“இதிஹாஸம்” – “புராணம்” : பெயர் விவரம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ராமாயணமும் மஹாபாரதமுந்தான் நம் தேசத்தில் பாமர-பண்டித பேதமின்றி எல்லோருக்கும் இரண்டு கண்கள் போல இருந்து கொண்டு யுகாந்தரமாக நல்ல வழியைக் காட்டி வந்திருக்கின்றன. இந்த இரண்டையும் புராணங்களோடு சேர்க்காமல், தனி ஸ்தானம் கொடுத்து ‘இதிஹாஸ’ங்கள் என்று வைத்திருக்கிறது.

‘புரா’ என்றால் ‘பூர்வத்தில்’ என்று அர்த்தம். பூர்வத்தில் நடந்ததைச் சொல்பவை புராணங்கள். அவற்றில் எதிர்கால prediction-ம் வருகிறது.

பூர்வத்தில் நடந்த கதையைச் சொல்வது என்று மட்டுமில்லாமல், புராணம் என்பதே பூர்வ காலத்தில் எழுதப்பட்டது என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம். பொயட்ரி, டிராமா முதலான பூர்வகால இலக்கிய ஸ்ருஷ்டிகளுக்குப் பிறகு ஸமீபத்தில் ப்ரோஸிலேயே கதையை எழுதுவது என்று ஒரு இலக்கிய ரூபம் உண்டாயிற்று. அதற்கு Novel என்றே பெயர் வைத்தார்கள். “நாவல்” என்றால் புதியது என்று அர்த்தம். அந்தக் காலத்தில் இந்த ரூபம் பொயட்ரியைப் போலவும், டிராமாவைப் போலவும் இல்லாமல் புதிதாக வந்ததால் ‘நாவல்’ என்றே பெயர் வைத்தார்கள். இந்த ரூபம் நம் நாட்டிலே வந்த போதும் ‘நாவல்’ என்பதை மொழி பெயர்த்து ‘நவீனம்’ என்றார்கள். நவீனம் புதியது என்றால் புராணம் பழையது. இந்தப் பெயரே புராணங்களின் தொன்மையைக் காட்டுகிறது.

புராணம் என்று இருந்தால் அது சொல்ல வேண்டிய விஷயங்கள் ஐந்து இருக்கின்றன என்று பஞ்ச லக்ஷணம் கொடுத்திருக்கிறது. அவை: ஒன்று, ஸர்க்கம் (ஆதியில் நடந்த சிருஷ்டி). இரண்டு, ப்ரதி ஸர்க்கம் (அப்புறம் அந்த ஸ்ருஷ்டி யுகங்கள் தோறும் கவடு விட்டுக் கொண்டு பரவியது.) மூன்று, வம்சம் (பிரம்ம புத்ரர்களிலிருந்து ஆரம்பித்து ஜீவகுலம் எப்படி தலைமுறை தலைமுறையாக வந்தது என்ற விஷயம்.) நான்கு, மன்வந்தரம் (ஆயிரம் சதுர்யுகங்களில் லோகம் பூராவுக்கும் மநுஷ்யகுல முன்னோர்களாக இருக்கப்பட்ட பதினாலு மனுக்களின் காலத்தைப் பற்றிய விஷயங்கள்.) ஐந்தாவது, வம்சாநுசரிதம் (தேசத்தைப் பரிபாலித்த ராஜாக்களின் வம்சாவளி; ஸுர்ய வம்சம், சந்திர வம்சம் என்பது போன்ற dynasty -களின் விவரம்) . இன்னம், பூகோள வர்ணனை, ககோள வர்ணனை என்பதாக லோகங்களைப் பற்றி விரிவாக வர்ணிக்க வேண்டும். இங்கே புராணம் என்பது ஹிஸ்டரியாக மட்டுமின்றி ஜாகரஃபியாகவும் ஆகிறது.

‘இதிஹாஸம்’ என்பது இதி-ஹ-ஆஸம். ‘இதி-ஹ-ஆஸம் என்றால் இப்படி நடந்தது என்று அர்த்தம். ‘இதி ஆஸம்’ என்றாலே ‘இப்படி நடந்தது’ என்றாலும், நடுவிலே ஒரு ‘ஹ’ போட்டிருக்கிறது. ‘ஹ’வுக்கு ‘நிச்சயமாக’, ‘வாஸ்தவமாக’, ‘ஸத்தியமாக’ என்று அழுத்தம் கொடுக்கிற அர்த்தமுண்டு. கொஞ்சங்கூடப் பொய் கலக்காமல் உள்ளது உள்ளபடியே எழுதினது ‘இதிஹாஸம்’. அது எழுதப்பட்ட காலத்திலேயே நடந்தது. ராமர் இருந்த போதே வால்மீகி ராமாயணத்தை எழுதினார். பஞ்ச பாண்டவர்கள் இருந்த போதே வியாசாரியாள் கூட இருந்து பாரதத்தில் வரும் ஸம்பவங்களை எல்லாம் நேரில் பார்த்தவர்.

‘புராணம்’ என்ற பெயர்ப்படி அவர் பழைய விஷயத்தை சொன்ன போதும், தீர்க்க திருஷ்டியால் உள்ளது உள்ளபடிப் பார்த்துத்தான் எழுதியிருப்பார். என்றாலும் அதைக் கேட்ட மற்றவர்களுக்கு – அவர் காலத்தவர்களுக்கு – அந்த விஷயங்கள் தெரியாது. மஹாபாரதம், ராமாயணம் ஆகியவை இப்படி இல்லை. அவை முதலில் பிரசாரமானபோது லோகத்தில் இருந்தவர்களுக்கே அவற்றிலுள்ள அநேக பாத்திரங்களையும், ஸம்பவங்களையும் தெரியும். அதனால்தான் இவற்றில் நிஜம்தானா என்று நாம் ஸம்சயிப்பதற்கு இடமே இல்லை என்பதைக் காட்ட ‘இதி-ஹ-ஆஸம்’ என்று ‘ஹ’ போட்டு உறுதிப்படுத்தியிருக்கிறது.

“இதி-ஹ-ஆஸம்’ என்றால் ‘இப்படி(யிருக்க வேண்டுமென்று) அவர்கள் (பெரியோர்) சொல்கிறார்கள்’ என்றும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

நேரே நடப்பதை வைத்துக் சொல்லாமல், இப்படியிருந்தது என்று ஒரு நம்பிக்கையின் மேல் எடுத்துக் கொள்வதே ‘ஐதிஹ்யம்’. ‘ஐதீகம்’ என்று தமிழில் அதைத்தான் சொல்கிறோம். அதாவது மரபு அல்லது tradition -க்கு இப்படிப் பேர். இப்போது நாம் நேரில் பார்க்கிற ஒன்றைக் கொண்டு இதை ஏற்படுத்தவில்லை. நமக்கு நீண்ட காலத்துக்கு முன்னாலிருந்து அநுஸரிக்கப்பட்டதா, சரி, நாமும் பின்பற்றவேண்டும் என்று இருப்பதே ஐதீகம். ‘இதி’ என்ற வேர்ச் சொல்லிலிருந்தே ‘ஐதிஹ்யம்’ வந்திருக்கிறது. ‘இப்படிப் (பெரியோர்) சொன்னது’ என்பதற்காகவே நாம் பின்பற்ற வேண்டியது ஐதிஹ்யம். நாம் நேரில் பார்ப்பது ‘இது’; இன்னொருத்தர் சொன்னால் ‘இப்படி’!

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உப-புராணங்களும் பிற புராணங்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  இதிஹாஸங்களின் பெருமை
Next