பெருங்குளம் (திருக்குளத்தை) ஸ்ரீநிவாசர்
திருநெல்வேலியில் அமைந்துள்ள பாண்டிய நாட்டு நவ திருப்பதியில் இந்தத் தலம் மிகவும் முக்கியமானதாகும். திருநெல்வேலி திருச்சந்தூர் சாலையில் தென்திருப்பேரை என்ற திவ்யதேசத்தை அடுத்து 11Ae தூரத்தில் அமைந்துள்ள பதியே இது. இந்த க்ஷேத்திரம் தடாக வனம், பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாண்ட புராணத்தில் இந்த ஸ்தல வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வேதசாரன் என்ற அந்தணருக்குப் பிறந்து, மானிடரை மணக்காமல் பகவானையே த்யானித்து மணந்து கொண்ட கமலாவதி தவம் செய்த தலம் என்பதால் பாலிகை வனம் என்ற பெயரை அடைந்ததாம். இந்த அந்தணரின் மனைவியை ஒர் அரக்கன் கவர்ந்து செல்ல, அவனை வென்று அவன் மீது நாட்டியம் ஆடினாராம் இந்தத் திவ்ய தேசத்துப் பெருமாள். இதனால் இவர் சோரநாதன் என்ற பெயரையும் பெற்றார்.
மூலவராகப் ஸ்ரீநிவாசப் பெருமான் நெடிது நின்ற திருக்கோலத்தில் திவ்ய ஸேவை. அவருடைய வக்ஷ்ஸ்தலத்தில் தாயார் குடிகொண்டிருக்கிறார். தனித் தாயார் ஸன்னிதி (இங்கும் திருவேங்கடம் போல்) இல்லை. உற்சவர் மாயக்கூத்தன். சேரநாதன் என்ற பெயரில் இரு தேவிகளிடம் காட்சி தருகிறார். தேவியரின் திருநாமங்கள் அலர்மேல் மங்கை, குளந்தைவல்லி என்பன. உத்சவ மூர்த்தியாக கருடாழ்வாரும் பெருமாள் அருகில் எழுந்தருளி இருப்பது இங்கு தனி விசேஷம். ஆழ்வார்களும், விஷ்வக்சேனரும் தனிச் சன்னித் கொண்டு உள்ளனர்.
வேதசார அந்தணரின் புத்திரி கமலாவதி தவம் செய்த வாசத்தடாகம் கோவில் நுழைவாயிலின் அருகே உள்ளது. இது திருவேங்கடமுடையானின் உறைவிடம் ஆதலால் சனி க்ஷேத்திரமாகக் கருதப்படுகிறது. திருமலை போலவே இக்கோவிலில் விமானமும் ஆனந்த நிலைய விமானமும் என்றே வழங்கப்படுகிறது. வேதசார அந்தணரே ப்ருஹஸ்பதி என்று கருதப்படுவதால் இது தேவகுருவுக்கு அருள் புரிந்த இடமாகப் போற்றப்படுகிறது. நம்மாழ்வார் ஒரே பாசுரத்தால் இப்பதியை மங்களாசாஸனம் செய்துள்ளனர். திரு ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்கள் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
இக்கோயில் ஸந்நிதியை ஒட்டியே அண்மையில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மற்றோரு கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீநிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி ஸஹிதம் எழிலாகக் காட்சி தருகிறார். இந்தத் திருப்பதி தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது. இக்கோயில் ஸேவார்த்திகள் வசதிக்காகக் காலை 7 முதல் பகல் 12 வரையிலும், பின்னர் மாலை 5 முதல் இரவு 7.30 வரையிலும் திறந்திருக்கும் என அறிகிறோம்.
மாடக் கொடி மதிள் தென் குளத்தை வண்குடபால் நின்ற மாயக் கூத்தன்
என்று இந்த திவ்ய தேசத்தையும், உற்சவ மூர்த்தியான மாயக் கூத்தனையும் நம்மாழ்வார் பாடித் தான் மகிழ்வதோடு நம்மையும் மகிழ வைக்கின்றார்.