கௌடரின் பிற்கால சரித்திரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கௌடர் ப்ரம்மரக்ஷஸாக மாறினார். அப்படியே காற்றில் பறந்து போக ஆரம்பித்தார்.

கௌடர் கௌடர் என்று அவர் பிறந்த தேசத்தை வைத்துத்தான் பெயர் சொல்லத் தெரிகிறதேயொழிய அவருடைய நிஜப் பெயர் தெரியவில்லை!

‘அரியக்குடி’, ‘செம்மங்குடி’ என்று ஸங்கீத வித்வான்களில் இருப்பதுபோல ஆசார்ய புருஷர்களில் ‘கௌடர்’!

ஒரு காரணம் தோன்றுகிறது: அவ்வளவாக புத்தி ப்ரகாசமில்லாததால் இவரைக் குறிப்பிட்டுப் பேர் சொல்லிப் பேச எதுவுமிருந்திருக்காது போலிருக்கிறது. நூறோடு நூற்றியொண்ணு என்று இருந்திருக்கிறார். ‘பாவம், இந்த லக்ஷணத்தில் தூர தேசமான கௌட தேசத்திலிருந்து வந்திருக்கிறாரே!’ என்பதை நினைத்து கௌடர் என்றே குறிப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. அதுவே நிலைத்து விட்டது.

ப்ரம்மரக்ஷஸாகிய கௌடர் காற்றில் பறந்து நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு அரசமரம் இருந்தது. பழைமை வாய்ந்த அரசமரம். அந்த மரத்தில் உட்கார்ந்துகொண்டார்.

அந்த இடத்தை ஏன் தேர்ந்தேடுத்தாரென்றால், அது பஞ்ச கௌட தேசங்களுக்கும் பஞ்ச த்ராவிட தேசங்களுக்கும் மத்தியில் இருந்தது. ஆகையால் உத்தர தேசத்திலிருந்து தக்ஷிண தேசத்திற்குப் போகிறவர்களிலும் ஸரி, தக்ஷிணத்திலிருந்து வட தேசம் போகிறவர்களிலும் ஸரி, ரொம்பப் பேர் அந்த வழியாகத்தான் போவார்கள். சாஸ்த்ராப்யாஸம் செய்பவர்களும் பலபேர் வித்யையை நாடி இப்படி அந்த மார்க்கமாகத்தான் தினமும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆகையால், ப்ரம்ம ரக்ஷஸாக இருக்கும் வரையில் தனக்கு ஆஹாரமாவதற்கு ஏற்ற அத்யயனக்காரர்களும், அவர்களில் தன்னுடைய ப்ரம்ம ராக்ஷஸ ரூபத்தை நீங்கச் செய்யக்கூடிய உயர்ந்த படிப்பாளியும் இங்கேதான் கிடைப்பார்கள் என்பதால்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அங்கே வ்ருக்ஷத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்பார். குரு சொல்லிக் கொடுத்த கேள்விதான் – ‘பச்’ தாதுவுடன் நிஷ்டா ப்ரத்யயம் சேர்ந்தால் என்ன என்ற கேள்வி.

ரொம்ப நாள் அந்த வழிப்போக்கர்களில் எவருக்கும் இவருடைய கேள்விக்கு ஸரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. இவர் அவர்களை அடித்துப்போட்டு ஆஹாரம் பண்ணி வந்தார்.

ஒரேமாதிரி ஸ்பெல்லிங் உள்ள வார்த்தைகளெல்லாம் ஒரே மாதிரி உச்சரிப்பு (ப்ரோனௌன்ஸியேஷன்) இல்லாமல் மாறுபடுவதை இங்கிலீஷில் நிறையப் பார்க்கிறோம். B-u-t என்பது ‘பட்’ என்றும், c-u-t என்பது ‘கட்’ என்றும் ஆகிறாற்போல் p-u-t என்பது ‘பட்’ என்று ஆகாமல் ‘புட்’ என்று ஆகிறது. ஒரு குழந்தையிடம் நாம் அடுத்தடுத்து ‘b-u-t-க்கு என்ன உச்சரிப்பு?’, ‘c-u-t-க்கு என்ன உச்சரிப்பு?’ என்று கேட்டுவிட்டு ‘p-u-t-க்கு என்ன?’ என்று தொடர்ந்தால், ட், கட் என்று சொல்லிவந்த அந்த வேகத்திலே அது ‘பட்’ என்றே சொல்லும். ரொம்பவும் பரிச்சயமில்லாத விஷயமானால், குழந்தைதான் என்றில்லை, பெரியவர்களுக்கும்கூட இப்படிக் குளறிப் போய்விடும்.

