Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

சந்திரசர்மாவின் சரித்திரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மஹாபாஷ்ய உபதேசமான பின் அவர் என்ன ஆனார் என்று சொல்வதற்கு முன்னால் அவர் பிறப்பதற்கு முன்னால் யாராக இருந்தார் என்று சொல்ல வேண்டும்.

முன் ஜன்மாவில் இந்த சந்த்ர சர்மாவேதான் பதஞ்ஜலியாக இருந்தவர்!

சாபம், அநுக்ரஹம் என்று எதிரெதிரான இரண்டும் கொடுக்கும் சக்தி மஹான்களுக்கு உண்டு. பதஞ்ஜலி இரண்டையும் கௌட சிஷ்யருக்குப் பண்ணினாரல்லவா? ப்ரஹ்ம ரக்ஷஸாகப் போகும்படி அவருக்கு சாபமும் கொடுத்து, வ்யாகரண உபதேச அநுக்ரஹமும் பண்ணினாரல்லவா? அதற்கப்புறம் சாப நிவ்ருத்திக்காக அவர் சொன்னபடி அந்த சாஸ்த்ரத்தை ப்ரஹ்மரக்ஷஸிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய தகுதி வாய்ந்த எவருமே ரொம்ப வருஷங்கள் வரவில்லை என்று சொன்னேனல்லவா? அதைப் பார்த்துப் பதஞ்ஜலி மஹர்ஷிக்குக் கவலை பிடித்துக்கொண்டது. ‘என்னடா இது, பகவான் உத்தரவின் பேரில் நாம் மஹா பாஷ்யப்புஸ்தகம் பண்ணியும் லோகம் அதனால் ப்ரயோஜனம் அடையாமல் வருஷக் கணக்காகப் போய்க்கொண்டிருக்கிறதே!’ என்று விசாரப்பட்டார். சாஸ்த்ரமும் ப்ரசாரமாகணும்; சிஷ்யனுக்கும் சாப மோசனம் ஏற்படணும்; ஆனால் இரண்டையும் செய்யக்கூடியவனாக எவனுமே அகப்படமாட்டான் போலிருக்கிறதே! – என்று நினைத்துக் கடைசியில் பதஞ்ஜலியே தான் சந்த்ர சர்மாவாக அவதரித்தார்! பதஞ்ஜலியாக இருந்தபோது யார் சிஷ்யராயிருந்தாரோ அவரிடமே சிஷ்யராகி தாம் பண்ணின மஹாபாஷ்யத்தையே கற்றுக்கொண்டு, அரசிலைகளில் எழுதிக்கொண்டார்.

இவரே பண்ணினதுதானே, அதை எழுதி வைத்துக்கொள்வானேன் என்றால், அவதாரமானால்கூட அவதரிப்பதற்க்குப் பூர்வ காலத்தில் நடந்தெதெல்லாம் அப்படியே ஞாபகமிருக்குமென்று சொல்லமுடியாது. மநுஷ உடம்பில் வந்ததால் அதன் குறைபாடுகள் கொஞ்சமாவது இருக்கிறார்போலத்தான் அவதாரங்களும் காட்டும். அதனால்தான் பதஞ்ஜலி அவதாரமே பதஞ்ஜலியிடம் பாடம் கேட்கச் சிதம்பரம் போனது! வழியிலேயே பாடத்தை எழுதி மூட்டை கட்டிக்கொண்டார்.

ப்ரஹ்மரக்ஷஸ் கௌடரூபம் பெற்று ஞானாசார்யானைத் தேடிக்கொண்டு புறப்பட்டபின் சந்த்ர சர்மாவும் மரத்திலிருந்து இறங்கினார். இலை மூட்டையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அநேக நாட்களாகச் சாப்பாடும் தூக்கமும் இல்லாமலிருந்ததற்கெல்லாம் சேர்த்து வைத்து ரொம்பக் களைப்பாக ஆயிற்று. மூட்டையை போட்டுவிட்டு அப்படியே பூமியில் சாய்ந்து நன்றாகத் தூங்கிப் போய்விட்டார்.

அந்தப் பக்கமாக ஒரு ஆடு வந்தது. அது இலை மூட்டையை மேய ஆரம்பித்தது.

