Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

குருகுல வாஸம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ராஜாங்கம் என்பது இந்த லோகத்தில் இருக்கும் பொழுது நாம் நன்றாக இருப்பதற்காக ஏற்பட்டது. துஷ்டர்களால் ஸாதுகளுக்குக் கஷ்டம் ஏற்படக் கூடாது, பலிஷ்டர்களால் துர்பலர்களுக்குக் கஷ்டம் உண்டாகக் கூடாது. இந்த ரக்ஷணையைத் தருவதற்கும், ஜனங்களுடைய மற்ற இகலோக ஸெளக்கியங்களை ஏற்படுத்தி தருவதற்காகவும், ராஜா என்று ஒருத்தனை வைத்தார்கள். இப்போது மந்திரி சபை என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். எதுவானாலும் நமக்கு இந்த ரக்ஷணையையும் வசதிகளையும் தருகிற ராஜாங்கத்துக்குப் பிரதியாக நாம் சேவை செய்கிறோம்; பலவிதமான வரிகள் செலுத்துகிறோம்.

இந்த லோகம் சாச்வதமல்ல. சாச்வதமான இன்னொரு லோகத்தில் நாம் இடம் பிடித்தாக வேண்டும். அதற்கு நாம் போகவொட்டாமல் உட்பகை என்று சொல்லுகிற ஆறு துஷ்டர்கள், பலிஷ்டர்கள் நம்மைத் தடுக்கிறார்கள்1. இவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டு, பக்தி, த்யான, ஞானாதிகளில் நாம் முன்னேறினால்தான் அந்த சாச்வத லோகத்துக்குப் போய் சேரலாம். இப்போதும் எப்போதும் நமக்குள்ளேயே இருப்பதுதான் அந்த சாச்வத லோகம் என்றால்கூட, அதற்குப்போய்ச் சேருவதுதான் பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது. அங்கே போவதற்கு நமக்கு ராஜாவாக, ராஜாங்கமாக ஸஹாயம் செய்கிறவரைத்தான் ஆசார்யர் என்பது. இந்த லோகத்தில் ஸுகமாக இருப்பதற்காக ராஜா (அல்லது மந்திரி ஸபை) வேண்டியிருக்கிறது போலப் பரலோகம் (என்கிற உள்ளுலகமான ஆத்ம லோகம்) போகும் படியான காரியத்துக்கு ஆசார்யர் வேண்டும். இந்த லோகத்தில் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. இந்த லோகத்தில் நன்றாக இல்லாமலே போனால்கூடப் பரவாயில்லை. ஆனால் இங்கேயிருந்து போன பிறகு மறுபடி திரும்பி வராமல் அந்த சாச்வத லோகத்தில் சேர வேண்டியது ரொம்பவும் அவசியம்.

இந்த நச்வரமான [அழியும் தன்மை வாய்ந்த] லோக வாழ்க்கையின் போதேதான் நாம் அந்த சாச்வத வாழ்க்கைக்கு வழி பண்ணிக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையைத் தொடங்குகிற போதே இந்த முக்கியமான காரியத்துக்கு ஏற்பாடு பண்ணிவிடவேண்டும். அதற்காகத்தான் பாலப் பருவத்திலேயே பிரம்மச்சரிய ஆச்ரமம் என்று ஆரம்பித்து குருகுல வாஸம் பண்ணவைத்தார்கள்.

இப்படி வைத்ததால், அந்தச் சின்ன வயசிலேயே இந்த லோகம் பொய், பரமாத்மா தான் நிஜம் என்று அதனிடமே ஒரு ஜீவனைத் திருப்பி விட்டார்கள் என்று அர்த்தமில்லை.