நல்ல அறிவாளியாகத் தேர்ந்தெடுத்தே மஹாபாஷ்ய உபதேசம் செய்ய வேண்டுமென்று ப்ரம்மரக்ஷஸுக்கு இருந்ததால், (நிஷ்டா ப்ரத்யய விஷயமாக) அவ்வளவு சிறந்த அறிவாளியாக இல்லாதவர்கள் குளறிப் போகும்படியாகக் கேள்வி கேட்பார். என்ன பண்ணுவாரென்றால், ‘புஜ்’ஜின் நிஷ்டா ரூபம், ‘ஸிச்’சின் நிஷ்டா ரூபம் முதலானவை என்ன என்று கேட்டு பதில் சொல்கிறவர் ‘புக்தம்’, ‘ஸிக்தம்’ என்றெல்லாம் சொல்லி வரும்போதே சட்டென்று ‘பச்’சின் நிஷ்டா ரூபத்தைக் கேட்பார். ஸாதாரணமாகவே ரொம்பப் பேருக்கு அதற்குள்ள விதிவிலக்கு தெரியாது. தெரிந்தவருங்கூட இவர் இப்படி அதேமாதிரியான மற்ற வார்த்தைகளைப் பற்றி கேட்ட வேகத்திலேயே இதையும் கேட்கும்போது அவஸரத்தில் குளறிப்போய் ‘பக்தம்’ என்று சொல்லிவிடுவார்கள்.

ப்ரம்மரக்ஷஸ் சிரித்து, “பக்தமா? இல்லை; பக்வம். நீயும் நம் போஜனத்துக்குப் பக்(கு)வம்தான்” என்று சொல்லி தப்புப் பதில் சொன்னவனை ஆஹாரம் செய்துவிடும்.

இப்படியே ரொம்ப காலம் போயிற்று. அநேக வருஷங்களாகிவிட்டன.

அப்புறம் ஒருநாள் ஸர்வ லக்ஷணமாக ப்ரஹ்ம தேஜஸோடுகூட ஒரு பிள்ளையாண்டான் அந்த வழியே போனான்.

அவன் காஷ்மீரத்தைச் சேர்ந்தவன்1. தேசத்தின் அந்தக் கோடியிலிருந்தவன் காதுக்கும் 2000 மைல் தாண்டிச் சிதம்பரத்தில் பதஞ்ஜலி மஹாபாஷ்ய பாடம் சொல்லும் ஸமாசாரம் எட்டியிருந்தது. தானும் கற்றுக்கொள்ள வேண்டுமென்றே இந்த மார்க்கமாகப் போய்க் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் கௌட ப்ரம்மரக்ஷஸுக்கு ரொம்ப ஸந்தோஷ மாயிற்று. “எத்தனை காந்தியான ரூபம்! இன்றைக்கு நமக்கு முதல் தரவிருந்து!” என்றே ஸந்தோஷம்!

வழக்கம்போல் ஒரு ப்ராம்மண வேஷம் எடுத்துக் கொண்டு போய் அந்த பிள்ளையின் முன்னால் நின்றார். வழக்கமான கேள்வியையும் கேட்டார் – நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்து அநேக தாதுக்களின் ரூபத்தைக் கேட்டுவிட்டு, அந்த ஸ்பீடிலேயே ‘பச்’சின் நிஷ்டா ரூபத்தையும் கேட்டார்.

ஆனால் வழக்கத்திற்கு வித்யாஸமாக அந்தப் பிள்ளை ‘பக்தம்’ என்று உளறாமல், குளறாமல் “பக்வம்” என்ற ஸரியான பதிலைச் சொன்னான்!

அப்படி அவன் சொன்னதால், ‘இவனை ஆஹாரம் பண்ணமுடியாதே!’ என்று கௌட ப்ரம்மரக்ஷஸ் வருத்தப்பட்டதா என்றால், படவில்லை! ஏனென்றால் இப்போது, “இவன்தான் தக்க பாத்ரம்” என்று அவனிடம் மஹாபாஷ்யத்தை ஒப்புக் கொடுத்துவிட்டு ப்ரம்மராக்ஷஸ ஸ்திதியிலிருந்து விமோசனம் பெற்றுவிடலாமே என்பதில் மஹத்தான ஸந்தோஷமே உண்டாயிற்று!