எத்தனையோ விக்னங்கள், கஷ்டங்களுக்குப் பிறகு மஹாபாஷ்யம் ஒருவாறு ரத்தத்தில் தோய்த்து எழுதி வைக்கப்பட்டும் அது பூர்ணமாக லோகத்திற்குக் கிடைக்கவில்லை! ப்ரபஞ்ச லீலையில் இப்படியெல்லாம்தான் பகவான் அப்பப்போ காட்டுவது! நல்லது என்பதும் நிறைவாக நடக்காமல் மூளியாகிவிடுகிறது! எத்தனை சொன்னாலும் ப்ரபஞ்சமே அபூர்ணம்தான், இதை விட்டால்தான் பூர்ணம் என்று காட்டுவதுபோல ப்ரபஞ்சத்தில் உசந்த விஷயங்கள் என்று நினைப்பவைகளும் வீணாய்ப் போவதைப் பார்க்கிறோம்.

ஆடு இலை மூட்டையில் ஒரு பாகத்தை தின்றுவிட்டது.

அது போன பாக்கிதான் இப்பொழுது லோகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இல்லாத பாகத்துக்கு ‘அஜ பக்ஷித பாஷ்யம்’ என்றே பெயர்! (அஜ – ஆட்டினால்; பக்ஷித – சாப்பிடப்பட்ட.)

சந்த்ர சர்மா எழுந்திருந்தார். எத்தனையோ ச்ரமப்பட்டு எழுதினதில் ஒரு பாகம் பறிபோயிருந்ததைப் பார்த்தார். என்ன பண்ணுவது, மிஞ்சியதையாவது ரக்ஷித்துக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தார். களைப்பைப் பொருட்படுத்தாமல் மூட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்.

உஜ்ஜயினிக்கு வந்தார்.

களைப்புத் தாங்கமுடியவில்லை. ஒரு வைச்யனுடைய வீடு வந்தது. அங்கே, மூட்டையை ஜாக்ரதையாக வைத்துவிட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டார். அடித்துப் போட்டது போல நன்றாகத் தூங்கிப் போய்விட்டார்.

அவர் பாட்டுக்கு நாள் கணக்கில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்த வைச்யனுக்கு ஒரு புத்ரி இருந்தாள். அவள் அவரைப் பார்த்தாள். ப்ரியம் ஏற்பட்டது. எழுப்பிப் பார்த்தாள். அவர் எழுந்திருக்கவே இல்லை. ‘மஹா தேஜஸ்வியாக இருக்கிறார். ஆனால் இப்படி ப்ரக்ஞையே இல்லாதவராக, அன்ன ஆஹாரமின்றித் தூங்குகிறாரே! இவருடைய ப்ராணனை ரக்ஷிக்கவேண்டும்’ என்று நினைத்தாள்.

அவளுக்கு வைத்தியம் தெரியும். அதனால், என்ன பண்ணினானென்றால், தயிரும் சாதமுமாக நன்றாகப் பிசைந்து கொண்டுவந்தாள். அதை சந்த்ர சர்மாவின் வயிற்றில் பூசி நன்றாகத் தேய்த்தாள்.

ரோமகூபத்தின் (மயிர்கால்களின்) வழியாக அன்னஸாரம் சரீரத்துக்குள் இறங்கிற்று.

இப்படி ஒரு சிகித்ஸை நம்முடைய வைத்ய சாஸ்த்ரத்தில் இருக்கிறது. தற்காலத்தில் ஊசி வழியாகக் குத்தி இஞ்ஜெக்ட் செய்கிறார்கள். இப்படிச் செய்வதில் குத்துவதான ஹிம்ஸை இருக்கிறது. சரீரத்தில் புதிசாக த்வாரம் செய்வதாகவும் இருக்கிறது. நம்முடைய வைத்ய முறையிலோ இயற்கையாகவுள்ள ரோமகூபத்தின் வழியாகவே ஸத்தை உள்ளே இறக்க வழி சொல்லியிருக்கிறது. இப்பொழுதும் மலையாளத்தில் நவரக்கிழி என்று செய்கிற சிகித்ஸை இதைப் போன்றதுதான்.

வைச்யப் பெண் இப்படி விடாமல் சில நாட்கள் செய்து வந்ததில் சந்த்ரசர்மாவுக்குத் தெம்பும், விழிப்பும் ஏற்பட்டன.

விழித்துக்கொண்டவர் முதலில் இலை மூட்டை ஜாக்ரதையாக இருக்கிறதா என்றுதான் பார்த்தார். ஜாக்ரதையாகவே இருந்தது. [சிரித்து] இவரும் ஜாக்ரத்ஸ்திதி (விழிப்பு நிலை) பெற்றிருந்தார்; மஹாபாஷ்ய மூட்டையும் ஜாக்ரதையாக இருந்தது!

