உபதேச ஸாரம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அந்த நிலைக்குப் போக உபநிஷத்துக்களில் சொன்ன உபதேச ஸாரம் என்ன?

Time (காலம்), Space (இடம்) என்ற இரண்டு concept (கருத்து)களுக்குள்ளேயே நடைமுறைப் பிரபஞ்சம் முழுக்க மாட்டிக் கொண்டிருக்கிறது என்று ‘மாடர்ன் ஸயன்ஸ்’ சொல்கிறது. இந்த இரண்டிலிருந்து விடுபட்டால்தான் பிரபஞ்சத்தின் மூலமான ஸத்யத்தைப் பிடிக்க முடியும் என்று உபநிஷத் சொல்கிறது. நாம் இருக்கிற இடமே ‘ஹொரைஸன்’ என்ற கதை சொன்னேனே – இதிலே Space அடிப்பட்டுப் போய் விடுகிறது. இப்படியே கால தத்வத்துக்கும் அதீதமாக நிற்கவேண்டும்.

இப்படி சொல்லி விட்டால் போதுமா? இது நம்மால் முடியுமா?

முடியும் என்று நம்பிக்கை தருவதற்கு, வியவஹாரத்திலேயே (நடைமுறையிலேயே) திருஷ்டாந்தம் இருக்கிறது. பொழுது போகவில்லை என்பதற்காக, எங்கேயோ காங்கோவில் நடக்கிற சண்டை ஸமாசாரத்தை விழுந்து விழுந்து படிக்கிறோம். ஆனால் இன்னம் கிட்டே பாகிஸ்தானில், காஷ்மீரில் சண்டை வந்தால் காங்கோவை விட்டு விடுகிறோம். பேப்பர்காரனே அந்த (காங்கோ) ந்யூஸை ஒரு மூலைக்குத் தள்ளிவிட்டு இந்த (பாகிஸ்தான்) ஸமாசாரத்தை பெரிசாகப் போட ஆரம்பிக்கிறான். இப்போது இந்த ந்யூஸ்தான் நமக்கு முக்கியமாயிருக்கிறது. அப்புறம் இன்னம் கிட்டே, ‘திருத்தணி தமிழ் நாட்டோடு சேரவேண்டும்’ என்கிற மாதிரி ஒரு விஷயத்தில் தமிழனுக்கும் தெலுங்கனுக்கும் சண்டை, அடி உதை என்றால் பாகிஸ்தான் ஸமாசாரங்கூட எங்கேயோ ஓடிவிடுகிறது. இந்த boundary-‍ச் சண்டைதான் நம் கவனத்தைப் பெறுகிறது. இப்போது பக்கத்துத் தெருவிலே ஏதோ கலாட்டா என்றால் தமிழ‍ன் – தெலுங்கன் சண்டையிலும் ‘இன்ட்ரஸ்ட்’ போய் விடுகிறது. (ந்யூஸ்) பேப்பரைத் தூக்கிப் போட்டு விட்டு தெருச் சண்டையைப் பார்க்கப் போய்விடுகிறோம். போன இடத்தில் யாராவது வந்து, நம் வீட்டில் பசங்கள் சண்டை போட்டுக் கொள்கின்றன; அல்லது பத்தினிக்கும் அம்மாவுக்கும் (மாமியார் – மாட்டுப்பெண்) “யுத்தம்” என்று சொன்னால், தெருச் சண்டையையும் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறோம்!

ஸர்வதேச ரீதியில் காங்கோ சண்டைக்கு ரொம்பவும் முக்கியமிருக்கலாம். அதிலிருந்து பாகிஸ்தான் சண்டை, திருத்தணி சண்டை, தெருச் சண்டை, வீட்டுச் சண்டை என்று ஒன்றிலிருந்து ஒன்று சின்னதாகி, கடைசியில் அல்ப விஷயத்தில் வந்து நிற்கலாம். ஆனால் நம் ஈடுபாடோ inverse ratio-‍வில் [எதிரிடை விகிதத்தில்] ஒன்றை விட ஒன்று ஜாஸ்தியாகிக் கொண்டே போயிருக்கிறது! இது ஏன்?

