வேறு வேறாவது எப்படி? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

“அஹ‌ம் ப்ரஹ்மாஸ்மி”, “சிவோஹம்” என்று சொல்லுகிறீரே? நீரே பிரம்மம், நீரே சிவம் என்றால் எப்படி? வேறுமாதிரி தானே தெரிகிறது? – என்று மற்ற ஸித்தாந்திகள் அத்வைதியைக் கேட்கிறார்கள். எல்லாம் பிரம்மம் என்றாலும் தனியாக ஜீவன்கள் மாதிரி தெரியத்தானே செய்கிறது? இதற்கு அத்வைதி பதில் சொல்லியாக வேண்டும். அத்வைத சாஸ்திரங்களில் இரண்டு விதமாக விடை சொல்லியிருக்கிறது.

ஸ்வாமி நாமாவதெப்படி யென்றால் அது இரண்டு தினுசு. ஒன்று: ஸூரியன் நன்றாகப் பிரகாசமாக இருக்கும் பொழுது தண்ணீரில் கையைத் தோய்த்துக் கீழே தெளித்தால் ஆயிரம் துளிகள் விழுகின்றன. அந்த ஆயிரம் துளிகளிலும் ஆயிரம் ஸூரியர்கள் தெரிகிறார்கள். ஒரே ஸூரியன் அப்படி ஆயிரமாகத் தோன்றுகிறான். எந்தப் பதார்த்தத்தில் தெரிகிறானோ அதற்குத் தக்கபடி அவனுடைய அளவும் இருக்கின்றது. இது போலவேதான் பிரம்மமாகிற ஒரே சைதன்யம் (அறிவு) பலவிதமான மனிதர்கள், பிராணி வர்க்கங்களில் பலவாறான அறிவுகளாகப் பிரதிபலித்து வேறு வேறு என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. வாஸ்தவத்தில் ஒரே ஸூரியன் மாதிரி ஒரே சைதன்யம்தான். இந்த வாதத்தை “பிம்பப்ரதி பிம்ப வாதம்” என்று சொல்லுவார்கள்.

அந்தத் துளிகளையெல்லாம் அழித்து விட்டால் அப்பொழுது பிம்பம் ஒன்றும் இராது. நம்முடைய மனஸில்தான் பேதமாகத் தோன்றுகிற பிரதிபிம்பங்கள் உண்டாகின்றன. இவை போய்விடும். ஆனால் ஸூரியன் இருக்கும். பவர் ஹவுஸில் யந்திரம் ஓடினால் எலெக்ட்ரிஸிடி உண்டாகிறது; அதனால் வெளிச்சம் உண்டாகிறது. யந்திரம் நின்றால் எலெக்ட்ரிஸிடி நின்றுவிடும். வெளிச்சமும் இராது. ஓட்டந்தான் மனஸ். அந்த ஓட்டத்தை நிறுத்திவிட்டால் மனஸ் இல்லாமற் போய்விடும். அப்பொழுது பிரதி பிம்பமும் இல்லை. பிரதிபிம்ப ஸூரியன் மாதிரி துளித்துளி அறிவோடு இருக்கிற நாம், அசல் ஸூரியனாக அறிவுமயமாகி விடலாம்.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் பிம்பமும் பிரதிபிம்பமும் என்கிறபோது, அந்தத் துளி வற்றிப்போனால் பிம்பம் மறைகிறதே தவிர ஸூரியனாகிவிட்டதா என்ற கேள்வி வருகிறது. இதற்குப் பதிலாகத்தான் இன்னொரு விதமான வாதத்தையும் அத்வைத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. இது “அவச்சின்னவாதம்” என்பது. கிணற்றில் நிறைய ஜலம் இருக்கிறது. ஒரு செம்பை முழுகவைத்து இழுத்துக் கொண்டே போகிறோம். செம்புக்குள் இருக்கும் ஜலமும் கிணற்றுக்குள் இருக்கும் ஜலமும் ஒன்றேதான். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் செம்பைக் கிணற்று ஜலத்துக்குள் இழுத்துக் கொண்டு போகும் பொழுது, அதற்குள் இருக்கும் ஜலம் தனியாக வருகிறது போல் இருக்கிறது.

