வஸிஷ்டரிலிருந்து வ்யாஸர் வரை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

வசிஷ்டர் ப்ரஹ்மாவின் பத்து மானஸ புத்ரர்களில் ஒருவர். ஏராளமான வேத ஸூக்தங்களுக்கு அவர் ரிஷி. ஸப்தரிஷிகளில் ஒருவராயிருக்கும் பெருமையும் அவருக்கு உண்டு. இன்னொரு பெருமை பதிவ்ரதைகளில் முதல் ஸ்தானம் கொடுத்துப் பூஜிக்கப்படும் அருந்ததியின் பதி அவரே என்பது. எல்லாவற்றிலும் பெருமை, அவருடைய பரம குருவான நாராயண மூர்த்தியே ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தியாக அவதாரம் செய்தபோது இவர் அவருக்கு குருவாகி உபதேசம் பண்ணியிருக்கிறார்! அப்போது விஸ்தாரமாக அவர் (அத்வைத) வேதாந்தம் உப்தேசித்ததுதான் ‘ஞான வாஸிஷ்டம்’ என்ற புஸ்தகம். அது வால்மீகி ராமாயணத்தை விடவும் பெரிய புஸ்தகம். ஏராளமான கதைகள், உபகதைகள் எல்லாம் சொல்லி’, ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யம். லோகம் மாயை, ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றுதான் என்று அதில் நிரூபித்திருக்கும். வேதாந்திகள் ரொம்பவும் கொண்டாடும் நூல் அது.

தமிழில் தனியாக ஒரு அத்வைத ஸம்ப்ரதாயம் உண்டு. அதில் ஞானவாஸிஷ்டத்தின் மொழி பெயர்ப்புக்கு மிகவும் முக்யமான இடமுண்டு. ‘வாசிட்டம்” என்று சொல்வார்கள்.

வஸிஷ்டருடைய நூறு புத்ரர்களில் ஒருத்தர்தான் குரு பரம்பரையில் அடுத்தவராக வரும் சக்தி. அவரைப் பற்றிப் புராணங்களில் பல கதைகள் இருக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று சற்று வித்யாஸமாயும் இருக்கின்றன.

ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ராள் என்று ஜீவன்முக்தரான மஹான் இருந்தாரென்று கேள்விபட்டிருப்பீர்கள். அவர் “(ஜகத்) குரு ரத்ந மாலா (ஸ்தவம்)” என்பதாக ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையைப் பற்றி தக்ஷிணாமூர்த்தியிலிருந்தும் மஹாவிஷ்ணுவிளிருந்தும் ஆரம்பித்து நம்முடைய (காஞ்சி) மடத்தின் 57-வது பீடாதிபதியாயிருந்த தம்முடைய குரு வரையில் ஸ்தோத்திரித்து 87 ச்லோகங்கள் கொண்ட க்ரந்தம் செய்திருக்கிறார். அதற்கு ஆத்மபோதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்பவர் ஸுஷமா’ என்ற வியாக்யானம் செய்திருக்கிறார். “குரு ரத்னா மாலா”வில் சக்தி மஹரிஷியைப் பற்றி, ‘தன்னுடைய ஸாந்நித்ய மாத்திரத்தால் பஹுமித்ரஸஹன் என்ற ராஜனின் பாபத்தைப் போக்கிய உத்தமமான பிரபாவத்தை உடையவர். மஹா மந்த்ர யந்த்ர சக்தி பொருந்தியவர். உண்மையான விரக்தியுடையவர்’ என்று சொல்லியிருக்கிறது1.இதற்கு ‘ஸுஷமா’வில் கொடுத்துள்ள வ்யாக்யானத்தைப் பார்த்தாலே நமக்குப் போதுமானது-சக்தியின் பெருமை என்ன, அவரை எப்படி ப்ரஹ்மவித்யா குருக்களில் ஒருவராகச் சேர்த்திருக்கிறது என்று தெரிவதற்கு.

