Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மேல்நாட்டவரின் பரிஹாஸமும் உள்நோக்கமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்படிக் காரணங்கள் காட்டிக் கால நிர்ணயம் பண்ணி நம்முடைய கணக்கைப் பரிஹாஸம் பண்ணுகிறார்கள்.

Old is gold என்று பழசையே கொண்டாடுவது நமக்கு வழக்கம். பூர்விகமாகப் போகப்போக ஒன்றுக்கு உயர்வு ஜாஸ்தி, தெய்விகம் ஜாஸ்தி, அதாரிடி ஜாஸ்தி என்று நமக்கு ஸூபர்ஸ்டிஷன் (மூடநம்பிக்கை). அதனால் மநுஷ்ய ஜீவ உற்பத்தியே ஏற்பட்டிருக்க முடியாத எத்தனையோ லக்ஷம், கோடி வருஷத்துக்கு முந்தியே மநு இருந்தார். மாந்தாதா இருந்தார் என்று கதை பண்ணுகிறோம். க்ருதயுகம் கிட்டதட்ட 18 லக்ஷம் வருஷம் (17,28,000), த்ரேதாயுகம் அதில் முக்கால் (12,96,000 வருஷம்) த்வாபரம் பாதி (8,64,000) வருஷம், கலி கால் (4,32,000 வருஷம்) என்றெல்லாம் சொல்லி க்ருத யுகத்திலிருந்து ராஜவம்சங்கள் சொல்வதாக லிஸ்ட் கொடுத்து, அந்தக் காலத்தில் பல நூறு, பல ஆயிரம் வருஷம் ஜீவித்து ஆட்சி நடத்தியவர்களும் உண்டு என்று ஒரே புரளியாகப் பண்ணிவருகிறோம். இப்படி ஏதோ 43 லக்ஷம் வருஷம் முந்தி க்ருதயுகம் ஆரம்பித்ததோடு மட்டும் நிறுத்தாமல், இதற்கும் முன்னாடி எத்தனையோ சதுர்யுக ஸைகிள்கள், மன்வந்தரம் கல்பம் என்றெல்லாம் லக்ஷத்திலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களுக்குத் தாண்டிப் புளுகு மூட்டைகளாகக் கட்டிவைத்திருக்கிறோம். அந்த ரீதியில் வருவதுதான் நாம் traditional ஆகச் சொல்லிவருகிற ஆசார்யாள் காலம் — என்று இவ்வாறாக (கி.மு. 509-477 என்ற) நம்முடைய அபிப்ராயத்தைத் தப்பு என்று சொல்லிப் பரிஹாஸம் செய்கிறார்கள்.

த்ரேதாயுக, க்ருதயுக விஷயங்கள் இங்கே ஸம்பந்தமில்லை. கலியில் கிட்டத்தட்ட 2600 வருஷமானபோதே ஆசார்யாள் அவதாரம் என்று நாம் சொல்வதால் பூர்வ யுக, மன்வந்தரச் சண்டைக்குப் போகவேண்டாம். இப்படிச் சொன்னதால் நமக்கு அந்த விஷயமாகப் பாயிண்ட் இல்லை என்று அர்த்தமில்லை.

அவர்களுடைய (மேல் நாட்டினருடைய) ஸிவிலிஸேஷன் (நாகரிக வாழ்வு) தோன்றியது சில ஆயிரம் வருஷம் முந்திதான். அதிலும் அது முன்னேறியது 2000 வருஷத்திற்கு முன்வந்த கிறிஸ்துவுக்கு அப்புறந்தான். இன்று நவநாகரிகம் என்பதன் உச்சியிலிருக்கிற இங்கிலீஷ்காரர்கள், ஜெர்மனிக்காரர்கள் முதலியவர்களெல்லாம் 1500 வருஷம் முந்திக்கூட pirate என்று கப்பல்களைக் தாக்கி அழிக்கும் கூட்டம் முதலியனவாக இருந்து அப்புறம்தான் இங்க்லாண்ட், ஜெர்மனி ஆகிய இடங்களில் ‘ஸெட்டில்’ ஆகி ஸமுதாய வாழ்க்கை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பாஷைகள் ரூபமானதும் அதற்கப்புறம்தான்.

