Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்வயநலமாகாது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தன்னை மட்டும் கடைத்தேற்றிக் கொள்வது ஸ்வய நலமில்லையா என்று கேட்டால், இல்லவே இல்லை. ஸ்வயம் என்பது எது? நீ ஒரு ஜீவன் என்று வைத்துக்கொண்டு அதற்காகப் பொன்னும் பொருளும், இன்னும் பதவி, பட்டம் முதலானதுகளும் சேர்த்துக்கொள்வதே குறியாயிருப்பதுதான் ஸ்வயநலம். இது கூடவே கூடாதுதான். இதிலெல்லாம் பிறருக்கு த்யாகமாக விட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் நீ ஆத்மாவாக மட்டும் இருந்து கொண்டு சும்மாயிருக்கிறாய் என்கிறபோதோ ஸ்வயம், பரம் என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை! நான், நான் என்கிற ஜீவ பாவம் தானே ஸ்வயம் என்பது? அந்த ஸ்வயமே போய்விடும் இடத்தில் ஸ்வய நலம் எங்கேயிருந்து வரும்? ஸத்யமாகவும் நித்யமாகவும் உள்ள ஒன்றே ஒன்றான நிலையில் ஸ்வயம் என்பது செத்தேபோய்விடுவதாக இருக்க, அதை ‘ஸ்வய நலன் பேணுவது’ என்றால் சிரிப்புத்தான் வருகிறது!

சும்மாயிருக்கமுடியாதவரையில் கார்யம் பண்ண வேண்டியதுதான். ஆத்மாவாக அப்படியே சும்மாயிருந்து கொண்டிருக்க நம்மால் முடியவில்லை என்றால் ஏன்? நிறையத் தப்புக் கார்யம் பண்ணித்தான் (ஆத்மாவைத் தெரிந்து கொள்ளமுடியாதபடி) திரை போட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் இப்போது திரையைக் கிழிப்பதான கார்யம்–நல்ல கார்யம், சாஸ்த்ரோக்தமான கார்யம்–பண்ணித் தானாக வேண்டும். சாஸ்த்ரோக்தமான கர்மாநுஷ்டானங்கள், அவரவராலும் முடிந்தமட்டும் பரோபகாரம், ஜீவ காருண்யப் பணிகள் எல்லாம் பண்ணிப் பண்ணித்தான் திரை கிழிபடவேண்டும். ஆனால் திரை பாட்டுக்கு இருந்து கொண்டேயிருக்கட்டும்; நான் பாட்டுக்கு இருட்டிலேயே நல்லது பண்ணிக் கொண்டேயிருப்பேன் என்றால் அது புத்திசாலித்தனமும் இல்லை; ஈச்வரனுக்கு ப்ரீதியும் ஆகாது. “உத்தரேத் ஆத்மநா ஆத்மாநம்* : உன் ஆத்மாவை உசத்திக் கொள்ள, கடைத்தேற்றிக்கொள்ள நீயே பண்ண முடிந்த முயற்சியெல்லாம் பண்ணு! ந ஆத்மாநம் அவஸாதயேத் : உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே! ஞானத்துக்கு உயராமல் கர்மாவிலேயேதான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காதே! உன்னைக் கடைத்தேற்றிக் கொள்ள நீ எப்போது பாடுபடுகிறாயோ அப்போதுதான் நீ உனக்கே உற்ற உறவுக்காரனாக இருக்கிறாய் : ஆத்மா ஏவ ஹி ஆத்மநோ பந்து:! அப்படிப் பாடுபட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால், ஆத்ம ஏவ ரிபு: ஆத்மந: – உனக்கு நீயே பரம சத்ருவாக ஆகிவிடுகிறாய்”! என்பதுதான் பகவான் வாக்கு. அதனால் என் ஆத்மா என்ன வேணடுமானாலும் ஆகட்டும், நான் ஊருக்குத்தான நல்லது பண்ணுவேன் என்று சொல்லிக் கொண்டு, நல்லதாகத்தான் நடக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாத ப்ரயாஸைகளில் — முடிவு அவன் கையிலேயே இருக்கும் ப்ரயாஸைகளில் — அப்படியே நல்லதாக நடந்தாலும் இந்த மாயா லோகத்தைத்தான் சேர்ந்த விஷயங்களில்–போய்க்கொண்டேயிருப்பது அவனுக்கு ப்ரீதியாயிருக்காது. உனக்கும் அது முடிவான நல்லதாக ஆகாது.

