Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

(முதல் துதியிலேயே பிற்கால உபதேசங்களின் வித்து) : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

(இதில் இரண்டு விஷயம் தெரிவிக்கணும். குழந்தையாக ஆசார்யாள் பாடிய இந்த முதல் ஸ்தோத்ரத்திலேயே பிற்காலத்தில் அவர் பெரிதாக ‘டெவலப்’ பண்ணிய இரண்டு கொள்கைகளுக்கு வித்து இருக்கிறது. ஒன்று – அவர் கர்மாவை பக்தியில் சேர்த்தது. ‘கர்மா தானே பலன் தரவில்லை. ஈச்வரன்தான் பல தாதா. அவனுக்கே ஸகல கர்ம பலனையும் அர்ப்பணம் பண்ணிவிடு. அப்போதுதான் இந்தச் சின்னப் பலன் போய் சித்த சுத்தி என்ற ஆத்மாத்மார்த்தமான பெரிய பலன் கிடைக்கும்’ என்றது. இது கர்ம மார்க்கக்காரர்களைப் பக்தி மார்க்கத்தில் சேர்ப்பதற்கு சொன்னது. இன்னொன்று – பக்தி மார்க்கக்காரர்களிடம், ‘என்னுது, உன்னது’ என்று தெய்வ பேதம் பார்க்காமல், ஏதோ ஒன்றிடம் தான் உனக்கு இயல்பாக பக்தி சுரக்கிறதென்பதால் அதையே நீ இஷ்டமூர்த்தி என்று பக்தி பண்ணினாலும் மற்றவற்றைத் தாழ்த்தியாக நினைக்காமல், எல்லாம் ஏக பரமாத்மாவின் ரூப பேதங்களே என்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொள்’ என்று சொன்னது. முதலில் இப்படி ஸ்வாமிகளுக்குள் பேதமில்லை, எல்லா ஸ்வாமியும் ஒரே பரமாத்மாதான் என்று ஆரம்பித்தால்தான் அப்புறம் எல்லா ஆஸாமியுங்கூட அதுதான் என்ற ஞானத்துக்குப் போக முடியும். அதாவது, இது பக்தி மார்க்கக்காரர்களை ஞான மார்க்கத்தில் சேர்ப்பதற்காகச் சொன்னது. இந்த இரண்டு அபிப்ராயங்களையும் கனகதாரா ஸ்தோத்ரத்தில் பார்க்கிறோம்.

சாதகக் குஞ்சைச் சொல்லி ஸம்பத்து தாரை வேண்டியதற்கு அடுத்த ஸ்லோகத்தில்

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டப-பதம் ஸுலபம் லபந்தே

என்று சொல்லுமிடத்தில் இஷ்டிகள் என்பதான யஜ்ஞ கர்மாக்களிலேயே உயர்ந்த அபிப்ராயத்தை வைத்து, அவற்றை ஸ்வர்க்க பலனை விரும்பிச் செய்கிறவர்களும் மஹாலக்ஷ்மியின் கருணாகடாக்ஷத்தால்தான் அந்தப் பலனை ஸுலபமாக அடைகிறார்களென்று சொல்கிறார். அவர்களுக்கு அப்படித் தெரியாமல் தங்கள் கர்மாவே பலன் தருகிறதென்று நினைத்தாலும், லக்ஷ்மி என்று ரூபம் கொடுத்துச் சொல்கிற பகவத் சக்திதான் அதை வாஸ்தவத்தில் பண்ணுவிக்கிறதென்று ஆசார்யாள் சொல்வது இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது.