அதை எடுத்துக்கொண்டு சந்த்ரசர்மா கிளம்பினார்.

வீட்டுக்காரனான வைச்யன் அவரைத் தடுத்தி நிறுத்தினான். “என்ன ஓய், கிளம்பிவிட்டீர்? என் புத்ரியாக்கும் குற்றுயிராகக் கிடந்த உம்மை எத்தனையோ ச்ரமப்பட்டுக் காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள். உம்மை விவாஹம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில்தான் அவள் சிகித்ஸை செய்து ப்ராண ரக்ஷணை பண்ணியது. நீரானால் கிளம்புகிறீரே!” என்றான்.

வைச்யப் பெண்ணைப் ப்ராம்மணர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவாவது என்று நினைக்கலாம். நாம் ரொம்பக் காலத்திற்கு முன்னால் இருக்கிறோம் என்பதை மறந்து போகக்கூடாது. நம் நம்பிக்கைப்படி நமக்குக் கிடைத்திருக்கிற ஆதாரங்களின்படி ஆசார்யாள் அவதாரம் செய்தே 2500 வருஷமாகிறது. அவருடைய குருவான கோவிந்த பகவத்பாதர் பூர்வாச்ரமத்தில் சந்த்ரசர்மாவாக இருந்த காலத்தை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிற்பாடு அவர் கோவிந்த நாமத்துடன் ஸந்நியாசியாகி எத்தனை வருஷத்துக்கப்புறம் ஆசார்யாள் அவரிடம் உபதேசம் பெற வந்தாரோ? யோக ஸித்தர்களான கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் முதலானவர்கள் நூற்றுக்கணக்கான வருஷங்கள்கூட ஆத்ம நிஷ்டர்களாக இருந்திருக்கலாம். நாம் பார்த்த கதைகளின்படி அவர்களுடைய பூர்வாச்ரம காலத்தில் 72 துர்மதங்கள் பரவியிருந்ததாகத் தெரியவில்லை. மூலமான ஸனாதன தர்மமே அநுஷ்டானத்திலிருந்து வந்ததாகத்தான் தெரிகிறது. அதனால் அவர்கள் த்வாபர – கலியுக ஸந்தியில் அவதரித்த சுகாசார்யாளை அடுத்துச் சில வருஷங்களில், அதாவது கலி ஆரம்பகாலத்திலேயே பிறந்தவர்களாகவும் இருக்கலாம். அதாவது, கலி புருஷன் வாலைச் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த காலத்திலேயே அவர்களுடைய பூர்வாச்ரம வாழ்க்கை நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம்.

5000 ‘மைனஸ்’ 1000 வருஷங்களுக்கு முற்பட்ட அப்போது ப்ரஹ்ம தேஜஸை நன்றாகக் கட்டிக் காப்பாற்றிய சக்தர்களாகப் பல ப்ராம்மணர்கள் இருந்திருப்பார்கள்.