குருகுலத்தில் ஆத்ம வித்யா சாஸ்திரங்களைச் சொல்லிக் கொடுத்தது வாஸ்தவம். ஆனால் அதற்காக அப்போதே மாணாக்கனை லோக வாழ்க்கையை விட்டு ஓட்டி விடுவதாக அர்த்தமில்லை. மற்ற ஸகல வித்தைகளையும், சாஸ்திரங்களையும் (இவற்றில் இக்காலத்திய ஸயன்ஸ்களில் அநேகம் வந்துவிடும்) , காவியங்களையும் நாடகங்களையும் கூட குருகுலத்தில் கற்றுக் கொடுத்தார்கள். இந்தப் பெரிய லோக நாடகத்தில் அரும்பு பூவாகி, பூ பிஞ்சாகி, பிஞ்சு காயாகி, அந்தக் காய்தான் கனிந்து பழமாகும் என்ற நியாயம் நம் பூர்விகர்களுக்கு நன்றாகத் தெரியும். அபூர்வமாக எங்கேயோ எவரோ பால்யத்திலேயே பரம ஞானியாக வைராக்யத்தோடு மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்காரலாமே ஒழிய, மற்றவர்கள் படிப்படியாகத்தான் ஏறவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் இது படிப்படியாகத்தான் இருந்தாலும் ஏற்றிவிடுவதாக இருக்க வேண்டும். இறக்கிவிடுவதாக விட்டுவிடக்கூடாது என்றுதான் பிரம்மசரியத்துக்கு அப்புறம் கிருஹஸ்தாச்ரமமும், அதிலே தாம்பத்யம், சந்ததி விருத்தி எல்லாவற்றையும் வைத்து அப்புறம் ஓரளவு வைராக்யத்தோடு குடும்பத்தைவிட்டு, ஆனாலும் வைதீக கர்மாவை விடாமல் நடத்துகிற வானப்ரஸ்த ஆச்ரமத்தை விதித்து, கடைசியில் பூவை இயற்கையாக முதிரவிட்டுக் காயாகிக் கனிகிற நிலையில் ஸந்நியாஸத்தை வைத்தார்கள். லோக வாழ்க்கையை எடுத்த எடுப்பிலே விட்டுவிட முடியாது. அதனாலே அப்படிச் செய்ய வேண்டாம். ஆனால் அதே சமயத்தில் சாச்வதமான பரலோக வாழ்க்கையையும் மறக்கக்கூடாது. இவன் ஒரேடியாக ஏறாவிட்டால் பரவாயில்லை; ஆனால், ஒரே உருளலாக உருண்டு கீழேயும் போய் விடக்கூடாது – என்றுதான் தர்ம சாஸ்திரங்களை இவனுக்கு வழிகாட்டியாக வைத்து, இவன் எந்த ஸ்டேஜில், எந்த ஆசிரமத்திலிருந்தாலும், எப்போதும் இவனுக்குக் கொஞ்சம் ஆத்ம சிந்தனை, தெய்வ பக்தி, நல்லொழுக்கம், பரோபகார பண்பு எல்லாம் இருக்கும்படி சீர்படுத்திக் கொடுத்தார்கள். ஆரம்பித்திலேயே வாழ்க்கையின் லக்ஷ்யமான பரமதத்வத்துக்கு விதையைப் போட்டுவிட வேண்டும்; அப்போதுதான், ஒருவன் உடனே அதற்கென்று தன்னை அர்ப்பணம் பண்ணிக்கொள்ளாவிட்டாலும், அவன் லோக வாழ்க்கை நடத்துகிற போதுகூடக் கெட்டுப்போய் விடாமல், இருக்கிற நிலையிலிருந்து இறங்கி விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக மேலே போவான் என்று தான் அவனுக்கு பிரம்மச்சரிய ஆசிரமத்திலேயே வேத உபநிஷத்துகளை உபதேசித்து விட்டார்கள். அதை உடனே உபயோகித்துக் கொண்டு [ practical -ஆக apply பண்ணிக்கொண்டு] ஆத்ம விசாரம் பண்ணி ஜீவன் முக்தனாகிவிட வேண்டும் என்றில்லை. அது பாங்கில் போட்ட டிபாஸிட் மாதிரி. இவன் பக்குவம் அடைகிற வரையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வட்டி மாதிரி வந்து கொண்டிருந்தால் போதும். அப்புறம் உரிய பருவத்தில் அதைப் பூராவாக draw பண்ணி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த டிபாஸிட்டை வாழ்க்கை ஆரம்பிக்கிறபோதே போட்டு இந்த வட்டி கிடைக்கிற மாதிரியாகப் பண்ணிவிடவேண்டும். இல்லாவிட்டால் இவன் யௌவனத்தின் வேகத்திலும், நடுத்தர வயசின் உணர்ச்சி விகாரங்களிலும், ஏற்ற தாழ்வுகளிலும், விருத்தாப்பியத்தின் அசக்தத்திலும் [பலவீனத்திலும்] வீணாகவே போய்விடுவான்.