ஸகல தெய்வமும் ஏக பரமாத்மாவின் ரூப பேதங்களே என்று அவர் தெரிவிப்பது இதற்கு அடுத்த ஸ்லோகத்தில்:

கீர்தேவதேதி கருட-த்வஜ-ஸுந்தரீதி

சாகம்பரீதி சசி சேகர-வல்லபேதி |

ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரலய-கேலிஷு ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரிபுவநைக-குரோஸ்-தருண்யை ||

ஒரே பரமாத்மா த்ரிமூர்த்திகளாகி ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரம் (ப்ரளயம்) என்று விளையாட்டுப் பண்ணும்போது (“கேலிஷு”) அவர்களுக்குள்ளே பத்னி ரூபத்தில் ஒவ்வொரு சக்தியாக இருப்பது மஹாலக்ஷ்மியே தானென்று சொல்கிறார். அப்படியுள்ள சக்திகளின் பெயர்களை கீர்தேவதை, கருட த்வஜ ஸுந்தரி, சாகம்பரி, சசிசேகர வல்லபா என்கிறார். மூன்று மூர்த்திகளுக்கு நாலு சக்திகளைச் சொல்லியிருக்கிறது! ஏன்?

ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்கிறபடி முதலில் ப்ரம்ம பத்னி-‘கீர்தேவதை’ என்னும் வாக்தேவியான ஸரஸ்வதி; அடுத்தாற்போல் கருடக் கொடியுடைய மஹாவிஷ்ணுவின் ரூப லாவண்யம் மிக்க பத்னியான ‘கருட த்வஜ ஸுந்தரி’ (ஸ்தோத்ரத்தின் நேர் மூர்த்தியான லக்ஷ்மி); அப்புறம் ருத்ர பத்னிகளாக மட்டும் இரண்டு பேர் ‘சாகம்பரி’ என்றும் ‘சசி சேகர வல்லபா’ என்றும் இருக்கிறது!

சாகம்பரி யாரென்று தேவீ புராணங்களில் இருக்கிறது1. ஒரு பஞ்ச காலத்தில் அம்பாள் தன்னுடைய தேஹத்திலிருந்தே கறிகாய்கள், கீரை வகைகள் எல்லாவற்றையும் முளைக்கப் பண்ணி ஜனங்கள் பறித்துச் சாப்பிடுமாறு க்ருபை பண்ணினாள். அப்போது அவளுக்கு ஏற்பட்ட பேர்தான் சாகம்பரி, இவளும் சிவனுடைய சக்தியே.

“ஸ்ருஷ்டி-ஸ்திதி-ப்ரளய” என்று சொல்லியுபடி (ப்ரளயமான) ஸம்ஹாரத்துக்கு உதவி பண்ணாமல் ஸ்திதிக்கு உதவி செய்வதாக அல்லவா இவள் ஜனங்களுக்கு ஆஹாரத்தைக் கொடுத்து ரக்ஷித்திருக்கிறாள்? த்ரிமூர்த்திகளுக்கு த்ரிசக்திகள் என்றில்லாமல் நாலாவதாக ஒன்றை ஏன் இப்படிச் சொல்லணும்?

பொருத்தமாகத்தான் சொல்லியிருக்கிறார். ஜனங்களின் மனப்பான்மை ஆசார்யாளுக்கு நன்றாகத் தெரியும். தனலக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி அஷ்ட லக்ஷ்மிகளை சொன்னாலும், ஜனங்கள் ‘லக்ஷ்மி’ என்றால் தனத்தைத்தான் நினைப்பார்களென்று அவருக்குத் தெரியும். ஆனால் ரூபாயைச் சாப்பிட முடியுமா? ஆனபடியால் சாப்பாடு போடுகிற அம்மாவாகத் லக்ஷ்மியைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் விடக்கூடாது என்று அவருக்கு இருந்தது. அதனால்தான் சாகம்பரியைச் சொன்னார். அப்புறம் ப்ரளயத்திற்கு ஸ்வாமியான ருத்ரனின் சக்தியாக ‘சசி சேகர வல்லபா’ என்றார். அப்படியென்றால் சந்திரனைத் தலையில் வைத்துக்கொண்டிருப்பவரின் ப்ரிய பத்னி. ஸம்ஹார மூர்த்தியே மஹேச்வரனாக மாயா நாடகம் பண்ணும் போதும், ஸதா சிவனாக மோக்ஷாநுக்ரஹம் பண்ணும்போதும்கூட சசி சேகரராகத்தான் இருக்கிறார். அதனால் ‘சசி சேகர வல்லபா’ என்னும்போது ப்ரளய சக்தி, திரோதான2 சக்தி, அநுக்ரஹ சக்தி எல்லாமும் அவளேதான் என்று வைத்துக்கொள்ளாலாம். இவளேதான் ப்ரம்ம சக்தி, விஷ்ணு சக்தி ஆகியவர்களும் என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டதால் பஞ்ச க்ருத்யங்களுக்கும் மூலமான பரப்ரஹ்ம சக்தி ஒன்றுதான் இத்தனை மூர்த்தியுமாகியிருக்கிறது என்ற அத்வைதம் வந்துவிடுகிறது.

