முடிகொண்டான் ப்ரஸன்ன வேங்கடேசர்
மயிலாடுதுறையிலிருந்து 25 A.e. தொலைவில் திருவாரூர் மார்கத்தில் பூந்தோட்டத்தை அடுத்து அமைந்துள்ள ஊரே இது. இங்குப் புகழ் பெற்ற கோதண்டராமர் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு எதிர்புறம் அமைந்துள்ள அக்ரஹாரத்தில் ஸ்ரீப்ரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது. இரு கோவில்களுக்கும் ஒரே பட்டாச்சாரியார் தான். மிகச் சிறய கோவிலாக உள்ள
வேங்கடாஜலபதி ஆலயம் 18 கிராமம் வாத்திமா பரம்பரையினரால் நிர்மாணம் செய்யப்பட்டு பேணப்பட்டு வருகிறது. அந்த 18 கிராமங்களில் இசைவிற்பன்னர்கள் தோன்றிய முடிகோன்டானும், செம்மங்குடியும், ப்ரவசன நிபுணர் தோற்றத்தால் ஏற்றம் அடைந்த கிராமம் சேங்காலிபுரம்.
ப்ரஸன்ன வேங்கடேசர் கோவிலில், முன் மண்டபத்தில் க்ஷீராப்திநாதன் சித்ரவடிவில் உள்ளார். ஆலயக்கிணரும் அங்கேயே உள்ளது. ப்ராகாரத்தில் விநாயகர், நாகர், விஷ்வக்சேனர் தனி ஸந்நிதிகளில் உள்ளனர். இந்தக் கோவில் வேங்கடாஜலபதி கோவில் என்று அழைக்கப்பட்டாலும், இங்கு ப்ரதான ஸந்நிதியில் மூலவராக விளங்குபவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாளே. அவர் மிகவும் அவகாக வீற்றிருந்த திருக்கோலத்தில் மஹாலக்ஷ்மியை மடியில் தாங்கிக் காட்சி அளிக்கிறார். அவருக்கு எதிரில் ஸந்நிதி கருடன் எழுந்தருளி இருக்கிறார்.
உற்சவராக ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இவரே வேங்கடாஜலபதி என்று அழைக்கப்படுகிறார். திருமலைப்போலவே இங்கும் தனித் தாயார் ஸந்நிதி இல்லை. பசுமை நிற வர்ணமுடைய அனுமானின் வண்ணச் சிற்பம் உள்ளது. இக்கோவில் சுமார் 200 ஆண்டுகட்கு முன்பு நிர்மாணிக்கப்பட்டது என்று தெரிகிறது. இக்கோவிலில் வீற்றிருந்த கோலமும், நின்ற கோலமும் கொண்டு திருமாள் எழுந்தருளி இருப்பதும், கோதண்டராமர் கோவிலில் கிடந்த வண்ணராக அரங்கநாதர் ஸேவை ஸாதிப்பதும் இவ்வூரில் மூவகை நிலைகளும் இடம் பெற்ற விசேஷத்தைக் குறிக்கின்றன.
உலகுய்ய மால் உயர் வேங்கடத்தை
அலர்மகளை முன்னிட்டவன் தன் மலரடியே
உன் சரணாய் நெஞ்சமே உள.