அருளுரை பகவானை காட்டவே பகுத்தறிவு இப்படிப்பட்ட பிரமாணங்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டே போவதில் ந்யாயம் விட்ட இடத்தில் வைசேஷிகம் பிடித்துக் கொண்டது

அருளுரை
பகவானை காட்டவே பகுத்தறிவு

இப்படிப்பட்ட பிரமாணங்களைக் கொண்டு ஆராய்ந்து கொண்டே போவதில் ந்யாயம் விட்ட இடத்தில் வைசேஷிகம் பிடித்துக் கொண்டது. வைசேஷிக ஸ்தாபகரான ' கணாதர் ' என்ற மஹரிஷி, எல்லாம் கடைசியில் பரமாணுக்களால் ஆனது என்று கொண்டு போய் நிறுத்துகிறார். அந்தப் பரமனுக்களை ஈச்வரன் பல தினுசில் ஒன்று சேர்த்தே ஜகத்தை உண்டாக்கியிருக்கிறான் என்கிறார்.

ஜகத்து, ஜீவன் எல்லாம் ஈஸ்வரனுக்கு வேறேயாக த்வைத மாகத்தான் நியாய - வைசேஷிகங்களில் பேசப்படுகின்றன.

சைதன்யமான ஜீவனின் சிற்றறிவு எங்கேயிருந்து வந்தது, ஜடமான அணு எங்கேயிருந்து வந்தது என்று கேட்டுக்கொண்டே மேலே மேலே போகிற போதுதான் கடைசியில் எல்லாம் பரமாத்மாவின் பல தோற்றங்கள், வேஷங்கள்தான் என்று அத்வைதமாக முடிகிறது. அந்த அத்வைதத்தில் முடிவதற்கும் நியாய சாஸ்திரம் இடைநிலையில் வேண்டியிருக்கிறது.

பகுத்தறிவுக்கு உரிய இடத்தைக் கொடுப்பதே நம்முடைய ' நியாயம் அல்லது தர்க்கம் ' . அது அறிவு ஆராய்ச்சி நிரம்பப்பண்ணுகிறது. அதற்காக rationalism என்பது materialism , atheism மாதிரியான லோகாயத வாதமாக, நிரீச்வர வாதமாக, நாஸ்திகமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை என்றும் காட்டுகிறது. அறிவு ஆராய்ச்சியின் முலமே, இத்தனை கிரமத்தோடு ஒரு லோகம் ஏற்பட்டு அதில் இத்தனை ஜீவஜந்துக்களின் வாழ்க்கை ஒன்றுக்கொன்று இசைந்து உண்டாகியிருக்கிறதென்றால் இதையெல்லாம் செய்கிற ஒர் ஈஸ்வரன் இருக்கத்தான் வேண்டும் என்கிறது. நம் பகுத்தறிவு போக முடியாத இடமும் உண்டு என்பதை நியாய சாஸ்திரம் ஒப்புக் கொள்வதால்தான் நம்மால் நிருபித்துப் பார்த்துக் கொள்ள முடியாத விஷயங்களைக்கூட வேதம் சொன்னால் ஏற்கத்தான் வேண்டும் என்கிறது.

அதாவது நியாய சாஸ்திரத்தில் யுக்தி என்பது குயுக்தியாக (ஆசார்யாள் வாக்குப்படி, ' தர்க்கம் ' என்பது ' துஸ்தர்க ' மாக) ஆகிவிடாமல் ஸத்ய தத்வத்தை காட்டிக் கொடுக்கவே பிரயோஜனப்படுகிறது.

அறிவால் நல்ல முறையில் ஆராய்ச்சி பண்ணுவது அந்த அறிவையே சுத்தப்படுத்தும். புத்தித் தெளிவு, intellectual clarity என்பதைக் கொடுக்கும். அப்படிப்பட்ட நிலையிலே புத்திக்கு அதீதமான ஸத்யங்களும் ஸ்புரிப்பதற்கு ( flash ஆவதற்கு ) இடம் ஏற்படும்.

புத்தி ஆராய்ச்சியே செய்யாமல் பகவானையும் சாஸ்திரங்களையும் பூர்ணமாக நம்பிக் கொண்டு இருந்து விட்டால் அது ரொம்பவும் சிலாக்கியம்தான். ஆனால் இப்படிக் பூர்ணமாக நம்பிக் கொண்டு அதிலேயே ஈடுபட்டு ஆத்மாவை கடந்தேற்றிக் கொள்ள நம்மால் முடிகிறதா. அப்படி முடியாத நிலையில் தெய்வ பரமான சிந்தனையோ, ஆத்மாவை பற்றிய நினைப்போ, இல்லாமல் அதே சமயத்தில் எந்த விதமான அறிவு விசாரணையும் செய்யாமல் வெறுமே தின்று கொண்டும், துங்கிக் கொண்டும் சோம்பேறியாக இருப்பதைவிட புத்தியைக்கொண்டு ஆராய்ந்து, ' ஈஸ்வரன் இல்லை ; நாஸ்திகம்தான் சரியானது ' என்ற முடிவுக்கு வந்தால்கூட தேவலை என்பேன்.

ஸத்ய தத்வத்தை தெரிந்து கொள்ள ஒரு முயற்ச்சியும் பண்ணாத சோம்பேறியைவிட, தன் மூளையைச் செலவழித்து ஏதோ பரிசிரமப்பட்டு ஒருத்தன் நாஸ்திகமான முடிவுக்கு வந்திருக்கிறான் என்றால், இந்தச் சோம்பேறியைவிட அந்த நாஸ்திகன் உயர்ந்தவன் என்பேன். அந்த நாஸ்திகன் இன்னும் ஆராய்ந்து கொண்டே போய் புத்தித் தௌவு ( clarity ) பெற்றானானால் அப்புறம் நாஸ்திகத்தை விட்டுவிடவும் வழி பிறக்கும். ஆனால் இந்த சோம்பேறிக்குத்தான் ஒரு வழியும் இல்லை.

இதனால் தான் ' சார்வாகம் ' என்கிற நாஸ்திக ஸித்தாந்தத்தையும் ஒரு மதமாக ஆதியில் வைத்தார்கள். சாரு + வாகம் என்பதே சார்வாகம். அதாவது கேட்பதற்கு நன்றாக இருக்கிற வாக்கு என்று அர்த்தம். ' சாமி, பூதம் என்றெல்லாம் அலட்டிக் கொண்டு விரதம், தபஸ், இந்திரிய நிக்ரஹம், மனோ நிக்ரஹம் என்று அவஸ்தைப்பட வேண்டாம். மனம் போனபடி, இந்திரியம் போகிற வழியில் ஆனந்தமாயிருப்போம் !' என்று கேட்பதற்கு ரம்யமாகச் சொல்வதால் சார்வாகம் என்று அதற்குப் பேர்.

ஆனால் அப்படி நடக்கும்போது ஆனந்தத்தேடு துக்கமும்தானே வருகிறது ? அதுதானே அதிகம் வருகிறது ? இந்தத் துக்க நிவிருத்திக்குத்தான் மெடீரியலிஸமாக இல்லாத மற்ற மதங்கள் வழி சொல்கின்றன.