சாகைகளின் பிரிவினையும் வழக்கில் உள்ளவையும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஆதிகாலத்திலிருந்தவர்கள் மஹாசக்தர்களாக, நிரம்ப யோக சக்தியும் புத்திவன்மையும் உடையவர்களாக இருந்ததால் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட வேத சாகைகளை அப்பியாஸம் பண்ணி வந்தார்கள். அநேகம் மஹிரிஷிகளுக்கு தாமாகவே வேதங்கள் ஸ்புரித்தன. மற்றவர்கள் குருவிடமிருந்து அஸாதாரணமாக மேதா சக்தியினால் அபரிதமான வேத சாகைகளை கற்றுக்கொண்டார்கள். அதற்கப்புறம் இவர்களுக்காகவே வேத மந்திரங்கள் ஸ்புரித்ததும் உண்டு. குருவிடமிருந்து கற்றதற்கு மேலாகப் புதுப் புது வித்யைகளைப் பிரகாசப்படுத்தினார்கள். வேதம் முழுக்க ஸமுத்ரம் என்றால், அதைப் பூரணமாக அறிந்த யாரும் இருக்கவில்லைதான். ஆனாலும், இப்படி அந்த ஸமுத்ரத்தில் நிறைய பாகங்களைப் பற்றித் தெரிந்தவர்களாக ஆதிகாலத்தில் இருந்தார்கள்.

பிற்காலங்களில் மநுஷ்யர்களின் தெய்விகமான யோக சக்திகள் குறைந்துகொண்டே வந்து, கலி ஆரம்பத்தில் ரொம்ப க்ஷீணமடைந்து விட்டது. ஜனங்களின் ஆயுஸ், ஆரோக்யம், புத்திபலம் எல்லாமே ரொம்ப குறையலாயிற்று. புராணங்களில் இப்படிச் சொல்லியிருப்பதைத்தான், மேலே சொன்ன நச்சினார்க்கினியர் உரையிலும், ‘சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர்’ என்று சொல்லியிருக்கிறது. இதெல்லாம் பரமாத்மாவின் லீலைதான். ஏன் இப்படிக் குறைய வேண்டும் என்றால் சொல்லத் தெரியவில்லை. “வேதங்களை நிரம்பக் கற்று யக்ஞாதிகளும் முடிவிலே ஆத்ம விசாரமும் பண்ணிக் கொண்டு வந்தவர்கள், தலைமுறை தலைமுறையாக நன்றாக விருத்தியாகிக் கொண்டுதானே வரவேண்டும்? அப்படியில்லாமல் ஏன் க்ஷீணமடைய வேண்டும்?” என்று கேட்டால் [பதில்] சொல்லத் தெரியவில்லை. பரமாத்மா ஒரே மாதிரியில்லாமல் நூதன நூதனமாக, விசித்ரமாக விளையாடிக்கொண்டு இந்த லோக நாடகத்தை நடத்துவதால் இப்படியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஆகக்கூடி evolution, evolution என்று (உயிரினம் மேலே மேலே அபிவிருத்தியாகிற கிரமத்திலேயே ஸ்ருஷ்டி போய்க்கொண்டிருக்கிறது என்று) டார்வின் முதலானவர்கள் சொன்னாலும், ஆத்மிகமாகவும், புத்திப் பிரகாசம், நல்ல குணம், யோகசக்தி முதலியவற்றை வைத்தும் பார்க்கிற போது evolution-கு நேர்மாறாக, கீழே கீழே டிக்ரி போவதாகத்தான் இருந்திருக்கிறது. இதிலே ஒரு freezing point (அப்படியே குளிர்ந்து, உறைந்து போய்விடுகிற நிலை) மாதிரி கலியுக ஆரம்பம் வந்தது.

