Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அவதார நோக்கம்: கர்மா-பக்தி வழியே ஞானம் அடைவித்தல் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

எதையாவது பண்ணி ஹிம்ஸையில் மாட்டிக்கொண்டிருக்கும் ஜனங்களிடம் போய் எதையும் பண்ணாமலிருக்கிற அத்வைதத்தைச் சொல்லவேண்டுமென்று ஸங்கல்பம் செய்து கொண்டார்.

‘அவ்வளவு சட்டென்று எல்லாரும் ஒன்றும் பண்ணாமலிருக்கும் வழிக்கு வரத்தான் மாட்டார்கள். கார்யம் பண்ணுவது தான் கஷ்டம், கார்யம் பண்ணமால் அக்கடாவென்று உட்கார்ந்துகொண்டிருப்பது ஸுலபம் என்று வெளிப் பார்வைக்குத் தோன்றுகிறது. ஆனாலும் நடைமுறையில் தூக்கம் என்று கொஞ்ச நாழி அடித்துப் போடுகிறதுபோக, மற்றபடி கார்யமில்லாமல் உட்கார்ந்திருப்பதுதான் மஹா கஷ்டமாயிருக்கும்! மனஸ் சும்மா இருக்கவிடாது. ஒன்று மாற்றி ஒன்று எதையாவது பண்ணிக் கொண்டிருக்கும்படி அது ஏவிக்கொண்டே இருக்கும்.

“ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்”

-“ஒருபோதும், ஒரு க்ஷணங்கூட எவனு ஒரு கார்யமும் செய்யாதவனாக இருப்பதேயில்லை!” என்று பகவான் ஜனங்களுடைய ‘பல்ஸை’ நன்றாகப் பிடித்துப் பார்த்துத்தான் சொன்னார்.

கையால், காலால் கார்யம் செய்யாமல் சும்மா இருப்பதே கஷ்டம் என்றால், அத்வைதத்தில் ஒன்றும் பண்ணாமலிருக்கவேண்டும் என்னும்போதோ, இதைவிட கஷ்டமாக — ‘கஷ்டமாக’ என்று சொன்னால் போதாது; ‘ஸாத்யமே இல்லாதது’ என்று தோன்றுவதாக — மனஸினாலேயும் எதையும் நினைக்கவே கூடாது என்று இருக்கிறது. இப்படிச் சொல்லியிருப்பதை யார் கேட்பார்கள்?

கேட்பார்களோ, கேட்க மாட்டார்களோ நாம் ஓயாமல் சொல்லிக்கொண்டே லோகம் பூரா போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இப்படி ‘விட மாட்டேன்’ என்று அஹோ ராத்ரம் அதுவே கார்யமாக சொல்லிக் கொண்டேயிருந்தால் தானே ஆயிரத்தில் ஒருத்தராவது கேட்கத்தான் செய்வார்கள். பிற்காலங்களில் வரப்போகிறவர்களுக்காகவும் எழுதி வைத்துவிட்டால், தலைமுறைக்குத் தலைமுறை இப்படி ஆயிரத்தில் ஒருத்தர் அந்தப்படி கேட்டுப் பண்ணாமல் போகமாட்டார்கள். இப்படி ஆயிரத்தில் ஒருத்தர் — அதுகூட ஜாஸ்தியாயிருக்கலாம்; லக்ஷத்தில், பத்து லக்ஷத்தில் ஒருத்தர் — ஒன்றும் பண்ணாமல் சும்மா இருந்துகொண்டு பந்த மோசனம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை) பெற்றுவிட்டால்கூடப் போதும், இத்தனை கோடாநு கோடி ஜீவராசிகளைக் கொண்ட ஸ்ருஷ்டி வீணாகவில்லை, பழமாகப் பழுத்துவிட்டது என்று ஆகிவிடும்.

பாக்கிப் பேர் கர்மாவில், பக்தியில்தான் போகமுடியும். பக்திகூடக் கனிந்த பக்தியாக-லோகத்தில் ஸகலத்திடமும் வைராக்யம், ஈச்வரன் ஒருவனிடம் மட்டும் பரம ப்ரேமை என்றிருக்கும் கனிந்த பக்தியாக — ரொம்பப் பேரிடம் இருக்க முடியாது. அதனால் பரவாயில்லை. இப்போது ஒரே அவைதிகமாகப் போயிருக்கிற மாதிரி இல்லாமல், ஜனங்கள் வேத சாஸ்த்ரப்படி முடிந்த மட்டும் கர்மா பண்ணி, ஒரு பூஜை, ஒரு கோவிலுக்குப் போவது, ஒரு க்ஷேத்ராடனம் என்று செய்ய ஆரம்பித்தாலும்கூடப் போதும்.