அந்த வ்யாக்யானப்படி, (பஹு) மித்ரஸஹன ஸூர்யகுல ராஜாக்களில் ஒருவன். வஸிஷ்டர்தான் அவனுக்குக் குலகுரு. அவனை நேராக எதிர்க்க சக்தியில்லாத ஒரு ராக்ஷஸன், வஞ்சகம் பண்ணி, வஸிஷ்டரின் சாபம் அவனுக்கு ஏற்படும்படிச் செய்து அதனால் அவனை அழிக்க வேண்டுமென்று நினைக்கிறான். சமையல்காரன் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து மித்ரஸஹனுடைய பாகசாலையில் வேலைக்கு அமர்கிறான். ஒருநாள் மித்ரஸஹன் வஸிஷ்டரைக் கொண்டு பித்ரு ச்ரார்த்தம் பண்ணுகிறான். அப்போது வேஷதாரியான ராக்ஷஸ சமையல்காரன் நர மாம்ஸத்தையே சுத்த அன்னம் மாதிரி சமைத்து வைத்து, விஷயம் தெரியாத மித்ரஸஹன் அதை வஸிஷ்டருக்குப் பரிமாறும்படி செய்கிறான். ஆனால் வஸிஷ்டருக்கு அன்னத்தைப் பார்த்த மாத்திரத்தில் விஷயம் தெரிந்துவிடுகிறது.

பகவான் லீலையில் வஸிஷ்டாதி மஹர்ஷிகளுக்கும்கூட ஞான த்ருஷ்டியில் சிலது தெரிந்தாலும், சிலது தெரியாமலும் போய்விடும்! இப்போது அப்படித்தான் தமக்குப் பரிமாறப்பட்டுள்ள வஸ்து அன்னமல்ல, நர மாம்ஸம் என்று வஸிஷ்டருக்கு தெரிந்தாலும், இந்தக் கார்யத்துக்கு ராஜா பொறுப்பாளியில்லை என்று தெரியவில்லை. சட்டென்று கோபம் வந்து, “இப்படி எனக்கு மஹத்தான அபசாரம் பண்ணப் பார்த்த நீயே நர மாம்ஸ பக்ஷிணியான ராக்ஷஸனாகப் போ!” என்று மித்ரஸஹனுக்கு சாபம் கொடுத்து விடுகிறார்!

அவன் நிரபராதியல்லவா? அதனால் சாபம் வாங்கிக் கொண்டவுடன் அவனுக்கும் மஹாகோபம் உண்டாகிறது! குருவென்றும் பார்க்காமல் வஸிஷ்டருக்கு எதிர்சாபம் தரப்போகிறான். சாபம் பலிப்பதற்காக அவர் மேலே அபிமந்திரித்த தீர்த்தத்தைத் தெளிக்க வேண்டுமென்று தன் கையிலே ஜலத்தை எடுத்துக்கொண்டு சபிக்கிறான். அதை அவன் வஸிஷ்டர் மேல் தெளிப்பதற்குள் மந்திரி குறுக்கிட்டு, குருவாக உள்ள ஒருவரை சபிக்கிற சிஷ்யனுக்கு எந்நாளும் விமோசனமில்லை என்றும், அவன் குடும்பமே நசித்துவிடும் என்றும் எடுத்துச் சொல்லித் தடுக்கிறான்.

ராஜாவுக்கு நல்லறிவு வருகிறது. தீர்த்தத்தைத் குருவின் மேல் தெளிப்பதில்லை என்று முடிவு பண்ணுகிறான். ஆனாலும் கையில் இருக்கிற ஜலத்தை என்ன பண்ணுவது? எங்கேயாவது விட்டுத்தானே ஆகவேண்டும்? அப்படி விட்டாலோ விட்டா இடம் மந்த்ர வீர்யத்தால் எரிந்து போய்விடும். அந்த இடத்தில் எதாவது ஜீவ ஜந்து போனால் அதுவும் கருகிவிடும். அதனால், ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்து, முடிவில் ரொம்பவும் தியாகமாகவும், ப்ராயச்சித்தமாகவும், ‘நம்முடைய காலே கருகிப் போகட்டும்’ என்று, தன்னுடைய பாதத்திலேயே அந்த ஜலத்தை விட்டுக்கொண்டு விடுகிறான். அவனுடைய கால் கருகிக் கன்னங் கரேலேன்றாகிவிட்டது. அதனால் அவனுக்குக் ‘கல்மாஷபாதன்’ என்றே பேர் ஏற்பட்டது.

அதோடு வஸிஷ்டரின் சாபமும் பலி்த்துத் தானேயாக வேண்டும்? அதனால் அவன் நரமாம்ஸ பக்ஷிணியாக மாறிவிட்டான்.