தற்போது பள்ளிக்கூடங்களிலும் காலேஜ்களிலும் ஒருத்தனின் ஜீவனோபாயத்துக்காக உதவுகிற படிப்பைச் சொல்லிக் கொடுப்பதுபோல, ஆதி காலத்திலும் இவனுக்குத் தொழிலைச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆனாலும் தொழிலைச் கொடுக்கிறபோதே அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அத்யாத்ம சாஸ்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். இதனால் இப்போது நடக்கிறமாதிரி வயிற்றுப்பாட்டுக்கு மட்டும் வழி செய்து விட்டு, ஜனங்களின் நன்னடத்தை (மொராலிடி) , ஆத்மாபிவிருத்தி இவற்றுக்கு ஒன்றுமே செய்யாத மாதிரி அப்போது இல்லை. பரலோக லக்ஷ்யம், தர்மம்- மொராலிடி இவற்றைக் கெட்டியான அஸ்திவாரமாக வைத்துக்கொண்டே ஜீவன விருத்தி நடக்க வழி செய்தார்கள்.

ஒரேடியாக மநுஷ்ய ஸ்வபாவத்தைக் கவனிக்காமல் இவனை அத்யாத்ம மார்க்கம், வைராக்யம் என்று சின்ன வயசிலேயே கட்டுப்படுத்தவுமில்லை; ஒரேடியாக இவனைத் தறுதலையாக அறுத்துவிட்டிருக்கவும் இல்லை.

ரொம்பவும் sympathy, understanding என்று சொல்கிறார்களே அப்படி மநுஷ்ய இயல்பை அனுதாபத்தோடு புரிந்து கொண்டு, ஆனாலும் ஆத்மா வீணாகப் போகாதபடி, அதை ஹிதமாகப் பக்குவம் பண்ணுகிற தினுசில், ஆச்ரம தர்மங்களை விபாகம் செய்திருக்கிறார்கள் [வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.] காளிதாசன் வாக்கிலே இது தெரிகிறது2. முதலில் ‘சைசவே அப்யஸ்த வித்யானாம்’ என்கிறான். அப்படியென்றால், பாலப் பிராயத்திலேயே சகல வித்தைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடவேண்டும். வேதம், உபநிஷத்துக்களைக் கூட அப்போதே தெரிந்து கொண்டுவிட வேண்டும். எதுவும் மனஸில் பதிந்து ஏறுகிற காலம் அதுதான். ஆனால் இதற்காக உடனே ஆத்மவிசாரம் என்று ஓடிப்போய் மூக்கைப் பிடித்துக் கொள்ளவேண்டுமா என்றால், அப்படி இல்லை. அடுத்தபடியாக ‘யௌவனே விஷயைஷிணாம்’ என்கிறான். யௌவனத்தில் கிருஹஸ்த தர்மத்தை மேற்கொண்டு இல்லற ஸுகங்களை (துக்கங்களையும்தான்) அநுபவிக்க வேண்டும். இந்த ஸுகமும் உண்மையில் துக்கம் தான் என்ற பேச்சு இந்த ஸ்டேஜில் எடுபடாது. ஆனாலும் இவன் குருகுலவாஸத்தின் போது அநுஷ்டித்த பிரம்மச்சரிய நியமமும், படித்த வேத உபநிஷத்துகளும் இவனை ஒரேடியாக விஷய ஸுகங்களில் தலைதெறித்துப் போகாதபடி கட்டுப்படுத்தும். இது இவன் ஓரளவுக்கு பொருள் சேர்த்து ஸம்பாத்தியம் செய்கிற சமயமும் ஆகும். ஆனாலும் பொருளாசையே பேராசையாகி விடாது. இவன் தர்மத்தை ஒருக்காலும் மீறாதபடி, முன்னே செய்த வித்யாப்யாஸம் இவனை ரக்ஷிக்கும். அதோடு இவனுக்கு இருக்கிற கர்மாநுஷ்டானம், அத்யாபனாதிகள், ஏராளமான யாகங்கள், யக்ஞங்கள் இவை யாவும் இவனை ஒரு நெறியில் (discipline –ல்) வைத்துச் சித்தம் ரொம்பவும் விகாரப்பட்டுப் போகாமல் காப்பாற்றும்.

இது பிராம்மணனுக்குச் சொன்னது. எந்த ஜாதியாரானாலும் அவரவர்களுக்கேற்பட்ட தொழிலைச் செய்து, பேராசையும் பொறாமையும் இல்லாமல் செய்து, ஈச்வரார்ப்பணம் பண்ணினால் அதுவே சித்த சுத்தி தந்துவிடும்.

