Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

புரியாத ஸ்லோகம் புரிந்தது ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கீதையில் ஒரு ஸ்லோகம் அர்த்தம் புரியாமலிருந்து வந்தது. அர்ஜுனனுக்கு ஸ்வாமி ஞான யோகத்தை உபதேசம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இருக்கிற ஒரே ஸத்வஸ்து அழிவில்லாத ஒரே ஆத்மாதான் என்று சொல்லி, “இதொன்றிலேயே நிச்சய புத்தியுடன் பிடிப்பு வேண்டும்; இல்லாவிட்டால் மீமாம்ஸகர்கள் சொல்கிற மாதிரி வேதத்தின் கர்மகாண்டத்தில் உள்ள பலவிதமான பலன்களைத் தரும் பலவிதமான க்ரியா விசேஷங்களில் ஒன்று மாற்றி ஒன்றாக ஈடுபட்டு நிச்சய புத்தி ஏற்படாமலே வீணாய்ப் போவதாகத்தானாகும்” என்கிறார். “வேதம் (வேதம் என்பதை இங்கே வேதத்தின் ஞான காண்டமான வேதாந்தத்திலிருந்து பிரித்துக் கர்மகாண்டம் என்ற அர்த்தத்திலேயே சொல்கிறார். கர்ம காண்டமாகிய வேதம்) ஸத்வ-ரஜோ-தமோ குணங்களில் பலவிதமாகக் கிளைவிட்டுச் செல்லும் கார்யங்களையே விஷயமாகக் கொண்டது. நீ இந்த முக்குணங்களும் தொடாத ஆத்மாவில் ஆடாமல் அசையாமல் இருந்துவிடு” என்று சொல்லி ஒரு ச்லோகத்தைச் சொல்கிறார். புரியாத புதிராக இருந்த ஸ்லோகம்:

யாவாந் அர்த்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே |
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: || 1

அர்த்தம் இன்னவென்று தாத்பர்யமாகப் புரியாவிட்டாலும் வார்த்தைகளைச் சேர்த்துப் பார்க்கும்போது என்னவாகுமென்றால், “எவ்வாறு பரந்து விரிந்து கிடக்கிற தண்ணீர்க் காட்டில் ஒரு சின்ன ஊற்றின் ப்ரயோஜனம் கிடைக்குமோ அவ்வாறே ஞானவானான ப்ராஹ்மணனுக்கு எல்லா வேதத்திலேயுமாம்.”

‘எவ்வாறு’ – ‘அவ்வாறு’ (யாவான்-தாவான்) என்று என்னமோ நமக்கு நன்றாக த்ருஷ்டாந்தம் கொடுத்துப் புரிய வைக்கிறமாதிரி பகவான் ச்ரமப்பட்டிருந்தாலும் நாமும் அர்த்தம் புரியாமல்தான் ச்ரமப்படுகிறோம்! ‘சின்ன ஊற்றினால் பெறக்கூடிய பயனைப் பெரிய ஜல ப்ரவாஹத்திலிருந்து பெறலாம்’ என்பது ச்ரமமில்லாமல் புரிகிறது. ஆனால் “எவ்வாறு இதுவோ அவ்வாறே நல்ல ஞானமுடைய ப்ராஹ்மணனுக்கு எல்லா வேதமும்” என்றால், [சிரித்து] எவ்வாறு இவ்வாறு சொல்கிறார் என்று புரியாமல் இருந்தது. அப்புறம் இந்த சங்கர விஜய ச்லோகத்தைப் பார்த்த பின்தான் அந்த உபமானம் இங்கே சிக்கலில்லாமல் வருவதால் இதைக் கொண்டு அதுவும் தெளிவாயிற்று.

இங்கே ஆசார்யாள் அநேக சாஸ்த்ரங்கள் படித்தாலும் அவற்றின் சின்னச் சின்ன ஆனந்தங்களெல்லாம் அத்வைதப் பேரானந்தத்தில் அமிழ்ந்து கிடப்பவைதான் என்று கண்டுகொண்டு உள்ளூர அதிலேயே அமிழ்ந்திருந்தார் என்று சொல்லிவிட்டு, “கூபே யோ அர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே ஹந்த ந அந்தர் – பவேத் கிம் ?” என்று அதே உவமையை கேள்வி ரூபத்தில் போட்டு முடித்திருக்கிறது.

‘கூபம்’ என்றால் கிணறு. ‘அதிலே என்ன ப்ரயோஜனமுண்டோ அது’ என்பதை ‘கூபே யோ அர்த்த: ஸ’ என்று சொல்லியிருக்கிறது. ‘ஒரு கிணற்றைக் கொண்டு என்ன ப்ரயோஜனம் பெறலாமோ அது பரந்து விரிந்து கிடக்கும் ஒரு சுத்தமான தீர்த்த ப்ரவாஹத்துக்குள்ளிருந்து கிடைக்காதா என்ன?’ என்று கேட்டு முடித்திருக்கிறது. ‘விதத’ என்றால் ‘பரந்து விரிந்த’. ‘ஸு பயஸ்’ – நல்ல ஜலம். “கிணற்றினால் கிடைக்கும் பயன் பெரிய நதி ப்ரவாஹத்தில் கிடைக்காதா என்ன?”