லக்ஷ்மிதான் ஸரஸ்வதி, பார்வதி ஆகிய எல்லாரும் என்று இங்கே சொல்லிவிட்ட பிறகு சிவ-விஷ்ணுக்களை மட்டும் வித்யாஸம் மாதிரி விட்டுவிடலாமா? அதனால்தான் முடிக்கிற இடத்தில் ‘த்ரிபுவநைக குரோஸ் தருணி’ என்று சொன்னது. ‘த்ரிபுவநங்களுக்கும் குருவாக இருக்கப்பட்டவர் மஹாவிஷ்ணு. அவருடைய ப்ரிய பத்னியான சக்தி லக்ஷ்மி’ என்று அர்த்தம். தக்ஷிணாமூர்த்தியின் மூலகுரு ஸ்வரூபத்திலிருந்து அவதாரம் பண்ணினவர் மஹா விஷ்ணுவை குருவாகச் சொல்லும்போது சிவ-விஷ்ணு அபேதமும் வந்துவிடுகிறது. குருவின் சக்தி என்று லக்ஷ்மியை சொல்லும்போது அவள் ஏதோ பணம், கிணம் கொடுப்பவள் மட்டுமில்லை, ஞான சக்தியாகவுமிருக்கிறவள் என்று காட்டியதாகிறது.

நம் குரு பரம்பரை நாரயணனிலிருந்துதானே ஆரம்பிக்கிறது? அதனால் ‘த்ரி புவந குரு’ என்றார். அஷ்டோத்தரங்களைப் பார்க்கும்போது சிவாஷ்டோத்தரம் மாதிரி க்ருஷ்ணாஷ்டோத்தரம், ராமாஷ்டோத்தரம் ஆகியவற்றிலும் “ஜகத்குருவே நம:” என்று வருகிறது.

குரு என்று – த்ரிபுவன குரு என்று – இங்கே ஆசார்யாள் சொல்லும்போது ஞானோபதேசம் பண்ணுபவர் என்றில்லாமல் மூவுலகத்திற்கும் பிதாவாக இருப்பவரென்றும் அர்த்தம் செய்யலாம். தாயார், தாயார் என்று லக்ஷ்மியைச் சொல்வதால் மூவுலகத் தகப்பனாரின் பத்னி என்று சொன்னதாகவும் கொள்ளலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் “ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம:” என்று கடைசி நாமாவுக்கு இரண்டு நாமா முன்னால் வருவதன் தாத்பர்யத்தையே இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.

இதற்கு அடுத்த ஸ்லோகம்

ச்ருத்யை நமோ(அ)ஸ்து சுப-கர்ம-பல-ப்ரஸூத்யை

ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீ-குணார்ணவாயை |

சக்த்யை நமோ(அ)ஸ்து சத-பத்ர-நிகேதநாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம-வல்லபாயை ||