அவர்களை மட்டம் தட்டுவதற்காகச் சொல்லவில்லை. [சிரித்து] யாரையும் மட்டம் தட்டிப் பேசுவதுதான் எல்லாவற்றையும் விட மட்டம்! தற்பெருமை அடித்துக்கொள்வதும் மட்டம்தான், அஹங்காரம்தான். ஆனால் நம்மை அவர்கள் தாக்கிக் கேலி பண்ணும்போது ஏன் அப்படிப் பண்ணுகிறார்களென்று பார்க்க வேண்டியதாகத்தானே இருக்கிறது? அந்த ரீதியில்தான் சொல்வது. 1500 வருஷத்துக்குள் இலக்கியம், அரசாட்சி, வியாபாரம், ஸயன்ஸ், ஹைஜீன் என்று எல்லாவற்றிலும் அவர்கள் எப்படி அதிசயமான அபிவ்ருத்தி கண்டிருக்கிறார்கள் என்பதைப் புகழ்ந்து பாராட்டவும்தான் வேண்டும். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் எப்படி விடாமுயற்சியுடன் அடிவரையில் போய் ஆராய்கிறார்கள் என்பதையும் போற்றிச் சொல்லவேண்டும். நஷ்டப்பட்டுப்போன நம்முடைய அநேக சாஸ்த்ரங்களை, எங்கெங்கேயோ ஏட்டுச் சுவடிகளில் அரிபட்டுப்போய்க் கொண்டிருக்கும் போது தேடிக் தேடிக் கண்டுபிடித்துப் பெரிசு பெரிசாக Index, Concordance என்றெல்லாம் அவர்கள்தான் புஸ்தகம் போட்டு ரக்ஷித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு நாம் அவர்களிடம் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உழைப்பு, ‘பங்க்சுவாலிடி’ போன்ற பல விஷயங்களில் நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

ஆனாலும் அவர்களுடைய கண்ணோட்டத்திலுள்ள சில தப்பான போக்குகளையும் சொல்லாமலிருக்க முடியவில்லை — குறிப்பாக நம்மை அவர்கள் தாக்க வரும்போது. Offensive -ல் போகாமல் (நாம் அவர்கள் மேல் முதல் தாக்குதலில் இறங்காமல்) defensive -ல் (நம்மை அவர்கள் தாக்கும் போது நம் தற்காப்புக்கான எதிரடியாக) தான் சொல்வது.

அவர்கள் (ஓரியன்டலிஸ்டுகள்) சொல்வதில் மூலாதாரக் கோளாறு மனோதத்வ ரீதியிலானது. அதோடு ஒரு உள்நோக்கமும் உண்டு.

