ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – பூர்வகால புத்தர்களும், ஜினர்களும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இப்போது ஆசார்யாள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்றால் புத்தரும் ஆசார்யாளும் ஸமகாலத்தவராகி விடுவார்களே என்ற ஆக்ஷேபணைக்குப் பதிலாக இன்னொரு காரணமும் கிடைக்கிறது. (அது என்னவென்றால்) புத்த மதத்தைக்கூட கௌதம புத்தர் என்பவர்தான் தோற்றுவித்தாரென்றால் அது தப்புத்தான் என்று அந்த மதஸ்தர்களே சொல்கிறார்கள். “சுத்தோதனரின் பிள்ளையாகிய கௌதம புத்தர் 24-வது புத்தர்தான். அவருக்கு முந்தி 23 புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் எங்கள் மதமும், நீங்கள் வேதத்தைச் சொல்லிக்கொள்கிற மாதிரி, அநாதிதான்” — என்று பௌத்தர்கள் சொல்வார்கள். இதற்கு ஆதரவாக நம்முடைய ராமாயணத்திலும் சான்று இருக்கிறது.

பரதன் காட்டுக்குப்போய் ராமரைத் திருப்பி அழைத்துக்கொண்டுவர முயற்சி செய்கிறானல்லவா? அவனோடு போனவர்களில் ஜாபாலி மஹர்ஷியும் ஒருத்தர். அவர் எதையாவது சொல்லி ராமரைப் பித்ரு வாக்ய பரிபாலனத்தை விடும்படிப் பண்ணி, அயோத்திக்குத் திரும்பும்படிப் பண்ணணும் என்பதற்காக – (அல்லது) ராமருடைய வைதிக அபிமானத்தை லோகத்துக்கு வெளிப்படுத்தணும் என்பதற்காக – ஒரே அவைதிகமாகவும் நாஸ்திகமாகவும் ஆர்க்யூ பண்ணுகிறார். ராமருக்கு மஹா கோபம் வருகிறது. அப்போது அவர் ஜாபாலியின் அவைதிக வாதத்தைக் கண்டிக்கும்போது அதை புத்தரின் கொள்கை என்றும், அப்பட்டமான நாஸ்திகமாகிய சார்வாகம் மாதிரிதான் அதுவும் ஒன்று என்றும் சொல்லி, ‘இப்படிப்பட்ட கொள்கைக்காரர்களின் மூஞ்சியிலேயே முழிக்கப்படாது; திருடனை தண்டிப்பதுபோல இவர்களையும் தண்டிக்க வேண்டும்’ என்கிறார்1. இங்கே புத்தர் என்ற பெயரோடு, புத்தருக்கு அந்த மதத்தில் வழங்குகிற இன்னொரு பெயரான ‘ததாகதர்’ என்பதையும் ராமர் சொல்கிறார். இதனால் அப்போதே பௌத்தம் இருந்திருப்பது தெரிகிறது. ஆனால் கௌதம புத்தர் சொன்ன நல்லொழுக்கங்கள், புலனடக்கம், உசந்த த்யானம் ஆகிய எதுவுமில்லாமல் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்ற கொள்கை போலிருந்திருக்கிறதென்றும், அதுதான் மாறி மாறிச் சார்வாகத்திற்கு ரொம்பவும் மாறுபட்ட ரூபத்தில் கௌதம புத்தரால் ப்ரசாரம் செய்யப்பட்டிருக்கிறதென்றும் தெரிகிறது.

ஜைனர்களும் தங்களுடைய கொள்கை ரொம்பப் புராதனமானது, தங்களுடைய இருபத்துநாலு தீர்த்தங்கரர்களில் கடைசியானவர்தான் இப்போது நாம் அந்த மத ஸ்தாபகராகச் சொல்லும் ஜினர் (மஹாவீரர்) என்கிறார்கள். புராணங்களிலேயே ஒரு அவதார புருஷராகச் சொல்லப்பட்ட ரிஷபர்தான் அவர்களுடைய முதல் தீர்த்தங்கரர். இதை ஒப்புக்கொள்ள யோசிக்கும் ஓரியண்டலிஸ்ட்கள்கூட மஹாவீரருக்கு முந்தியவராக, 23-வது தீர்த்தங்கரராகச் சொல்லப்படும் பார்ச்வநாதர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

‘ப்ரஹ்மஸுத்ரத்தில் பௌத்த கண்டனம் வருகிறதே! க்ருஷ்ண பரமாத்மா கீதையில் அந்த ப்ரஹ்ம ஸுத்ரத்தை “ப்ரஹ்மஸுத்ர பதைச்சைவ ஹேதுமத்பிர் விநிச்சிதை:”2 என்கிறாரே! அதனால் ப்ரஹ்ம ஸூத்ரம், கீதை எல்லாமே புத்தருக்குப் பிற்பாடுதான்’ என்று வாதம் செய்கிறவர்கள் இந்த விஷயங்களைக் கவனிக்கவேண்டும். அவர்கள் சொல்லும் கௌதம புத்தருக்கு முந்தியும் அநேக புத்தர்கள் இருந்திருக்கிறார்கள்; அவர்கள் சொன்ன பௌத்த மதமும் இருந்திருக்கிறது. ஆகையால் ப்ரஹ்ம ஸூத்ரம் பண்ணிய வ்யாஸரும், கீதை உபதேசித்த க்ருஷ்ணரும் கௌதம புத்தருக்குப் பிற்பட்டவர்கள் என்று கொண்டுவிடவேண்டிய அவச்யமேயில்லை.