கிருதயுகத்திலிருந்து மநுஷ்யர்களின் சக்தி குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அந்த யுகத்தில் அஸ்தி (எலும்பு) இருக்கும்வரை ஒருத்தருக்கு ஆயுஸ் இருக்கும். ரத்தம், மாம்ஸம் எல்லாம் வற்றிப் போய்விட்டாலும்கூட, எலும்புக் கூடு உளுத்து விழுகிற வரையில் உயிரோடு இருப்பார்கள். அவர்களுக்கு நிரம்பவும் தியான சக்தி உண்டு. அவர்களை ‘அஸ்தி கத ப்ராணர்கள்’ என்று சொல்லியிருக்கிறது. த்ரேதாயுகக்காரர்கள் ‘மாம்ஸ கத ப்ராணர்’கள். அதாவது ரத்தம் சுண்டி விட்டால்கூட மாமிஸம் அழுகுகிறவரை உயிரோடு இருப்பார்கள். இவர்களுக்கு யக்ஞாதி கர்மாக்களைப் பண்ணும் சக்தி விசேஷமாக உண்டு. த்வாபரயுக ஜனங்களுக்கு ‘ருதிர கத ப்ராணர்’ என்று பெயர். ‘ருதிரம்’ என்றால் ரத்தம். தமிழில் ‘உதிரம்’ என்றாகியிருப்பது இதுதான். இவர்கள் ரத்தம் வற்றுகிறவரை ஜீவனோடு இருப்பார்கள். பூஜை பண்ணுவதில் இவர்களுக்கு சக்தி அதிகம். அப்புறம், இப்போது கலியுகத்தில் இருக்கிற நாம் ‘அன்ன கத ப்ராணர்’கள். சோறு உள்ளவரைதான் நமக்கு உயிர் உடம்பில் தரித்திருக்கும். நமக்கு த்யான சக்தி, கர்மாநுஷ்டான சக்தி, பூஜை பண்ணும் சக்தி எதுவும் இல்லை. “கிருஷ்ணா, ராமா” என்று நாமாவைச் சொல்கிற சக்திதான் இருக்கிறது. நாமாவே காப்பாற்றிவிடும் என்பது வாஸ்தவந்தான். ஆனாலும் அதற்காக பிரம்ம ஸ்ருஷ்டியிலிருந்து வந்திருக்கிற வேதங்களை அழிந்து போகும்படிப் பண்ணலாமா? அது பெரிய நஷ்டமல்லவா? அந்த நஷ்டத்துக்கு ஹேது கிருஷ்ண பகவானின் தேஹோத்ஸர்ஜத்தோடு [தேக வியோகத்தோடு] பெரிதாக ஆரம்பித்தது. கிருஷ்ண பரமாத்மா சரீரத்தை பரித்யாகம் பண்ணிவிட்டு, லோகத்தைவிட்டுப் புறப்பட்டவுடன் ஒரு பெரிய இருட்டு வந்து சூழ்ந்து கொண்டுவிட்டது. கிருஷ்ண பரமாத்மா பேரிலும் இருட்டு (கிருஷ்ண-கருப்பு); அவர் பிறந்ததும் இருட்டு; காராக்ருஹத்திலே நட்ட நடுநிசியிலே அவர் பிறந்தார். ஆனால் அவரே லோகத்துக்கெல்லாம் ஞான ஜோதியாக இருந்தார்! கருணை ஜோதியாக, அருட்பெருஞ் ஜோதியாகவும் இருந்தார்! அவர் மறைந்ததும் ஞானத்துக்குப் பெரிய ஹானி உண்டாகி பெரிய இருள் சூழ்ந்துவிட்டது. கெட்ட சக்திகளுக்கு ஒரு ரூபமாக இருக்கப்பட்ட கலிபுருஷனுக்கு அதிகாரம் ஏற்பட்டுவிட்டது. இதெல்லாம் எதற்காகவோ பரமாத்மாவே விளையாடிப் பார்த்துக் கொள்கிற லீலைதான்.

ஒரே ஜோதியாக வந்தார்; அப்புறம் ஒரே இருட்டு வந்து விடுமோ என்று பயப்படும்படியான நிலையை உண்டு பண்ணினார். இதற்கப்புறம் ஒரு கருணை உண்டாகி, “லோகம் இப்படி ஒரேடியாக வீணாகி விடவேண்டாம்; கலிக்குக் கொஞ்சம் மாற்று மருந்து – கலியின் விஷத்தை முறிக்கிற மருந்து – கொடுத்து ரக்ஷிக்கலாம்” என்று நினைத்தார். வேதந்தான் அந்த மருந்து. கலி புருஷன் அதைக் கபளீகரம் பண்ணிவிடாமல் காப்பாற்றிவிட்டால் போதும், லோகம் பிழைத்துக் கொள்ளும்; இருட்டிலே அது ஒரு விளக்காக வழிகாட்டிக் கொண்டிருக்கும் என்று பரம கருணையோடு எண்ணினார். பழைய மாதிரி வேதம் ஜோதியாகப் பிரகாசிப்பது கலியில் ஸாத்யமில்லை. கலிபுருஷனுக்கு அதிகாரம் கொடுத்தபின் அப்படிப் பண்ணுவதற்கில்லை. ஆனாலும், அது குறைந்த அளவுக்காவது எவ்வளவு பிரகாசிக்க வேண்டுமோ அந்த அளவு இருக்கும்படிப் பண்ணவேண்டும் என்று நினைத்தார். தம்முடைய அம்சாவதாரமான வேத வியாஸ மஹரிஷி மூலமாக இந்தப் பெரிய உபகாரத்தைச் செய்தார்.