ஒரே ஆகாசம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆகாசம் எல்லாவற்றிற்கும் இடம் கொடுக்கிறது. எங்கும் பரவி இருக்கிற இந்த ஆகாசத்திற்கு ‘மஹாகாசம்’ என்று பெயர். திறந்த வெளியில் காலியாகப் பல குடங்களை வைத்தால் அவற்றுக்குள்ளும் ஆகாசம்தான் இருக்கிறது. குடத்திற்குள் இருக்கிற ஆகாசத்திற்கு ‘கடாகாசம்’ என்று பெயர். கடம் என்றால் குடம். கடம் உடைந்து போனால் கடாகாசமும் போய்விடுமா? போகாது. கடாகாசமாகத் தனியாகத் தெரிந்தது மஹாகாசத்தில் கலந்துவிடும். கடம் உடையாத பொழுது அந்த ஆகாசம் தனியாகச் சின்னதாக இருக்கிறது போல நமக்குத் தோன்றுகிறது. உடைந்து விட்டால் கடாகாசம் மஹாகாசமே ஆகிவிடுகிறது. கடம் இருக்கிற அளவு எதுவோ அதற்கு தகுந்தபடி இப்படிப்பட்ட பேதங்கள் ஏற்படுகின்றன. அதே மாதிரி பரமாத்மா அந்தந்த மனஸுக்குத் தக்கபடி வித்தியாஸமாகத் தோன்றுகிறார். செம்பில் இருக்கிற ஜலம் பெரிய செம்பாயிருந்தால் பெரியதாகவும் சின்னச் செம்பாயிருந்தால் சின்னதாகவும் தோன்றுகிறது. செம்பை உடைத்து விட்டால் அந்த பேதங்களெல்லாம் போய்விடுகின்றன. அதைப்போல மனஸ் போய்விட்டால் பேதபுத்தியும் போய்விடுகிறது. இப்படிச் சொல்லுவதுதான் அவச்சின்ன வாதம் என்பது. பரமாத்மாவே ஜீவாத்மா மாதிரி தோன்றுவதை இப்படி இரண்டு விதங்களில் விளக்கியிருக்கிறது.

துளிக்குள் ஸூரியன் தெரிந்ததால் அங்கே நிஜ ஸூரியனுக்கு வேறாக இன்னொரு ஸூரியன் உண்டாகி விட்டான் என்று அர்த்தமில்லை. மஹாகாசத்துக்கு வேறாக இன்னொரு ஆகாசத்தையா குடத்துக்குள் யாராவது பிடித்துக் கொண்டு விட்டார்கள்? கிணற்று ஜலம் தவிர வேறு ஜலம் அந்தக் கிணற்றுக்குள்ளேயே முழுகின குடத்துக்குள் இருந்த‌தா என்ன? ஆக பிரம்மத்துக்கு வேறாக ஒன்று இருக்கவே இல்லை. பரமாத்மாவுக்கு வேறானவனில்லை ஜீவாத்மா. பரமாத்மாவே தான் வேறு மாதிரியான ஜீவாத்மாவாக நம்முடைய அஞ்ஞானம் மறைக்கிற வரையில் தோன்றுகிறான். ஸூரியனின் பிரதிபிம்பம் மாதிரி, அல்லது சின்ன அளவைக்கு உட்பட்டது போலத் தோன்றுகிற மஹாகாசம், கிணற்று ஜலம் இவை மாதிரி நமக்குள்ளும் ஏக சைதன்யம் தவிர வேறு எதுவுமே இல்லை. பிரம்மம், சிவம் என்பதெல்லம் அதைத்தான். வேறு வேறு போலத் தெரிந்தாலும், இப்படி இருக்கிற எல்லாமும் அந்த ஒன்றே என்ற ஞாபகத்தை உண்டாக்கிக் கொள்வதற்காகத்தான், “அஹம் ப்ரஹ்மாஸ்மி”, “சிவோஹம்” என்று சொல்லுவது.