ஒன்று சொல்வதுண்டு: நெருப்பு பெரிசாயிருந்து ஜலம் கொஞ்சமாயிருந்தால் நெருப்பு ஜலத்தை வற்றடித்து விட்டு, தான் நன்றாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும். மாறாக ஜலம் நிறையவும் நெருப்பு சின்னதாகவுமிருந்துவிட்டால் ஜலம் நெருப்பை அணைத்துவிடும். ப்ரஹ்ம தேஜோக்னி நிரம்ப இருந்தால் அப்போது ப்ராம்மணரளவுக்கு சாஸ்த்ரங்களில் ஆசார பரிசுத்தி நிர்ணயிக்கப்படாத இதர ஜாதியாரோடு சில அத்யாவச்யங்களில் ப்ராம்மணர்கள் விவாஹமும், வம்சோத்பத்தியும் செய்துகொண்டாலுங்கூட இவர்களுடைய ஆசார அக்னியின் வீர்யத்தில் மற்றவர்களின் ஆசாரக் குறைவு அடிப்பட்டுப் போய் அவர்களும் பரிசுத்தி பெறுவார்கள். இப்படித்தான் பூர்வ காலங்களில் இருந்தது. நல்ல இந்த்ரியக் கட்டுப்பாட்டுடன் ப்ரஹ்ம வர்சஸ் நிரம்பியவனாக ஒரு ப்ராம்மணன் இருக்க வேண்டும்; அவனுக்கு ஸொந்தத்தில் தன-தார-புத்ராதி ஆசைகள் இருக்கப்படாது; அப்படி ஒருவன் இருந்தால் பிற ஜாதிகளிலும் நல்ல உத்தமமான ஜீவர்கள் தோன்றி அந்தக் குலங்கள் மேன்மை அடையவேண்டுமென்று அவனிடம் அந்த ஜாதிக்காரர்களும் ப்ரார்த்தனை செய்துகொண்டு தங்களுடைய கன்னிகைகளை அர்ப்பணம் செய்வார்கள். அவனும் அந்தப்படி பண்ணிவிட்டு, புத்ரோத்பத்தி ஆனவுடனோ, அல்லது புத்ரனுக்கு உரிய வயஸு வந்தவுடன் வித்யோபதேசம் கொடுத்துவிட்டோ, அப்புறம் கொஞ்சங்கூடப் பற்றில்லாமல் புறப்பட்டு விடுவான். பூர்வ யுகங்களில் இருந்துவந்த இந்த வழக்கம், ப்ரஹ்மவர்சஸ் குறைந்துகொண்டே போகும் கலியில் நிஷேதம்தான் (அநுஷ்டிக்கத் தக்கதல்ல என்று விலக்கப்பட்டதுதான்.) ஆயினும் யுகத்தின் ஆரம்பமான ஆயிரம், ஆயிரத்தைநூறு வருஷம் கலியின் தலைவிரிகோல ஆட்டம் தொடங்காதபோது இது ஓரளவு அநுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது பிற்காலத்துக்கு, தற்காலத்துக்கு நிச்சயமாக நிஷேதம்தான். ஆசார்யாள் தம்முடைய காலத்தவர்களையே “அல்ப வீர்யத்வாத்”, “ஹீநவீர்யேஷு வா வார்த்தமா நிகேஷு மனுஷ்யேஷு” என்றெல்லாம் ப்ரம்ம தேஜோ வீர்யம் குறைந்து போனவர்களாகத்தான் சொல்லியிருக்கிறார்1. அந்தத் தேஜஸை அவர் மறுபடியும் ஜ்வலிக்கச் செய்தாரென்றாலும், அப்புறம் மறுபடியும் மங்கி மங்கிப் போய், இப்போது உள்ளவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அதனால் இப்போது வர்ண ஸாங்கர்யம் (ஜாதிக் கலப்பு) செய்வது கொஞ்ச நஞ்சம் இருக்கும் ப்ரம்ம தேஜஸையும் மற்றவர்களின் குறைவான ஆசாரத்தால், ஜலத்தைக் கொட்டி நெருப்பை அணைப்பதுபோல, போக்கடிப்பதாகத்தான் ஆகும்.

சந்த்ரசர்மாவின் காலத்தில், ஒருவருடைய ஸொந்த இச்சைக்காக இல்லாமல், சில அத்யாவச்யங்களை முன்னிட்டு ப்ராம்மணர்கள் இதர கன்னிகைகளை அங்கீகரிக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

அதனால்தான் அந்த வைச்யன் அவரிடம் அப்படிச் சொன்னது. அவருக்கா, அந்த மாதிரி விஷயத்தில் மனஸ் போகவேயில்லை. அரும்பாடுபட்டுத் தாம் ஸம்பாதித்த மஹாபாஷ்யத்தை ஸத்-சிஷ்யர்களுக்குக் கொடுத்து ப்ரசாரம் பண்ணவேண்டுமென்பதிலேயே அவருடைய எண்ணமிருந்தது. ‘அத்தனை கஷ்டமெல்லாம் பட்டது பந்தத்தில் மாட்டிக் கொள்ளத்தானா?’ என்று நினைத்து, “உம் பெண்ணைக் கல்யாணம், கார்த்திகை பண்ணிக்கொள்ளும் உத்தேசம் நமக்கில்லை” என்று சொல்லிப் புறப்படுவதிலேயே மும்மரமாக இருந்தார்.

இப்படி அவர் சபலமில்லாமல் கட்டுப்பாட்டுடன் இருந்ததாலேயே இவ்வளவு உசந்த ஜீவனை அடைந்துதான் தீர்வது என்று அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தகப்பனுக்கும் பிடிவாதம் ஏற்பட்டது!

