இதிஹாஸங்களின் பெருமை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

புராணங்களை வேதத்துக்கு உபாங்கமாகச் சொன்னால், இதிஹாஸங்களையோ வேதத்துக்கு ஸமானமாகவே உயர்த்திச் சொல்லியிருக்கிறது. பாரதத்தை ‘பஞ்சமோ வேத:’- ஐந்தாவது வேதம் – என்று சொல்லியிருக்கிறது. ராமாயணத்தைப் பற்றி “வேதத்தால் அறியத்தக்க பரமபுருஷன் தசரதனின் குழந்தையாக அவதாரம் பண்ணியவுடன் அந்த வேதமும் வால்மீகியின் குழந்தையாக அவதாரம் பண்ணிவிட்டது” என்று சொல்லியிருக்கிறது.

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|

வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மனா||

(பிரசேதஸின் பிள்ளையானதால் வால்மீகிக்குப் பிராசேதஸ் என்று பெயர்.)

ராமாயண- பாரதக் கதைகள் நம் தேச ஜனங்களின் ரத்தத்திலேயே ஊறிப்போனவை.

இந்த இதிஹாஸ படனம் குறைந்து போய்விட்ட இந்த நாற்பது, ஐம்பது வருஷத்துக்கு முன்புவரை* பாமர ஜனங்கள் உள்பட எல்லோருமே வெளி தேசத்தார் வியக்கும்படியான நல்லொழுக்கங்களோடு யோக்யமாக இருந்து வந்தார்கள் என்றால் அதற்கு முதல் காரணம் ராமாயணமும் பாரதமும்தான். பாரதப் பிரவசனம் விடாமல் ஒவ்வொரு ஊர்க் கோயிலிலும் நடக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் ராஜாக்கள் மானியம் கொடுத்து வந்திருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருஷத்துக்கு முந்தி வரையில் பூசாரி உடுக்கடித்துக் கொண்டு பாரதம் பாடுவதை கேட்கத்தான் கிராம ஜனங்கள் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அதுதான் அவர்களுக்கு ஸினிமா, டிராமா எல்லாம். ஆனால் இந்த ஸினிமா டிராமாக்களினால் ஒழுக்கத்துக்கு ஏற்பட்டிருக்கிற ஹானிகள் இல்லாமல், பாரதக் கதை கேட்டுக் கேட்டே அவர்கள் ஸத்யத்துக்கு பயந்து கபடு, சூது இல்லாமல் நல்ல வாழ்க்கை நெறியில் போனார்கள். பாரதத்துக்கு இந்தத் தமிழ் தேசத்திலிருக்கிற மதிப்பு, கிராம தேவதை ஆலயத்தை, “திரௌபதை அம்மன் கோயில்” என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.

ஒவ்வொரு பெரிய புராணத்தையும் எடுத்துக் கொண்டால் அதிலே தனித்தனிக் கதையாக அநேகம் இருக்கும். ஒவ்வொரு கதையும் ஒரு குறிப்பிட்ட தர்மத்தை வலியுறுத்துவதாக இருக்கும். இதிஹாஸத்திலோ ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஒரே கதையாக இருக்கும். நடுவே வேறு பல உபாக்யானங்கள் வந்தாலும்கூட அவையும் பிரதானமான ஒரு கதையைச் சுற்றியே இருக்கும். புராணத்தில் ஒவ்வொரு கதை ஒவ்வொரு தர்மத்தைச் சொல்கிறது என்றால் இதிஹாஸத்தின் மையமான கதையில் ஸகல தர்மங்களும் நடத்திக் காட்டப்பட்டிருக்கும். உதாரணமாக, தனிக்கதைகளான ஹரிச்சந்திர உபாக்யானம் ஸத்யம் என்ற ஒரு தர்மத்தை மட்டும் சொல்கிறது; சிரவணன் கதை பித்ரு பக்தியை மட்டும் சொல்கிறது; நளாயினி கதை கற்பை மட்டும் சொல்கிறது; ரந்திதேவன் கதை பரம தியாகத்தை, கருணையை மாத்திரம் சொல்கிறது. ஆனால் ராமர், பஞ்ச பாண்டவர்கள் இவர்களுடைய வாழ்க்கையைச் சுற்றி அமைந்த இதிஹாஸங்களில் இவர்கள் ஸகல தர்மங்களையும் நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.


* இதிஹாச, புராண உபந்நியாஸங்கள் வெகுவாகப் பெருகியிருப்பினும் இவை நகரப் புறங்களிலேயே நடப்பதால் பெருவாரியான கிராம மக்கள் இவற்றால் பயன் பெறாததை ஸ்ரீ ஸ்வாமிகள் கருத்தில் கொண்டு 1962-ல் கூறியது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ' இதிஹாஸம் ' - ' புராணம் ': பெயர் விவரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  தெய்வங்களுள் பேதம் ஏன் ?
Next