ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – குமாரிலர் காட்டும் காளிதாஸனின் மேற்கோள் (மனஸ்ஸாக்ஷி ப்ரமாணம்) : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

குமாரிலர் காட்டும் காளிதாஸனின் மேற்கோள் (மனஸ்ஸாக்ஷி ப்ரமாணம்) : தர்மத்தை நிச்சயிப்பதற்கு எதெது ப்ரமாணம் என்று அவர் (குமாரிலர்) ஜைமினியின் மீமாம்ஸா ஸுத்ரத்திற்கு விளக்கமாக எழுதியுள்ள “தந்த்ர வார்த்திகத்”தில் அலசிப் பார்த்திருக்கிறார். மநு ஸ்ம்ருதியிலேயே இந்த விஷயம் விசாரித்து அபிப்ராயம் சொல்லப்பட்டிருக்கிறது. மநு,

வேதோ (அ)கிலோ தர்ம மூலம் ஸ்ம்ருதி சீலே ச தத்விதாம் |
ஆசாரச்சைவ ஸாதூநாம் ஆத்மநஸ்துஷ்டிரேவ ச

என்று தர்ம ப்ரமாணங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக, முதலில் வேதம், அப்புறம் தர்ம சாஸ்த்ரம். அப்புறம் ஸத்துக்களின் நடவடிக்கை, கடைசியாக நம் மனஸுக்கே, ‘ஸரியாய்த்தாண்டாப்பா பண்ணியிருக்கோம்’ என்று த்ருப்தி உண்டாக்கும் ஸொந்த அபிப்ராயம் என்று வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறார். ரூபத்தை அறிய நம்முடைய கண் ப்ரமாணமாயிருக்கிறது. சப்தத்தை அறியக் காது ப்ரமாணம். தர்மத்தை அறிய? அது நம் இந்த்ரியத்துக்கு அகப்படுமா? அகப்படாது. அதனால் ச்ருதிதான் ப்ரமாணம். தர்மாதர்மங்களை அறிய வேதத்தைப் பார்த்து அந்தப்படிதான் பண்ணணும். ஸரி, வேதத்தில் நாம் தேடுகிற தர்ம விஷயம் அகப்படவில்லையென்றால்? அப்போது அடுத்த அதாரிடியான ஸ்ம்ருதியை பார். ச்ருதி, ஸ்ம்ருதி இரண்டிலும் முடிவு தெரியாவிட்டால்? இம்மாதிரி விஷயத்தில் ஸதாசார ஸம்பன்னர்கள் என்ன சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதுவே ப்ரமாணம் என்று எடுத்துக்கொள். அவர்களும் இந்த விஷயத்தில் ப்ரவேசிக்கவில்லை, எதுவும் சொல்லவில்லை, செய்யவில்லை என்றால் என்ன செய்ய? ஸரி, உன் மனஸை நடுநிலையாய், நிஷ்பக்ஷபாதமாய் வைத்துக்கொண்டு அதற்கு என்ன தோன்றுகிறது என்று பார். ஸொந்த த்வேஷாபிமானங்கள் கலக்காமல் சுத்தமாக ஒரு அபிப்ராயத்துக்கு வா. உனக்குக் கொஞ்சங்கூட உறுத்தலில்லாமல் அது த்ருப்தி தரணும். அப்போது, ‘வேறே வழியில்லாமல் இதோ என் அந்தஃகரண சுத்தமாக இப்படித் தோன்றுவதே ஸரி என்று அநுஸரிக்கிறேன்’ என்று அப்படிப் பண்ணிவிட்டுப் போ. அதாவது உன்னுடைய அந்தஃகரணமே வேறொரு ப்ரமாணமுமில்லாதபோது ப்ரமாணம் என்று, பண்ணிவிட்டுப்போ! — இப்படி மநு சொல்கிறார்.

இந்த ரீதியில் கடைசியாய் வரும் மனஸ் ஸாக்ஷியின் ப்ராமாண்யத்தைக் குமாரில பட்டர் விசாரிக்கும்போது தான் காளிதாஸனை அதற்கு ஸாதகமாக quote செய்திருக்கிறார்.

