தேவகுல – மனிதகுல பரஸ்பர சகாயம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இப்படிப்பட்ட யக்ஞமானது நம் வேத மதத்துக்கே முக்கியமானதாக உள்ளது. கீதையிலே பகவான் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆதியில் பிரம்மா மநுஷ்யர்களை சிருஷ்டித்தபோதே அவர்களுக்கான இந்த யக்ஞங்களையும் உண்டாக்கி விட்டாராம். “யக்ஞங்களைப் பண்ணிக் கொண்டு வாழுங்கள். இதனால் சகல நன்மைகளையும் பெற்று வாழுங்கள். நீங்கள் விரும்பியதையெல்லாம் கொடுக்கிற காமதேனுவாக இந்த யக்ஞங்கள் இருக்கட்டும்” என்று மநுஷ்யர்களுக்கு பிரம்மா ஆக்ஞை செய்து விட்டார் – என்று கீதையில் (III.10) சொல்லியிருக்கிறது.

ஸஹ யஜ்ஞா : ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: |

அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோ(அ)ஸ்(து) இஷ்டகாமதுக் ||

‘பிரஜைகளோடு யக்ஞங்களை சிருஷ்டித்தார்’ என்றால் முதலில் மனிதர்களையும் அப்புறம் வேள்விகளையும் உண்டு பண்ணினார் என்று அர்த்தமாகலாம். ஆனால் இங்கே, “யக்ஞங்களோடு பிரஜைகளை உண்டாக்கினார் (ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா) என்பதாக முதலில் யக்ஞத்தைச் சொல்லி, அப்புறம் மநுஷ்ய இனத்தைச் சொல்லியிருக்கிறது!

சிருஷ்டிக்கே மூலம் வேத மந்திரங்கள்தான். அந்த வேத மந்திரங்களைச் சொன்னாலே சிருஷ்டியில் பலவித அதிகாரங்களைப் பெற்றிருக்கும் தேவ சக்திகளை அந்த sound vibration-கள் (ஒலி அதிர்வுகள்) பிடித்துக் கொண்டு வரும். யக்ஞத்தில் இப்படிப்பட்ட மந்திரங்களைச் சொல்வது கடிதத்தில் அட்ரஸ் எழுதுகிறமாதிரி. இப்படி அட்ரஸ் பண்ணி ஹோமம் செய்தால்தான் ஆஹூதியை அக்னி தேவர்களிடம் சேர்க்கிறார்.

மிருகங்களில் பூனையைவிட நாய், நாயைவிடக் குதிரை, குதிரையைவிட யானை, யானையைவிடச் சிங்கம் என்று ஒன்றைக் காட்டிலும் இன்னொன்று அதிக சக்தி உடையதாக இருக்கிறதல்லவா? இப்படியே சிருஷ்டியில் மநுஷ்யர்களைவிட அதிக சக்தி உடையவர்களும் இருக்கிறார்கள். அவர்களையே தேவர்கள் என்பது. அவர்கள் இந்த லோகத்தில் பஞ்ச பூதங்களில் கரைந்து இருப்பதோடு, கண்ணுக்குத் தெரிகிற ரூபத்தில் தேவலோகத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள். மந்திரங்களை நன்றாக ஜபித்து ஸித்தி அடைந்தால், ஸுக்ஷ்ம ரூபத்தினால் அவர்கள் செய்கிற அநுக்ரஹங்களைப் பெறுவதோடு, தேவ லோகத்தில் அவர்களுக்கு உள்ள ஸ்தூல ரூபங்களையும் தரிசனம் பண்ணலாம். இந்த மந்திரங்களுக்கு ஆதாரமான மூல சப்த சலனங்களால்தான் அவர்கள் பரமாத்மாவில் தோன்றியது. எனவே இதையே திருப்பிச் சொல்வதானால் மந்திரங்களை தேவதைகளின் சப்த ரூபம் என்று சொல்லலாம்.