“ஹந்த” என்றால் ஸர்வ ஸாமான்யமான ஒரு விஷயம் தெரியாவிட்டால், ‘அடக் கஷ்டமே! இதுகூடவா தெரியலை?’ என்று கொஞ்சம் குத்தலாகவும், கொஞ்சம் பரிதாபமாகவும் கேட்பதாக ஆகும். “மாதோ!” என்று தமிழ்ச் செய்யுளில் வரும்.

கிணற்றிலிருந்து கிடைக்கும் பயன் மஹாநதியிலிருந்து கிடைக்குமென்று சொல்லியா தெரியணும்? ‘அடக் கஷ்டமே, இதுகூடவா தெரியாது?’ என்று ஆச்சர்யம்-வருத்தம், கேலி எல்லாமுந்தான்-உண்டாகிறாற்போலவே, ச்லோகத்தில் முதல் பாதியில் சொன்ன விஷயம். அத்வைதாநுபவத்தின் மூர்த்தியான ஆசார்யாள் வேறே என்னென்னவோ சாஸ்த்ரங்களெல்லாம் கரைத்துக் குடித்திருந்தாலும் அவருக்கு அவற்றிலிருந்தே ஆத்ம லாபமாக எந்த ஆனந்த நிறைவும் கிடைத்திருக்காது. அவற்றின் ஆனந்தங்கள் அவருக்கு ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. இதைச் சொல்லித்தானா தெரியணும்? ஹந்த! ஏனென்றால் இந்த சாஸ்த்ரங்கள் தரக்கூடிய சின்னச் சின்ன ஆனந்தங்களெல்லாம் அமுங்கிப் போய்விடும் பேரானந்த நிறைவான – ஒரே நிறைந்த நிறைவான – அத்வைதத்திலேயல்லவா அவர் உள்ளூர அமிழ்ந்திருப்பவர்? ஆசார்யாள் பெற்ற அத்வைதானந்தத்திற்கு முன்னே ஏனைய சாஸ்த்ர ஆனந்தங்களெல்லாம் மஹாநதிக்கு முன்னே கிணறுகள் மாதிரிதான்.

நதிப் பாசனத்துக்கு வசதியில்லாத ராமநாதபுரத்தில் வேண்டுமானால் பெரிசாக ஆழமாக கிணறு வெட்டி வயலுக்கு இறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். காவேரி டெல்டாவில் எந்த வ்யவஸாயியாவது ஆழக் கிணறு வெட்டிப் பாசனம் பண்ணுவானா? “கூபே யோ அர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே…” தானே?

‘ஸுபயஸி தீர்த்தே’ என்று அர்த்த புஷ்டியுடன் போட்டியிருக்கிறது. ‘ஊற்று இத்தனூண்டு இருந்து, ஸமுத்ரம் எத்தனாம் பெரிசோ இருந்தாலும் சுத்த தீர்த்தமுள்ள ஊற்று ஜலம்தானே பான யோக்யமாயிருக்கிறது? உப்பு ஸமுத்ரம் தாஹம் தீர்த்துக்கொள்ள ப்ரயோஜனப்படுமா?’ என்று அவ்வைப் பாட்டி பாடி வைத்திருப்பதைக் குழந்தை நாளிலேயே படித்திருக்கிறோம் – மறந்துகூடப் போயிருக்கும்:

கடல் பெரிது.
மண்ணீரும் ஆகாது ; அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்.

அதனால்தான் இங்கே கிணற்றின் ப்ரயோஜனம் ஸமுத்ரத்தில் கிடைக்காதா என்று கேட்காமல், “ஸு பயஸி” : “நல்ல ஜலம் நிரம்பிய” (உப்பு ஜலமில்லை; சுத்த ஜலம் நிரம்பிய) ப்ரவாஹத்தில் கிடைக்காதா என்று கேட்டிருக்கிறது! கிணற்று ஜலம்தான் அழுக்குள்ளது – தூர், கீர் வாரவேண்டி இருப்பது. மஹாநதியில் தூர்வார வேண்டி வருவதுண்டா? அப்படி, அழுக்கற்ற அமல ப்ரவாஹமாக அத்வைத வித்யை இருக்கிறது. மற்ற சாஸ்த்ரங்கள் கொஞ்சமாவது தூர் வார வேண்டிய கிணறுகள்தான்.