அப்போது வேத வியாஸருக்கு அந்தப் பேர் இருக்கவில்லை. அவருடைய [இயற்] பெயரும் கிருஷ்ணர் என்பதுதான். தீவில் (த்வீபத்தில்) பிறந்தவராதலால் த்வைபாயனர் என்பார்கள். கிருஷ்ண த்வைபாயனர், பாதராயணர் என்ற பேர்கள் அவருக்கு இருந்தன. ‘பதரி’ என்னும் இலந்தை மரத்தடியில் தபஸ் பண்ணியதால் பாதராயணர் என்றும் அவரைச் சொல்வார்கள்.

பல மஹரிஷிகளின் மூலமாக லோகத்துக்கு வந்திருந்த 1180 வேத சாகைகளும் கிருஷ்ண த்வைபாயனருக்குத் தெரியும். அக்காலத்தில் அதெல்லாம் கலந்து ஒரே பிரவாஹமாகத்தான் இருந்தது. அதில் நிறைய கிரஹிக்கும் சக்தி பூர்விகர்களுக்கு இருந்தது. அவதார புருஷரானதால் த்வாபரக் கடைசியில் பிறந்த போதிலும் கிருஷ்ண த்வைபாயனருக்கோ அத்தனையையும் க்ரஹிக்கும் சக்தி இருந்தது. சக்தி குறைந்த நமக்காக அவர் அவற்றை நாலு வேதங்களாகவும், அதில் ஒவ்வொன்றிலும் இன்னின்ன சாகை என்றும் பிரித்தார். ஒரு dam போட்டுப் பெரிய பிரவாஹத்திலிருந்து பல வாய்க்கால் வெட்டி விடுகிற மாதிரி நாலு வேதங்கள், அவற்றின் சாகைகள் என்று விபாகம் (பகுப்பு) செய்தார். அது அவருடைய யோக மகிமை, தபஸின் வலிமை. இவற்றில் பிரார்த்தனா ரூபமான ரிக்வேத சாகைகள், யக்ஞ விதிகளின் ரூபமான யஜுஸ் சாகைகள், கான ரூபமான ஸாமவேத சாகைகள், ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்ருக்களை நாசம் பண்ணுவதற்குமான மந்திரங்களையும் யக்ஞங்களையும் முக்யமாகக் கொண்ட அதர்வ சாகைகள் எல்லாம் இருந்தன.

தேவர்கள் ரொம்பவும் ஸந்தோஷப்படுத்துவதற்காக ஸாமவேதத்தில் அதிகப்படியான சாகைகள் இருந்தன. 1180ல் ஆயிரம் சாகைகள் ஸாமவேதத்திலேயே இருந்தனவாம்! ரிக் வேதத்தில் 21 சாகைகள் இருந்தன. யஜுர் வேதத்தில் 109 இருந்தன. (சுக்ல யஜுஸில் 15; கிருஷ்ணயஜுஸில் 94) அதர்வ வேதத்தில் 50 சாகைகள் இருந்தன.

1180 என்பது விஷ்ணுபுராணத்தில் வருவதாக ஒரு பண்டிதர் எடுத்துக் காட்டிய கணக்காகும். இதற்குக் கொஞ்சம் வித்யாஸமாக இன்னொரு கணக்கும் இருக்கிறது. அதன்படி ரிக் வேதத்தில் 21 சாகைகள்; யஜுஸில் 101; ஸாமத்தில் 1000; அதர்வத்தில் 11; மொத்தம் 1133 சாகைகள்.

