பாளையங்கோட்டை வெங்கடாஜலபதி
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்களுக்குப் பெயர் போனது. எனவே பாளையங்கோட்டையில் வேங்கடவன் எழுந்தருளியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமலை போன்று தனித்து நிற்கவில்லை. உற்சவ மூர்த்தியாக ஸ்ரீநிவாசப் பெருமாள் அழகுக்கு அழகுசேர்க்கும் வகையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸேவை ஸாத்தியிருக்கிறார். உற்சவ ஸ்ரீநிவாச மூர்த்திகளில் இவரை அழகில் மிகவும் சிறந்தவராகவே கூறலாம்.
ஸந்நிதியில் உற்சவர்களாக ஸ்ரீராமர், ஸீதை, லக்ஷ்மணர், அனுமன் எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் உற்சவ மூர்த்தியும் மூலவர் ஸந்நிதியிலேயே இருக்கின்றதை நாம் பார்க்கலாம். இந்த தேசிகர் மிகவும் எழிலாக திருமேணி கொண்டுள்ளார். வைணவக் கோயில்களில் அதிகமாக காட்சி தராத நவக்ரஹங்கள் இந்தக் கோயிலில் தனி ஸந்நிதியில் எழுந்தருளி இருக்கின்றனர். மதுரைக் கூடலழகர் ஸந்நிதியே நமக்கு நினைவுக்கு வருகிறது. சிறிய ஆனால் புகழ் பெற்ற எழில் ததும்பும் ஆலயம் இது.
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவாருள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தினுள்ளானென்று ஒர்
இது ஒர் பெய்கை ஆழ்வாரின் அனுபவம்.