என்னதான் ‘ஸயன்டிஃபிக் ரிஸர்ச்’, அது, இது என்று அப்படியே நடுநிலை தப்பாமல் சொல்வதாகச் சொல்லிக் கொண்டாலும் மநுஷர்களாகப் பிறந்தவர்களை ‘ஸைகலாஜிகல்’ அபிமானங்கள் விடுவதே இல்லை. நம்மூரிலேயே ப்ரத்யக்ஷமாய் பார்க்கிறோம்: ‘மூட நம்பிக்கைகளைக் குழி தோண்டிப் புதைக்கவேதான் நாங்கள் வந்திருக்கிறோமாக்கும்’ என்று சொல்லிக்கொண்டு பகுத்தறிவு வாதிகள் என்றே ஒரு கட்சியாகப் புறப்பட்டிருப்பவர்களைப் பார்க்கிறோம். சாஸ்த்ர, புராணங்களை இவர்கள் பகுத்தறிவினால் ஆராய்ந்தே ஏகமாகக் கண்டனமும் கேலியும் செய்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரன் வார்த்தையை நம்பிக் கொண்டு தங்களுடைய தனி இனம் என்று இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிற இனம் என்றும், தாய் பாஷை என்றும் வந்துவிட்டால் இவர்களுடையை பகுத்தறிவு போன இடம் தெரிவதில்லை! ஜாதியிலே உசத்தி சொல்கிறவர்களென்று சில பேரைத் திட்டிக்கொண்டே, ‘எங்கள் இனத்தைப் போல உசத்தி எதுவுமே கிடையாது’ என்றும் இவர்கள் சொல்வது எப்படிப் பகுத்தறிவு என்று புரியவில்லை! தங்கள் பாஷையை விடவோ அதற்கு ஸமதையாகவோ எதுவுமே எங்கேயுமே கிடையாது, தங்களுடைய பண்பாட்டைவிடப் புராதனமாகவோ, அதற்குக் கிட்டே வரக்கூடிய லாயக்கோ உள்ளதாக எதுவுமே கிடையாது என்று ஒரே பிடிவாதமாகச் சாதிக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது சாஸ்த்ரஜ்ஞர்களைவிட இவர்களுக்குத்தான் ஜாஸ்தி ஸூபர்ஸ்டிஷன் என்று நினைக்கவேண்டிருக்கிறது. எந்த பாஷையில், எந்தப் பண்பாட்டில் உயர்வாக எது இருந்தாலும், ‘அதெல்லாம் எங்களிடம் இரவல் வாங்கியது தான்’ என்கிறார்கள். வாஸ்தவத்தில் கொடுக்கல் – வாங்கல் பரிவர்த்தனையில் கொஞ்சங்கூட குறுகிய நோக்கமோ, தயக்கமோ இல்லாமல் நல்லதுகளை எல்லாம் அன்போடு வரவேற்றுத் தனதாக்கிக் கொண்டிருப்பதில் முதலாவதாக நிற்பது தமிழ் பாஷையும் பண்பாடும்தான். ஆனாலும் ‘நாங்கள் பகுத்தறிவாளர்கள்’ என்று சொல்லிக் கொண்டே, நடுநிலைமையில் பார்க்காமல், தாங்கள் கொடுக்கல் மட்டுமே செய்தவர்கள், வாங்கலே கிடையாது என்கிறார்கள்! ‘தன் இனம்’ என்று ஒன்றை நினைத்துவிட்டால் அதில் இப்படி அறிவுவாதங்களை மீறிய அபிமானம் ஏற்பட்டு விடுகிறது!

‘ஸயன்டிஃபிக் ரிஸர்ச்’ என்று புறப்பட்ட ஓரியன்டலிஸ்ட்களையும் இந்த அபிமானம் விடவில்லைதான்! இன்றைக்குத் தாங்கள் மேல் கையாக ஓங்கியும், இந்தியா கீழ்க் கையாகத் தங்களிடம் தாழ்ந்தும் இருந்தாலும்1, ஆதியில் தங்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் இந்தியா மஹத்தான கலாசாரத்துடன் விளங்கியிருக்கிறது என்பதை அவர்களால் ஏற்று ஜீர்ணித்துக் கொள்ளமுடிவதில்லை!

அவர்கள் தற்காலத்தில் பார்த்த ஹிந்து ஸமுதாயத்தில் பல குறைகள் இருப்பதாக நினைத்தார்கள். அவர்களுடைய நவீன ஸயன்ஸ் அறிவு இங்கே இல்லை; அவர்கள் சொல்லிக் கொடுத்துத்தான் இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர்களைப்போல ஸுகாதாரமாயில்லாமல் ஏராளமான ஜனங்கள் ஒரே அசுசியான சூழ்நிலையில் வ்யாதியும் வக்கையுமாகச் சிறு வயதிலேயே செத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களிடமுள்ள ஸமத்வம் இங்கே இல்லாமல், ஜாதி, கிளை ஜாதி என்று ஒரேயடியாகப் பிரித்துப் பிரித்து வைத்து, ஜாதியே இல்லாத பஞ்சமர் என்று வேறு ஒரு பெரிய கூட்டத்தை ஒதுக்கி வைத்திருந்ததும் அவர்களுக்குப் புரியவில்லை. நம்மில் கல்வியறிவு, ஸுகாதாரம் முதலியவற்றில் முன்னேறியுள்ள ஜாதிக்காரர்களுக்கும் அவர்களுடைய ஸயன்ஸுக்கு ஒத்துவராத சாஸ்த்ரக் கொள்கைகளையும், கார்யங்களையும் பின்பற்றி வருவதும் அவர்களுக்கு ஏற்கவில்லை.