இனிமேல் வரப்போகும் கலிகால ஜனங்கள் அல்ப சக்தர்களாகவே இருப்பார்களாதலால் இந்த ஆயிரத்து நூற்றுச் சொச்சத்தில் ஒரு சாகையை அத்யயனமும் அநுஷ்டானமும் பண்ணினால் போதும் என்று கிருஷ்ண த்வைபாயனர் கருதினர். பகவத் ஸங்கல்பமே அவருக்கு இந்த எண்ணத்தைத் தந்தது. அதனால் ஒருத்தரே பல வேதங்களைக் கற்றுக்கொள்கிற பழைய முறைபோய், ரிக், யஜுஸ், ஸாம, அதர்வங்களில் ஏதாவது ஒன்றிலே ஒரு சாகையைப் படித்து மனப்பாடம் பண்ணி, அதன்படி செய்தால் போதும் என்ற புது ஏற்பாட்டைச் செய்தார். தம் சிஷ்யர்கள் நாலு பேரில் ஒவ்வொருவரிடம் ஒரு வேதம் என்று பிரித்துக் கொடுத்து, ‘இதன் சாகைகளை நீங்கள் பிரசாரம் செய்யுங்கள்’ என்று ஆக்ஞை பண்ணினார். ரிக்வேத சாகைகளைப் பைலர் என்ற சிஷ்யரிடமும், இப்படியே யஜுஸை வைசம்பாயனரிடமும், ஸாமத்தை ஜைமினியிடமும், அதர்வத்தை ஸுமந்து என்பவரிடமும் கொடுத்துப் பிரசாரம் செய்ய வைத்தார்.

இப்படி ஒரு ஜீவனுக்கு இது போதும் என்று வேதத்தை நாலாகவும், அந்த நாலை 1180 சாகைகளாகவும் பிரித்துக் கொடுத்ததாலேயே, கிருஷ்ண த்வைபாயனருக்கு ‘வேத வ்யாஸர்’ என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. வ்யாஸம் என்றால் கட்டுரை, essay,composition என்று அர்த்தம். ஒரு விஷயத்தை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு விளக்குவதால் அதற்கு வியாஸம் என்று பெயர் வந்தது. பல விஷயங்கள் இருக்கிறபோது, ஒவ்வொரு பொருள் பற்றியும் ( subject wise-ஆக) விபாகம் பண்ணுவது (பிரித்து classify பண்ணுவது) தான் வியாஸம். ஏகப்பட்டதாக இருந்து வந்த வேதசாகைகளைத் தீர்மானமாக இது போதும் என்று பிரித்து விபாகம் செய்ததாலேயே, க்ருஷ்ண த்வைபாயனருக்கு வேத வ்யாஸர் என்ற பெயர் வந்துவிட்டது.

ஒரு சாகை போதும் என்று அவர் ஏற்பாடு பண்ணினதால், அதற்குமேல் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தடை போட்டுவிட்டதாக அர்த்தமில்லை. ‘மினிமம்’ ஒரு சாகையாவது பயில வேண்டும் என்று வைத்தார். வியாஸர் வேதங்களை விபாகம் செய்து இப்போது ஐயாயிரத்துச் சொச்சம் வருஷமாகிறது. ஓரளவுக்குச் சரித்திர பூர்வமாகவே இதை நிர்ணயம் பண்ணியிருக்கிறது. சாஸ்திரங்களால் தீர்மானமாகத் தெரிகிற இந்தக் காலக் கணக்கை ஒப்புக் கொள்ளாமல் சரித்திரக்காரர்கள் மஹாபாரத காலம் கி.மு.1500 என்று சொல்லிவந்தார்கள். இப்போது அது இன்னம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தியும் போயிருக்கும் என்று சொல்லி, 5000 வருஷம் என்ற கணக்கு சரியாக இருக்கும் என்று அபிப்ராயம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வியாஸர் விபாகம் பண்ணிய பிறகும் ரொம்ப காலம் ஒருவரே ஒரு வேதத்தில் ஒரு சாகையை அத்யயனம் செய்தபின், இன்னொரு வேதத்தின் இன்னொரு சாகை, அப்புறம் மூன்றாவதாகப் பின்னுமொரு வேதத்திலே ஒரு சாகை என்றெல்லாம் அத்யயனம் பண்ணி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும் வடக்கத்தியர்களின் பேர்களுக்குப் பின்னால் சதுர்வேதி, த்ரிவேதி, த்விவேதி என்றெல்லாம் வருவதைப் பார்க்கிறோம். த்ரிவேதி ஒருத்தர் கவர்னராகக் கூட இருந்தார். ‘துபே’, ‘தவே’ என்பதெல்லாம் ‘த்விவேதி’ என்பதன் திரிபுகள்தான். நாலு வேதங்களிலும் ஒவ்வொரு சாகை அத்யயனம் பண்ணினவர்களின் பரம்பரையில் வந்தவர்களே ‘சதுர்வேதி’ என்கிறவர்கள். இவர்களை பெங்காலில் சட்டர்ஜி என்பார்கள். மூன்று வேதங்களில் அத்யயனம் பண்ணியவர்கள் த்ரிவேதிகள்; இரண்டில் பண்ணினவர்கள் த்விவேதிகள். இப்போது ஒன்றைக்கூடப் பண்ணினவர்கள் ரொம்பவும் அபூர்வமாகி விட்ட போதிலும் குடிப் பெயரிலாவது இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட வேதங்களை அத்யயனம் பண்ணின பூர்விகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி கிடைக்கிறது. ஞானஸம்பந்தர், தம்மை “நான்மறை ஞானஸம்பந்தன்” என்று சொல்லிக் கொள்கிறார். நாலு வேதங்களையும் அத்யயனம் பண்ணினவர் அவர். அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணினவராதலால், அவருக்கு ஸகல வேதங்களும் உடனே தெரிந்திருக்கும்.