யக்ஞத்தில் ஒவ்வொரு தேவதை பற்றியும் மந்திரம் சொன்னால் அந்த தேவதை அங்கு ஆவிர்பாவமாகிறது. நல்ல பக்குவிகளுக்கு இது பிரத்யக்ஷமாகவே தெரியும். தெரியா விட்டாலும் அந்த தேவதா சக்தி அங்கு ஸுக்ஷ்மமாக வெளிப்பட்டிருக்கும். ஆனாலும், நேரே அதற்கு ஆஹூதி தரக்கூடாது. பத்திரம் எழுதினால், Bond எழுதினால் அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும், ரிஜிஸ்திரார் முத்திரை போடவேண்டும் என்றெல்லாம் இருப்பது போல் வேதத்தில் சொல்லியிருக்கிற விதிகளின்படி அக்னியில் போட்டால்தான் அது அவர்களுக்கு எந்த விதத்தில் ஏற்கத்தக்கதோ அந்த விதத்தில் போய்ச் சேரும்.

‘அக்னி எரிந்துவிட்டதே, மிஞ்சியதை யக்ஞ சிஷ்டமாக (பிரஸாதமாக) யாகம் பண்ணினவர்களே சாப்பிட்டு விட்டார்களே, அது எப்படி தேவர்களை அடைய முடியும்?’ என்று ஸந்தேஹப்படக் கூடாது. தேவர்கள் நம் மாதிரி பாஞ்ச பௌதிகமான (பஞ்சபூத மயமான) சரீரம் படைத்தவர்களலல்ல. எனவே நமக்குள்ள மாதிரி ஸ்தூலமான ஆஹாரம் அவர்களுக்குத் தேவை இல்லை. நமக்குங்கூட ஆஹாரங்களை வயிற்றிலுள்ள ஜாடராக்னி எரித்து, அதன் ஸத்தை மட்டும்தானே ரத்தமாக்கி அனுப்புகிறது! இப்படியே யக்ஞ அக்னியானது ஆஹூதிகளின் ஸுக்ஷ்மமான ஸாரத்தை தேவர்களுக்கு அனுப்புகிறது.

யக்ஞம் வரையில் போக வேண்டும் என்பதில்லை. இந்தக் காலத்திலும் டின்னர், ஃபீஸ்ட் நடத்துகிறார்கள். வெள்ளைக்கார நாகரிகப்படி நடத்தினால் அதில் இன்னொருத்தனின் ஸெளக்கியத்துக்காகச் சாப்பிடுவதாகச் சொல்லிக் கொண்டு ‘டோஸ்ட் ப்ரபோஸ்’ பண்ணுகிறார்கள். சாப்பிடுவது இவர்கள்; அதன் பலன் இன்னொருவனுக்கு என்கிறார்கள்! ஒருத்தன் சாப்பிட்டால் அது அவனுக்குத் தானே புஷ்டி தரும்? இன்னொருத்தனைப் பார்த்து, ‘உன் புஷ்டிக்காக நான் சாப்பிடுகிறேன்’ என்று இவன் டோஸ்ட் சொன்னால், எப்படி அது அந்த இன்னொரு ஆசாமிக்குப் போய்ச் சேரும்? இந்த மாதிரி கேட்பது தப்பு. இதெல்லாம் ஒருவகையான நல்ல மனோபாவம். மனஸார இப்படி நினைத்து நல்லதைப் பண்ணினாலே, எண்ணத்தின் சக்தியால் ( thought-power-ஆல்) மற்றவனுக்கு அது க்ஷேமம் தரும் என்று தான் இப்படிப் பண்ணுகிறார்கள்.