ஏனென்றால், Space-‍ல் காங்கோ எங்கேயோ இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொன்றாகக் கிட்டே வந்து வீடு இங்கேயே இருக்கிறது. நம்மிடத்திலேயே இருக்கிற ஹொரைஸனுக்கு வருகிற கதைதான்.

இப்போது கொஞ்சம் பார்வையை உள்ளே திருப்பிக் கொண்டு விட்டால் போதும். உள்ளுக்குள்ளே, நம்முள்ளேயே இந்திரியங்கள் போடும் சண்டையை, கலாட்டாவைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், மற்ற எல்லாமே – வீட்டுச் சண்டை உள்பட எல்லா ஸமாசாரமுமே – எங்கேயோ காங்கோவில் நடக்கிற மாதிரி ஓடிப் போகும். இந்த உள்-சண்டையை (‘அகப் போராட்டம்’ என்று பத்திரிகைக்காரர்கள் சொல்கிறார்களே, அதை) தீர்த்துக் கொண்டு சாந்தமாக இருக்கவே முயற்சி பண்ணுவோம். அந்த சாந்தியில் இடம், வெளி, Space என்று எதுவும் இல்லாமல் போய்விடும். தூங்குகிற போது இடம் தெரிந்ததோ? அப்படி ஆகும். தூக்கத்தில் அறிவும் உணர்ச்சியும் இல்லை; Space-‍ம் இல்லை. ஞானத்தில் அறிவுமயமாக, அனுபவமயமாக இருந்துகொண்டே, Space இல்லாமல் இருக்கலாம்.

Time-காலமும் இப்ப‌டித்தான். பத்து வருஷத்துக்கு முன் அப்பா செத்துப் போனபோது அத்தனை அழுகை அழுதோமே? இப்போது ஏன் அந்த அழுகை வரவில்லை? செத்துப் போனவுடன் அழுத அளவுக்கு மறுநாள்கூட அழவில்லையே. அது ஏன்? போன வருஷம் பிரமோஷன் கிடைத்தது, லாட்டரி சீட்டு விழுந்தது என்று ஆனந்தக்கூத்து ஆடினோமே? அந்தமாதிரி இப்போது ஏன் ஆடத் தோன்றவில்லை?

இடத்திலே கிட்ட இருப்பதிடமே அதிகப் பற்று இருக்கிற மாதிரி, காலத்திலே நமக்கு இந்த ஸம்பவங்கள் கிட்டே இருக்க இருக்க, அவற்றால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.

நமக்கு வெளியிலே பார்வையை விட்டு, இடத்தையும் காலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இப்படியாக ஒரு அளவில் இடத்தின் பாதிப்பும், காலத்தின் பாதிப்பும் நம்மைவிட்டு – நம் முயற்சி இல்லாமலே – போகிறதைப் பார்க்கிறபோது, நாம் முயற்சி பண்ணி உள்ளே பார்வையை திருப்பிக் கொண்டால் இந்த இரண்டு தத்வங்களிலிருந்து விடுபட்டு விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. நம் முயற்சி இல்லாமல் தூக்கத்தில் காலமும் இடத்தோடுகூடத் தெரியாமல் போனாலும், அப்போது ‘இப்படி இருக்கிறோம்’ என்ற ஞானமில்லை. ஞானம் பெற்று, ‘தூங்காமல் தூங்குவது’ என்று தாயுமானவர் முதலானவர்கள் சொன்ன ஸ்திதிக்குப் போனால், பூர்ண பிரக்ஞையுடனேயே இந்த Time-Space-லிருந்து விடுபட்டுப் பேரானந்தமாயிருக்கலாம். அப்போது – வீட்டுச் சண்டை மட்டுமில்லை, நம்மையே கத்தியால் குத்தினால் கூட அது காங்கோ ஸமாசாரம் மாதிரித்தான் எங்கேயோ இருக்கும். நமக்கு ரொம்பவும் நெருக்கமான பதி, பத்தினி, குழந்தை கண்ணுக்கு முன்னே செத்துப் போனால்கூட அது பத்து வருஷத்துக்கு முன் அப்பா செத்துப்போன மாதிரிதான் இருக்கும்.