இந்த ஐயாயிரத்துச் சொச்சம் வருஷத்தில், அநேக சாகைகள் வழக்கொழிந்து போய்விட்டன. கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே வந்து, 1180 என்பது சமீபகாலமாக ஆறேழு சாகைகளில் நிற்கிற பரம துர்ப்பாக்ய ஸ்திதியில் இருக்கிறோம்! (‘சாகை’ என்று, அதில் முதலில் வரும் ஸம்ஹிதையைச் சொல்கிறேன்.) ரிக்வேதத்தின் 21 சாகைகளில் இப்போது இருக்கிறது ஒன்றுதான். சாகல சாகை என்று அதற்குப் பேர். ஐதரேய உபநிஷத் வருகிற சாகையாதலால் ஐதரேய சாகை என்றும் சொல்வதுண்டு. சுக்ல யஜுஸின் 15 சாகைகளில் இப்போது இரண்டுதான் இருக்கின்றன. காண்வ சாகை என்பது மஹாராஷ்டிரத்தில் இருக்கிறது. மாத்யந்தின சாகைதான் வட இந்தியாவில் நிறைய இருக்கிறது. கிருஷ்ண யஜுஸின் 94 சாகைகளில் தைத்ரீயம்தான் அதிகம் உள்ளது. தக்ஷிணத்தில் மிகவும் அநுஷ்டானத்தில் இருப்பது இதுதான். ஸஹஸ்ர சாகை கொண்ட ஸாமத்தில் 997-ஐப் பறிகொடுத்து விட்டோம்! தமிழ்நாட்டில் தலவகார சாகை எனப்படும் ஜைமினீய சாகை ஒன்றுதான் எஞ்சியிருக்கிறது. மஹாராஷ்டிரத்தில் மட்டும் கொஞ்சம் ராணாயணீய சாகை என்பது இருக்கிறது. மேற்கே குஜராத் முதலான இடங்களிலும், கேரளத்திலும் கௌதும சாகை என்பது இருக்கிறது. அதர்வத்தின் ஐம்பது சாகைகளில் ஒன்றுகூட இல்லையோ என்று பயந்து கொண்டிருந்தோம். சல்லடை போட்டுச் சலித்ததில் சௌனக சாகையை நன்றாக அத்யயனம் பண்ணின ஒருவர், குஜராத்தில் ஸினோர் என்ற இடத்திலிருக்கிறார் என்று தெரிந்தது. அவரிடமிருந்து இந்த அதர்வ சாகையை அத்யயனம் பண்ண நம் ஊர்ப் பசங்களை அனுப்பிற்று.

ரிக்வேதத்தை சேர்ந்த பிராம்மணங்களில் ஐதரேய ப்ராம்மணமும் கௌஷீதகீ ப்ராம்மணமும் (சாங்காயன ப்ராம்மணம் என்றும் இதற்குப் பெயர் உண்டு) நமக்கு வந்திருக்கின்றன. இவற்றைச் சேர்ந்த ஆரண்யகங்களில் வரும் ‘ஐதரேய உபநிஷத்’தும் ‘கௌஷீதகீ உபநிஷத்’தும் இன்றைக்கும் வழக்கில் உள்ளன.

