Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

காரிய சக்தியும் காப்புச் சக்தியும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

காரிய சக்தியை நம்மிடமும், ரக்ஷண சக்தியை தேவர்களிடமும் பகவான் கொடுத்திருக்கிறார். லோகத்திலும் இப்படியே இரண்டு பிரிவுகள் இருக்கன்றன.

வயல், ஃபாக்டரி இவை காரியம் பண்ணும் இடம். போலீஸ், கோர்ட், மற்ற ஆபீஸ்கள் எல்லாமே ஒருவிதத்தில் ரக்ஷணை (காப்பு) தருகிற இடங்கள்தான். வயலிலும் ஃபாக்டரியிலும் காரியம் பண்ணி உண்டாக்கினது வீட்டுக்கு நியாயமாக வந்து சேரும்படி செய்வதற்குத்தான் ஆபீஸ்கள் இருக்கின்றன. ஆபீஸில் பதார்த்தங்கள் (ப்ராட்யூஸ்) இல்லை; சாகுபடியில்லை. மெஷின் சத்தமும், மாட்டுச் சாணியும், புழுதியும், இல்லை. நகத்தில் அழுக்குப் படாமல் பங்களா, ஃபான், நாற்காலி என்ற சௌகரியங்கள் ஆபீஸில் இருக்கின்றன. உடம்பால் உழைக்க வேண்டியதில்லை. எல்லாம் பேனா வேலைதான். தேவலோகம் இப்படித்தான் இருக்கிறது. அது ஸர்வலோகங்களுக்கும் ரக்ஷணைக்கான ஆபீஸ். ஆபீஸ்காரர்கள் உழவில்லை, மிஷினைப் பிடித்துச் சுற்றவில்லை என்று நாம் குற்றம் சொல்வோமா ? அவர்கள் இதைச் செய்ய ஆரம்பித்தால், நம் ரக்ஷணை போய்விடுமே! தேவர்கள் இப்படி அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

பூலோகம்தான் வயல், ஃபாக்டரி. ஒரே சேறும் சகதியும்; இல்லாவிட்டால் கடாமுடா என்று சத்தம்! எண்ணெய்ப் பிசுக்கு, தூசி, தும்பு எல்லாம்! உடம்பு வருந்த உழைத்துக் கொட்டவேண்டும். இப்படித்தான் நாம் எல்லோரும் கர்மாநுஷ்டானம் பண்ணவேண்டும். ஹோமப்புகை, பசி, பட்டினி, எல்லாவற்றோடும் வேர்த்துக் கொட்டிக் கொண்டு பண்ணவேண்டும்.

இதனால் தேவர்கள் உசத்தி, நாம் தாழ்த்தி என்று பகவான் நினைக்கவில்லை. ஆபீஸில் ஜோராக உட்கார்ந்திருப்பவனுக்கு இந்த விவசாயியும், (ஃபாக்டரி) தொழிலாளியும்தான் சாப்பாடும், மற்ற ஸாமான்களும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் அவன் பட்டினிதான்; அவனுக்கு ஒரு ஸாமானும் கிடைக்காது. அதே மாதிரி அவனுடைய ரக்ஷணையால்தான் இவன் உழவு பண்ணின தானியமும், உற்பத்தி பண்ணிய சரக்கும் இவன் வீட்டுக்கு வருகிறது; சமூகத்திலும் எல்லாருக்கும் அவை கிடைக்கின்றன. ஆபீஸில் உட்கார்ந்திருக்கிற என்ஜினீயர் தான் வயலுக்கான கால்வாய் வெட்ட உத்தரவு போடுகிறார். விவசாய அதிகாரி பூச்சி மருந்து கொடுக்கிறார். ஒரு ஃபாக்டரி என்றால், லைசென்ஸ் தருவதிலிருந்து அதற்கான மூலச்சரக்குகளை வரவழைப்பது முதலான எல்லாம் ஆபீஸ் அனுமதியால்தான் நடக்கிறது. அப்புறம் சர்க்காரும், போலீஸும், கோர்ட்டும்தான் இவை நியாயமாக எல்லாருக்கும் விநியோகமாகும்படி சகாயம் பண்ணுகின்றன. (நடைமுறையில் எப்படியிருந்தாலும், ராஜாங்கம் என்பது இதற்காக இருப்பதாகத்தான் பேர்.) இப்படி ஒருத்தரை ஒருத்தர் நம்பி, இவனால் அவனுக்கு ஸுகம், அவனால் இவனுக்கு ஸுகம் என்றிருக்கிறது.