இதுவரை எல்லாப் புராணங்களிலும் ஒரே போன்ற கதைதான். அப்புறதான் பலவிதமான மாறுதல்கள். குரு பரம்பரையைப் பற்றியே உள்ள நூலான ‘ஸுஷமா’க் கதையை நாம் எடுத்துக்கொள்ளலாம், ‘ஸுஷமா’ எழுதிய பெரியவர் புஷ்டியான புராண ஆதாரம் எதோ இருந்துதானே அந்தக் கதையைச் சொல்லியிருக்க வேண்டும்? அதனால் அதையே நாமும் ப்ராமாண்யம் (‘அதாரிடி’) உள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்.

நரமாம்ஸ பக்ஷிணியாக ஆனவுடன் ராஜா வஸிஷ்டருடைய புத்ரர்களைப் பிடித்துத் தின்ன வேண்டுமென்று பாய்கிறான். அப்போதுதான் குரு பரம்பரையில் இடம் பெரும் சக்தி எதிர்படுகிறார். அவரை தர்சித்தவுடன் அவருடைய ஸாந்நித்ய விசேஷத்தாலேயே ராஜாவுடைய சாபம், பாபம் எல்லாம் மறைந்துவிடுகின்றன. ‘இப்பேர்ப்பட்ட மஹாத்மாவாக இருக்கிறாரே!’ என்று அவரிடம் நிரம்ப மரியாதை, பக்தி வைத்து உபதேசம் தருமாறு ப்ரார்த்தித்துக் கொள்கிறான். அவரும் அவனுக்கு ஸகல தத்வமுமான ப்ரஹ்மவித்யையை உபதேசித்து, சாபத்திலிருந்து விடுவித்தது மட்டுமின்றி ஸம்ஸாரத்திலிருந்தே விடுவித்து மோக்ஷத்தில் செயப்பிக்கிறார்.

நம்முடைய குரு பரம்பரையில் வஸிஷ்ட புத்ரரான சக்தி என்ற ரிஷி இடம் பெற்றிருப்பதற்கு இப்படிக் காரணம் தெரிகிறது.

அவருடைய புத்ரர் பராசரர். அவர் தாயாரின் கர்பத்திலிருந்தபோதே வேதங்களைச் சொன்னவர்! அவர் லோகத்திற்கு இரண்டு பெரிய ஸொத்துக்களைத் தந்தவர். ஒன்று, வேதவ்யாஸ பகவான். மற்றது, ‘விஷ்ணு புராணம்’. ஸத்யவதியை மாதாவாகவும், தம்மைப் பிதாவுமாகக் கொண்டு அவர் வ்யாஸாசார்யாளை அவதரிப்பித்தார். தாமே மாதா- பிதா இரண்டுமாக இருந்து ‘விஷ்ணு புராண’த்தைப் பிறப்பித்தார்!

ஸ்ரீமத் பாகவதத்திலேயே மூல நூல்போல இருப்பது விஷ்ணு புராணம். நம்முடைய ஆசார்யாள் புராணங்களுக்குள்லேயே விஷ்ணு புராணத்திலிருந்துதான் அதிக மேற்கோள் காட்டுவது வழக்கம். பராசரர் அவருடைய பூர்வாசார்யர் அல்லவா?

பக்தி நூலாகவே விஷ்ணு புராணம் தெரிந்தாலும் பாலில் சர்க்கரையைக் கரைத்திருக்கிறதுபோல, அந்த பக்தியிலேயே ஞானத்தை, அத்வைத வேதாந்தத்தைக் கரைத்திருக்கும். (விஷ்ணு) புராணம் முழுக்க அங்கங்கே இப்படி அநேக த்ருஷ்டாந்தங்கள் காட்டலாம்2.

பக்தி வழியாக ஞானத்துக்கு வழிகாட்டியதோடு பராசரருடைய பணி முடிந்துவிடவில்லை,. கர்மாநுஷ்டானம், வாழ்க்கை முறைகள், ஸமூஹ நெறிகள், தனி மநுஷ்ய நியமங்கள் ஆகியவற்றைச் சொல்லும் தர்ம சாஸ்த்ரங்களில் ஒன்றான ‘பராசர ஸ்ம்ருதி’ என்பதையும் அவர் கொடுத்திருக்கிறார்.