“உமது ப்ராணன் இவள் போட்ட பிச்சை! நன்றி வேண்டாமா? உம்மை டிமான்ட் பண்ண எங்களுக்கு ரைட் இருக்கிறது. வாரும் ராஜ ஸபைக்கு! ராஜாக்ஞைப்படி வழக்கைத் தீர்த்துக்கொள்வோம்” என்று வைச்யன் விடாப்பிடியாய்ச் சொல்லிவிட்டான்.

அப்படியே தீர்ப்புக்காக ராஜாவிடம் போனார்கள்.

நல்ல லக்ஷணமாக, ஆசார காந்தியுடனும், வித்யா சோபையுடனும் இருந்த சந்த்ரசர்மாவை ராஜா பார்த்தான். பார்த்தானோ இல்லையோ, வைச்யன் கேஸை எடுப்பதற்கு முந்தியே அவனுக்கு வேறே யோசனை தோன்றிவிட்டது! ‘மஹா தேஜஸ்வியாக இருக்கிறாரே. நாம் நம்முடைய குமாரிக்கு எங்கெங்கேயோ வரன் தேடிக் கொண்டிருக்கிறோமே! அதெல்லாம் எதற்கு? இந்த ப்ராம்மண யுவனுக்கே கன்யாதானம் பண்ணிவிடுவோம். அதற்கு தர்ம சாஸ்திரம் இடம் கொடுக்கிறதா என்று மந்திரியைத் தருவித்துக் கேட்போம்’ என்று நினைத்தான். “யார் அங்கே? மந்திரியை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான்.

அப்படியே மந்த்ரி வந்தான். மந்த்ரிகள் ப்ராம்மணர்களாகத்தான் இருப்பார்கள். இந்த ப்ராம்மண மந்த்ரி வந்தவுடன் சந்த்ர சர்மாவைப் பார்த்தான். அவருடைய அழகில் அவனும் வசீகரமானான். வேடிக்கை என்னவென்றால் அவனுக்கும் விவாஹ வயஸில் பெண் இருந்தாள். ‘ஓஹோ! ராஜாவே நம் விஷயம் தெரிந்துகொண்டு நமக்கு மாப்பிள்ளையாக்கத்தான் இந்தப் பையனைத் தேர்ந்தேடுத்து விட்டு நம்மைக் கூப்பிட்டனுப்பியிருக்கிறார் போலிருக்கிறது! நம் நல்ல காலம்! என்று நினைத்தான்.

ராஜா தன்னுடைய பெண் விஷயமாக தர்ம சாஸ்த்ரக் கருத்தைக் கேட்டான்.

ப்ரஹ்ம தேஜஸில் நல்ல வீர்யவத்தான ப்ராம்மணர்கள் விஷயத்தில் அப்படிச் செய்ய சாஸ்த்ரத்தின் அநுமதி இருப்பதைச் சொன்ன மந்த்ரி, நான்கு வர்ண்ங்களைச் சேர்ந்த கன்னிகைகளையும் ஒரே முஹூர்த்தத்தில் ஒரு ப்ராம்மண வரனுக்கு கல்யாணம் செய்துகொடுக்க இடமிருப்பதாகச் சொன்னான். தன்னுடைய பெண்ணையும் அப்படிக் கன்யாதானம் செய்துகொடுக்க ஆசைப்படுவதாக விஞ்ஞாபித்துக் கொண்டான்.

‘பாதிக் கார்யம் முடிந்தது; க்ஷத்ரியப் பெண், ப்ராமணப் பெண் ஆகிய இரண்டு பேர் கிடைதுவிட்டார்கள்’ என்று ராஜா ஸந்தோஷமாக ஒப்புக்கொண்டான்.

எதிர்பார்க்காமல் இப்படி ஒரு புதிய காரணமும் கிடைத்த ஸந்தோஷத்தோடு வைச்யன் தன்னுடைய வழக்கையும் ராஜாவின் முன் வைத்தான். முக்கால் கார்யமும் இவ்வளவு ‘ஈஸி’யாக முடிகிறதே என்று நினைத்த ராஜா அவனுக்கு அநுகூலமாகத் தீர்ப்பு பண்ணினான்.