ச்ருதிதான் ஆசார்யாளுக்கு மூச்சு. அவைதிகம், அரைகுறை வைதிகம் ஆகியவற்றை விரட்டி, சுத்தமான ச்ருதி மார்க்கத்தையே ஸ்தாபனம் செய்ய வந்தவரல்லவா? “ச்ருதி-ஸ்ம்ருதி-புராணாநாம் ஆலயம்” என்றே அல்லவா அவரை ஸ்தோத்ரிப்பது? அப்படிப்பட்ட ச்ருதி வடிவமாக, வேத ஸ்வரூபிணியாகத் தாயாரைச் சொல்லாமல் தாம் பண்ணிய முதல் ஸாஹித்யத்தை முடிப்பாரா? “ச்ருத்யை நமோஸ்து” என்று ஆரம்பிக்கிறார். ஞானாவதாரமானாலும் வைதிக கர்மாநுஷ்டானத்திற்கு அதற்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்பதில் பாடுபட்டவரல்லவா? அதனால் (லக்ஷ்மியை) ச்ருதி ஸ்வரூபமாகச் சொன்னவுடன், அதில் சொல்லியிருக்கும் சுபமான கர்மாநுஷ்டானங்களின் பலனைப் பிறப்பிக்கிறவள் அவள்தான் என்கிறார்: “சுப கர்ம பல ப்ரஸூத்யை”. இங்கேயும் மீமாம்ஸகர்களுக்கு பதில் இருக்கிறது!

நல்ல குணங்களெல்லாம் ஸமுத்ரம் மாதிரி நிறைந்த இன்பங்களின் உருவமாகத் தாயார் இருப்பதை “ரத்யை நமோஸ்து, ரமணீய குணார்ணவாயை” என்று சொல்கிறார்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நமக்கு ச்ருதி வேண்டும். நாம் செய்யும் கர்மங்கள் ச்ருதி ப்ரயுக்தமாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவை சுப கர்மாவாக இருக்கும். அப்படிப்பட்ட கர்மாவினாலேயே இன்பங்களை உலக இன்பங்களோ, ஆத்மாத்தமான இன்பங்களோ, எதுவானாலும் பெறவேண்டும்.

குணம்-கர்மம் என்று இரண்டு. ஒன்றுக்கொன்று ஸம்பந்தப்பட்டவை. “குண-கர்மங்களாலேயே நான்கு வர்ணங்களை (ஜாதிகளை) ஸ்ருஷ்டித்திருக்கிறேன்” என்று கீதையில் (பகவான்) சொல்கிறார்3. குணப்படியே கர்மா போகும். அதை சாஸ்த்ரத்தில் வகுத்துக் கொடுத்துள்ளபடி செய்து ஈச்வரார்ப்பணம் செய்தால் அந்த சுப கர்ம விசேஷத்தால் எப்படிப்பட்ட குணமானாலும் அது பக்வமாக ஆகும். முதலில் ‘சுப கர்ம பலனைத் தருபவள்’ என்று சொல்லி, அடுத்தாற்போல ‘நல்ல குணங்களுக்கு ஸமுத்ரமாயிருப்பவள்’ என்று ஒன்றோடொன்று பிணைத்துச் சொல்லியிருக்கிறார்.

அப்புறம், சக்திதானே எல்லாவற்றுக்கும் தேவை? அதுவும் அவள்தானென்று சொல்லி நமஸ்காரம் தெரிவிக்கிறார்: “சக்த்யை நமோஸ்து”. ‘சத பத்ர நிகேதனா’ என்றால் கமலாஸனை, தாமரைப் பூவுக்குள் உட்கார்ந்திருப்பவள். ‘சத பத்ரம்’ என்றால் நூறு இதழ் (கொண்ட தாமரை) என்று கணக்காக நினைக்க வேண்டாம். சதம் என்பது எந்தப் பெரிய நம்பரையும் குறிப்பது. ஸஹஸ்ர தள பத்மம் என்றும் சொல்வதுண்டு. நம் சிரஸில் பராசக்தி ஸஹஸ்ர தள பத்மத்தில்தான் பரசிவத்தோடு கலந்தவளாக இருக்கிறாள் என்று குண்டலிநீ யோகத்தில் இருக்கிறது. இங்கே ஆசார்யாளும் பத்மவாஸினியாக லக்ஷ்மியைச் சொல்லும்போது “சக்தி”-“சக்த்யை நமோஸ்து:”- என்றே சொல்கிறார்!

“புஷ்ட்யை நமோஸ்து”. போஷிப்பினால் ஏற்படும் நிறைவே புஷ்டி. பரிபாலன மூர்த்தியின் பத்னியாக, உலகத்துக் குழந்தைகளுக்கெல்லாம் தாயாராகப் போஷித்து வளர்ப்பவள் அவள்தான்.