பின்னே சில மஹான்கள்கூட இப்படி (தன்னுடைய மோக்ஷ இன்பத்தையும் துறந்து, உலகப் பணியே செய்ய விரும்புவதாக) சொல்லியிருக்கிறார்களே என்றால், அது ஸ்வய நலமே பேணிக் கர்மாவை ஜாஸ்தியாக்கிக் கொள்ளும் நமக்கு ஆரம்ப நிலைகளில் பரோபகாரம், தொண்டு முதலியவற்றில் ஈடுபாட்டை உண்டாக்கிக் கொடுப்பதற்குத் தூண்டுகோலாகத்தான். அவர்கள் மோக்ஷானந்தத்தையே ‘ஸாக்ரிஃபைஸ்’ பண்ணத் தயாராக இருக்கிறார்களென்றால்தான், நாமும் இந்த லோகத்தின் அல்ப ஆனந்தங்களுக்காகவே பிறர் நலனைக் கெடுத்தும் ஸ்வய நலமாகப் பண்ணுபவைகளை ‘ஸாக்ரிஃபஸ்’ செய்து பார்க்கலாம் என்ற நல்லறிவு தோன்றும்.

ஸ்வய மோக்ஷத்தையும் ஸாக்ரிஃபைஸ் பண்ணுமளவுக்குப் பரோபகாரத்தை உயர்த்திச் சொன்ன மஹான்கள் சிலர் இருக்கிறார்களென்றால், எதிர்வெட்டாக எத்தனையோ பரோபகாரம், பொதுநலப்பணி என்று செய்த பெரியவர்களில் சிலர் அப்புறம், ‘இதெல்லாம் என்ன மாயை?’ என்று தூக்கிப் போட்டுவிட்டு ஏகாந்தத்திலே உட்கார்ந்து விட்டார்கள் என்றும் பார்க்கிறோம்.

ஆக, நம்முடைய நிலையில் திரைக்கு இந்தண்டை இருட்டிலேயே கார்யங்கள் பண்ணிக்கொண்டு போக வேண்டியதுதான் என்றாலும், திரை கிழிந்து விலகுவதற்காகத்தான் செய்வதெல்லாம் என்ற ப்ரக்ஞை மறந்துபோகக் கூடாது. அது கொஞ்சம் கொஞ்சம் கிழிந்து, விலகி ஞான ப்ரகாசம் வர ஆரம்பிக்கும்போது, ‘கார்யம் முடிந்து, பேசாமல் அந்த வெளிச்சத்தில் அப்படியே ஆனந்தமாக உட்கார்ந்திருக்க வேண்டியதே முறை’ என்றுதான் இருக்கணுமே தவிர, ‘நான்தான் உபகாரம் பண்ணுகிறேனாக்கும்! அதை விடாமல் பண்ணிக் கொண்டேதான் இருப்பேன்’ என்று மறுபடி ‘ஈகோ’த்திரையை இழுத்து விட்டுக்கொண்டு இருட்டிலேயே முழுகிப்போகக்கூடாது.

கொஞ்சம் அந்த ஞான ரச்மிகள் இந்தப் பக்கம் வர ஆரம்பிக்கும்போது கார்ய ஆசையைக் கட்டுபபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கவேண்டும். “இத்தனாம் பெரிய லோகத்தில், கோடாநுகோடி ப்ராணிகளும் கர்மாப்படிதான் அநுபவிக்கவேண்டுமென்று இருக்கும்போது, நாம் செய்யக்கூடிய ஸேவை எல்லாம் அல்பத்திலும் அல்பம்தான். இது இல்லாமல் ஒன்றும் நடக்காது என்று அஹம்பாவப்பட்டுக் கொண்டு, நமக்கு அவன் அளிக்கக்கூடிய பரம ச்ரேயஸுக்குத் திரை போட்டுக் கொள்ளாமலிருப்போம். ப்ளான் போட்டுக்கொண்டு நாமாக ஒன்றும் செய்யாமல் சும்மாயிருந்து கொண்டிருப்போம். அது அது எந்த எந்த வழியில் போகிறதோ அந்த அந்த வழியில் போகட்டும். நடக்கிறது நடக்கட்டும். அதுதான் ஈச்வரன் ஸங்கல்பம் என்று விட்டு விட்டு இருப்போம்” என்பதாக விலகிப்போகும் மனோபாவத்தை அப்போது வளர்த்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தள்ளிவிட்டு ஆத்மாவையே பிடித்துக் கொள்ளும் த்யான, விசாராதிகளைத் தீவிரமாக அநுஷ்டிக்க முயலவேண்டும்.


* கீதை VI.5

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கர்த்தாவின் அஹம்பாவம் நீங்கவே நல்லதிலும் கெடுதல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  சும்மாயிருப்பதாலும் லோகோபகாரம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it