“நீ யார்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.

“என் பேர் சந்த்ரசர்மா2. சிதம்பரத்தில் பதஞ்ஜலி வ்யாகரண பாஷ்ய பாடம் நடத்துகிறாராம். அதைக் கேட்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று அந்தப் பிள்ளை சொன்னான். “சிதம்பரத்து ஸமாசாரமெல்லாம் மலையேறிவிட்டது! ஆனால் மஹாபாஷ்யம் மட்டும் இங்கே என்னிடமே இருக்கிறது! அவ்வளவு தூரம் போய் நீ தெரிந்துகொள்ள வேண்டியில்லாமல் இங்கேயே நான் கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பெரிய நிதியைப் பெற யோக்யதையுள்ளவன் வருவானா வருவானா என்றுதான் வருஷக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்குத்தான் ஸரியான சிஷ்யனாக நீ வந்து சேர்ந்தாய். பதஞ்ஜலி மஹர்ஷி என்னொருத்தனுக்கு மட்டும் தந்த நிதியை நான் உன்னொருத்தனுக்கு மட்டும் கொடுக்கிறேன். உன்னாலும் உனக்கப்புறமும் அது பல பேரிடம் பரவட்டும். உட்கார். உபதேசம் பண்ணுகிறேன்” என்று கௌடர் சொன்னார்.

‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது’ என்பது போலப் போகிற வழியிலேயே மஹாபாஷ்ய உபதேசம் கிடைப்பதில் சந்த்ரசர்மா என்று பெயர் சொல்லிகொண்ட அந்த யுவா ரொம்ப ஸந்தோஷமடைந்தார்.

ஆனாலும் ப்ரம்மரக்ஷஸை குருவாகக் கட்டிக்கொண்டு அழுவதென்பது ஸுலபமாக இருக்கவில்லை! ராக்ஷஸ குரு கஷ்டமாக அநேகக் கண்டிஷன்கள் போட்டார்!

ப்ரம்மராக்ஷஸ ரூபம் எடுக்க வேண்டுமென்று கௌடருக்கு சாபம் இருந்ததால் அதனுடைய விசித்ரமான க்ரூர ஸ்வபாவப்படிதான் அவர் இருக்க வேண்டியதாயிற்று.

“நான் அந்த அரச மரத்தில் உட்கார்ந்து கொண்டுதான் பாடம் சொல்வேன். இப்போதே ஆரம்பித்துவிடுவேன். எனக்கு எப்போது இஷ்டமோ அப்போதுதான் முடிப்பேன். விடாமல் சொல்லிக்கொண்டே போவேன். நீயும் மரத்தில் என்னோடு உட்கார்ந்து கொண்டுதான் கேட்டுக்கணும், அல்லது எழுதிக்கணும்! எத்தனை நாளானாலும், ராப்பகல் பார்க்காமல் நான் சொல்லிக்கொண்டே போனாலும், அத்தனை நாளும் நீ மரத்தைவிட்டு இறங்காமல் எழுதிக்கொண்டு போகணும்! நடுவில் இறங்கப்படாது. தூங்கப் படாது, சாப்பிடப் படாது!” என்றிப்படிக் கண்டிப்பாகக் கண்டிஷன் போட்டார்.

சந்த்ரசர்மா ஒப்புக்கொள்கிறது தவிர வேறே ஒன்றும் பண்ணிக் கொள்வதற்கில்லை. அவருக்கோ மஹாபாஷ்யம் கற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று அவா. கற்றுக் கொடுக்கவோ இந்த ப்ரம்மரக்ஷஸ் தவிர எவருமில்லை என்றால் என்ன பண்ணுவது?

வித்யையிலுள்ள ஆர்வத்தால் கண்டிஷனுக்கெல்லாம் கட்டுப்பட்டார்.

அரச மரத்தின் மேலே விசித்ரமாக குரு – சிஷ்யாளின் க்ளாஸ் ஆரம்பித்தது!

