Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மனத்தின் அர்ப்பணமும் மௌன மனனமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அது நடக்கிறபோது நடக்கட்டும். இப்போதைக்கு என்ன பண்ணணுமென்றால் ஆசார்ய ஜயந்தியன்று நம் மனஸை ஆசார்யார்ளுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும். த்ரவ்யத்தால், தேஹத்தால் உத்ஸவம் பண்ணுவதற்கு முந்தி மனஸினால் பண்ண வேண்டும். த்ரவ்யத்தையும், தேஹத்தையும் அர்ப்பித்துப் பெரிசாக உத்ஸவம் பண்ணும் போதுங்கூட மனஸைப் பூர்ணமாக அவருக்குக் கொடுத்து சரணாகதி பண்ணுவதே பெரிய பூஜை. இப்படிச் சொல்வதால் வெளி உத்ஸவம் வேண்டாமென்று அர்த்தமில்லை. முழு மனஸோடுகூட வெளி உத்ஸவமும் செய்யணும்.

இப்போது1 கொஞ்ச நாழி மனஸை ஆசார்யாளுக்கென்றே கொடுப்போம். அவதார மஹிமை, அது, இது என்று நிறையப் பேசியும், பேசியதைக் கேட்டும் ஸந்தோஷப்படுவதைவிட, முடிந்தமட்டும் மனஸை ஆசார்யாளிடம் அர்ப்பணம் பண்ணுவோம். அதுதான் பெரிய ஸந்தோஷம். மனஸில் அவரைக் கொண்டுவந்து நிறுத்திக்கொண்டு கொஞ்சம் பார்த்தோமானால் அதுவே பெரிய ஸந்தோஷம். நம்முடைய தாபமெல்லாம் சமனமாகிற பெரிய சாந்தி அது தான்.

பகவத் ஸ்மரணத்தைவிட பகவத்பாத ஸ்மரணம் அதிக சாந்தி! நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் காரணமாயிருந்துகொண்டு, கெட்டதற்காக நம்மை தண்டிக்கவும் செய்யும் பகவானைவிட, நல்லதே செய்துகொண்டு, நாம் எத்தனை கெட்டுக் குட்டிச் சுவராயிருந்தாலும் நம்மை உத்தரிப்பதற்கென்றே வந்த பகவத்பாதாளை ஸ்மரிப்பதே நமக்குப் பெரிய சாந்தி.

‘எப்படி மனஸை அர்ப்பிப்பது, அதாவது அது கண்ட கண்டதுகளை நினைக்காமல் அவரையே எப்படி மனஸில் கொண்டுவந்து நிறுத்திக்கொள்வது?’ என்றால் ஸுலபமாக வழி சொல்லித்தருகிறேன். “ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர” என்று மனஸுக்குள்ளேயே சொல்லிக் கொள்வதுதான் வழி. அதன் வழியாக அவர் மனஸுக்குள் வந்துவிடுவார். “வையகம் துயர் தீர” ஞானஸம்பந்தர் காட்டிக்கொடுத்த வழி ஹர நாம உச்சாரணந்தானே?

ஆழ்க தீயதெல்லாம்! அரன் நாமமே

சூழ்க, வையகமுந் துயர் தீர்கவே!

அதனால் “ஹர ஹர” என்று சங்கர நாமாவோடு சேர்த்துச் சொல்வோம். அவர் திக்விஜய சங்கரராக இருந்ததால் “ஜய ஜய” என்றும் சேர்த்துச் சொல்வோம். வேறே உபந்நியாஸம் வேண்டாம். புத்தி ஸாமர்த்தியங்கள் வேண்டாம்.

“எதற்கு வ்ருதாவாக (வீணாக) சாதுர்ய வாதங்கள் பண்ணிக்கண்டக்ஷோபம் (தொண்டைக்கு உபத்ரவம்) விளைவித்துக் கொள்கிறாய்! நீ புத்திசாலி இல்லையா? பேசாமல் சம்புவின் பாத பத்மங்களை நினைத்துக்கொண்டு பரமானந்தத்தை அநுபவி” என்று அந்த சம்புவின் பாதமாக வந்த பகவத்பாதாளே சொல்லியிருக்கிறார்:

வ்ருதா கண்டக்ஷோபம் வஹஸி தரஸா தர்க்கவசஸா

பதாம்போஜம் சம்போர் பஜ பரம ஸெளக்யம் வ்ரஜ ஸுதீ:2

“ஸுதீ :” — நல்ல புத்தியுள்ளவனே, சமர்த்துக் குழந்தையே!’ என்று கூப்பிட்டு இப்படி உபதேசம் பண்ணியிருக்கிறார். அதனால் இந்தப் புண்ய காலத்தில் வேறே உபந்நியாஸம் ஒன்றும் வேண்டாம். அதிலும் ஏதாவது மாற்று அபிப்ராயம் வரத்தான் வருகிறது. அதனால் வேண்டாம்! கொஞ்சம் நாழி ” ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர “என்று மனஸுக்குள்; வெளியில் சப்தம் வரவேண்டாம்! யோகம், த்யானம், ஸமாதி என்று முடியாவிட்டாலும் இந்த ஜபம் போதும். இதற்கே ஆசார்யாள் வந்து அநுக்ரஹம் பண்ணிவிடுவார்.

ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாகவைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு.

வாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று ஜபித்துக் கொண்டிருங்கள் — நான், ” அரோஹரா ” என்று சொல்கிற வரை!

(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை “அரோஹரா” சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, ” கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்று தாம் கூறி,”கோவிந்தா கோவிந்தா” என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)


1 இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.

2 “சிவானந்தலஹரி” ஆறாவது ச்லோகப் பின் பாதி.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is காமாக்ஷி ஆலயத்தில் சங்கர ஜயந்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  நாமகரணச் சிறப்பு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it