மதம் எதற்கு? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மதம் எதற்கு? ஒரு மதகுரு சொல்லுவதை நாம் ஏன் கேட்கப் போகிறோம்? நமக்கு கஷ்டம் போவதற்காகவும் குறை நீங்குவதற்காகவும் போகிறோம். குறையில்லாவிட்டால் வேண்டியதில்லை. குறை அதிகமானால் அதிகமாகக் கோயிலுக்குப் போகிறோம்; அதிகமாகப் பெரியவர்களை தரிசிக்கிறோம்; உபதேசம் கேட்கிறோம். குறையில்லாவிட்டால் உபதேசம் வேண்டாம். நமக்குள்ள ஸந்தேஹங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்ளை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம் உபதேசம் பெறுகிறோம்; மஹாக்ஷேத்திரங்களுக்குப் போகிறோம்; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம். அப்படி செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது. முழுவதும் சாந்தி அடைந்தவர்கள் வெட்டினாலும் குத்தினாலும் பூஷித்தாலும் தூஷித்தாலும் ஆனந்தமாக இருக்கிறார்கள். புஸ்தகம் வாசித்தல், குரு தரிசனம் செய்தல் முதலியவற்றால் மற்றவர்களுக்கும் தாற்காலிகமாவது இந்த சாந்தி ஏற்படுகிறது. எல்லா ஜாதிகளிலும் மஹான்கள் கிளம்புகிறார்கள்; மனதில் சாந்தி அடைகிறார்கள். இந்த சாந்திக்குரிய மார்க்கத்தைத்தான் “மதம்” என்பது. இதன் இன்னொரு பேர் “தர்மம்” என்று சொல்வார்கள். தர்மமானது சிரேயஸுக்கு ஸாதனம். அதுதான் மதம்.

தர்மம் என்பது பின்பு லோகத்திலேயே க்ஷேமமாக இருக்கவேண்டி அநுஷ்டிப்பது. பின்பு இது வேண்டும் என்ற ஆசையில்லா விட்டால், லோகத்தில் க்ஷேமத்தை எதிர்பார்க்காமல் அநுஷ்டித்தால் அதுவே மோக்ஷத்தைத் தரும். அதுதான் மதம். மதத்தை “தர்மம்” என்றே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. வாழ்க்கை பூர்ணத்வம் அடைவதற்கான அறநெறிகள் என்னவோ அவைதான் “தர்மம்” என்பது. அப்படிப்பட்ட தர்மம் என்ன என்று சொல்கிற நூல்கள் நமக்கும் இருக்கின்றன. நாம்தான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தர்மத்துக்கு ஆதாரமான விஷயங்களைச் சொல்வதால், இந்த நூல்களுக்கு தர்ம பிரமாணங்கள் என்று பெயர். பிரமாணம் என்றால் இதுதான் ‘அதாரிடி’யானது, சரியானது, ஸத்தியமானது என்று நிலைநாட்டிச் சொல்வது. இப்படி, ஹிந்து மதம் என்று தற்போது வழங்குகிறதும், ஸநாதனமாக வேத காலத்திலிருந்து வந்திருப்பதுமான தர்மம் என்ன என்பதை எடுத்துச் சொல்கிற, ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் பதினான்கு இருக்கின்றன.

தர்மம் அல்லது மதம் என்பதன் கொள்கை என்ன, அநுஷ்டானம் என்ன என்று ஸத்தியமாகத் தெரிவிக்கிறது தான் தர்ம ப்ரமாண புஸ்தகங்கள். அவை இன்னவென்று நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது:

அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|

புராணம் த‌ர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி)

புராண-ந்யாய-மீமாம்ஸா-தர்ம‍-சாஸ்த்ர‍-அங்க மிச்ரிதா:|

வேதா: ஸ்தானானீ வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச || (யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி)

‘சதுர்தச’ என்று இந்த இரண்டு ச்லோகங்களிலும் முடிவாக வருகிறது, ‘சதுர்தச’ என்றால் பதினான்கு. நமக்கு பிரமாண நூல்கள் பதினான்கு என்று இவற்றிலிருந்து தெரிகிறது. அறிவு இந்தப் பதினான்குக்குள் அடங்கியிருக்கிறது.

‘வித்’ என்றால் ‘அறிவது’ என்று அர்த்தம். நாம் ஸத்யமான தத்வத்தை அறியும்படியாகப் பண்ணும் அறிவு நூலே வித்யா. இப்படிப் பதிநாலு இருப்பதுதான் இந்த இரண்டு ச்லோகங்களில் “வித்யா ஹ்யேதாச் சதுர்தச” என்றும், “வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச” என்பதாகவும் சொல்லப்பட்டிருகிறது. அறிவு நூலுக்கு அறிவு நூல்; அற நூலுக்கு அற நூல். அதனால் தான் இந்தப் பதிநாலும் வித்யா ஸ்தானம், தர்ம ஸ்தானம் என்ற இரண்டு பேரையும் பெற்றிருக்கின்றன: “ஸ்தானானி வித்யானாம் தர்மஸ்ய ச சதுர்தச”. ‘வித்’ – ‘அறிவது’ – என்றால், இங்கே கண்ட கண்ட விஷயத்தைத் தெரிந்து கொள்வது என்று அர்த்தமில்லை. ஸத்யத்தை அறிகிற ஞானமே ‘வித்யா’வில் வரும் ‘வித்’; ‘வித்வான்’ என்பதில் வரும் ‘வித்’, Wit, Wisdom என்பதெல்லாம் இந்த ரூட்டிலிருந்து வந்தவைதான். ‘வித்’ தாதுவிலிருந்தே ‘வேதம்’ என்பதும் வந்திருக்கிறது. வேதம் என்றால் நேர் அர்த்தம் Book of Knowledge என்று சொல்லலாம். அறிவைத் தருவதால் இந்தப் பதினான்குக்கும் வித்யாஸ்தானங்கள் என்று பெயர். “அறிவிற்கு இருப்பிடம்” என்பது அதன் அர்த்தம். அறத்துக்கு இருப்பிடமானதால் தர்ம ஸ்தானமாக இருப்பதே இப்படி அறிவுக்கும் இடமாயுள்ளது.