வேதாந்த மதங்களும் மீமாம்ஸையும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதகர்மாக்களை யெல்லாம் அங்கீகரிக்கிறது என்ற அளவில் அத்வைதம் மீமாம்ஸையை ஆதரிக்கிறது என்பதோடுகூட, மீமாம்ஸையில் பாட்ட மதத்தினர் சொல்கிற அதே ஆறு பிரமாணங்களைத்தான் அத்வைதத்திலும் ஒப்புக் கொண்டிருக்கிறோம்.

ஸ்ரீ சங்கரரின் அத்வைதம், ஸ்ரீ ராமாநுஜரின் விசிஷ்டாத்வைதம், ஸ்ரீ மத்வரின் த்வைதம் மூன்றுமே வேதாந்த மதங்கள்தான். அத்வைதத்தைப் போலவே இந்த மற்ற இரண்டு ஸித்தாந்திகளும் வைதிக கர்மாநுஷ்டானங்களை விடக்கூடாது என்பவர்கள்தான். ஆதலால் பொதுவாக வேதாந்த மதங்கள் எல்லாவற்றுக்கும் இந்த அம்சத்திலே மீமாம்ஸை ஸம்மதமானதுதான்.

பிரமாணங்களில் மீமாம்ஸை சொல்கிற ஆறையும் அத்வைதிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். விசிஷ்டாத்வைதிகள் இந்த ஆறில் ‘பிரத்யக்ஷம்’, ‘அநுமானம்’, ‘சப்தம்’ (வேதம்) என்ற மூன்று பிரமாணங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியானாலும் இவை மீமாம்ஸகர்கள் சொன்ன ஆறிலே இருக்கிற மூன்றுதான். இந்தப் பிரமாண ஸமாசாரத்தை ‘நியாயம்’ என்று அடுத்த உபாங்கத்தைப் பற்றிச் சொல்லும்போது கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன்.

மொத்தத்தில், மீமாம்ஸையை அடியோடு நிராகரணம் பண்ணாமல் அதை வைத்துக்கொண்டு அப்புறமே அதைக் கடந்து மேலே பக்தியில் த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்றும், பிறகு ஞானத்தில் அத்வைதம் என்றும் போவதற்கு நமக்கு முக்யமாக இருக்கப்பட்ட மூன்று வேதாந்த மதாசாரியர்களும் வழி பண்ணியிருக்கிறார்கள்.

கர்மாவே எல்லாம் என்பதால் மீமாம்ஸையைக் கர்ம மார்க்கம் என்பார்கள். ஆனால் கர்ம-பக்தி-ஞான மார்க்கங்கள் என்று நாம் வேதாந்த மதத்தில் சொல்கிற அர்த்தத்தில் இது கர்ம மார்க்கமில்லை. வேதாந்த மதத்தில் கர்மாவை கர்மாவுக்காகவே பண்ணி, அதுவே முடிந்த முடிவு என்று வைக்கவில்லை. கர்ம பலனை நினைக்காமல், நிஷ்காம்ய கர்மம் என்பதாக அந்தப் பலனை ஈச்வரார்ப்பணம் செய்ய வேண்டும் என்பதே வேதாந்தப்படி கர்ம மார்க்கம், அல்லது கர்ம யோகம். முக்யமாக கீதையில் பகவான் இதைத்தான் சொல்லியிருக்கிறார். மீமாம்ஸகர்களின் கர்ம மார்க்கத்திலோ ஈச்வர பக்தியே இல்லை. ஆனால் இந்த கர்மாக்களே லோகக்ஷேமம், சமூகத்தின் ஒழுங்கான வாழ்க்கை ஆகியவற்றைத் தருவதோடு அவற்றைப் பண்ணுகிற ஜீவனுக்கும் சித்த சுத்தியைத் தந்து அவனை பக்தியிலும் ஞானத்திலும் ஏற்றி விடுகிறது என்பதால், மீமாம்ஸை எதை ஸாத்யமாக ( goal -ஆக, லக்ஷ்யமாக) சொல்லிற்றோ அதே கர்மாக்களை ஸாதனமாக ( means -ஆக) வேதாந்தத்தில் ஆக்கிக் கொடுத்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சங்கரர் தரும் பதில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பண்டிதருலகில் மீமாம்ஸையின் மதிப்பு
Next