Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

சரணாகதியே முக்கியம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

குருவுடைய யோக்யதாம்சங்களை (Qualifications) பற்றி நிறையச் சொன்னேன். ஆரம்பகால வித்யா குருவான வேதவித்தானாலும் சரி, நம் ஆத்மாவைப் பரமாத்மாவிடம் சேர்க்கிற ஞான குருவான பிரம்மவித்தானாலும் சரி, இரண்டு பேருக்கும் ஒழுக்கம், பக்தி இரண்டும் முக்கியம் என்று சொன்னேன். பரலோகத்துக்கு வழி காட்டுகிற குரு பிரத்யக்ஷ ஈச்வரன் மாதிரிச் சித்தம் கொஞ்சம் கூடச் சலிக்காதவராக, மஹா ஞானியாக, கிருபா மூர்த்தியாக, பரம சுத்தராக இருக்க வேண்டும் என்றேன். இப்படிப்பட்ட குரு கிடைத்துவிட்டால் ஈசுவரனே கூட வேண்டாம் என்றேன்.

ஆனால் இந்த மாதிரி ஒழுக்கமுள்ள வித்யாப்யாஸ குருவோ, ஈச்வரத்வம் நிறைந்த ஆத்ம உபதேச குருவோ எல்லோருக்கும் கிடைக்க முடியுமா என்று ஒரு யோஜனை பிறக்கிறது. சுத்தியாக வேண்டுமென்று நிஜமான தாபம் இருந்தால், அப்படித் தாபப்படுகிறவர்களிடம் பகவானே குருவை அனுப்பித் தீருவான் என்றுதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. மாணிக்கவாசகருக்கு ஈசுவரனே குருவாக வந்து குருந்த மரத்தடியின் கீழே இருந்து கொண்டு உபதேசம் பண்ணினான். திருவாசகத்தில் அநேக இடங்களில் மாணிக்கவாசகரே இதைச் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நமக்குத் தெரிந்தாலும் சஞ்சலம் உண்டாகிறது.

குரு என்று நாம் தேடிப் போகிறவர் வாஸ்தவத்தில் ஒரு போலியாக இருந்துவிட்டால் என்ன பண்ணுவது? அவர் சுத்தரா இல்லையா என்று நமக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும்? சுத்தர் என்றே போகிறோம், அப்புறம் வேறு தினுஸாகத் தோன்றுகிறது என்றால் என்ன பண்ணுவது? இன்னோரிடத்துக்குப் போகலாம் என்றால், அங்கேயும் இதே மாதிரி ஏமாந்து போகமாட்டோம் என்று என்ன நிச்சயம்? இப்படி குழப்பமாயிருக்கிறது. லோகம் பொல்லாதது. நாலு தினுஸாகப் பேசும். ஒரு சுத்தரைப் பற்றியே அபவாதமாக சொல்லிவிடுகிறது. அது நிஜமாக இருந்துவிட்டால் நம் கதி என்ன ஆவது என்று அவரை ஆச்ரயித்தவர்களுக்கு பயம் உண்டாகிறது.

இதற்கு என்ன பண்ணலாம்? வித்யாப்யாஸ குரு விஷயத்தில் இது பெரிய பிரச்னை இல்லை. அவரிடம் மநுஷ்யர்களுக்குள் நல்ல சிஷ்டர்களால் முடியக்கூடிய ஒழுக்கங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். இதை அநேகமாக அவர் பூர்த்தி பண்ணிவிடுவார். அவர் கிருஹஸ்தாச்ரமிதான் என்பதாலேயே ஸந்நியாஸ குருவுக்கு ரொம்பவும் களங்கமாகிற தப்புக்கள் இவருக்கு ஏற்படுவதற்கே இடமில்லாமல் போகிறது. அதுவும் தவிர இவரிடம் சிஷ்யனாக இருப்பது பால்யத்தில்தான். அப்போது மனஸ் தோண்டித் தோண்டி எதையும் ‘ஜட்ஜ்’ பண்ணாது. அதனால் இவரையும் ஜட்ஜ் பண்ணாது. இவர்தான் தெய்வம் மாதிரி என்று ரொம்பவும் இளமனஸில் ஏற்றிவிட்டதால், அது அப்படியே நினைத்துக் கொண்டு பக்தியோடு இருந்துவிடும்.

ஆத்மசுத்திக்கும், மோக்ஷத்துக்கும் என்றே ஏற்பட்ட இன்னொரு குருவைப்பற்றித்தான் பிரச்சனை (problem). அவர் பூர்ணமானவர் என்று நாம் எப்படி நம்புவது? அவரிடம் தோஷம் தெரிந்தால் என்ன பண்ணுவது? குரு என்று வந்தோம். தப்பானவர் என்று விட்டுப் போனால், அது குருத்ரோஹமா, பாவமா? தப்பானவர் என்று நாம் நினைத்ததே தப்பாக இருந்துவிட்டால்?