சுக்ல யஜுஸைச் சேரந்த பிராம்மணங்களில் ‘சதபத ப்ராம்மணம்’ ஒன்றே அநுஷ்டானத்தில் இருப்பது. இது மாத்யாந்தின சாகை, காண்வ சாகை இரண்டிலும் (கொஞ்சங் கொஞ்சம் வித்யாஸங்களோடு) பொதுவாக இருப்பது. வேதங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கமாக இருக்கிற பெரிய புஸ்தகம் இது. ஆரண்யகமாகவும், ஆரண்யகம் பூராவுமே உபநிஷத்தாகவும் இருக்கப்பட்ட ‘பிருஹதாரண்யகம்’ ஒன்றே இன்றைக்கு சுக்ல யஜுஸில் நமக்குக் கிடைத்திருப்பது. ‘ஈசாவாஸ்ய உபநிஷத்’ இந்த வேதத்தின் ஸம்ஹிதா பாகத்திலேயே வருகிறது என்று முன்னேயே சொன்னேன்.

கிருஷ்ண யஜுஸில் இப்போது வழக்கில் இருக்கிற பிராம்மணம் ‘தைத்திரீயம்’தான். இந்த வேதத்தின் ஆரண்யகங்களிலும் ‘தைத்திரீயம்’ என்பது இருக்கிறது. அதில்தான் தைத்திரீய உபநிஷத்தும், மஹா நாராயண உபநிஷத்தும் இருக்கின்றன. நிறையப் பிரயோஜனப்படுகிற ஸூக்தங்களும் மந்திரங்களும் மஹா நாராயண உபநிஷத்தில் இருப்பவையே. ‘மைத்ராயணி ஆரண்யக’மும் அதே பேரைக் கொண்ட உபநிஷத்தும் இதே கிருஷ்ண யஜுஸில் கிடைத்திருக்கின்றன. கட சாகை (ஸம்ஹிதை), அதன் பிராம்மணம், ஆரண்யகம் எதுவும் இப்போது அநுஷ்டானத்தில் இல்லாத போதிலும் அதன் கடைசியில் வருகிற கடோபநிஷத் மட்டும் வழக்கில் இருக்கிறதென்று முந்தியே சொன்னேன்.

இதேபோல ச்வேதாச்வதர உபநிஷத்தும், கிருஷ்ண யஜுஸைச் சேர்ந்த ச்வேதாச்வதர ஸம்ஹிதையின் முடிவாக வருவது என்றாலும் இந்த உபநிஷத்தைத் தவிர அந்த சாகையின் மற்ற பாகம் எதுவும் கிடைக்கவில்லை.

ஸாம சாகா ஸம்ஹிதைகளில் 997 நஷ்டமாகி விட்ட போதிலும், அதன் பிராம்மணங்களில் மட்டும் ஏழெட்டுத் தப்பிப் பிழைத்திருக்கின்றன. தண்ட்ய ப்ராம்மணம், ஆர்ஷேய ப்ராம்மணம், தேவதாத்யாய ப்ராம்மணம், ஸம்ஹிதோபநிஷத் ப்ராம்மணம், வம்ச ப்ராம்மணம், [ஷட்விம்ச ப்ராம்மணம், ஸாமவிதான ப்ராம்மணம், சாந்தோக்ய ப்ராம்மணம், ஜைமிநீய ப்ராம்மணம்] என்றிப்படிப் பல இருக்கின்றன. இந்த வேதத்தைச் சேர்ந்த ஆரண்யகங்களில் தலவகார ஆரண்யகம் என்பதை தலவகார ப்ராம்மணம் என்றும் சொல்வதுண்டு. இது ஜைமிநீய ப்ராம்மணத்தில் வருவதுதான். இதில் கடைசியில் உள்ளதுதான் கேனோபநிஷத். அதனால் அதற்குத் ‘தலவகார உபநிஷத்’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது. சாந்தோக்ய பிராம்மணத்திலிருந்து ‘சாந்தோக்ய உபநிஷத்’ கிடைத்திருக்கிறது.