ரதி (இன்பம்) , சக்தி, புஷ்டி எல்லாவற்றையும் தரும் மந்த்ரங்கள் ச்ருதியில்தான் அடங்கியிருக்கின்றன. அதனால் முதலில் அதைச் சொல்லி அப்புறம் இவற்றைச் சொன்னார். நம்முடைய திறமை (சக்தி) , நிறைவு (புஷ்டி) , ஆனந்த அநுபோகங்கள் (ரதி) ஆகிய எல்லாம் வேத வழியில் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமென்று, (இப்படிச்) சொன்னார்.

‘ஒவ்வொரு ப்ராணிக்குள்ளேயும் ஆனந்த ஸ்வரூபமாக இருப்பது நீதான்! ஒவ்வொரு ப்ராணிக்குள்ளேயும் சக்தி ஸ்வரூபமாக இருக்கிறது நீதான்! நிறைவு என்கிறதாக இருக்கிறதும் நீதான்!’ என்று சொல்லி, ஒவ்வொன்றுக்கும் ‘நமோஸ்து, நமோஸ்து’ என்று நமஸ்காரம் தெரிவிக்கிறார்.

முடிவாக மஹாவிஷ்ணுவுக்கே உரிய அஸாதாரண நாமாவான புருஷோத்தமன்4 என்பதைச் சொல்லி அவனுடைய சக்தியாக அவள் இருப்பதை “புருஷோத்தம வல்லபாயை” என்கிறார்.

பிற்காலத்தில் பெரிய ஸித்தாந்தமாக டெவலப் செய்த கருத்துக்களையும் உள்ளே வைத்து குழந்தையாசார்யாள் இப்படி பாடி முடித்தார்.)

பாடி முடித்ததுதான் தாமஸம்! மஹாலக்ஷ்மி அந்தக் குடிசையைச் சுற்றிப் பாழாயிருந்த அத்ருதி முழுக்க ஸ்வர்ணத்தாலான நெல்லிக் கனிகளாகவே ஒரு முஹூர்த்த காலம் வர்ஷித்துவிட்டாள்! பளபளவென்று வர்ஷித்து விட்டாள்!

அவதாரக் குழந்தைக்குப் போட்ட ஒரு அழுகல் நெல்லி பழம் அனந்த கோடி மடங்கு தங்கப் பழங்களாகத் திரும்பின!

முதலில் ப்ராம்மண ஸ்த்ரீ கண்ணீர் தாரையைக் கொட்டினாள். அதைப் பார்த்து ஆசார்யாளின் வாக்கிலிருந்து ஸ்தோத்ர தாரை கொட்டிற்று. அதைக் கேட்டு லக்ஷ்மி கனகதாரையைக் கொட்டி விட்டாள்.

அந்த ஸ்தோத்ரத்துக்குக் கனகதாரா ஸ்தோத்ரம் என்றே பேர் ஏற்பட்டது. ‘(கனகதாரா) ஸ்தவம்’ என்றும் சொல்வார்கள். ஸ்தவம் என்றாலும் ஸ்தோத்ரந்தான்.

ஆசார்யாள் மனஸால் நினைத்தாலே போதும், லக்ஷ்மி அதன்படிப் பண்ணியிருப்பாள். ஆனாலும் அவர் வாக்கினால் இப்படி ஒரு ஸ்துதி வந்து, தான் கேட்டு ஸந்தோஷப்படணும், — தான் ஸந்தோஷப்படுவது மாத்ரமில்லை, ஜனங்களெல்லாம் ஸந்தோஷப் படணும்; அதைப் பாராயணம் பண்ணி அவர்களும் பொருள் கஷ்டம் நீங்கி, கர்மக் கஷ்டமும் நீங்கி ஸுபிக்ஷமாக இருக்கணும் — என்றே திவ்ய லீலையாக நடத்தினாள். “த்ரவிணாம்புதாராம் தத்யாத்” என்று சொன்னவுடனேகூட அவள் கனகதாரையைக் கொட்டிவிடாமல், அப்புறமும் அநேக ச்லோகங்கள் அழகு அழகாக அவர் செய்த பிற்பாடே அநுக்ரஹம் பண்ணினாள்.