இந்த மாதிரி சங்கட நிலையில் என்ன செய்யலாம் என்று எனக்குத் தோன்றுகிறதைச் சொல்கிறேன். குருவின் யோக்யதாம்சம் பற்றி முன்னே சொன்னதையெல்லாம் இப்போது நானே வாபஸ் வாங்கிக்கொண்டுவிடப் போகிறேன்! அதாவது, குருவுடைய யோக்யதாம்சத்தையே பார்க்காதீர்கள் என்கிறேன். வித்யாப்யாஸ குருவிடம் குழந்தை சிஷ்யன் இருக்கிற மாதிரியே, மோக்ஷ மார்க்கத்தைக் காட்ட வேண்டிய இவரிடம் வயதான சிஷ்யர்களும் இருந்துவிட வேண்டும் என்கிறேன். அதாவது அவரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து விட வேண்டும். அது கண்மூடித்தனம் என்று மற்றவர்கள் சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்.

குரு வேண்டும் என்று தேடினோம். சுத்தமானவர், பூர்ணமானவர் என்று நம்பித்தான் இவரை ஆச்ரயித்தோம். இவரிடம் வந்தபோது இவர் அசுத்தமானவர், அபூர்ணமானவர் என்று நாம் நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் வந்தேயிருக்க மாட்டோம். வந்தபின் இப்போது சந்தேகம் ஏற்பட்டு விட்டதென்றால் என்ன செய்யலாம்? இன்னொருவரிடம் போவதென்றால் அவர் கதையும் பிறகு எப்படியாகுமோ என்று ஒரு பயம். இன்னொரு பயம், குரு என்று இவரை வரித்துவிட்டு, இன்னொருவரிடம் போனால் பாதிவ்ரத்ய தோஷம் [கற்பில் தவறுவது] போல், குருத்ரோஹம் என்ற பாபம் ஸம்பவிக்குமோ என்பது.

இந்த நிலையில் ஒரே ‘ஸொல்யூஷன்’ [தீர்வு], யோக்யதாம்சத்தைப் பார்க்காமலிருந்து விடுவதுதான் என்று தோன்றுகிறது. நாம் குருவைத் தேடினபோது, இவர்தான் கிடைத்து, இவரைத்தான் வரணம் செய்ய வேண்டியிருந்தது என்றால், ஈச்வரனே இவரைத்தான் நமக்கு குருவாக அனுப்பி வைத்திருக்கிறான் என்றுதானே அதற்கு அர்த்தம்? அப்படியே வைத்துக் கொள்வோம். குருவை ஈச்வரன் அனுப்பினான் என்று மட்டுமில்லாமல் ஈச்வரனே குருவாக வந்திருக்கிறான் என்று பாவிக்கும் படி தானே சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது! இவர் மநுஷ்ய குரு என்கிற வரையில்தான் இவர் நிர்தோஷமானவரா, தோஷமானவரா என்ற கேள்வி வருகிறது. இவரே ஈச்வரன் என்று நம்பிவிட்டால், இந்தக் கேள்விக்கே இடமில்லை. தோஷமுள்ள ஈச்வரன் என்று உண்டா என்ன? ஈச்வரனிடத்தில் தோஷம் மாதிரி ஏதாவது தெரிந்தால்கூட, அதுவும் நம் திருஷ்டி தோஷம் தானே? இப்படியே குருவைப் பற்றியும் நினைத்துவிட்டால் போகிறது. இவர் ஈச்வரனே என்று வைத்துவிட்டால் இவரைவிட்டு இன்னொருவரிடம் போவதற்கும் இடமில்லை. ஈச்வரன் ஒருத்தன் தானே? ஒரு ஈச்வரனை விட்டு இன்னொரு ஈச்வரனிடத்தில் போவது என்பது பரிஹாஸமான விஷயமல்லவா?

அதனால் குரு என்று ஒருத்தரை அடைந்த பிறகு, அவர் எப்படியானாலும் இருக்கட்டும் என்று நாம் நம் பக்தியில் இறங்காமல், சலிக்காமல் அவரையே உபாஸித்து வரவேண்டும்; சுச்ரூஷை பண்ண வேண்டும். இப்படிப் பண்ணினால் கடைசியில் ஈச்வரன் அவர் மூலமே நமக்கு சுத்தியை, ஞானத்தைக் கொடுத்துவிடுவான். அவர் மோக்ஷத்துக்குப் போனாலும் போகாவிட்டாலும் நாம் போய்விடுவோம்!

தூர்த்த குணம், கெட்ட பழக்கமுள்ள குருவை உபாஸிக்கிறோம் என்று உலகம் பரிஹாஸம்தான் செய்யும். செய்துவிட்டுப் போகட்டும். இதனால் நமக்கு எந்த அளவுக்கு நஷ்டம் வந்தாலும் வந்துவிட்டுப் போகட்டும். முடிவில் இதற்கெல்லாம் ஈடு செய்வதான பரம லாபம் கிடைக்காமற் போகாது. நமக்கென்று லாப-நஷ்டம், மானாவமானம் பார்க்காமல், ஓரிடத்தில் நம்பி சரணாகதி பண்ணிவிட்டால், முடிவில் அதற்காக ஈச்வரன் பரம லாபமான ஆத்ம ஞானத்தைக் கொடுத்து விடுவான்.