இதைத்தான் கீதையிலும் பகவான் சொல்லியிருக்கிறார். “ஸகல வேதங்களும் — அதாவது, வேதங்களில் விரிவாக உள்ள கர்ம காண்டம் முழுதும் — சின்னச் சின்ன ஊற்றுக்களைப்போலக் கொஞ்சம் கொஞ்சம் பலனைக் கொடுக்கும் அநேக கர்மாக்களைத்தான் சொல்லியிருக்கிறது. ‘உதபானம்’ என்றால் குடிக்க ஏதோ கொஞ்சம் ஜலம் தரும் சின்ன ஊற்று, “சிற்றூறல்”. அந்தப் பலன்களில் ஆசைக்காகவே அவற்றிலே நீ போனாயானால் (அர்ஜுனனைப் பார்த்துச் சொல்கிறார்…) ஆசை அழுக்கு, முக்குண அழுக்கு எல்லாம் படிந்து வீணாய்ப் போய்விடுவாய். நானாவிதமான ஆசைப் பூர்த்திகளில் ஓடிக் கொண்டு ஒரு நிச்சய புத்தியும் பெறாமல் கெட்டுப்போவாய். அப்படிப் பண்ணாதே! குணாதீதமாக, ஆசைகள் அற்றுப் போகும் நிலையாக, உள்ள அத்வைத ஆத்மாவையே பிடித்துக்கொள். அது சிற்றூறல் அல்ல; எங்கே பார்த்தாலும் பரவியுள்ள பெரிய ஜல ப்ரவாஹம். அது இருக்கும்போது இவற்றை ஏன் பிடித்துக்கொள்ள வேண்டும்? ஊற்றுக்களின் ப்ரயோஜனத்தை எல்லாம் கூட்டினாலும் அதைவிட ப்ரவாஹத்தின் ப்ரயோஜனம்தானே பெரிசு? அப்படி கர்ம காண்டத்தில் செய்யும் பலவற்றின் ப்ரயோஜனங்களுக்கும் மேலானது ஞான காண்டத்தினால் பெறும் ஆத்ம ஸித்தி. ஞானமடைந்த ப்ராம்மணன் – ‘ஞானம் வேண்டாம்; கர்மாவே எல்லாம்!’ என்று பண்ணிக்கொண்டு போகும் ப்ராம்மணனைச் சொல்லவில்லை; அதனால்தான், ‘ப்ராஹ்மண்ய விஜானத:‘ என்று சொல்கிறேன்; இப்படிப்பட்ட ஞானவானான ப்ராம்மணன் – இதை நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்காகவே நடக்கிறான்…”

எவ்வாறு விரிந்து கிடக்கிற தண்ணீர்க் காட்டிலிருந்து சின்ன ஊற்றின் பயனைப் பெற்றுவிடலாமோ, அவ்வாறு ஞானவானான ப்ராம்மணன் அகண்டமாயுள்ள ஆத்மாநுபவத்திலிருந்தே ஸகல வேத கர்மாக்களின் பயனையும் பெற்று விடுகிறான்” என்றுதான் பகவான் சொல்லியிருக்கிறாரென்று தெளிவுபட்டது.

கீதை ச்லோகத்திற்கு அர்த்தம் தேடித்தேடி சங்கர விஜய ச்லோகத்திலிருந்து கண்டு பிடிக்கும்படி இருக்கிறது! பகவான் சொன்னதை மனஸில் வைத்துக்கொண்டுதான் சங்கரவிஜயக்காரர் ச்லோகம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது!

ஸாரமென்னவென்றால்: பெரிய ப்ரவாஹமாக, மஹாநதியாக இருப்பது அத்வைதம். பாக்கி சாஸ்த்ரங்கள், தத்வங்கள் எல்லாம் ஊற்று, கிணறு, குட்டை, வாவி மாதிரி தான். அந்த மஹாநதியினால் உண்டாகிற ப்ரயோஜனத்துக்குள்ளேயே இந்த ஊற்று, கிணறு, குட்டை, வாவி முதலானவற்றால் உண்டாகும் சிறு சிறு ப்ரயோஜனங்களும் அடங்கி விடும். அத்வைத வித்யா மஹாநதியிலேயே திளைத்துக் கொண்டிருந்த ஆசார்யாள் அவதார ‘பர்பஸ்’ சிலதை உத்தேசித்து ஊற்று முதலானவற்றிலிருந்தும் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொள்கிறதுபோல மற்ற சாஸ்த்ரங்களைப் பூர்த்தியாக அப்யாஸம் செய்தார். அகஸ்த்யர் ஸமுத்ரத்தையே ஆசமனம் பண்ணின மாதிரி ஸகல சாஸ்த்ரங்களையும் ஸுலபமாக ஜீர்ணித்துக் கொண்டுவிட்டார்.

குருகுலவாஸ காலத்தில் ஆசார்யாள் தாம் பாடம் படித்ததோடு, லோகத்திற்கெல்லாம் பாடமாக ப்ரஹ்மசர்ய தர்மங்களை நன்றாக அனுஷ்டித்தார். குரு சுச்ருஷை பண்ணிக் கொண்டு, க்ரமமாக வீடு வீடாகப் போய் பி்க்ஷை எடுத்து வந்தார்.


1 கீதை II. 46

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அனைத்து சாஸ்திர அறிவும், அனைத்தும் அடங்கும் அத்வைதமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பொன்மழை பொழிவித்தது;லௌகிகத்திலேயே ஆத்மிகமும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it