பெற்றதாகும் என்று சொன்னால். இது நம் மநுஷ மட்டத்தில் தெரிகிற விஷயம். உள்ளே தாத்பர்யம் என்னவென்றால் ஆசார்யாள் ஸர்வஜ்ஞர்தான் என்பதை ஸாக்ஷாத் ஸரஸ்வதியுடனேயே அவர் வாதம் செய்து ஜயிப்பதன் மூலம் காட்ட வேண்டும் என்பதே! வஸிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி என்பதுபோல் ஸரஸ்வதி வாயால் ஆசார்யாள் ஸர்வஜ்ஞர் என்று தீர்ப்புப் பெறுவதற்குத்தான் ஸரஸவாணியின் அவதாரமே ஏற்பட்டது.

மஹா பண்டிதையாக விளங்கிய ஸரஸவாணியுடனும் ஆசார்யாள் வாதம் செய்து ஜயித்தார்.

ஸரஸ்வதி தன்னுடைய ஸ்வய ரூபத்திலேயே வந்து பிற்பாடு ஆசார்யாள் ஸர்வஜ்ஞ பீடாரோஹணம் செய்தபோதுதான் வாதம் செய்து முடிவில் அவர் ஜயித்ததாக ப்ரகடனம் செய்தாள் என்றும் கதை இருக்கிறது.

பதி தோற்றுப் போய்விட்டார் என்று எப்படி ஒரு பத்னி சொல்ல முடியும்? இந்த இடத்தில் அறிவு தேவதையின் அவதாரமான ஸரஸவாணி எப்படி ஸமாளித்தாள் என்பது மனஸை தொடுகிற மாதிரி இருக்கிறது. நேரே சொல்லாமல் குறிப்பால் உணர்த்திச் சொன்னாள். என்ன செய்தாளென்றால் இரண்டு பேரையும் நமஸ்காரம் பண்ணி, “இரண்டுபேரும் பிக்ஷைக்கு வாருங்கள்” என்று சொன்னாள்.

க்ருஹஸ்தனை “போஜனத்திற்கு வாருங்கள்” என்றோ, அல்லது சாஸ்த்ரோக்தமாகச் சொல்வதானால் “வைச்வ தேவத்திற்கு வாருங்கள்” என்றோதான் சொல்லவேண்டும். ஸந்நியாஸிக்குத்தான் “பிக்ஷை” பண்ணுவது. இரண்டு பேரையும் “பிக்ஷைக்கு வாருங்கள்” என்று சொல்லி நமஸ்காரம் பண்ணியதிலேயே மண்டனமிச்ரர் தோற்றுப் போயாச்சு, அதனால் நிபந்தனைப்படி ஆசார்யாளிடம் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான் என்பதை ஸரஸவாணி நாஸூக்காகத் தெரிவித்துவிட்டாள்.

பர்த்தா ஸந்நியாஸியாகி வீட்டை விட்டுப் போகிறாரென்பது எந்தப் பத்னிக்கும் இருக்கக்கூடியதைவிட அவளுடைய மனஸுக்கு ரொம்ப க்லேசமான விஷயமாகத் தானிருந்தது. இவளுடைய புத்திக்கு ஈடு கொடுத்து ஸம்பாஷித்துக் கொண்டிருந்த மஹா பண்டிதர், அவர் ஸதாவும் பண்ணும் யாகாதிகளில் இவள்தான் யஜ்ஞ பத்னியாகச் சேர்ந்து சேர்ந்து எல்லாம் பண்ணியிருக்கிறாள் – அப்படிப்பட்டவர் பிரிந்து போகிறாரென்றால் எப்படியிருக்கும்? ஆனாலும் ஸத்யம்தான் பெரிசு என்று self interest-ஐ sacrifice பண்ணி (தன்னலனை த்யாகம் பண்ணி)த் தீர்ப்புக் கொடுத்தாள். “ஹாரந்தானே வாடித் தீர்ப்புப் பண்ணிற்று?” என்றால்,அந்த ஹாரத்தில்தான் இவள் தன்னுடைய சித்தத்தை ஆரோபணம் பண்ணியிருந்தாள் (உறைவித்திருந்தாள்.) இல்லாவிட்டால் எங்கேயாவது பூமாலை 21 நாள் வாடாமலிருக்குமா?