குருவானால் கிடுகிடுவென்று பாடம் டிக்டேட் பண்ண ஆரம்பித்துவிட்டார். எழுதிக்கொள்ள சிஷ்யருக்குப் பேனாவா, இங்க் பாட்டிலா – இல்லை, அந்தக் கால ஏடா, எழுத்தாணியா – எதுவுமே இல்லை. எங்கேயாவது போய் வாங்கி வரலாமென்பதற்குமில்லாமல், மரத்தைவிட்டு இறங்கக் கூடாதென்று கண்டிஷன்!

சந்த்ரசர்மா தயங்கவில்லை – தன்னுடைய தொடையைக் கீறிக்கொண்டார். ரத்தம் வந்தது. அது தான் இங்க்! அரசிலைக் காம்பை ஒடித்துப் பேனாவாக்கிக் கொண்டார்! பேப்பர் என்னவென்றால் அரசிலைகளேதான்!

ரக்ஷஸ் சொல்லிக்கொண்டே போக அவர் காம்பை ரத்தத்தில் தோய்த்துத் தோய்த்து இலைகளில் எழுதிக்கொண்டே போனார்.

ராவும் பகலுமாக குரு நிறுத்தாமல் இப்படி ஒன்பது நாள்3 டிக்டேட் செய்ய, ஆடாமல் அசராமல், ஆஹார – நித்ரைகளும் இல்லாமல் சிஷ்யர் தொடர்ச்சியாக இலைகளில் எழுதிக்கொண்டார். வித்யையைப் பெறுவதற்காக இத்தனை த்யாகம், தபஸ்!

ஒருவாறாக வ்யாகரண பாஷ்யம் முழுவதும் சொல்லித் தீர்த்தாயிற்று.

சந்த்ரசர்மா அரசிலைகளை மூட்டை கட்டினார். அதிலிருந்து கிடைத்திருப்பதுதான் இன்றைக்கு நம்மிடம் வந்துள்ள ‘மஹாபாஷ்யம்’. பாடம் சொல்லித் தீர்த்ததுடன் கௌடருக்கும் ப்ரம்மராக்ஷஸ ரூபம் தீர்ந்தது.

முன்னே நம்குரு பரம்பரைக் கதையில் மித்ரஸஹன் ராக்ஷஸரூபம் பெற்றபோது சக்தி மஹர்ஷியின் அநுக்ரஹத்தால் அந்த ரூபம் நீங்கி அவருடைய சிஷ்யனானதாகப் பார்த்தோம். இப்போது சந்த்ர சர்மாவால் குருவுக்கு ராக்ஷஸ ரூபம் நீங்கிற்று!

தம் குரு கொடுத்த பெரிய கார்யத்தை முடித்தாகி விட்டதென்றதும் கௌடருக்கு மனஸ் ஆத்யாத்மிகமாகத் திரும்பிற்று. ‘இனி விவேக வைராக்கியங்கள் பெறவேண்டும். ஞானம் பெறவேண்டும். ஆத்ம த்யானம் பண்ண வேண்டும். அதற்கு ஒரு உத்தம குருவை அடைந்து உபதேசம் பெற வேண்டும்’ என்று எண்ணினார்.

பரம உத்தமமான குரு, ஜீவன்முக்தராகவே இருப்பவர், யார் என்று விசாரித்தார். சுகாசார்யாள் அப்படி இருப்பதாகத் தெரிந்துகொண்டார். ஜன்மா எடுக்கும்போதே ஆத்ம ஞானியாயிருந்த அவரையே ஆசார்யராக வரித்து, அவரிடம் உபேதேசம் வாங்கிக்கொள்ள முடிவு செய்தார்.

அப்போது சுகர் பதரிகாச்ரமத்தில் இருப்பதாகத் தெரிந்தது. உடனே கௌடர் நர்மதா தீரத்திலிருந்து ஹிமாசலத்தில் சுகரிருந்த இடத்துக்குப்போய் அவரிடம் சரணாகதி செய்தார்.

சுகர் அவருக்கு ஸந்நியாஸம் கொடுத்து ஞானோபதேசம் செய்தார்.

உபதேசம் பண்ணியவர் பிறவி ப்ரஹ்மஞானி. வாங்கிக்கொண்டவரும் ஸத்பாத்ரம். ஆகையால் கௌடரும் ப்ரஹ்ம ஞானம் பெற்றார்.