இதையெல்லாம் பார்த்து இந்த தேசமே ரொம்ப backward (பின் தங்கியது) என்று சொல்லி, “உங்களுக்கெல்லாம் அறிவுச் சுடர் கொளுத்துகிறோம். எங்கள் மாதிரி உங்களையும் முன்னேற்றுகிறோம்” என்று ஆரம்பித்தார்கள்.

நவீன ஸயன்ஸ் கிறு கிறுவென்று அவர்களுடைய நாடுகளில் தோன்றி அபிவ்ருத்தி அடைந்த காலத்தில் நம் தேசம் துருக்கர் ஆட்சியில் இருந்து, கொஞ்சங்கூட முன்னேறாமல், நம்முடைய பழைய ஸயன்ஸுகளையும் மறந்துவிட்டது. இப்போது அவர்களுடைய ஸயன்ஸ் ஸாதனை நம்மவர்களுக்கு ப்ரமிப்பு உண்டாக்கிற்று. அதைப் பார்த்து, அவர்கள் காலடியில் விழுந்து அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.

தங்கள் காலடியில் வந்து விழுந்து தங்களையே வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளும் இதே ஹிந்துக்கள்தான் மிகப் புராதனமான காலத்திலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முந்தி வரை ஸகலதுறைகளிலும் முன்னேறி லோகத்துக்கே வழிகாட்டியாயிருந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள அவர்களுடைய ஸ்வயாபிமானம் விடவில்லை!

அது மட்டுமில்லை. உள்நோக்கம் என்றேனே, அதற்கு வருகிறேன். உறைக்குள் கத்தியை மறைத்து வைத்திருப்பது போல அவர்கள் ரஹஸ்யமாகப் போட்டு வந்த இன்னொரு திட்டத்துக்கு நம்முடைய புராதன கலாசாரத்தை ஒப்புக் கொள்வது இடைஞ்சலாயிருந்தது. அரசியல் ரீதியில் நம்மைத் தங்களுடைய ஆட்சிக்குள் கொண்டு வருவது மாத்திரம் அவர்களுடைய லக்ஷ்யமாயிருக்கவில்லை. நம் ஸமுதாயம் முழுவதையும் தங்களுடைய மதத்துக்குத் திருப்பிவிட வேண்டுமென்பதே அவர்களுடைய ரஹஸ்ய உத்தேசம். மறைந்து போயிருந்த நம்முடைய சாஸ்திரங்கள் வெளிவர நமக்கே உபகாரம் செய்தவர்கள் என்று அவர்களில் பலரைச் சொல்கிறோமல்லவா? அவர்களிலேயே சிலருடைய ஜீவ்ய சரித்ரம், அவர்கள் நடத்திய கடிதப் போக்குவரத்து முதலியவற்றைப் பார்த்தால் நமக்கு தூக்கிவாரிப் போடும்! ஹிந்துக்களோடு விச்வாஸமாகப் போகிற மாதரிப் போயே அவர்களை வளைத்துப் பிடித்து அவர்களுடைய ஸ்வ மதாபிமானம் போகும்படிச் செய்து அவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுத்துவிட வேண்டும் என்று அவர்கள் ப்ளான் போட்டிருந்தது இவற்றைப் பார்க்கும்போது தெரியும். வெளியிலே மிஷினரிகள் பஹிரங்கமாகச் செய்தது குறைச்சல். உள்ளூரக் குழிபறித்ததுதான் ஜாஸ்தி. வெளியிலே ‘அவரவருக்கும் மத ஸ்வதந்த்ரம் உண்டு. ஹிந்து சாஸ்த்ர விஷயங்களில் தலையிட மாட்டோம்’ என்று விக்டோரியா ப்ரகடனத்திலிருந்து ஆரம்பித்துச் சொல்லி வந்தார்கள். ஆறாயிரம் மைலுக்கு அப்புறத்திலிருந்து கொண்டு கோடிக் கணக்கான ஜனங்களை ஆளும் போது ஜாக்ரதையாகத்தானே இருக்க வேண்டும்? அதனால் வெளியில் நேர்மை மாதிரிப் பண்ணிக் கொண்டே உள்ளூர ஹிந்துக்களைத் தங்கள் மதத்திற்கு இழுக்க எல்லா ஸாமர்த்யமும் பண்ணினார்கள். ‘நம் மதத்திற்கு வராவிட்டால்கூடப் பரவாயில்லை. ஸொந்த மதத்தை இவர்கள் விட்டுவிடும்படிப் பண்ணிவிட்டால் போதும்’ என்ற ரீதியில் கார்யங்கள் செய்யலானார்கள். அதாவது ஹிந்துக்களுக்கு ஹிந்து மதத்தில் கௌரவ புத்திபோகும்படிப் பண்ணுவதைப் பல விதத்திலும் முயற்சி செய்தார்கள்.