அதர்வ வேதத்தில் எல்லாம் போய் விட்டாலும், அதிலிருந்து ‘பிரச்னம்’, ”முண்டகம்’, ‘மாண்டூக்யம்’ என்ற மூன்று உபநிஷத்துக்கள் கிடைத்திருப்பதாக முன்பே சொன்னேன். ‘நிருஸிம்ம தாபினீ உபநிஷத்’தும் அதர்வத்தைச் சேர்ந்ததுதான். இந்த வேதத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஒரே பிராம்மணத்துக்கு ‘கோபத ப்ராம்மணம்’ என்று பெயர்.

1180-சாகைகளில் இப்படி ஏழெட்டு மட்டும் மிஞ்சியிருப்பதுங்கூட அடுத்த தலைமுறைக்கு நசித்துப் போய் விடும்படியாகப் பண்ணிவிட்டால், அது மஹாபாபமாகும். ஒரு பரிஹாரமும் பிராயச்சித்தமும் இல்லாத பாபமாகும்.

திராவிட தேசம் என்று சொல்லப்படுகிற தக்ஷிணதேசத்தில், கேரளத்தில், வேத வித்யையானது நம்பூத்ரிகளுக்குள் இன்னமும் அணையாமல் இருந்து வருவதைச் சொன்னேன்.

அடுத்தபடியாக, ஆந்திரத்தில் வேதாப்பியாஸம் சமீபம் வரையில் நன்றாக நடந்திருக்கிறது. இதற்குப் பெரிய ஆதரவாக இருந்தது விஜயவாடாவில் நவராத்திரி ஸமயத்தில நடத்திவந்த வருஷாந்தரப் பரீக்ஷைகளும், வித்வத்ஸதஸும் ஆகும். பரீக்ஷையில் தேறினவர்களுக்கும், ஸதஸில் கலந்து கொண்ட பண்டிதர்களுக்கும், ரொக்கமாகப் பணம் கொடுத்து ஸம்மானிப்பார்கள். அதோடுகூட ஒரு ஸர்ட்டிஃபிகேட் (நற்சான்றுப் பத்திரம்) கொடுப்பார்கள். இதிலே விசேஷம் என்ன என்றால்: இந்தப் பரீக்ஷைக்கும், ஸதஸுக்கும் வெளியூர்களிலிருந்து, தூர தூரப் பிரதேசங்களிலிருந்துகூடப் பிரம்மச்சாரிகளும், க்ருஹஸ்த வைதிகர்களும் வருவார்கள். பிற்பாடு இவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்புகிறபோது வழியிலுள்ள கிருஹஸ்தர்களின் வீடுகளில் ஸர்ட்டிஃபிகேட்டைக் காட்டினால் அந்த கிருஹஸ்தர்கள் இவர்களுக்கு நிரம்ப மரியாதை செய்வார்கள். இவர்களை அதிதிகளாக உபசரித்து ஸத்காரம் செய்வதோடு, தாங்களும் திரவிய ஸம்மானம் செய்வார்கள். இதே மாதிரி, ஆந்திர தேசத்தில் ஒரு கல்யாணம் பண்ணும்போது, அதில் வேத பண்டிதர்களுக்கென்று ஒரு பங்கு தக்ஷிணையாக ஒதுக்குகிற வழக்கமும் இருந்தது. இப்பேர்ப்பட்ட cash incentive-கள் (ரொக்கத் தொகை தருகிற ஊக்க உற்சாகம்) காரணமாக வேதாப்யாஸம் ஆந்திர தேசத்தில் செழிப்பாக இருந்தது.

பிராம்மணன் பணம் பணம் என்று பறக்கக்கூடாதுதான். அப்படிப் பறந்தால் அவன் பிராம்மணனே இல்லை. ஆனாலும், வேதம் தவிர மற்ற எந்தத் தொழில் போனாலும் பர்ஸ் நிறைய பணம் வரும். வேதத்துக்கு (வைதிக வாழ்க்கைக்கு)ப் போனால் அன்ன வஸ்திரத்துக்குக்கூட வழியில்லாமல் அவஸ்தைப்பட வேண்டியதுதான் என்கிற சூழ்நிலை போய், வைதிகனும் ஓரளவு ஸுபிக்ஷமாக, நிர்விசாரமாக ஜீவயாத்திரை நடத்த முடியும் என்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்ததால் தான் தெலுங்கு தேசத்தில் ஸமீப காலம் வரையில் வேதாப்பியாஸம் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்திருக்கிறது.