ஸாக்ஷாத் பரமாத்மாவின் சக்தியே எண்ண அலைகளாகி, அவையே சப்த அலைகளாகி மந்திரம் என்று நமக்கு வந்திருக்கிற போது, அவை வாஸ்தவமாகவே மிகுந்த க்ஷேமசக்தி நிரம்பியதாகத்தான் இருக்கும். இப்படி மந்திர பூர்வமாகத் தரும் ஆஹூதி தேவர்களின் சக்தியை விருத்தி பண்ணுகின்றன. மநுஷ்யர்களைவிட தேவர்கள் ஜாஸ்தி சக்தி பெற்றவர்களென்றாலும், அவர்களும் பூரண சக்தர்களல்ல! நிறைந்த நிறைவாக நிரம்பி விட்டவர்களல்ல. அவர்களுக்கும் ஆசைகள் உண்டு. தேவைகள் உண்டு. அவற்றை இந்த யக்ஞங்களே பூர்த்தி செய்கின்றன. லோக வாழ்க்கையை நமக்கு அவர்கள் அநுகூலமாக்கித் தருகிறார்கள் என்றால், நாமும் அவர்களுடைய சக்தியை விருத்தி செய்து, அவர்களுடைய இஷ்டங்களை நிறைவேற்றித் தருகிற உபகாரத்தை யக்ஞத்தின் மூலம் பண்ணவேண்டும். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தோடு நாம் யக்ஞங்களைப் பண்ணினால், தேவர்களும் அப்படியே நாம் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று பாவித்து நமக்கு அநுக்ரஹம் செய்வார்கள். இப்படி பகவான் கீதையில் (III.11) சொல்லியிருக்கிறார்.

”தேவான் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ: |

பரஸ்பரம் பாவயந்த: ச்ரேய: பரமவாப்ஸ்யத ||”

இப்படி நம்முடைய மதத்தில் பல யக்ஞங்கள் செய்து தேவர்களைப் ப்ரீதி செய்வித்து ஈச்வராநுக்கிரஹத்திற்குப் பாத்திரராவதைச் சொல்லியிருக்கிறது.

‘தேவர்கள்தான் லோகத்தில் மழை பெய்விக்கிறார்கள். மநுஷ்யர்களுக்கு தன தான்யங்களை, ஆரோக்ய ஐச்வரியங்களைத் தருகிறார்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு மநுஷ்யர்கள் யாகம் பண்ணி, ஆஹூதி கொடுத்து ஆஹாரம் போடவேண்டும் என்று சொன்னால், “நம்மையெல்லாம் அன்ன வஸ்திரம் தந்து ரக்ஷிக்கிற அத்தனை சக்தி படைத்த தேவர்களுக்கு நாம் எதற்குச் சாப்பாடு போட வேண்டும்? அவர்களே தங்கள் ஆஹாரத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார்களா?” என்று தோன்றுகிறது. எதற்காக ‘பரஸ்பரம் பாவயந்த:’ என்று பகவான் சொன்னார்? அவர்களைப் பெரியவர்களாக வைத்து நாம் பூஜிக்கவேண்டும் என்றால் சரி. அவர்களை நமஸ்காரம் பண்ணுவோம்; பிரார்த்தனை பண்ணுவோம். அதிலேயே அவர்கள் பிரீதி அடைந்து அநுக்ரஹம் செய்யட்டுமே! இப்படியில்லாமல், நம்மையும் கொஞ்சம் அவர்களுக்கு ஸமதையாகவே உயர்த்துகிற மாதிரி, equal footing கொடுத்த மாதிரி, “நீங்கள் அவர்களை பாவியுங்கள்; அவர்கள் உங்களை பாவிக்கட்டும் – நீங்கள் அவர்களுக்கு (யாகத்தால்) சாப்பாடு போடுங்கள்; அவர்கள் உங்களுக்கு (மழையால்) சாப்பாடு போடட்டும்” என்று சொன்னால் எப்படி ? – இப்படிக் கேள்விகள் தோன்றுகின்றன.