இதில் கீதை விஷயமாக இன்னொரு ஸமாசாரம். ஆசார்யாள் (கீதா) பாஷ்யத்தில் “ப்ரஹ்மஸூத்ர” என்ற வார்த்தையை அந்தப் பெயர் கொண்டதும், அவரே ப்ரஸித்தமான பாஷ்யம் எழுதியதுமான புஸ்தகம் என்றே அர்த்தம் பண்ணவில்லை! “ப்ரஹ்மண: ஸூசகாநி வாசகாநி ப்ரஹ்மஸூத்ராணி” என்று, அதாவது “ப்ரஹ்மத்தை ஸூசனை செய்யும் வாசகங்களாக உள்ளவை” என்றே அர்த்தம் பண்ணியிருக்கிறார். இதிலிருந்து கீதோபதேசத்துக்குப் பிறகே வ்யாஸர் கலி ஆரம்பத்தில் சதுர் வேத விபாகம் பண்ணித் கொடுத்தபோதோ அதற்கும் அப்புறமோதான் ப்ரஹ்மஸூத்ரம் இயற்றினாரென்று ஊஹிக்கலாம். இதை உறுதிபடுத்துவதாக, ஸ்ம்ருதியாகிய கீதையின் கருத்துக்களையே சில இடங்களில் ப்ரஹ்மஸூத்ரத்திலும் சொல்லி, “ஸமர்யதே“: “ஸ்ம்ருதியில் இப்படிச் சொல்லியிருக்கிறது” என்றும் தெளிவாக, கீதை அதற்கு முற்பட்ட நூல் என்று, தெரியவைத்திருக்கிறது.

சொல்ல வந்த விஷயம்: அநேக ஸித்தாந்தங்கள் இப்போதுள்ள புஸ்தகங்களைக்கொண்டு அவற்றுக்கு நாம் நிர்ணயம் செய்கிற காலத்திற்கு ரொம்ப முந்தியே ஏதோ ஒரு ரூபத்தில் இருந்து வந்திருக்கின்றன. இப்படி ஸெளத்ராந்திகம், வைபாஸிகம், சூன்யவாதம் ஆகிய பௌத்த ஸித்தாந்தங்களும் ஆசார்யாளின் காலத்திலேயே இருந்து அவற்றை அவர் கண்டித்திருக்கலாம். அவருக்கு அப்புறமே அஸங்கர், திங்நாகர், நாகார்ஜுனர் முதலியவர்கள் அவற்றுக்குப் புத்துயிர் தந்து விஸ்தாரம் செய்திருக்கலாம்.

இன்னொரு முக்யமான பாயின்டும் கவனிக்கவேண்டும்: இந்த மூன்று பேரைக் கிறிஸ்துவ சகாப்தத்தில் இன்னின்ன நூற்றாண்டு என்று அவர்கள் சொல்லியிருப்பதும் காளிதாஸன் ஸமாசாரம் மாதிரி நிச்சயமில்லாத அநுமானங்கள்தான்.

“மேகஸந்தேச காவ்ய”த்தில் காளிதாஸனே அஷ்டதிக் கஜங்களை ஒதுக்கிவிட்டு அந்த மேகம் மேலே போக வேண்டும் என்று சொல்லுமிடத்தில், ‘திக்-கஜம்’ என்பதை ‘திங்-நாக’ என்று சொல்லியிருப்பதைக்3 காட்டி, பௌத்தரான திங்நாகரை ஒதுக்க வேண்டுமென்பதைத்தான் சிலேடையாகக் கூறியிருக்கிறாரென்று ஒரு அபிப்ரயமிருக்கிறது! அப்படியானால் நமக்குக் காலம் தெரியாத, ஆனால் ஆசார்யாளுக்கு முந்தியவரான காளிதாஸரின் ஸமகாலத்தவராகவாவது திங்நாகர் இருந்திருக்க வேண்டும்.

நேபாள ராஜ வம்சாவளியின்படி நாகார்ஜுனரின் காலம் கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்கே போய் விடுவதாகவும் தெரிகிறது.

இப்படியெல்லாம், ‘இதுதான்’ என்று நிச்சயமாகச் சொல்ல முடியாதவர்களின் காலத்தைக்கொண்டு ஆசார்யாள் காலத்தை கணிக்கப் பார்ப்பது கண் தெரியாதவனுக்கு வழிகாட்டியாக இன்னொரு கண் தெரியாதவனை அனுப்பி வைப்பது போலத்தானிருக்கிறது!


1 வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், 109-வது ஸர்கம் 34-வது ச்லோகம்.

2 XII. 4 உதாரணம் : ப்ரஹ்ம ஸுத்ரத்தின் II. 3. 45; IV.2.21.

3 ச்லோகம் 14

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 11. கிறிஸ்து சகாப்த பௌத்த நூலாசிரியர்கள் விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  13. மஹாயான விஷயம்
Next