த்வைத‍-அத்வைத‍ வாதங்கள் இருக்கட்டும். இப்போது அவை நமக்கு வேண்டியதில்லை. நமக்கு வேண்டியது என்ன?

சாந்தி.

நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம். சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. “சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது, போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்கமாட்டோமா என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைத‍மும் இல்லை.

இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ சண்டை ந்யூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப்போகப் போகப் பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழகவேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும். எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்துவிட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்து Absolute-ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் spirituality-‍யில் [ஆத்மிகத்தில்] ஐன்ஸ்டீனின் Relativity Theory[சார்புக் கொள்கை]! அவரும் Time, Space-ஐத்தானே சொல்கிறார்?

இந்த இரண்டிலிருந்து விடுபட வேண்டும் என்ற தாபம் தான் எனக்கு உபநிஷத்தின் உபதேச ஸாரமாகத் தெரிகிறது. எந்த அளவுக்குத் தாபப்பட்டு மீளுவதற்கு முயற்சி பண்ணுகிறோமோ, அந்த அளவுக்கு ஈச்வரப் பிரஸாதம் கிடைத்து, அந்த லக்ஷ்யத்துக்கு அழைத்துக் கொண்டு போகும்.

உபதேசம் வேண்டும் என்று மலைக்கும், காட்டுக்கும் ஓடவேண்டாம். இடமும், காலமுமே நமக்கு பாதிப்புப் போவதற்கான உபதேசத்தைப் பண்ணிவிடுகின்றன. நாம் பகவானைப் பிரார்த்தித்துக் கொண்டு முயற்சி பண்ணவேண்டியதெல்லாம், இடத்தில் தள்ளி, காலத்தில் தள்ளி இருக்கிற விஷயங்கள் மாதிரியே இந்த இடத்தில், இந்த க்ஷணத்தில் நடப்பதையும் தள்ளி வைப்பதற்கான சக்தியை அடைவது தான்.

முதல் உபநிஷத்தான ஈசாவாஸ்யத்தில், “அது (ஆத்மா) அசைகிறது; (ஆனாலும்) அசைவதில்லை. அது தூரத்திலிருக்கிறது; ஆனாலும் கிட்டேயே, உள்ளேயே இருக்கிறது” என்று சொல்லும்போது Space, Time இதுகளையும், இதற்கு அதீதமாக இருக்கிற ஸ்திதியையுந்தான் மாற்றி மாற்றிச் சொல்லி, இந்த இரண்டிலிருந்து விடுபடுகிற ஆர்வத்தை உண்டாக்கியிருக்கிறது. அடுத்த மந்திரங்களில் Time, Space எல்லாம் இவனுடைய ஆத்மாவுக்குள்ளேயே அடங்கியிருப்பதைப் பார்க்கச் சொல்லியிருக்கிறது. அப்படிப் பார்த்துவிட்டால் அப்புறம் துவேஷமில்லை, மோஹமில்லை, துக்கமில்லை என்கிறது. அதாவது ஒருவிதமான பாதிப்பும் இல்லை. அப்புறம் ஒரு மந்திரம் இந்த ஆத்மா ஸர்வவியாபி என்று Space-‍க்கு மேற்பட்ட நிலையைச் சொல்லி, வருஷங்களுக்குப் பதார்த்தங்களை வகுத்துக் கொடுப்பதும் ஆத்மாதான் என்பதாக அதன் காலாதீத நிலையையும் சொல்கிறது.

மொத்தத்திலே, இன்றைய ஸயன்ஸின் லக்ஷ்யமாயிருக்கிற அதே Space-Time-‍ன் ஆதார ஸத்யம்தான் உபநிஷத் லக்ஷ்யமாகவும் இருக்கிறது. அந்த ஸத்யத்தை அனுமானத்தினால் மட்டும் ஒரு postulate மாதிரி ஸயன்ஸ் சொல்கிறது. உபநிஷத்தோ இதை அநுபவ பூர்வமாக, தன்னில் தானாக அடைய முடியும் என்கிறது. வேதமுடிவான உபநிஷத்தின் முடிவு இதுவே.