கலப்படமற்ற நன்மை எதுவுமில்லை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

[தக்ஷிணாமூர்த்தியின் சிந்தனையாக இதுவரை பேசி வந்தவர்கள், ஒரு சிறிய இடைவெளி கொடுத்துத் தம்முடைய கூற்றாக ஆரம்பிக்கிறார்கள்.]

கார்யமென்று ஏற்பட்டால், அதிலே உசத்தியான கார்யம் எது? கர்மத்தைக் கழித்துக் கொள்வதற்காகவே ஸ்வய நலம் கருதாமல், பரநலம் மட்டுமே கருதிச் செய்கிற கார்யம்தான்; இதுதான் கர்மாவையே போக்கிக்கொள்ள உதவுகிற கர்மயோகம் என்று சொல்கிறார்கள். ஆனால் கலப்படமில்லாமல் இப்படிப் பரநலம் மட்டும் எந்தக் கார்யத்தினாலாவது பண்ணமுடியுமா என்று பார்த்தால் அப்படி எதுவுமே தெரியவில்லை! எந்தக் கார்யமானாலும் அதில் நல்லதோடு கெடுதலும் — பரநலத்தோடு ஹிம்ஸையும் — இருப்பதாகவே தெரிகிறது.

‘லோக க்ஷேமத்திற்காக யுத்தம் பண்ணு’ என்று கர்ம யோகத்தை உபதேசம் செய்து அர்ஜுனனின் பிடரியைப் பிடித்து பகவான் தள்ளி, அந்தப்படியே அவனும் பண்ணினானே? அதனால் கலப்படமேயில்லாமல், — unmixed, unalloyed என்கிறார்களே, அப்படிப்பட்ட — ஸர்வ க்ஷேமமா வந்தது? எத்தனை மஹாவீரர்கள், அபிமன்யு மாதிரி யுவாக்கள், நல்லதெல்லாம் தெரிந்த பீஷ்மாசார்யார் மாதிரியான பெரியவர்கள் சாகும்படியாயிற்று? ரத்த வெள்ளம், கை கால்கள் மீன் மாதிரி (அதில்) மிதந்துகொண்டு, அறுபட்ட சிகை பாசிமாதிரி படர்ந்துகொண்டு — என்று யுத்தவர்ணனையைப் படிக்கும்போதே ரத்தம் சில்லிட்டுப் போகிறது! இதுவா லோகக்ஷேமம் என்று தோன்றுகிறது! யுத்தம் முடிந்ததும் பெரிய லோக க்ஷேமம் ஏற்பட்டுவிட்டதென்று எவரும் பூரித்துப்போய் ஸந்தோஷம் கொண்டாடினதாகத் தெரியவில்லை. ‘புருஷனை, புத்ரனை, பந்துமித்ராளை இழந்து ஸ்த்ரீகளும் அவாளும் இவாளும் கலங்கிக்கொண்டு கதறிக்கொண்டு தர்ப்பணம் பண்ணப் போனார்கள்; வெற்றிபெற்று ராஜாவான தர்மபுத்ரரானால் எல்லாரையும்விடப் பெரிசாக அழுதுகொண்டு, ‘இத்தனை நாசத்திற்கும் நான் காரணமாயிருந்தேனே! (கர்ணனை நினைத்து) ப்ராத்ருஹத்தி செய்துவிட்டேனே!’ என்று நொந்துகொண்டார்; த்ரௌபதியோ அத்தனை பிள்ளைகளையும் பறிகொடுத்துவிட்டு வயிற்றில் அடித்துக்கொண்டாள் என்றுதான் பார்க்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவதார நோக்கம்:கர்ம-பக்தி வழியே ஞானம் அடைவித்தல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  உபகாரப் பணியிலும் அபகாரம்!
Next