லோகத்தில் லாப நஷ்டம் என்பவை உண்மையில் நிரந்தரமாக இல்லை. அவை கொஞ்ச நாள் இருப்பதுபோலத் தோன்றுவதுதாம். ஆதலால் பாக்கி இடங்களில்தான் லாபநஷ்டம் பாரத்தாலும் பார்க்கலாம்; குருவிடத்தில் மட்டும் லாப நஷ்டம் பாராமல் சரணாகதி பண்ணிவிடவேண்டும்.

பூமௌ ஸ்கலித பாதானாம் பூமிரேவ (அ)வலம்பனம் |

த்வயி ஜாத (அ)பராதானாம் த்வமேவ (ஆ)லம்பனம் குரோ ||

மாடியிலிருந்து விழுந்தால் பூமி தாங்கும். மரத்திலிருந்து விழுந்தாலும் தாங்கும். பூமியிலேயே தடுக்கி விழுந்தால்? அப்போதும் பூமிதான் தாங்கும். ஈச்வராபசாரத்தை குருவினிடம் சொல்லித் தீர்த்துக்கொள்ளலாம். குருவிடம் அபசாரம் பண்ணினால், எங்கே அபசாரம் பண்ணினோமோ அங்கேயே தான் நிவர்த்திக்கும் போகவேண்டும்.

குரு ஒருவரைத் தேடவேண்டுவது நமது கடமை. மனம் மாறாமல் இருக்கவேண்டுமென்று பெரியவர்களை நாம் தேடுகிறோம். மனஸை அர்ப்பணம் பண்ணுவதைப் பிரதானமாக வைத்துக் கொண்டால் யாராயிருந்தாலும் சரி; போதும். இன்னம் சொல்லப் போனால், குரு நல்லவராக இருந்தால் அவரிடம் பக்தியாய் இருப்பதில் நமக்கு என்ன பெருமை? யோக்கியதை இல்லாத ஒருவர் குருவாக இருந்தும் அவரிடம் அடங்கியிருந்தாலே மனது நல்ல பக்குவம் அடையும். ‘ஈச்வரன் நம்மைப் பரீக்ஷித்து மனஸின் பக்குவத்தைத் திடப்படுத்தவே இப்படி ஏற்பட்டிருக்கிறது; இதனால்தான் அதிகப் புண்ணியம் உண்டு’ என்று வைத்துக்கொள்ள வேண்டும். மஹாமகக் குளத்தில் ஊற்றுப்போட்டு ஜலம் இறைத்தால் அதில் வெள்ளைக்காரன்கூட ஸ்நானம் பண்ணுவான். எவ்வளவு சேறானாலும் “இது புண்ணிய தீர்த்தம்” என்று முழுகினால் தான் உண்மையான பக்தி இருக்கிறதென்று அர்த்தம். இப்படி நம்மையே பரீக்ஷித்துக் கொள்ளலாம். மஹான்களை அடைகிறது நம்முடைய மனோபக்குவத்தைப் பரீக்ஷிக்க விரும்பாத சோம்பலால்தான். அவர்கள் பெரியவர்களாக இருந்தால் நமக்கு ஒரு பெருமையும் இல்லை. நம்முடைய பக்தியும் பிரயோஜனப் படவேண்டும். ஒரு மஹாக்ஷேத்திரத்தின் கோயிலில் அர்ச்சகர் மிகவும் அசுத்தியாக இருக்கிறாரென்று வைத்துக் கொள்ளுவோம். அதற்காக நாம் தரிசனம் செய்யாமல் இருக்கிறோமா? நாம் அர்ப்பணம் பண்ணுவதுதான் லாபம். குரு மஹானாக இல்லாவிட்டாலும் நாம் பக்தியில் திடமாக இருந்தால் அதிகப் புண்ணியம் உண்டாகிறது.

நம் மனம் போகிற வழியில் விடாமல் எங்கேயோ ஓரிடத்தில் அதை அடக்கிப் போட்டு சரணாகதி பண்ணிவிட்டால் போதும். நம்மைக் காப்பாற்றப் போகிறவர் என்று முதலில் ஒருத்தரை நம்பினபோது அவரிடம் பண்ணின சரணாகதியை எக்காலத்திலும் மாற்றிக்கொள்ளாமலிருந்து விட்டால் எந்த ப்ரயோஜனத்துக்காக இந்த குருவிடம் நாம் வந்தோமோ அது ஈச்வர ப்ரஸாதமாகக் கிடைத்துவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is குருகுல வாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மதத்தின் மூலாதாரம் வேதமே
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it