பூர்வத்தில் எல்லாத் துறையிலும் இந்தியாவே முன்னேறியிருந்தது என்றேன். அது வாஸ்தவம். அதிலும் இந்தியா மிகவும் விசேஷமாக முன்னேறியிருந்தது — ஆத்ம ஸம்பந்தமான ஸமய சாஸ்த்ரத்திலும் அநுஷ்டானங்களிலுமேயாகும். வாழ்க்கையின் ஸகல அம்சங்களிலும், கலாசாரத்தின் அத்தனை இழைகளிலும் ஸமயமே ஊறியிருக்கும்படியாக இங்கே ஏற்பட்டிருந்தது. எதைத் எடுத்தாலும் அது ஆத்மாபிவ்ருத்திக்குக் கொண்டு விடுவதாகவே ரிஷிகளாலும், அப்புறம் வந்த பெரியவர்களாலும் அமைக்கப்பட்டிருந்தது. இப்படி மதவுணர்ச்சியையே மையமாகக்கொண்டு, மற்ற எல்லாப் பூர்விக ஸிவிலிலேஷன்களும் அழிந்தபின்னும் தான் மட்டும் அழியாமல் ஹிந்து நாகரிகம் இருந்து வந்திருக்கும்போது இங்கே போய்ப் புதிய மதம் ஒன்றைப் புகுத்துவது என்றால் அதற்கு எவ்வளவோ தந்திரமும் தகிடுதத்தமும் பண்ணத்தானே வேண்டியிருக்கும்?

அதில் ஒன்றுதான்- (இன்னம் எத்தனையோ இருக்கின்றன. முக்யமாக ஆர்யன் – த்ராவிடன் என்று ஒரு தாய் வயிற்றுக் குழந்தையாக இருந்தவர்களை பேதம் பண்ணியது. ஆனால் அதிலெல்லாம் இப்போது ப்ரவேசிக்க வேண்டாம். நமக்கு அவச்யமான அம்சத்தை மட்டும் பார்க்கலாம்.) — ஹிஸ்ட்ரி, ரிஸர்ச் என்று சொல்லிக்கொண்டே நம்முடைய மிகப் பழைய காலத்தை முடிந்தமட்டும் கிறிஸ்து சகாப்தத்துக்கு எவ்வளவு கிட்டே கொண்டு வரமுடியுமோ அப்படிக் கொண்டுவந்து விடுவது! ‘நம்முடையது ரொம்பவும் தொன்மையானது’ என்பதில் ஒரு பெரிய ஸைகலாஜிகல் நிறைவு இருக்கிறதென்று சொன்னேனல்லவா? ‘ஹிந்துக்களுக்கு அந்த நிறைவு இல்லாமல் பண்ணிவிட வேண்டும்’ என்று நினைத்தார்கள். நினைப்பைக் கார்யமாகச் செய்து கொள்ள அவர்களுக்குக் கிடைத்த ஒரு முக்யமான உபாயம் பௌத்த மதம்.