இந்த மாதிரி ஒன்றையொட்டி ஒன்றாகத் திருப்பம் ஏற்பட்டதைப் பார்த்த சந்திரசர்மா, ‘இப்படித்தான் ஈச்வர ஸங்கல்பமென்று தெரிகிறது. அதனால் நாம் ஒன்றும் முரண்டு பண்ண வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும்’ என்று விவேகமாக விட்டுவிட்டார். மாமனார்களாவதற்கு மூன்று பேரும் போட்ட ஜாயின்ட் – மனுவுக்குத் தலையாட்டிவிட்டார்! மனு ராஜாக்ஞையாகவுமல்லவா வந்து விட்டது?

முக்கால் கார்யத்தை முழுசாகப் பூர்த்தி செய்ய நாலாவது வர்ணத்தைச் சேர்ந்த ஒரு நல்ல குணமுள்ள பெண்ணும் வந்து சேர்ந்தாள்2. தபஸ்விகளாக இருப்பவர்களுக்கு வெண்ணெய் கொண்டுபோய் ஸமர்ப்பணம் பண்ணுவதையே தொழிலாகக் கொண்டிருந்த ஒரு பெண் அவள். அவளுடைய கைங்கர்யத்தில் அவர்கள் ஸந்தோஷப்பட்டு, ஸத்பிராம்ணராகிய சந்த்ரசர்மாவை அடையாளம் சொல்லி, அவளுடைய புண்ய விசேஷத்தால் அவரையே பதியாக அடைவாள் என்று ஆசீர்வாதம் செய்திருந்தார்கள். அதன்படி அவள் வந்து தன்னை அங்கீகரிக்கும்படி அவரிடம் ப்ரார்த்தித்துக் கொண்டாள்.

ராஜாக்ஞைக்கு மேலே ஈச்வராக்ஞையே இதுவெல்லாம் என்ற ‘ஸ்பிரிட்’டில் சந்த்ரசர்மா ஒப்புக்கொண்டார்.

கல்யாணமே வேண்டாமென்றவர் ஒன்றுக்கு நாலாகப் பண்ணிக்கொண்டார்.

க்ருஹஸ்தாச்ரம தர்மத்தைப் பரிபாலிக்க வேண்டும், தனக்குப் பத்னிகளானவர்களின் குலங்களும் ஸத்பிரஜைகளால் சோபிக்க வேண்டும் என்று, ஒவ்வொருத்தியிடமும் ஒரு புத்ரனை ஜனிக்கச் செய்தார். அந்தப் பிள்ளைகளெல்லாம் நல்ல புத்திமான்களாக இருந்தனர். சந்த்ர சர்மா அவர்களுக்குத் தாம் கற்ற மஹா பாஷ்யத்தை நன்றாகக் கற்றுக் கொடுத்தார். அப்புறம், ‘இவர்கள் மூலம் இனி அது ப்ரசாரமாகிவிடும். நம் கார்யம் ஆகிவிட்டது. இன்னும் குடும்ப வாழ்வு வேண்டாம். ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ள வழி தேடுவோம்’ என்று வீடு வாசலைவிட்டுக் கிளம்பிவிட்டார்.

தர்மாநுஷ்டானத்தைப் பரம்பரையாகக் காப்பாற்றிக் கொடுக்க ஒரு பிள்ளையே போதும். முதலில் பிறக்கும் புத்ரன்தான் அப்படிப்பட்ட ‘தர்மஜன்’. அப்புறம் பிறப்பவர்கள் ‘காமஜர்’கள்தான் – ஒருவனுடைய ஸொந்த இச்சைப் பூர்த்திக்காக உண்டானவர்கள்தான். அதனால்தான் ஜ்யேஷ்ட புத்ரனுக்கே கர்மாதிகாரம் கொடுத்திருப்பது. நம்பூதிரி ப்ராம்மணர்களில் ஜ்யேஷ்ட புத்ரனுக்குத்தான் ஸொத்துரிமை. ஏனென்றால் பிதுரார்ஜித ஸொத்தும் தர்மாநுஷ்டானத்திற்காகத்தான் ஏற்பட்டது. மற்ற பிள்ளைகளை சரீர ஸம்ரக்ஷணை பண்ணி வளர்த்து, அப்புறம் அவரவரே ஸ்வயமாக ஸம்பாதித்துத் தன் காலில் நிற்கும்படியாக விட்டுவிடுவார்கள். ராஜ்யாதிகாரம் மூத்த பிள்ளைக்கு மட்டுந்தானே கொடுக்கப்படுகிறது? பல பிள்ளைகளுக்குப் பிரித்துப் தரப்படுவதில்லையே! அப்படி.