நாமும் இந்த ஸ்தோத்ரதைச் சொல்லி தாரித்ரிய நிவ்ருத்தியும், “கர்ம ர்மம்” என்று சொன்ன பாப தாபத்திலிருந்து நிவ்ருத்தியும் பெறுவோம்! ப்ராம்மண தம்பதியை சாக்காகக் காட்டி நம் எல்லாருக்குமென்றே ஆசார்யாள் இந்த ஸ்தோத்ரத்தை அநுக்ரஹம் பண்ணியிருக்கிறார்.

ஐஹிகமாக (இக வாழ்க்கையில்) ஒரு பலனைத் தருகிற ஸ்தோத்ரம் என்றால் அது ‘பாபுல’ராகத்தானிக்கும். அப்படி ஆசார்ய க்ரந்தங்களில் ‘கனகதாரா ஸ்தவம்’ ப்ரஸித்தமாக இருக்கிறது. ஆனாலும் இஹத்தோடு பரத்தையும் அதில் ஆசார்யாள் குழைத்துத்தான் கொடுத்திருக்கிறார். இதே போல, ரோக நிவாரணம் தருகிறதென்பதால் ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்க’மும், ஸகல கார்ய ஸித்திக்குமானது என்பதால் ‘ஸெளந்தர்ய லஹரி’யும் famous-ஆக இருக்கின்றன. அவையெல்லாமும் அதோடுகூட, ஆத்மாவைக் கடைத்தேற்றுவதாகவும் இருப்பவை. ஆச்சர்யமென்னவென்றால், ஒரே வைராக்யமாக உபதேசம் பண்ணும் “பஜ கோவிந்தம்” தான் எல்லாவற்றைக் காட்டிலும் ப்ரஸித்தி பெற்றிருப்பதாகும்! மற்றதெல்லாம் ஆசார்யாள் நமக்காகச் கொஞ்சம் விட்டுக் கொடுத்தும் பண்ணியவை. “பஜ கோவிந்தம்” தான் அவர் மனஸை அப்படியே பூர்ணமாக ப்ரதிபலிப்பது. அந்த மனஸின் மஹிமைதான் அந்த ஸ்தோத்ரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ப்ரஸித்தி!

பவுன் மழையாகக் கொட்டிற்று. ஆசார்யாள் அதில் ஒரு மணிகூடத் தொடாமல் அந்த ப்ராம்மண தம்பதிக்கென்றே அநுக்ரஹித்துவிட்டுப் போய்விட்டார்.

பொன்மழை பெற்ற வீடு காலடிக்குக் கொஞ்ச தூரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருந்திருக்கிறது. அழுகல் பழத்தைப் போட்டுத் தங்கப் பழங்களாகப் பெற்றவர்கள் வாழ்ந்த அந்த இடத்தை இப்போது ‘பழம் தோட்டம்’ என்றே சொல்கிறார்கள். அங்கே ‘ஸ்வர்ணத்துமனை’ என்றே ஒரு குடும்பம் இருக்கிறது. அதைச் சேர்ந்தவர்கள் கனகதாரை பெற்ற தமப்தியின் வம்சத்தில் வந்தவர்களென்று நம்பிக்கை இருக்கிறது.


1 சாகம்பரியின் கதை சற்று விரிவாக இனி வரவிருக்கும் நம் நூற்பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.

2 திரோதானம், பஞ்ச க்ருத்யம் முதலியவற்றின் விளக்கம் “குருமூர்த்தியும் த்ரிமூர்த்திகளும்” எனும் உரையில் ‘ருத்ரன்-சிவன் (சிவம், நடராஜா)-மஹேச்வரன்’ என்ற பிரிவில் காணவும்.

3 IV. 13

4 புருஷோத்தம நாமம் குறித்து ‘விஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்: சிவ-விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள்‘ என்ற உரையில் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பொன்மழை பொழிவித்தது;லௌகிகத்திலேயே ஆத்மிகமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மாறி ஓடிய ஆறு!
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it