ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – ஆசார்ய ஸ்தோத்ரங்களில் கி.பி. குறிப்புக்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஞான நூல்களான பாஷ்ய க்ரந்தங்களில் இப்படியெல்லாம் internal evidence (உட்சான்று) காட்டுவதுபோலவே பக்தி நூல்களான ஸ்தோத்ரங்களிலும் ஒன்றிரண்டு காட்டுகிறார்கள். பொதுவாக, ‘ஞான மார்க்க ஆசார்யாள் பக்தி ஸ்தோத்ரமே பண்ணியிருக்க மாட்டார். வேறே யார் யாரோ பண்ணியதையெல்லாம் அவர் பேரில் ஏற்றிச் சொல்கிறார்கள்’ என்றுதான் இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்வது வழக்கம். ஆனாலும் (ஆசார்யாளின் காலம் குறித்த) சாஸ்த்ரஜ்ஞர்களின் மெஜாரிடி அபிப்ராயத்தைத் தகர்க்க வேண்டுமென்னும்போது, தங்களுக்கு ஸாதகமாக வருகிற பக்தி ஸ்தோத்ரங்களையும் அவருடையதாக ஒப்புக்கொண்டு பேசுகிறார்கள்!

“ஸெளந்தர்யலஹரி”யில் அம்பாளின் க்ஷீர மஹிமையைச் சொல்லும்போது1, “வெள்ளை வெளேரென்ற ஸரஸ்வதியே உன்னுடைய க்ஷீர ரூபத்தில் பெருகுகிறாளென்று நினைக்கிறேன். உன் ஹ்ருதயத்திலிருந்து வரும் அநுக்ரஹ அம்ருத ப்ரவாஹமாகவும், ஸாரஸ்வதமான வாக் — அம்ருத ப்ரவாஹமாகவும் இருப்பது உன் க்ஷீரம். அதனால்தான் பரம தயையோடு நீ அதை ஒரு ‘த்ராவிட சிசு’வுக்கு — த்ராவிட தேசக் குழந்தைக்கு — கொடுக்க, அது கவிகளுக்கெல்லாம் கவியாக ஆனது” என்கிறார் ஆசார்யாள். ஞான ஸம்பந்தருக்குத்தானே அம்பாள் பாலூட்டி அவர் மஹா பக்த கவியானது? அவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தவரென்பதற்கு அழுத்தமான சான்றுகள் இருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் ஆண்ட பல்லவ ராஜாவான மஹேந்த்ர வர்மா அப்பர் ஸ்வாமிகளால் சமண மதத்திலிருந்து வைதிக மதத்துக்கு மாற்றப்பட்டவன். அப்பரும் ஸம்பந்தரும் பல ஸ்தலங்களுக்கு சேர்ந்து சேர்ந்து போய்ப் பதிகம் பாடியிருப்பதால் ஸம்பந்தரும் அதே காலம்தான். அவரே பாண்டியராஜா ஒருவனை சமணத்திலிருந்து வைதிகத்திற்கு மாற்றியிருக்கிறார். நின்றசீர் நெடுமாறன் என்ற அவன் தான் மாறவர்மன் அரிகேசரி என்பதாகக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி நடத்தியவன். ஆகையால் ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளும் அந்த நூற்றாண்டுதான். அவரைப் பற்றி ‘அல்யூஷன்’ சொல்லும் ஆசார்யாள் அதற்கும் பிற்பட்ட காலத்தவராகத்தானே இருந்திருக்க வேண்டும்? -என்கிறார்கள்.