தேசம் பூராவுக்கும் திட்டம் போட்டு, குறிப்பாகத் தமிழ் நாட்டில் இப்படி அவசியமான திரவிய சகாயத்துக்கு வழிகள் செய்துதான் இப்போது வேத பாடசாலைகளை உயிர்ப்பிக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் நாட்டில் கடைசியாக நாயகர், மஹாராஷ்டிரர் முதலிய ஹிந்து ராஜாக்கள் ஆண்டவரையிலும், அதற்கப்புறம் இங்குள்ள சுதேச ஸம்ஸ்தானங்களிலும் வைதிகர்களுக்கு நிரம்ப ராஜமானியங்கள் அளிக்கப்பட்டு வந்தன. ஒரு வேதசாகை முழுதையும் அத்யயனம் செய்கிறவனுக்கு ‘ச்ரோத்ரியன்’ என்று பெயர். ‘ச்ருதி’ என்றால் வேதம் அல்லவா? அதிலிருந்து வந்தது ‘ச்ரோத்ரியன்’. இப்படிப்பட்ட ச்ரோத்ரியனுக்கு பூதானம், சின்னதாக ஒரு கிராமத்தையேகூட தானம் பண்ணுவது, அநேக தமிழ் ராஜாக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. அந்தக் கிராமத்துக்கு வரி கிடையாது. ‘இறையிலி’ என்று இதைத்தான் பழைய சாஸனங்களில் சொல்லியிருக்கிறது. ‘பிரம்மதேசம்’ என்று இப்போது சொல்லப்படுகிறவை பிராம்மணனுக்குத் தானமாக (‘தேய’மாக) தரப்பட்ட ஊர்கள்தான். ‘பிரம்மதேயம்’ என்றே சாஸனத்தில் போட்டிருக்கும். “சதுர்வேதி மங்கலம்” என்ற பெயரிலுள்ள ஊர்கள், நான்மறையாளருக்கு ராஜமான்யமாகத் தரப்பட்டவையே. வேதாத்யயனம் பண்ணி இன்னொருத்தனுக்குச் சொல்லிக் கொடுக்கிறவர்களுக்கு ஸம்பாத்தியமுள்ள வேறு வேலை இல்லாதபடியால், அவர்களால் கிஸ்தி கட்ட முடியாது என்று உணர்ந்தே வரி விலக்கு அளித்திருந்தார்கள். நவாப் ராஜ்யத்திலும், கம்பெனி ஆட்சியிலும், பிரிட்டிஷ் ராஜ்யத்திலுங்கூட இந்த வரிவிலக்கு நீடித்தது. வேதத்தை வளர்க்க இவர்களாக ஏற்பாடு பண்ணாவிட்டாலும், ஏற்கெனவே ச்ரோத்ரிய கிராமங்களுக்கு இருந்த வரிவிலக்கை மட்டும் ரத்து பண்ணாமலேயிருந்தார்கள். அப்படியும் பிராம்மணர்கள் தாங்களே நிலங்களை விற்று விட்டு, ஸர்ட்டிஃபிகேட்டுகளாக மாற்றிக் கொண்டு கிராமத்தையும் விட்டு டவுன்களுக்கு வந்து, இங்கிலீஷ் படிப்பு, இங்கிலீஷ் ஸர்க்காரில் வேலை என்று போய், வேத ஸம்பந்தத்தை அடியோடு கத்திரித்துக் கொண்ட துர்க்கதி உண்டாகி விட்டது.

லௌகிகத்தில் [உலகியலில்] பிரவிருத்தி [தொழிலீடுபாடு] வைத்துக் கொள்ளாமல் ஆத்ம லாபகரமான காரியங்களையே தனக்காகவும் சமூகத்துக்காகவும் பாரம்பரியமாகச் செய்து வருவது என்ற உன்னதமான ஏற்பாடு நம் ஒரு தேசத்தில்தான் இந்த லோகம் பூராவிலுமே யுக யுகாந்தரமாக இருந்து வந்திருக்கின்றது. இதன் பெருமையை பிராம்மணர்களே உணரத் தவறி, வேதத்தைவிட்டு வெள்ளைக்கார நாகரிகத்துக்குப் பாய்ந்தபின் மற்றவர்களும் இந்த ஜாதியின் அவசியத்தை மறந்து போன ஸ்திதி ஏற்பட்டுவிட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பிராம்மணரல்லாதார் விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிராம்மணர் கடமை
Next