தர்மாவிருத்தோ பூதேஷு காமோஸ்மி என்று பகவானே சொன்னதுபோல்3, தர்மம் தப்பாமலே சில இயற்கையான ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது யௌவனத்துக்கென்று சாஸ்திரமே அங்கீகரித்தது. நாளடைவில் கர்மாநுஷ்டானங்களின் பலம் ஏறி ஏறி ஆசை, கோபம் முதலான வேகங்களெல்லாம் தாமாகக் குறைந்து கொண்டு வர ஆரம்பிக்கும். இப்போது கொஞ்சம் கிழத்தனமான வயசும் வந்திருக்கும். இந்த ஸமயத்தில் வார்த்தகே முனிவ்ருத்தீனாம் என்கிறான் காளிதாஸன். கிழப்பருவம் ஆரம்பிக்கிற காலத்தில் முனிவர்களை, தபஸ்விகளை அடுத்து உபதேசங்களைப் பெற்று, ஆசைகளைப் போக்கிக்கொண்டு, (விராகம், வீதராகம் என்று சொல்வார்கள் – ஆசை போன நிலையை, அப்படிப்பட்ட விரக்தியுடன்) நிறைய பகவத் த்யானம், தபஸ், ஆத்ம சிந்தனையென்று ஈடுபடவேண்டும். வானப்ரஸ்தம் என்ற இந்த ஆச்ரமத்தில் வீடு வாசலையும், பிள்ளை குட்டிகளையும் விட்டுவிட்டுப் பத்தினியை மட்டும் கூட அழைத்துக் கொண்டுபோய்க் காட்டிலே வைதிக கர்மாக்களை அநுஷ்டானம் பண்ண வேண்டும். அந்த அநுஷ்டானத்துக்கு ஸஹாயம் செய்வதற்காகத்தான் பத்தினி வேண்டும்; விஷய ஸுகத்துக்காக அல்ல. அப்புறம் கடைசி ஸ்டேஜ். யோகேனாந்தே தநுத்யஜாம் – அதாவது வைதீக கர்மாக்களையும் விட்டு விட்டு ஸந்நியாஸியாகி, சரீரத்தை விடுகிறபோது கொஞ்சம் கூட அழுகையில்லாமல் பேரானந்தமாக பரமாத்மாவுடன் இரண்டறச் சேர்ந்து விடுகிற யோகமாக மரணத்தை ஆக்கிக் கொண்டு விடவேண்டும்.

அந்தப் பேரானந்த மோக்ஷத்துக்கு எங்கே அஸ்திவாரம் போட்டிருக்கிறது என்றால் ”சைசவே அப்யஸ்தவித்யானாம்” என்று பாலபருவத்தில் படிக்கிறபோதே போட்டிருக்கிறது. அப்பொழுது போட்டுக் கொடுத்த moral foundation (தர்ம நெறி அடிப்படை) தான் அப்புறம் ஜன்மா முழுக்க கை கொடுத்துக் கொண்டே வந்து, குழந்தையாக இவன் படித்த உபநிஷத்தின் லக்ஷ்யமான ஜீவப் பிரம்ம ஐக்கியத்தை இவன் முடிவிலே சாதிக்கத் துணை செய்கிறது.

குழந்தை பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்து விடவேண்டும். ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்? பணிவு ; அடக்கம்; விநயம்; கட்டுபாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அஹங்காரம் போனால்தான் அடக்கம் வரும். ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியது விநயம்தான்.

மருந்தைவிட பத்தியம் முக்கியம். கல்வி என்கிற மருந்தைவிட விநயம் என்ற பத்தியம் முக்கியமானது. இந்த விநயத்தைத்தான் பழைய காலத்தில் மாணாக்கனின் பிரதான லக்ஷணமாக வைத்தார்கள். ‘விநயமுடையவன்’ என்ற பொருள் கொண்டதான ‘விநேயன்’ என்றே மாணாக்கனுக்குப் பேர். இந்த விநயகுணம் வருவதற்காகவேதான் முக்கியமாக அவனை குருகுலவாஸம் என்று ஒரு ஆசார்யனிடத்திலேயே வாழும்படியாகக் கொண்டு விட்டார்கள். எட்டு வயசுக்குள் உபநயனம் (பூணூல் கல்யாணம்) பண்ணி குருகுலத்துக்கு அனுப்பினார்கள்.

உபநயனம் என்றால் என்ன? ‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’. கண்ணில்லாதவனை இன்னொருத்தன் தான் அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான் நம்மை அழைத்துப் போகிறதென்று தெரிகிறது. எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’ என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம். ‘உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான். அதாவது, குருகுலத்தில் கொண்டு விடுவதற்குப் பூர்வங்கம்தான் உபநயனம்.

இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை – stage of life – என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்.

முதல் ஆச்ரமத்தில் இவனுக்கு ஸகலமுமாக இருப்பது குருதான். கடைசியில் ஸந்நியாஸ ஆச்ரமத்திலும் இன்னொரு குரு வருகிறார். இப்போது போட்ட பூணூலைக் கத்தரித்துப் போடுவதற்கு அந்த குரு வந்தாக வேண்டும். முதல் குரு சொல்லிக் கொடுத்த உபநிஷத் லக்ஷ்யமான பிரம்மத்தை இவன் ஸாக்ஷாத்காரம் பண்ணுவதற்கு ஸஹாயம் செய்வதற்காக அந்தத் துறவியான குரு வருகிறார். ”குரு பரம்பரை” என்று நாம் நமஸ்காரம் பண்ணுவதெல்லாம் அந்த ஸந்நியாஸி குருமார்களைத்தான்.

ஆனால், அந்த குருவிடம் அந்தியத்திலாவது நாம் போகிறதற்கு யோக்யதையை உண்டாக்கித் தருபவர் யாரென்றால் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் நமக்கு ஸகல வித்தைகளையும் தரும் இந்த குரு தான். இவர் அவரைப் போல சந்நியாஸி அல்ல. கிருஹஸ்தர்தான். கடைசி குரு பிரம்மவித் (பிரம்மத்தை அறிந்தவர்) என்றும் முதல் குரு வேதவித் (வேதத்தை அறிந்தவர்) என்றும் சொல்வதுண்டு. இந்த வேதவித்துக்கு பிரம்மத்தைப் பற்றிப் படிப்பறிவு நிறைய உண்டே தவிர அநுபவ ஞானம் இருக்கும் என்று சொல்லமுடியாது. இவரும் ஒரு பிரம்மவித்திடம் போய் இனிமேல்தான் ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பிரம்மத்தை அநுஸந்தானம் பண்ணவேண்டும்.

இதனால் இவர் மட்டம் என்று இல்லை. ஆச்ரம தர்மப்படி வாழ்க்கையின் எந்த ஸ்டேஜில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியிருப்பவர் இவர். மாணாக்கன் விநேயனாக இருக்க வேண்டும் என்றால் அப்படிப்பட்ட விநயத்தை அவனுக்கு ஊட்டுபவராக, அவனது இயல்பான மரியாதைக்கு பாத்திரராக இவர் வாழ்ந்தாக வேண்டும். நல்ல கர்மாநுஷ்டாதாவாக இருக்கவேண்டும். தர்மிஷ்டராக இருக்க வேண்டும். மாணாக்கனிடம் கண்டிப்பாக இருந்து திருத்தும் போதே, மாதா பிதாக்களை விட்டுத் தன்னிடம் வாஸம் செய்ய வந்திருக்கிற அந்தக் குழந்தையிடம் பரிவுள்ளவராக இருக்க வேண்டும். ‘விநேயன்’ என்பது போலவே மாணாக்கனுக்கு ‘அந்தேவாஸி’ என்று இன்னொரு பெயர் இருக்கிறது. ‘அந்தேவாஸி’ என்றால், ‘உடன் வஸிக்கிறவன்’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். ‘உபநயனம்’ என்னும் போது ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’ என்பதை ‘குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’ என்று பொருள் கொண்டது போலவே, அந்தேவாஸி (‘உடன் வஸிக்கிறவன்’) என்றாலும் ‘குருவுடன் வஸிக்கிறவன்’ என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். வாஸ்தவத்தில் ‘அந்தே’ என்றால் ‘உடன்’ என்றோ ‘பக்கத்தில்’ என்றோ அர்த்தம் இல்லை. ‘அந்தே’ என்றால் ‘உள்ளுக்குள்ளே’ என்றுதான் அர்த்தம். அந்தரங்கம், அந்தராத்மா, அந்தர்யாமி என்றெல்லாம் சொல்லும்போது ‘அந்த’ என்றால் ‘ஹ்ருதயத்துக்குள்ளே’ என்றே அர்த்தம். அம்மாதிரி ஆசார்யன் தன் ஹ்ருதயத்துக்கு உள்ளேயே சீஷப்பிள்ளைகளை அழைத்து வைத்துக் கொண்டு விட வேண்டும். அத்தனை அன்பு காட்ட வேண்டும்.