இதற்கெல்லாமும் நாம்தான் பூலோகத்தில் பிறந்து ஒரு ஊர் விடாமல் சுற்றிச் செய்யவேண்டியதை எல்லாம் செய்யவேண்டும். வர்ணாச்ரம விபாகப்படி கர்மா நடக்கப் பண்ணவேண்டும். வைதிகமாக உபாஸனா மார்க்கங்களை சுத்தம் செய்துகொடுக்கவேண்டும். க்ஷேத்ரங்களில் நல்ல ஸாந்நித்யமும் ஜனாகர்ஷணமும் இருக்கும்படியாக யந்த்ர ப்ரதிஷ்டைகள் செய்யவேண்டும்.

“ஆனாலும் இதெல்லாம் பண்ணுவதோடு — இதற்கெல்லாம் மேலாக — இத்தனை பண்ணிக்கொண்டிருந்தாலும், ஒன்றும் பண்ணாமலிருப்பதுதான் முடிவான லக்ஷ்யம் என்றும் ஓயாமல் ஞாபகப்படுத்தி, ‘என்றைக்கோ ஒரு நாளிலாவது நாமும் அந்த வழியில் — ஞானமார்க்கத்தில் — போய்ச்சேரத் தான் வேண்டும்’ என்று ஜனங்கள் விரும்பும்படியாகத் தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும். அது ரொம்பப் பேருக்கு ச்ரமஸாத்யமாயிருந்து அவர்கள் அதில் போகாமலே வேண்டுமானாலும் இருக்கட்டும். ‘போகாமலே வேண்டுமானாலும்’ என்ன? அதற்கான பக்வம் அடையாதமட்டும் ‘போகப்படாது’ என்பதுதான் நம்முடைய (அதாவது, ஈச்வரனுடைய) கட்டளையே! முடியாத கார்யத்தில் யத்தனம்பண்ணித் தோற்றுப்போக வேண்டாம், தோற்றது தெரியக்கூடாது என்று ஜயித்தமாதிரி, ‘ஹிபாக்ரிஸி’ பண்ண வேண்டாம் என்றுதானே, எவருக்கும் முடியக்கூடியதாக ‘ப்ரவ்ருத்தி மார்க்கம்’ என்று ஒன்றைப் பிரித்துவைத்து, ‘இதிலேயே போங்கள். போய் இதில் ஸித்தியடைந்து சித்த சுத்தி பெற்ற பிற்பாடுதான் நிவ்ருத்தி மார்க்கம்’ என்று ஆக்ஞை செய்திருக்கிறோம்?

“ஆனால், இப்போது, உடனேயேதான் போகப்படாதே தவிர, சித்தத்தைப் பரிசுத்தி செய்துகொண்டு, அதன் பிறகு, எத்தனையோ வருஷங்கள், ஜன்மங்களுக்கு அப்புறமாவது அதில் (நிவ்ருத்தியில்) போனால்தானே கதிமோக்ஷம்? ஸம்ஸாரச் சுழலிலிருந்து தப்பி சாச்வத ஸெளக்யத்தைப் பெற அதைவிட்டால் வேறே வழி இல்லையே! ஆனபடியால், எதுதான் முடிவான லக்ஷ்யமோ, எதுதான் பரம ஸத்யமோ, எதுதான் நித்யானந்தமோ, எதை உபநிஷத்துக்களில் கோஷித்ததால்தான் வேதங்களுக்கே பெருமையோ அது என்னவென்று இப்போதிலிருந்தே எல்லோரும் காதால் கேட்டுத்தெரிந்து கொள்ளவாவது வேண்டுமோ வேண்டாமோ? அதற்காகத்தான் (தற்போது எடுக்கப் போகிற அவதாரத்தில்) கர்மா என்றும், உபாஸனை என்றும் எத்தனை தான் பண்ணச் சொன்னாலும் அதைவிட அதிகமாக ஞானத்தை — கர்மா, பக்தி முதலான எதுவுமே பண்ணாமலிருக்கிற, ஒண்ணுமே பண்ணாமலிருக்கிற பரம நிலையை — சொல்லிக்கொண்டே போகவேண்டும். அப்போதுதான் (அதைப் பின்பற்றுவதற்கு) அந்த ஆயிரத்தில், லக்ஷத்தில் ஒருவனாவது, தோன்றுவான்.