அப்படியே ஆத்ம நிஷ்டையில் ஆழ்ந்து போய் பதரிகாச்ரமத்திலேயே தங்கிவிட்டார். பிற்காலத்தில் இதே சந்த்ரசர்மாவுக்கு ஸந்நியாஸாச்ரமம் கொடுத்து ப்ரஹ்ம வித்யை உபதேசித்தார். அதனால் ‘கௌடபாதாசார்யாள்’ என்பதாக ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையில் இடம் பெற்றார்.

ஆசார்ய பரம்பரையில் புராண பாத்ரங்களான தெய்வ புருஷர்களாகவும் ரிஷிகளாகவும் இருந்தவர்களின் வரிசை சுகரோடு முடிந்து, நம் போன்ற மனிதர்கள் மாதிரியே பூலோகத்தில் நடமாடி வாழ்க்கை நடத்திய ‘மானவ ஸம்ப்ரதாய’ ஆசார்ய வரிசை கௌடபாதாசார்யாளிலிருந்துதான் ஆரம்பித்தது.

முழுக்க முழுக்க அத்வைதமாக எழுதப்பட்ட முதல் புஸ்தகம் கௌடபாதர் எழுதியதுதான் என்று இப்போது ஃபிலாஸஃபி ப்ரோஃபஸர்களாக உள்ள சிலர் சொல்கிறார்கள். அந்தப் புஸ்தகம் “மாண்டூக்யோபநிஷத் காரிகா” என்பது.

ஆத்ம தத்வத்தை விசாரித்துக் கொண்டுபோய் அது சாந்தம் – சிவம் – அத்வைதம் – துரீயம் (விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய மூன்றும் கடந்த ஆத்ம ஸ்தானமே துரீயம்) என்று முடிவதாகச் சொல்கிற உபநிஷத்து இந்த மாண்டூக்யம்தான். அதற்குக் “காரிகை” என்பதான வ்யாக்யான வகையில் எழுதப்பட்டதே “மாண்டூக்யோபநிஷத் காரிகா”.

“யாப்பருங்கலக்காரிகை” என்று தமிழில் கேள்விபட்டிருக்கலாம். செய்யுள் வகைகளைப் பற்றிச் சொல்வதாக “யாப்பருங்கலம்” என்று ஒரு நூல் உண்டு. அதன் விளக்கமாக எழுதியதே “யாப்பருங்கலக் காரிகை”.

மாயையினால் உண்டாவதே த்வைதம். அதற்குக் கொஞ்சங்கூட இடம் தராமல் அடித்துப் போட்டுப் பரம அத்வைதமாக எழுதப்பட்ட நூல் ‘மாண்டூக்ய காரிகை’. அதன் முதல் பிரிவுக்கு ‘ஆகம ப்ரகரணம்’ என்று பெயர் கொடுத்திருப்பதால் முழுப் புஸ்தகத்தையுமே ‘ஆகம சாஸ்த்ரம்’ என்றும் சொல்வதுண்டு. ஸாதாரணமாக ஆகம சாஸ்த்ரம் என்றால் ஒரு தெய்வத்தின் வழிபாட்டு முறை. அத்வைத வேதாந்தத்தில் ‘ஆகம சாஸ்த்ரம்’ என்றால் அது கௌடபாத காரிகைதான்.

இதில் மாயைக்கு இடமே கொடுக்காத கௌடபாதரே மாயா ஸ்வரூபிணியாகவும் ப்ரஹ்மவித்யா ஸ்வரூபிணியாகவும் ஒரே ஸமயத்தில் இருக்கும் அம்பாளிடம் பரம பக்தி பண்ணி ஸ்ரீ வித்யா தந்த்ரத்தைச் சேர்ந்த “ஸுபகோதயம்” முதலான க்ரந்தங்களை உபகரித்தாரென்றும் சொல்லப்படுகிறது.


1 உஜ்ஜயினி என்றும் சொல்வதுண்டு.

2 சந்த்ரகுப்த சர்மா என்று பதஞ்ஜலி சரிதத்தில் உள்ளது.

3 ‘பதஞ்ஜலி சரித’த்தில் (V.32) இரண்டு மாதங்கள் எனக் காண்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is தப்பித்த சீடருக்குச் சாபமும் அநுக்ரஹமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஞானியும் பக்தியும்
Next