சாகுந்தல நாடகத்தில் துஷ்யந்தன் வாயிலாக இதைப் பற்றிக் காளிதாஸர் சொல்லியிருக்கிறார். க்ஷத்ரியனான துஷ்யந்தனுக்கு ரிஷி குமாரியாகக் கண்வரின் ஆச்ரமத்தில் வளரும் சகுந்தலையைப் பார்த்தவுடன் ப்ரேமை உண்டாகிறது. ‘ப்ராம்மண கன்னிகையிடம் க்ஷத்ரியனுக்கு ப்ரேமை ஏற்படுவது தப்பல்லவா?’ என்று நினைக்கிறான். அப்போதுதான், ‘ஸத்துக்களின் மனஸு (அந்தஃகரணம்) ஏதோவொன்றில் ப்ரவேசித்துவிட்டால், ஏதோவொன்றிடம் ப்ரியம் வைத்துவிட்டால், அது தர்ம விரோதமாயிருக்க முடியாது. நம்முடைய மனஸில் இப்படியொரு ப்ரேமை எழும்பிற்றென்றால் அது தர்மப்படியானதாகவே இருக்க வேண்டும்’ என்று நினைத்துத் தன் ப்ரேமையில் தப்பிருக்காது என்று தீர்மானிக்கிறான். வாஸ்தவத்திலும் சகுந்தலை விச்வாமித்ரர் ப்ராம்மண ரிஷியாக ஆவதற்குமுன் ராஜரிஷியாகத் தபஸ் செய்துகொண்டிருந்த காலத்தில் அவருக்கும் மேனகைக்கும் பிறந்தவள்தான். அதனால் க்ஷத்ரிய துஷ்யந்தன் அவளிடம் ப்ரியம் கொண்டதில் சாஸ்த்ர விரோதமாக எதுவுமில்லை.

இந்த இடத்தில் துஷ்யந்தன், “ஸதாம் ஹி ஸந்தேஹ பதேஷு வஸ்துஷு ப்ரமாணம் – அந்தஃகரண-ப்ரவ்ருத்தய:” என்கிறான்1. ” இப்படியா, அப்படியா என்று ஸந்தேஹமாயிருக்கும் விஷயங்களில் ஸத்துக்களின் அந்தஃகரணம் எப்படிப் போகிறதோ அதுவே ப்ரமாணம்” என்கிறான்.

மனஸ்ஸாக்ஷியும் கடைசி பக்ஷத்தில் ஒரு ப்ரமாணமாகிறது என்பதற்குக் குமாரிலபட்டர் காளிதாஸனின் இந்த வாக்யத்தை ப்ரமாணமாகக் காட்டுகிறார். அதனால் அவர் காளிதாஸனுக்கு அப்புறம் வந்தவர் என்பது நிச்சயமாகிறது. ஆகவே ஆசார்யாளும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். மேல் நாட்டு ஆராய்ச்சிக்காரர்களின் அபிப்பராயப்படி, காளிதாஸன் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் தான். அவர், விக்ரமாதித்யனின் காலத்தவர் என்றால் அந்த விக்ரமாதித்யன் இருந்தது கி.மு. முதல் நூற்றாண்டில். விக்ரம (விக்ரமாதித்ய சகாப்தம்) ஆரம்பிப்பது கி.மு. 57-ல். இதற்கு ரொம்பத் தள்ளி கி.பி. நாலாம் நூற்றாண்டுக் காரனான சந்த்ரகுப்த விக்ரமாதித்யனின் காலத்தில்தான் காளிதாஸர் இருந்தார் என்றும், அல்லது இன்னும் பின்னால்தான் இருந்தார் என்றுங்கூடச் சொல்ல ஆதாரங்களிருக்கின்றன. ‘திங்நாக’ என்று காளிதாஸன் ‘மேக ஸந்தேச’த்தில் திக்-கஜங்களைச் சொல்வதில்2 பௌத்தத்தின் ஒரு பிரிவான ‘வைபாஸிகம்’ என்பதை உருவாக்கிய திங்நாகரையும் சிலேடையாகப் பரிஹாஸம் பண்ணியிருக்கிறாரென்று அபிப்ராயமிருக்கிறது. அந்த திங்நாகரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்காரர். ஆகையால் அதுவரை காளிதாஸனின் காலத்துக்குக் கீழ்வரம்பு கட்ட இடமிருக்கிறது. ஆனபடியால் ஆசார்யாளின் காலம் கி.மு. ஆறாம்–ஐந்தாம் நூற்றாண்டு என்ற சாஸ்த்ரஜ்ஞர் அபிப்ராயம் ஸரியில்லை என்கிறார்கள்.


1 “சாகுந்தலம்” – I.1. ச்லோகம் 19.

2 “மேகசந்தேசம்” — 14

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 1. மாற்றுக் கருத்து (A.H. 788-820)
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  3. ஆசார்ய பாஷ்யத்தில் பௌத்தக் கொள்கைகள்
Next