“அத்தனை கர்மாக்களையும் நன்றாக, விடாமல் பண்ணு : கர்ம ஸ்வநுஷ்டீயதாம்* என்று ஆரம்பித்தாலும் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஈச்வரோபாஸனையாக்கிக் கொள்: தேநேசஸ்ய விதீயதாம் அபசிதி: காம்யமாகப் பண்ணுவதிலிருந்து நிஷ்காம்யமாகப் பண்ணும் யோகத்துக்குப் போ: காம்யே மதிஸ் – த்யஜ்யதாம். இப்படி முன்னேறிக்கொண்டே போய் ஸத்ஸங்கத்திலேயே இருக்க ஆரம்பி: ஸங்க: ஸத்ஸு விதீயதாம். அசட்டு பக்தி, ‘அது வேணும், இது வேணும்’ என்று கேட்கும் பக்தியிலிருந்து முன்னேறி பகவானிடம் நிஜமான பக்தியை உறுதியாக வளர்த்துக்கொள்: பகவதோ பக்திர் த்ருடாதீயதாம் என்றெல்லாம் ஜனங்களுக்குச் சொல்லிக்கொண்டே போனாலும் முடிவான லக்ஷ்யத்தை மறக்கவிடக் கூடாது, அதைச் சொல்லாமல் விடக்கூடாது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்றைக்காவது ஒரு நாளாவது உனக்கு சித்த பரீபாகம் (பரிபக்குவம்) ஏற்படும். அப்போது நிவ்ருத்தி மார்க்க குருவிடம்போய், விடாமல் பாத ஸேவை செய்து உபதேசம் — ப்ரணவோபதேசம் உபநிஷத்தின் ஜீவ-ப்ரஹ்ம அபேத மஹாவாக்ய உபதசேம் — வாங்கிக் கொள்” என்றும் சொல்லவேண்டும்.

ஸத்வித்வான் உபஸ்ருப்யதாம் ப்ரதிதினம் தத்பாதுகா ஸேவ்யதாம் |
ப்ரஹ்மைகாக்ஷரம் – அர்த்யதாம் ச்ருதிசிரோ வாக்யம் ஸமாகர்ண்யதாம் ||

ப்ரஹ்மாஸ்மீதி விபாவ்யதாம்: ‘நானே ப்ரஹ்மம்’ என்ற பாவனையை ஏற்படுத்திக்கொண்டு அப்புறம் பாவனை அநுபவமாகவே நன்றாக முற்றி நீயே பரப்ரஹ்மமாகவே நிற்க வேண்டும்; பரப்ரஹ்மாத்மநா ஸதீயதாம் என்று நம் உபதேசத்தை முடிக்கவேண்டும். அங்கே ஒன்றும் பண்ண வேண்டாம். ஒன்றின் உறவும் வேண்டாம். எல்லாக் கார்யத்திற்கும் முழுக்குப் போட்டுவிட்டு ஏகாந்தத்தில் ஸெளக்யமாக இருக்கவேணடியது; மனஸைக் கழட்டிப் போட்டுவிட்டு ஆத்மாவையே அநுபவித்துக்கொண்டு சும்மாக் கிடக்க வேண்டியது — ஏகாந்தே ஸுகமாஸ்யதாம்…பூர்ணாத்மா ஸுஸமீக்ஷ்யதாம்.

‘ஏதாவது பண்ணிக்கொண்டேயிருக்கும் இயல்புடையவர்களான கர்ம ஸங்கிகளை முதலில் தப்புப் பண்ணாமல் நல்லது பண்ணும்படியாகக் கர்மாநுஷ்டானம், ஈச்வரபூஜை என்று ஈடுபடுத்த வேண்டியதுதான். ஆனாலும் நல்லது, நல்லது என்று நினைத்துக்கொண்டிருக்கிற இந்த எல்லாவற்றிலுங்கூடக் கெடுதலாக ஏதாவது கலந்து கலந்து வந்து கொண்டேதானிருக்கும். கார்யம் என்றால் முழுக்க நல்லதாக இருக்கவே முடியாது. எதற்காவது ஹிம்ஸை, யாருக்காவது கஷ்டம், எதுவாவது நஷ்டம் என்று ஏற்படுத்தாமல் ஒரு கார்யமும் இல்லை. எந்த ஸத்கார்யமானாலும்கூட இப்படித்தான். எத்தனைதான் நல்லதை நினைத்துப் பரோபகாரம், பரமோபகாரம் பண்ணுவதாகப் பெருமைப் பட்டுக்கொண்டு செய்வதிலும் நல்லதற்கில்லாத அம்சங்களும் கொஞ்சமாவது கலந்து கலந்துதான் வரும்’…….


* இதுவும் தொடர்ந்து இப்பாராவில் வரும் எல்லா மேற்கோள்களும் ஸ்ரீ சங்கரரின் ‘ஸோபாந பஞ்சக’த்தில் வருவனவாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மாயா ஸஹிதனாயினும் ஈசன் ஞானியே!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கலப்படமற்ற நன்மை எதுவுமில்லை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it