பராசரருக்கு அடுத்தவர் வ்யாஸாசார்யாள். அத்வைத மதத்தை அழுத்தந்திருத்தமாக ஸ்தாபிக்கும் ஆசார்யாளின் சிகரமான நூல் — ‘Magnum Opus’ என்கிறார்களே, அப்படிப் பட்ட நூல் — எது என்று கேட்டாள், விஷயம் தெரிந்தவர்கள் “ஸூத்ரபாஷ்யம்” என்றுதான் சொல்லுவார்கள். வ்யாஸாசார்யாள் அநுக்ரஹித்துள்ள “ப்ரஹ்ம ஸூத்ர”த்திற்கு ஆசார்யாள் எழுதியுள்ள விரிவுரைதான் “ஸூத்ர பாஷ்யம்” என்பது. இதிலிருந்தே வ்யாஸாசார்யாளுக்கு அத்வைத வித்யா குரு பரம்பரையிலுள்ள முக்யமான ஸ்தானத்தைப் புரிந்துகொள்ளலாம். வெவ்வேறான பல உபநிஷத்துக்களில் விரவிக் கிடக்கிற எல்லாக் கருத்துக்களையும் ஒரே இடத்தில், வகை தொகை பண்ணி, ரத்னச் சுருக்கமான ஸூத்ர ரூபத்தில்கொடுத்து, அவற்றின் பரம தாத்பர்யம் அத்வைதம் என்று காட்டிக் கொடுக்கும் ஆதார கிரந்தமாக ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ இருக்கிறது. இதை அநுக்ரஹித்து பரமொபகாரம் பண்ணியதோடு வேதங்களையே நாலாக வகுத்துத் தந்தவர் வ்யாஸதான். பதினெட்டுப் புராணங்களையும் அவரே கொடுத்து பக்தி த்வாரா ஞானத்தை, த்வைதத்தின் வழியாக அத்வைதத்தை எல்லாருக்கும் உபதேசித்தவர்.

அவருடைய பெருமையைச் சொல்ல ஆரம்பித்தால் ஆசார்யாள் கதையை விட்டுவிட்டு ‘வ்யாஸ மஹாதமிய’மே சொல்லிக்கொண்டு போகும்படி ஆகும்! இப்போதே ஆசார்யாள் சரித்ரம் என்று ஆரம்பித்துவிட்டு அவருடைய அவதார கட்டத்திற்குக்கூட வராமல் என்னென்னவோ விஷயங்களாகப் பார்த்துக்கொண்டு போகிறோமே என்று இருக்கலாம். ‘என்னென்னவோ’ விஷயமில்லை! இதெல்லாம் சேர்ந்துதான் ஆசார்யாள் சரித்ரம். அவர் அவதாரம் பண்ணி, முப்பத்திரண்டு வருஷ ஆயஸ் காலத்தில் செய்து காட்டிய அநேக கார்யங்களும் அப்போது கடந்த ஸம்பவங்களும் மாத்திரம் அவருடைய சரித்ரத்தைச் சொல்லிவிடவில்லை. தொன்றுதொட்ட நம்முடைய மஹத்தான ஸமய நாகரிகத்திற்கே, ஆத்மிக மரபுக்கே ஒரு ப்ரதிநிதியாக வந்தவர் அவர். ஆகையினால் இந்த பெரிய கலாசாரத்தில் ஸம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் சேர்ந்ததுதான் அவருடைய சரித்ரம். இதெல்லாம் “என்னென்னவோ” சம்பந்தமில்லாத ஸமாசாரமில்லை. இதெல்லாம் தெரிந்துகொள்ளாமலே ஆசார்ய சரித்ரம் கேட்டுவிட்டோமென்றால் அது ஏதோ இடுக்கு வழியாக ஒரு பெரிய மலைத்தொடரில் கொஞ்சம் பாகத்தைப் பார்க்கிற மாதிரிதான் !

ஆனாலுங்கூட அவருடைய 32 வருஷ ஜீவித சரித்திரத்திலேயே சொல்லவேண்டியதாக ரொம்ப விஷயங்கள் இருப்பதால் பீடிகையைக் குறைத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அதனால், வ்யாஸாசார்யாளைப் பற்றி வளர்த்தாமல் அடுத்தவரான சுகாசார்யாள் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிட்டு கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர், ஆகியவர்களின் கதைகளுக்குப் போகலாம்.