இதைப்பற்றி நினைக்கிறபோது, எனக்கு, தேவலோகம் இங்கிலாந்து மாதிரி, தேவர்கள் இங்கிலீஷ்காரர்கள் மாதிரி என்று தோன்றுகிறது. இங்கிலீஷ் தேசத்தில் வயல் உண்டா? தான்ய ஸம்ருத்தி [தானிய வளம்] உண்டா? கிடையாது. பின்னே அவர்கள் லோகத்திலேயே கொடிகட்டிப் பறந்தார்களே! ‘எங்கள் ராஜ்யத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லை’ என்கிறார்களே! இத்தனை ஆதிக்கம் அவர்களுக்கு எப்படி வந்தது?

இங்கிலாந்து தேசத்திலே சாப்பாட்டு வசதியில்லை. சரி, அங்கே வேறே என்ன இருக்கிறது என்று பாரத்தால், ஒரே நிலக்கரியும், சாக்குக் கட்டியும்தான். கன்னங்கரேல் என்று நிலக்கரி, வெள்ளை வெளேரென்று சாக்குக் கட்டி -இந்த இரண்டுந்தான் அந்தத் தேசத்தில் முக்கியமாக இருக்கின்றன. இவற்றை அவர்கள் சாப்பிட முடியாது.

சாப்பிடக்கூடிய தானியங்களை நிறைய விளைவிக்கிற தேசங்களிலே, பெரிய மெஷின்களை வைத்து ஃபாக்டரிகளை ஏற்படுத்த வேண்டுமானால், அதற்கு நிலக்கரியும் சாக்குக் கட்டியும்தான் வேண்டியிருக்கிறது. நிலக்கரி இன்டஸ்ரிகளுக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். (பிற்பாடுதான் பெட்ரோல், எலெக்ட்ரிக் பவர்; இப்போது ‘அடாமிக் பவர்’ முதலியன வந்திருக்கின்றன.) நிலக்கரியின் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸிமென்ட் முதலான பல தொழில்களுக்குச் சாக்குக்கட்டி தேவைப்படுகிறது.

இதனால் வெள்ளைக்காரர்கள் பெரிய யுக்தி செய்தார்கள். மெஷின்களை வைத்துச் செய்கிற ஆலைத் தொழில்களில் மற்ற தேசங்களையும் இழுத்து விட்டுவிட்டு – தங்களுடைய கரிக்கட்டியையும் வெள்ளைக்கட்டியையும் அங்கெல்லாம் விலை போகும்படியாக வியாபார ஸாமர்த்தியம் செய்தார்கள். விலையாகத் தானியம், தனம், பருத்தி என்றிப்படி எல்லாவற்றையும் யதேஷ்டமாகப் பெற்றார்கள். தேசம் தேசமாகத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்துவிட்டார்கள்.