இதனாலெல்லாந்தான் “பரஸ்பரம் பாவயந்த:” என்றார். ஆனாலும், தேவர்கள் நம்மை எதிர்ப்பார்ப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்மைவிட உயர்ந்த உயிரினம் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்களிடம் மரியாதையுடன் இருக்கவேண்டும்.

பிற மதங்கள் எல்லாம், ஒரே ஸ்வாமியைத்தான் நேராக வழிபடும். ஒரே கடவுளிடத்தில் நேராகப் பிரார்த்தனை செய்யும். பல தேவசக்திகளைப் பிரீதி செய்கிற யாக யக்ஞங்கள் மற்ற மதங்களில் இல்லை.

நம்முடைய மதத்தில் சந்நியாசிகள்தாம் சாக்ஷாத் பரமாத்மாவையே நேராக வழிபடலாம். மற்றவர்கள் தேவதைகளைப் பிரீதி பண்ணி தெய்வங்களுடைய அனுக்கிரகத்தினால் நன்மை அடைய வேண்டும். தேவதைகளைப் பிரீதி பண்ணத்தான் பல ஹோமங்கள், யக்ஞங்கள் எல்லாம் பண்ணுகிறோம்.

ஒரு பெரிய ராஜா இருந்தால், எல்லாரும் ராஜாவிடமே நேரில் போக முடியுமா? அந்த ராஜாவின் பரிபாலனத்திற்கு உட்பட்ட உத்யோகஸ்தர்களிடம் குடிமக்கள் நெருங்கித் தங்களுக்கு வேண்டிய அநுகூலங்களைப் பெறுகிறார்கள். உத்தியோகஸ்தர் தாங்களாகச் செய்வதில்லை; அரசன் உத்தரவுப்படிதான் ஜனங்களுக்கு அநுகூலம் செய்கிறார்கள். ஆனாலும் ‘அரசன்தானே செய்கிறான்?’ என்று அரசனிடத்தில் குடிமக்கள் நேராக போகமுடியாது.

அப்படித்தான் நம் மதத்தில் சில வழக்கங்கள் இருக்கின்றன. பரமேச்வரன் மகாசக்ரவர்த்தி. ஸகல ஜனங்களும் குடிமக்கள். வருணன், அக்கினி, வாயு போன்ற பல தேவதைகள் சக்ரவர்த்தியின் உத்தியோகஸ்தர்கள். இவர்கள் மூலமாக நாம் பல நன்மைகளை அடையவேண்டும். அதற்காகவே, தேவர்களுக்குச் சக்தி அளிக்க யாகம் பண்ணுகிறோம். அக்னி முகமாக நாம் கொடுக்கிற ஹவிஸ்கள் தேவர்களுக்குச் சேர்ந்து ஆஹாரமாகின்றன: “அக்நிமுகா: தேவா:”.

‘நம்முடையது அன்று’ என்று நாம் கொடுக்கிற பொருள்கள் தேவதைகளுக்குப் போய்ச் சேருகின்றன. அக்கினியில் போடுவதுதான் நம்முடையது இல்லை என்று து போகும். போடும்போது ‘ ந மம’ என்று சொல்லிப் போடுகிறோம். ‘ந மம’ என்றால், என்னுடையது அல்ல என்று அர்த்தம். தேவர்களுக்கு ஆகாரம் போய்ச் சேருகிற வழிதான் அக்னி.

இப்படியே நாம் எந்த வம்சத்தில் பிறந்தோமோ அந்த வம்சத்திலுள்ள பித்ருக்களைப் பிரீதி செய்யப் பல காரியங்களைச் செய்கிறோம். இதற்கும் வேதத்தில் வழி சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தேவகுல - மனிதகுல பரஸ்பர சகாயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  தேவகாரியமும் பித்ரு காரியமும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it