ஆசார்ய மஹிமை லோகத்தில் நன்றாகத் தெரியவேதான் அவள் தானும் வாதம் செய்து தோற்றுப்போனது. பல தேவர்கள் அப்போது அவதாரம் செய்திருந்தாலும் இவள் விஷயமாகத்தான் லோகத்திற்கே ஓரளவு நன்றாகத் தெரியும் – ஸரஸ்வதியவதாரம் என்று. ‘உபய பாரதி’ என்றே அவளை லோகம் கொண்டாடிக் கொண்டிருந்தது. அதனால் அப்பேர்பட்டவள் ஆசார்யாளின் வாதத்திற்கே ஜயம் என்று சொன்னால் அதற்கு மதிப்பு ஜாஸ்திதானே?

பர்த்தாவுக்கு ஸந்நியாஸம் கொடுக்க வருகிறவரை பத்னி அடித்து விரட்டத்தான் செய்வாள்! இவளானால் நமஸ்காரம் பண்ணி, பக்தியோடு பிக்ஷைக்கு கூப்பிட்டாள்!

நம் தேசத்தின் உத்தம ஸ்த்ரீகளில் ஸரஸவாணிக்கு ஒரு முக்யமான இடமுண்டு.

மண்டனமிச்ரர் ஆசார்யாளிடம் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு சிஷ்யரானார். அதிலிருந்து அவருக்கு ஸுரேச்வரர் என்று பெயர் ஏற்பட்டது.

“பதி இல்லாமல் இங்கே என்ன வேலை?” என்று ஸரஸவாணி ஸரஸ்வதி ரூபத்தை எடுத்துக்கொண்டு ப்ரம்ம லோகத்துக்குப் புறப்பட்டாள்.

அப்பொழுது ஆசார்யாள், “நீ இப்படிப் போகப்படாது. உன் ஸாந்நித்யம் லோகத்துக்கு எக்காலமும் இருந்து நல்லறிவைக் கொடுத்துக் கொண்டிருக்கணும்” என்று சொல்லி வனதுர்கா மந்தரத்தால் அவளைக் கட்டினார்.

அவளே அன்புக்கும், ந்யாயத்துக்கும் கட்டுப்பட்டவள்தான். ஆனாலும் மந்த்ர மஹிமை தெரிவதற்காக இப்படியொரு நாடகம்! பல தினுஸில் லோகத்துக்குப் பல உண்மைகளைத் தெரிவிப்பதாகவே ஸீன், ஸீனாக நிறைய நடிப்பதுதான் அவதார நாடகம்!

1 அதற்கு ஸரஸ்வதி, “ஸரி, ஆனால் இந்த ஊரிலேயே நான் இருக்கணுமென்று ப்ரதிஷ்டை பண்ணிவிடாதீர்கள். நீங்கள் பாட்டுக்கு தேச ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே போங்கள். நான் பின்னாலேயே வந்துகொண்டிருக்கிறேன். திரும்பிப் பார்க்கப்படாது. எங்கே பார்க்கும்படியாக ஏற்பட்டுவிடுமோ அங்கே நான் நித்யவாஸமாக இருந்து விடுகிறேன். அங்கே என்னை கோயில் கட்டி வைத்து, லோக க்ஷேமார்த்தமாக சாரதா பீடம் என்று ப்ரதிஷ்டை பண்ணிவிடுங்கள்” என்றாள். நாடகத்தில் இப்படி ஒரு ஸீன்!

ஆசார்யாள், ஸுரேச்வராசார்யாளோடு புறப்பட்டார். ஸரஸ்வதி பின்னாலேயே போய்க் கொண்டிருந்தாள். அவருடைய சிலம்பின் ‘ஜல் ஜல்’லிருந்து அவள் பின்னால் வருவதை ஆசார்யாள் தெரிந்துகொண்டு திரும்பிப் பார்க்காமலே போனார்.


1 அடுத்து வரும் கதாபாகத்தைச் சிரித்து மாறுதலாக ஸ்ரீசரணர்கள் பிறிதொரு சமயம் உபந்நியஸித்தபடி “தெய்வத்தின் குரல்” – இரண்டாம் பகுதியின் இறுதி உரையான “முதலுக்கு முதல்; முடிவுக்கு முடிவு” என்பதில் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மண்டனரின் பண்டித நகரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ச்ருங்கேரிச் சிறப்பு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it