தேவலோகத்தில் வயல் கிடையாது. தேவர்களுக்குச் சாப்பாட்டுக்கு வழி இல்லை! துர்பிக்ஷம் தேவலோகேஷு மநூநாம் உதகம் க்ருஹே என்று வேதத்திலேயே [தைத்திரீய ஆரண்யக முதல் ப்ரச்னத்தில்] சொல்லியிருக்கிறது. மேல் மட்டத்தில் இருக்கிற மேகங்கள் மழையாக பூமியில் பெய்து, பூலோகத்தில்தான் ஜலம் ஆறு, ஏரி, கிணறு என்று எடுத்துப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளும்படி இருக்கிறது. உதகம் (ஜலம்) நம் லோகத்து மநுஷ்யனின் கிருஹத்தில்தான் உண்டு. ஜலத்தைக் கொண்டு பயிர் பண்ணி ஸுபிக்ஷம் அடைவது பூலோகத்தில்தான். வயல் இல்லாத தேவலோகத்தில் துர்பிக்ஷம்தான். இப்படி அந்த வேதவாக்கியம் சொல்கிறது. ஆனால், மேலேயிருக்கிற மேகம் நமக்கு ஜலமாக வரவேண்டுமானால், அது தேவர்களின் அநுக்ரஹத்தாலேயே நடக்கும். நாம் யக்ஞம் செய்தால்தான் அவர்கள் அந்த அநுக்ரஹத்தை செய்வார்கள். இல்லாவிட்டால் மழை பெய்யாது. பஞ்சம் தான் வரும். பூமியில் பெய்யாமல் ஸமுத்திரத்திலேயே எல்லா மழையும் பெய்துவிடும். அல்லது, பயிரெல்லாம் அழுகி அடித்துக் கொண்டு போகும்படி பேய்மழையாகப் பெய்யும். ஒன்று அதிவ்ருஷ்டி- அளவுக்கு மீறிப் பெய்து வெள்ளத்தில் பயிர்நாசமாவது. இன்னொன்று அநாவ்ருஷ்டி-மழையே பெய்யாமல் பஞ்சம் ஏற்படுவது. இந்த இரண்டும் ஏற்படாமல், ஸுபிக்ஷத்துக்கு உரிய மழையை அளவாக அனுப்பி வைக்கிற சக்தி தேவலோகவாஸிகளுக்கே இருக்கிறது. இங்கிலீஷ் தேசத்தில், வயல் இல்லாவிட்டாலும் நிலக்கரி இருப்பதுபோல, தேவர்களிடம் தாங்களே பயிர் பண்ணிக் கொள்ள முடியாவிட்டாலும், அநுக்ரஹ சக்தி என்ற சரக்கு இருக்கிறது. அந்த அநுக்ரஹ சக்தியை வைத்துக் கொண்டு, அவர்கள் சாப்பிட்டுக் கொள்ள முடியாது. ஆனால் நம் சாப்பாட்டுக்கு வேண்டிய மழையை அனுப்ப முடியும். அவர்களுக்கு இப்படிப்பட்ட அநுக்ரஹ சக்தியை நாமே வேத மந்திரங்களால் விருத்தி பண்ணுகிறோம். அந்த மந்திரங்களோடு செய்கிற ஹோமம், அவர்களுக்கு ஆஹாரமாகிறது.

நம்மூரில் பருத்தி விளைகிறது. இங்கே நூற்பு ஆலைகள் விருத்தியாகாதபோது நம்மூர்ப் பருத்தியை வெள்ளைக்காரன் லங்காஷயருக்கு எடுத்துக் கொண்டு போய், ‘நைஸ்’ துணியாக்கி நம் தலையிலேயே நாலு மடங்கு விலை வைத்துக் கட்டினான். தேவர்கள் நம் லோகத்து ஸமுத்ரத்திலிருந்து ஆவியாகி மேலே போகிற மேகத்தையேதான் நமக்கு மழையாகத் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால், வெள்ளைக்காரன் செய்த மாதிரிக் கொள்ளை லாபம் அடிக்காமல், நாம் செய்வதற்கு அதிகமாகவே திருப்பி அநுக்ரஹம் பண்ணுவார்கள். ஆனாலும் நாம் அவர்களுக்குக் கொடுத்தால்தான், திரும்ப நாலு மடங்காக நமக்கு நல்லது செய்வார்கள். நம்மைவிட அவர்களுக்குக் கொடுத்தால்தான், திரும்ப நாலு மடங்காக நமக்கு நல்லது செய்வார்கள். நம்மைவிட அவர்களுக்குச் சக்தி அதிகம். ஆனாலும் பகவான் யக்ஞ கர்மாநுஷ்டானத்தை நமக்கே கொடுத்து, நாம் செய்கிற கர்மாநுஷ்டானத்திலேயே அவர்கள் திருப்திப்படும்படியாக வைத்து, நம்மையும் அவர்களுடைய ஸ்தானத்துக்கே உயர்த்தி விட்டது போல வைத்திருக்கிறார். அதனால்தான், ‘ பரஸ்பரம் பாவயந்த:’ என்று தட்டிக் கொடுத்துப் பேசுகிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வேள்வியின் மூன்று பயன்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  காரிய சக்தியும் காப்புச் சக்தியும்
Next