மஹேந்தர வர்மாவுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன் நரஸிம்ஹ வர்மா. அவனிடம் ஸேநாதிபதியாயிருந்த மாமாத்திர ப்ராம்மணரான பரஞ்ஜோதிதான் அப்புறம் சிவனடியாராக ஆகிச் சிறுத்தொண்டர் என்ற நாயனாரானாது. அவரைச் சோதிப்பதற்காக ஈச்வரனே வடதேசத்து பைரவ உபாஸகர் ரூபத்தில் வந்து பிள்ளைக் கறி படைக்கச் சொன்னார். “உன்னுடைய பிள்ளையைக் கறி பண்ணிப் போடு” என்று அவர் சொல்லவில்லை. “ஒரு வீட்டுக்கு ஒரு பிள்ளையாக உள்ள ஒரு நர பசுவைப் பாகம் பண்ணிப் போட்டால் அதைத்தான் நாம் சாப்பிடுவது. ஆறு மாஸத்துக்கொரு தரம்தான் நமக்குச் சாப்பாடு. அது இந்தப் பிள்ளைக் கறிதான். இன்றைக்கு நாம் சாப்பிடும் தினம்” என்று சொன்னார். ‘உக்ர வழியிலானாலும் சிவோபாஸகராக இருக்கப்பட்ட ஒருவர் எங்கேயோ வடதேசத்திலிருந்து ஆறு மாஸம் சாப்பிடாமலிருந்துவிட்டு இன்று நம் அகத்துக்கு வந்து இப்படிக் கேட்கிறார். நமக்கும் ஏக புத்ரனே இருக்கிறான். அதனால் நாம் வேறே யாரோ பிள்ளையைப் பிடித்து வரப்போவானேன்?’ என்று சிறுத்தொண்டர் நினைத்தார். நினைத்த அப்புறம் கொஞ்சங்கூடத் தயங்கவில்லை. அவருடைய பத்னி-பிள்ளையைப் பெற்ற தாய்-அவளும் தயங்கவில்லை.

பைரவர் சொல்லியிருந்தபடியே, சீராளன் என்ற அவர்களுடைய ஏக புத்ரனான ஐந்து வயஸுப் பிள்ளையை அந்த அம்மாள் பிடித்துக்கொள்ளச் சிறுத்தொண்டர் அரிந்து, அப்புறம் பாகம் பண்ணி அதிதிக்குப் படைத்தார்கள். ஆனால் அது தங்கள் பிள்ளையென்று சொல்லவில்லை.

பைரவர், “நாம் தனியாகச் சாப்பிடுவதில்லை, அதனால், கூட உட்கார்ந்து சாப்பிடுவதற்கு உம் புத்ரனைக் கூப்பிடும்” என்றார்.

ஸ்வாமியை நினைத்துக்கொண்டார் சிறுத் தொண்டர். ‘உன் உபாஸகர் இலையில் உட்கார்ந்து விட்டார். கூடச் சாப்பிடப் பிள்ளையைக் கூப்பிடச் சொல்கிறார். அவர் சொன்னபடி செய்யவேண்டியது என் கடமை, கூப்பிடுகிறேன். அவர் கோபித்துக்கொண்டு எழுந்திருந்து போகாமல் சாப்பிட்டுப் பசியாறிப் போகப் பண்ணுவது உன் பொறுப்பு’ என்று ப்ரார்த்தித்துவிட்டு, “சீராளா! வா!” என்று கூப்பிட்டார்.

உடனே நிஜமாகவே அந்தப் பிள்ளை ஓடி வந்தான்!

எல்லாம் ஸ்வாமி ஆடிய நாடகம், புத்ர வாத்ஸல்யத்திற்கும் மேலே சிவனடியாரின் ஸேவையை உயிராக மதித்த பெரும் தொண்டர் இந்த சிறுத் தொண்டர் என்று காட்டவே ஸ்வாமி ஆடிய நாடகம், என்று தெரிந்தது.

‘புஜங்க ப்ரயாதம்’ என்பதாக அடிக்கு 12 அக்ஷரங்கள் கொண்டதாக உள்ள வ்ருத்தத்தில் (விருத்தத்தில்) ஆசார்யாள் செய்துள்ள அநேக ஸ்தோத்ரங்களில் “சிவ புஜங்கம்” ஒன்று2. அதில் ஒரு ச்லோகத்தில்3, “உன்னை எப்படி ப்ரீதி கொள்ளச் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கோ பிறத்தியாருக்கு த்ரோஹம் செய்வதற்கு முடியவில்லை. நீயானால் கட்டின பெண்டாட்டிக்கும், பெற்ற பிள்ளைக்கும், பெற்றெடுத்த தகப்பனாருக்கும் த்ரோஹம் செய்தவர்களுக்குத்தான் ப்ரஸன்னமாகி அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாய்!” என்று நிந்தா ஸ்துதியாக வருகிறது. காந்தா த்ரோஹி, ஸுத த்ரோஹி, பித்ரு த்ரோஹி என்று இதில் மூன்று நாயான்மார்களைக் குறிப்பிட்டிருக்கிறது.