பௌத்தம் தற்காலத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு அடுத்த பெரிய மதமாகக் கிழக்காசிய நாடுகளில் ஜப்பான் வரை பரவியிருப்பதையும், ஆனால் அதன் பிறந்த வீடான இந்தியாவில் அதற்கு இடமில்லாலிருப்பதையும் பார்த்தார்கள். அதே ஸமயத்தில் புத்தரின் அன்புள்ளம், த்யாகம் முதலியவற்றால் ஹிந்துக்களுக்கு அவரிடம் ஒரு ரெஸ்பெக்ட் இருப்பதையும் அவரை தசாவதாரத்தில் ஒன்றாகவே சேர்ந்திருப்பதையும் கவனித்தார்கள். நம்முடைய ஹிந்து மதாபிமானத்தைக் குலைப்பதற்கு இதை நன்றாக ப்ரயோஜனம் செய்துகொள்ளலாமென்று ப்ளான் போட்டார்கள். நம் ஜன ஸமூஹத்துக்குப் பரிசயமில்லாத கிறிஸ்துவைக் காட்டுவதற்கு முந்தி, பரிசயமுள்ள புத்தரைக் காட்டியே நம் சாஸ்திராபிமானத்தை நலியப் பண்ண ஆரம்பிக்கலாமென்று நினைத்தார்கள். ‘எப்படியும் பௌத்த மதத்தில் இவர்களை மதமாற்றம் செய்வதற்கு அந்த மதத்தில் விசேஷமாக ஸ்தாபனம் எதுவும் இல்லை. ஆகையால் புத்தரை நாம் விசேஷித்துச் சொல்வதால் அந்த மதத்திற்கு யாரும் போய்விடமாட்டார்கள். இது நமக்கு ஸெளகர்யமாயிற்று. இவர்கள் அவதாரமாகச் சொல்பவரே வைதிக கர்மாக்கள், வர்ண தர்மம் முதலியவற்றை ஆக்ஷேபித்திருப்பதை எடுத்துக் காட்டியே ஹிந்து மதவுணர்ச்சியை நலிவிக்கலாம். கிறிஸ்து சகாப்தத்துக்கு அப்புறம்தான் இந்தியாவில் பெரிய நாகரிகம் உண்டாயிற்று என்று காட்டாமல் அதற்குக் கொஞ்சம் முந்தி புத்தரின் இன்ஃப்ளுயென்ஸால், அவரையொட்டித்தான் இண்டியன் ஹிஸ்டரியே ரூபமாக ஆரம்பித்ததென்று காட்டலாம். பாரத கலாசாரத்துக்கே முக்யமாக இருக்கப்பட்ட முதல் பெரியவர் அவர்தான் என்று காட்டலாம். “ராமன், க்ருஷணன் எல்லாம் கதாபாத்ரங்கள் தான்; அவர்கள் சரித்ர பூர்வமாக இருந்ததாகச் சொல்வதற்கில்லை; புத்தர்தான் சரித்ராதாரப்படியே இருந்தவர்” என்று காட்டலாம். ‘அத்வைதமா, மாயா டாக்ட்ரினா (மாயைக் கொள்கையா) — அவை பௌத்தத்திலிருந்துதான் வந்தன; சயனக் கோலத்தில் விஷ்ணு மூர்த்தியா, அது புத்தரின் மஹா பரிநிர்வாண சில்பத்திலிருந்துதான் வந்தது’ என்றிப்படி எதை எடுத்தாலும் பௌத்தத்திலிருந்துதான் ஹிந்து மதத்திலுள்ள உசந்த அம்சங்களெல்லாம் வந்திருக்கின்றன என்று காட்டிவிடுவோம்.

‘எல்லாவற்றுக்கும் அடிப்படையிலேயே Dravidian Culture (த்ராவிடக் கலாசாரம்) என்று பேதமாக ஒன்றைப் பிரித்துச் சொல்லி அதிலிருந்தே வைதிக மதம் அநேக அம்சங்களை இரவல் வாங்கினதாகக் காட்டலாம்; மிஞ்சியதில் பல பௌத்தத்திலிருந்து கடன் வாங்கினதாகக் காட்டலாம் — ரொம்ப நைஸாக, எந்த ப்ரெஜுடிஸும் இல்லாமல் உள்ளது உள்ளபடி ஆராய்கிறாற்போலவே இப்படியெல்லாம் காட்டலாம். அப்படிப் பண்ணி இந்தியர்களுடைய ஹிந்து மதாபினமானத்தை உளுத்துப்போகப் பண்ணலாம். அப்புறம் நம் மிஷனரி இருக்கவே இருக்கிறது, நம்முடைய மதத்தில் இவர்களைத் தள்ளிக்கொள்ள’ என்று நினைத்தார்கள்.