இந்த இரண்டு பெரும் ஆசார்யாளுக்கு நேர் குருவும், பரம குருவுமாக இருந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு முக்யத்வம் ஜாஸ்தி. அவர்கள் ஆசார்யாளோடேயே பிரிக்க முடியாமல் சேர்ந்திருக்கிற மாதிரி! அதோடுகூட, சுகர் வரையிலானவர்களைப் பற்றி அநேக புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டுள்ளன. இந்த இரண்டு பேர்தான் சரித்ர காலத்தில் ஓரளவு வந்தவர்களாதலால் இவர்களுக்குப் புராண ப்ரஸித்தியில்லை. ஆகையினால் இவர்களுடைய சரித்ரம் ரொம்பப் பேருக்குக் கொஞ்சம்கூட தெரிந்திருப்பதற்கில்லை. இதனாலும் இவர்களுடைய கதையைக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணிச் சொல்ல நியாயமிருக்கிறது.

இதெல்லாவற்றுக்கும் மேலாக மஹாவிஷ்ணுவில் ஆரம்பித்து சுகர் வரையிலுள்ள அந்த ஏழெட்டுப் பெரும் ஆசார்யாளின் மதத்தைச் சேர்ந்த அத்வைதிகளுக்கு மாத்ரம்தான் பூஜிதமானவர்களென்றில்லை. த்விதிகள், விசிஷ்டாத்வைதிகள் முதலியவர்களுக்கும் அவர்கள் பூஜிதர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் நமக்கு (அத்வைதிகளுக்கு) மஹாவிஷ்ணு மூல குரு என்பதோடு பல முக்ய தெய்வங்களில் ஒருத்தர் என்றிருக்க, வைஷ்ணவர்களுக்கும் மாத்வர்களுக்கும் அவர்தான் முழுமுதல் தெய்வமே!

பராசரரிடம் ராமானுஜருக்கு விசேஷமான ஈடுபாடு உண்டு. அவர் தம்முடைய குருவின் மூன்று முக்யமான ஆக்ஞைகளில் ஒன்றாகக் கருதியதே, பராசரரிடமும் வ்யாஸரிடமும் பக்தி பண்ணிக்கொண்டு அவர்கள் பெயர்கள் என்றும் நிலைத்திருக்கும்படிப் பண்ணுவதாகும். அவருக்கு ரொம்பவும் நெருக்கமாக இருந்த கூரத்தாழ்வாரின் புத்திரருக்குப் பராசர பட்டர் என்றே பெயர் வைத்தார்.

வாஸாசார்யாளை த்ரிமதஸ்தர்களுமே தங்கள் மூலபுருஷராகச் சொல்லிக் கொள்கிறார்கள். ப்ரஹ்ம ஸூத்ரத்திற்கு ராமானுஜ பாஷ்யம், மத்வரின் பாஷ்யம் ஆகியனவும் தான் இருக்கின்றன. மாதவர்கள் வ்யாஸராயர் என்று பெயர்கூட வைத்துக்கொள்கிறார்கள். வ்யாஸராயமடம் என்றே அவர்களுடைய மடமொன்று உண்டு.

சுகப்ரஹ்மமும் எல்லா ஸம்ப்ரதாயஸ்தகர்களுக்கும் பொதுவானவர்தான். [சிரித்து] ப்ரஹ்மம்! எல்லாருக்கும் பொதுவாயில்லாமல் எப்படியிருக்கும்?

கௌடபாதரும், கோவிந்த பகவத் பாதரும்தான் முழுக்க அத்வைதிகளாகவே இருந்து, அத்வைத ஸம்ப்ரதாயஸ்தகர்களின் குரு பரம்பரையில் மாத்திரமே இருப்பவர்கள், மற்ற ஸம்ப்ரதாயஸ்தர்கள் அவர்களுடைய ஸித்தாந்தத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களைக் கொண்டாடவும் மாட்டார்கள். நமக்கென்றே ஏற்பட்டவர்கள் என்பதாலும் அந்த இரண்டு பேருடைய சரித்ரங்களைத் தெரிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.


1பஹுமித்ரஸஹ-க்ஷிதீச-பாபாபஹ

ஸாநித்யம்-ஆரோத்ய-ஸத்-பிரதாபம் |

மஹதஞ்சித-மந்த்ர-யந்த்ர-சக்திம்

மநஸா சக்திம்-உபைமி ஸத்விரக்தம் ||      (ச்லோ. 6)

2 காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கரபக்தஜன ஸபாவினால் வெளியிடப்பட்ட “அத்வைதாக்ஷரமாலிகா” எனும் நூலில் “விஷ்ணு புரானே அத்வைத பாவா:” என்ற கட்டுரையில் இவ்வித எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பூர்வாசார்ய பரம்பரை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சுக ப்ரஹ்மம்
Next