காந்தா த்ரோஹி என்பவர் இயற்பகை நாயனார் — ஈச்வரனே அடியார் வேஷத்தில் வந்து, ‘உன் பெண்டாட்டியைக் கொடு’ என்றபோது அப்படியே தத்தம் பண்ணியவர். ‘இல்லையே என்னாத இயற் பகைக்கும் அடியேன்’ என்று ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ‘திருத்தொண்டத் தொகை’யில் சொல்கிறார். அப்புறம் அந்தக் கதையும் சிறுத்தொண்டர் – சீராளன் கதை மாதிரியே ஸ்வாமி விளையாடின சோதனை நாடகமாகி ஸந்தோஷமாகவே முடிகிறது. இயற்பகை நாயனார் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த வைச்யர் என்பது தவிர அவருடைய காலம் முதலியவை நமக்குத் தெரியவில்லை.

அடுத்தாற்போல் சொன்ன ஸுத த்ரோஹிதான் பிள்ளைக் கறி பண்ணிப்போட்ட சிறுத்தொண்டர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு மத்தியில் நரஸிம்ஹ வர்மா வாதாபி மேல் படையெடுத்துச் சாளுக்ய ராஜாவைத் தோற்கடித்தபோது இவர் ஸேநாதிபதியாக இருந்திருக்கிறார். அப்புறம் இவர் பெரிய சிவபக்தர் என்று நரஸிம்ஹ வர்மாவுக்குத் தெரிந்து, இவரைப் போய்ச் சண்டையில் ஏவிக் கொண்டிருக்கிறோமே என்று வருத்தப்பட்டு, இவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மரியாதையுடன் ‘ரிடையர்’ பண்ணி நிறைய ஸம்பாவனை கொடுத்து அவருடைய ஊரான திருச்செங்காட்டங்குடிக்கு அனுப்பி வைத்தான். அதற்கப்புறம் தான் அவருக்குப் பிள்ளை பிறந்து, கதையெல்லாம் நடந்தது.

ஆகையால் சிறுத்தொண்டரின் காலமான ஏழாம் நூற்றாண்டின் பின்பாதிக்கு முன்னால் ஆசார்யாளின் அவதாரம் ஏற்பட்டிருப்பதற்கில்லை என்கிறார்கள்.

பித்ரு த்ரோஹி என்றது, சண்டிகேச்வரரை, அவர் பண்ணி வந்த சிவபூஜையில் பாலைக் குடம் குடமாக அபிஷேகம் செய்கிறாரே என்று அவருடைய பிதா ஆத்திரப் பட்டார். ஆத்திரத்தில் பால் குடத்தைக் காலால் உதைக்க வந்தார். உடனே அவருடைய காலையே சண்டிகேச்வரர் வெட்டினார். பரமசிவன் ப்ரத்யக்ஷமாகி, “இனிமேல் நானே உன் பிதா!” என்றார். அதுவரை விசார சர்மா என்ற பெயரில் இருந்து வந்த அந்த ப்ராமண இளைஞருக்குச் சண்டிகேச்வரர் என்பதாக அப்போதுதான் பேர் கொடுத்து, சிவனடியார்களுக்கெல்லாம் தலைவராக்கி, தம் முடிமேலிருந்த கொன்றை மாலையை எடுத்து ஸ்வாமியே அவருக்குச் சூட்டினார் என்று கதை. பஞ்சமூர்த்திகளில்4 ஒருவராகவே சிவகுடும்பத்தில் இடம் பெற்றுவிட்டவர் சண்டிகேச்வரர். அவருடைய கதை எத்தனையோ யுகங்களுக்கு முற்பட்டது. அதனால் ஆசார்யாள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்பதற்கு இந்த ‘ரெஃபரென்ஸ்’ ஆக்ஷேபமாகாது.

ஆக்ஷேபம் அவர் சிறுத்தொண்டரைக் குறிப்பிட்டிருப்பதற்குத்தான்.

இரண்டு ராஜாக்களை வைத்து இன்னும் இரண்டு ஆக்ஷேபம் சொல்கிறார்கள்.


1 ச்லோகம் 75

2 மற்றவை கணேச புஜங்கம், ஸுப்ரஹமண்ய புஜங்கம், தேவீ புஜங்கம், பவாநீ புஜங்கம், சாரதா புஜங்கம், விஷ்ணு புஜங்கம், ராம புஜங்கம்.

3 பதின்மூன்றாவது ச்லோகம்.

4 பஞ்ச மூர்த்திகள் : சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேச்வரர்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 3. ஆசார்ய பாஷ்யத்தில் பௌத்தக் கொள்கைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  5. பூர்ணவர்மனைப் பற்றிய குறிப்பு
Next