இந்தவிதமான எண்ணங்களோடுதான் அவர்கள் ஹிஸ்டரி எழுதியது. ‘அநாதி என்று ஹிந்துக்கள் கொண்டாடும் வேதமே புத்தருக்கு ஆயிரம், ஆயிரத்தைநூறு வருஷத்துக்கு முந்தி ஏற்பட்டதுதான். அந்த வேதம்தான் ஹிந்து நாகரிகத்தின் அஸ்திவாரம் என்பதும் தப்பு. அதற்கும் சில நூற்றாண்டு முன்னால் வேறே ஹாரப்பா நாகரிகமென்று ஒன்று இருந்தது. அது த்ராவிட நாகரிகமாக இருந்தாலும் இருந்திருக்கலாம். அந்த ஜனங்களை அடக்கி ஒடுக்கி விரட்டிவிட்டு, ஆனாலும் அவர்களுடைய நாகரிகத்திலிருந்தே பல விஷயங்களை எடுத்துக்கொண்டு தான் வேத நாகரிகம் என்று ஏற்படுத்தினார்கள்’என்று ஹிஸ்டரியை ஆரம்பித்து மேல படிப்படியாய் இதே மாதிரியான ‘கைங்கர்யங்கள்’ பண்ணிக் கொண்டுபோயிருக்கிறார்கள்!

நம்முடைய பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத்திலேயே இந்த சரித்ர பாடத்தைச் சொல்லிக்கொடுப்பதால் அதுவே ஸத்தியம் என்று மனஸில் பதிந்துவிடுகிறது. பெரியவர்களான பின்னும் அந்த நம்பிக்கை போவதில்லை. நம் சாஸ்த்ரங்கள் யாவும் அறிவுக்குப் பொருந்தாதவை, ஸூபர்ஸ்டிஷன் என்ற எண்ணம் நன்றாகப் பரப்பப்பட்டு எல்லார் மூளையையும் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் அவற்றில் கொடுத்திருக்கும் சரித்ர விஷயங்களில் நமக்கே நம்பிக்கையில்லை. நம்முடைய புராணங்களில் விவரமாக வம்சாவளிகள் கொடுத்து, ஒவ்வொருவரும் இவ்வளவு வருஷம் என்றும் சொல்லியிருப்பது அத்தனையும் கல்பனைதான் என்று தள்ளியே விடுகிறார்கள். அவற்றை நம்பிக்கொண்டிருக்கும் சாஸ்திரஜ்ஞர்களும் ஒன்று, வறட்டு மூடநம்பிக்கைக்காரர்கள் அல்லது அசட்டு முத்தண்ணாக்கள் என்றே வர்ணிக்கபபட்டு, அந்த வர்ணனை இளம் தலைமுறையினரின் மனஸில் வேரூன்றி இருப்பதால் இவர்கள் என்ன எடுத்துச் சொன்னாலும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் ‘எங்கள் ப்ரொஃபஸர்கள், டாக்டர்கள் சொல்கிறதுதான் அதாரிடி’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் ஒரு ஸூபர்ஸ்டிஷன்தான்! ‘எதைக் கொண்டு புராணத்தைத் தப்பென்று ரிஸர்ச்காரர்கள் சொல்கிறார்கள்? அவர்கள் எது எதைக்கொண்டு இப்படி இப்படி என்று கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்? இதற்கு வேறேயாகச் சொல்ல ஆதாரமேயில்லையா?’ என்றெல்லாம் யோசித்துப் பார்ப்பதில்லை. நவீனப் படிப்பாளிகள் எதைச் சொன்னாலும் அப்படியே அங்கீகரிப்பது, பூர்வகால அபிப்ராயத்தை அப்படியே திரஸ்கரிப்பது என்று இருக்கிறார்கள்.


1 இந்தியா சுதந்திரம் பெறுமுன் கூறியது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 5. பூர்ணவர்மனைப் பற்றிய குறிப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  7. கலியுகத்தில் நமது காலக் கணக்குகள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it