ஒவ்வொரு பத்னியிடமும் ஒவ்வொரு புத்ரன் உண்டான பிறகு சந்த்ர சர்மா இந்த்ரிய நிக்ரஹத்தோடு இருந்துவிட்டார். அவருடைய மேதா விலாஸத்தின் காரணமாகப் பிள்ளைகளும் குழந்தையாயிருக்கும்போதே நல்ல புத்திசாலித்தனத்தை காட்டியதால், தம் ஒருவரிடமே இருந்த பெரிய நிதியான மஹா பாஷ்யத்தை ப்ரசாரம் செய்யவேண்டிய கடமையும் தமக்கிருப்பதை நினைத்து, ‘அதை இந்தப் பிள்ளைகளுக்குக் கற்பித்து விடவேண்டும். அப்புறம் அவர்கள் அதைப் பரப்புவதாக இருக்கட்டும்’ என்று தீர்மானித்தார். அதற்காக மேலும் சில வருஷங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு க்ருஹத்தில் இருந்துவிட்டு, பாடம் முடிந்ததும் ஸந்நியாஸியாவதற்குப் புறப்பட்டுவிட்டார்3.

வீட்டை விட்டுப் புறப்பட்ட சந்த்ர சர்மா யாரிடம் ஞானோ பதேசம் வாங்கிக்கொண்டு ஸந்நியாஸியாகி வேண்டுமென்று நினைத்தாரென்றால், ஆதிகாலத்தில் தமக்கு மஹாபாஷ்யம் உபதேசித்த கௌடரிடமிருந்தேதான்! வித்யா குருவையே ஸந்நியாஸ குருவாகவும் கொள்ள எண்ணினார். கௌடர் பதரிகாச்ரமத்திற்க்குப் போய் ப்ரம்ம நிஷ்டரான சுகரிடம் ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு தாமும் ப்ரம்ம நிஷ்டையில் போய்க் கொண்டிருக்கிறாரென்று தெரிந்து அங்கே போனார். முன்னே அவர் இவரைக் கேள்வி கேட்டது ‘நிஷ்டை’ என்ற ப்ரத்யயம் பற்றி! இப்போது இவர் அவரிடம் அநுபவ பாடமாகப் பெற விரும்பியது ப்ரஹ்ம ‘நிஷ்டை’!

ஞானியாக ஹிமோத்கிரியில் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்த கௌடருக்குப் பூர்வ கால சிஷ்யரைப் பார்த்ததும் ஸந்தோஷமாயிற்று. மனஸார அநுக்ரஹம் பண்ணி ஸந்நியாஸாச்ரமம் கொடுத்தார்.

அதிலிருந்து சந்த்ர சர்மாவுக்கு அந்தப் பேர் போய், ‘கோவிந்த பகவத் பாதர்’ என்று பெயர் ஏற்பட்டது.

க்ருஷ்ணர்தான் ஜகத்குரு. அவருடைய நாமாக்களில் கோவிந்தன் என்பது விசேஷமானது4.

ஜகத்குருவான க்ருஷ்ணரின் பேராகவுமிருக்கிறது. தம்முடைய நேர்குருவின் பேராவுமிருக்கிறது என்பதால் ஆசார்யாளுக்கு கோவிந்த நாமாவில் ஒரு அலாதியான பற்றுதல் உண்டு. “பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்” என்றே ஒன்றுக்கு மூன்று தடவையாக லோகமெல்லாம் கோஷிக்கும்படியாகப் பாடி வைத்துவிட்டார்!


1 ப்ருஹதாரண்யக பாஷ்யம் I. 4. 10

2 ‘பதஞ்ஜலி சரித’த்தில் ப்ரம்ம ரக்ஷஸிடம் சந்திர சர்மா பாடம் முடித்ததை அடுத்தே நான்காம் வர்ணப் பெண் அவரிடம் தன்னை அர்ப்பணம் செய்து கொள்கிறாள். அவர் பிற்பாடு மற்ற மூன்று கன்னிகைகளை மணம் செய்துகொள்ளும்போது அவளை மணக்கிறார்.

3 பதஞ்ஜலி சரிதத்தில் சொல்லியுள்ளபடி சந்திர சர்மாவுக்கு ப்ராம்மண பத்னியிடம் பிறந்த பிள்ளைதான் வரருசி என்ற பேரறிவாளர். இவரே வியாகாரணத்தில் பாணினிக்கும் பதஞ்ஜலிக்கும் அடுத்தபடியாகப் போற்றப்படும் காத்யாயனர் என்றும் கூறுவர். விக்ரமாதித்தனின் வித்வத்ஸபையை அலங்கரித்த ‘நவரத்தின’ங்களில் ஒரு ரத்தினம் இவர். இவரை ஆதரித்த அந்த விக்ரமாதித்ய மஹாராஜனேதான் சந்திர சர்மாவுக்கு க்ஷத்ரிய மனைவியிடம் பிறந்த பிள்ளை என்கிறது ‘பதஞ்ஜலி சரிதம்’. அதன்படி வைசிய மனைவிக்கு பிறந்தவர் பட்டி; நான்காம் வர்ணத்தவளுக்குப் பிறந்தவர் பர்த்ருஹரி. பட்டி விக்ரமாதித்யனின் மதிமந்திரியாக விளங்கியவர். அதோடுகூட ராமாயணக் கதையின் மூலம் வியாகரண விதிகளை விளக்குவதான ‘பட்டி காவ்யம்’ என்று சாதுரியமிக்க நூலை எழுதியிருக்கிறார். பட்டி காவ்யமும் பர்த்ருஹரி எழுதியதுதானென்றும், அது விக்ரமாதித்யனுக்கு ஏழு நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வலபி மன்னன் தாரஸேனனின் காலத்தில் எழுதப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். நான்கு புதல்வர்களிலும் முதலிடம் பெற்றுள்ள பர்த்ருஹரியே. அவர் முறையே கவியாகவும், அறநெறியாளராகவும், ஆன்ம சிந்தனையாளராகவும் இருந்து இயற்றிய ச்ருங்கார சதகம், நீதி சதகம், வைராக்ய சதகம் ஆகிய நூல்கள் அந்தந்தத் துறையில் இணையற்றவையாக விளங்குகின்றன. இவரும் வியாகரணத்துக்குத் தொண்டாற்றியுள்ளார் – ‘வாக்யபதீயம்’ என்ற நூலை அளித்து, அவர் அத்வைதக் கருத்துக்களுக்கும் நெருக்கமாகச் சென்றவர்.

நம்முடைய சாஸ்திரக்ஞர்களின் கணக்குப்படியே விக்ரமாதித்ய சகாப்தம் என்பது கி.மு. 57-ல் தான் ஆரம்பித்திருக்கிறது. ஆசார்யாளின் அவதாரமோ கி.மு. 509 -ல் என்று கருத்தைத்தான் ஸ்ரீசரணர்கள் ஆமோதித்துப் பேசுவது. எனவே எட்டு வயது சங்கரர் விக்ரமாதித்யனின் தந்தையாகப் பூர்வாச்ரமத்தில் இருந்த கோவிந்த பகவத் பாதரிடம் துறவு தீக்ஷை பெற்றாரென்பது நம்முடைய காலக் கணக்குக்கு ஒத்து வரவில்லை. இதனால், பதஞ்ஜலி சரிதத்தில் சந்திரசர்மாவின் நான்கு புத்ரர்கள் யாரார் என்று கூறியிருப்பது வினாவுக்குரித்தாகிறது. இது காரணமாகவே ஸ்ரீ சரணர்கள் அதிலுள்ளபடி அவர்கள் பெயரைக் கூறாமல் விட்டிருக்கக்கூடுமென்று ஊகிக்கலாம்.

ஆயினும் ‘பதஞ்ஜலி சரித’த்தை ஸ்ரீ சரணர்கள் பலமுறை குறிப்பிட்டிருப்பதாலும், அதில் சொல்லும் நால்வரை உடன்பிறந்தவர்களாகக் கூறும் வழக்கு இந்தியா முழுதிலுமே பரவலாக இருப்பதாலும் இவ்விரதத்தைக் கொடுத்திருக்கிறோம்.

4 கோவிந்த நாம விசேஷம் குறித்து “தெய்வத்தின் குரல்” – நான்காம் பகுதியில், “வண்டு ஸ்தோத்ரம்” என்ற உரையில் தொடர்ச்சியாக வரும் ‘கோவிந்த-ஹர நாமச் சிறப்பு‘, குறைவொன்றுமில்லாத கோவிந்தா!‘, ‘குரு-தெய்வ-கோவிந்த‘, ‘மூன்றில் ஒன்று‘ ஆகிய உட்பிரிவுகள் பார்க்கவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆசார்யாளின் போற்றுதல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குரு பரம்பரையில் ஸந்நியாஸிகள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it