சிஷ்யனிடம் இவருக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை ஆற்றாவிட்டால் இவருக்கே பெரிய ஹானி உண்டாகும். இந்தக் காலத்தில் உபாத்தியாயர்கள், ‘பையன் உருப்பட்டால் என்ன? உருப்படாவிட்டால் என்ன? நம் சம்பளம் எப்படியும் வருகிறது’ என்று இருக்கலாம். அந்த மாதிரி குருகுலம் நடத்துகிறவர் இருக்க முடியாது. ஏனென்றால் அங்கே குரு-சிஷ்ய உறவு வெறும் வியாபார ஒப்பந்தம் (பிஸினெஸ் கான்ட்ராக்ட்) மாதிரி இல்லை. இப்போதுள்ள படிப்புமுறை பிஸினெஸ் கான்ட்ராக்ட்டுக்கும் ஒரு படி கீழே! பிஸினஸில்கூட ஒரு விலை கொடுத்தால் அதற்கான ஒரு வஸ்துவைத் தரத்தான் வேண்டும். ஆனால் இங்கேயோ சம்பளம் (விலை) கொடுத்த ஒரு மாணாக்கன் ஃபெயில் ஆனால் கூட அது உபாத்தியாரைப் பாதிப்பதில்லை. குருகுலம் நடத்துகிற பழைய கால குருவோ ஒரு மகத்தான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது என்ன?

”சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்” என்று நீதிசாஸ்திரம் சொல்கிறது. அதாவது சிஷ்யன் பண்ணுகிற பாபம் குருவையே போய்ச் சேருகிறது. இவனுக்கு வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தராமல், இவனை ஒழுக்கமுள்ளவனாக்கவும் அவர் பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். எடுத்துக் கொண்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றாவிட்டால், அதற்கு தண்டனை உண்டு. சிஷ்யனை இவர் யோக்கியனாக்க முடியவில்லை, அவன் ஒரு பாபம் செய்கிறான் என்றால், அந்தப் பாபம் சிஷ்யனைத் தாக்காது; அவனைச் சீர்திருத்தத் தவறிய குருவையே சென்றடையும்.

ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி நடந்தால் அதன் பாப பலன் அவளைத் தாக்காது; அவளை நல்வழிபடுத்தத் தவறிய புருஷனைத்தான் சேரும். தேச காரியத்திலே ஒரு பிரஜை தப்பு பண்ணினால், அதற்கான பாபம் அவனைத் திருத்தி வைக்காத ராஜாவைத்தான் சேரும். அந்த ராஜாவே பண்ணும்படியான பாபம், அவனை நல்வழிப்படுத்தத் தவறிய ராஜப் புரோஹிகிதரைச் சேரும். நீதி சாஸ்திரத்தில் இப்படியாக ஒரு பர்த்தாவுக்கும், ராஜாங்கம் நடத்துகிறவனுக்கும், ஆசார்யனுக்கும் ரொம்பப் பெரிய பொறுப்பைத் தந்திருக்கிறது.

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராஜபாபம் புரோஹிதம் |

 பர்த்தாரம் ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத் ||

ஒரு பர்த்தா என்றால் மனைவியையும், ராஜாவானவன் குடிமக்களையும், குரு என்கிறவன் சிஷ்யனையும் அதட்டி அதிகாரம் பண்ணிக் கொண்டிருப்பதற்காக ஏற்பட்டவர்கள் அல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதீனத்தில் உள்ளவர்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். அந்த கடமையை நிறைவேற்றத் தவறினால் தங்கள் ஆதீனத்தில் இருக்கிறவர்களின் பாபத்தைத் தாங்களே வாங்கிக்கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள்.

“சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத்” என்று தெரிந்து கொண்டிருந்த பழையகால குரு எப்படியிருந்திருப்பார்? சிஷ்யனை நல்வழிப்படுத்துவதற்கான ஆத்ம சக்தி பெற்றவராகத் தம்மைப் பண்ணிக் கொண்டிருப்பார். அதாவது தாமே முன்னுதாரணமாக (example ஆக) அந்த நல்வழியில் நடந்து காட்டிக் கொண்டிருப்பார். “எங்களிடத்திலுள்ள நல்ல நடத்தைகளை (அஸ்மாகம் ஸுசரிதானி) நீ பின்பற்று” என்று தைத்திரீய உபநிஷத்தில் குரு சிஷ்யனிடம் சொன்னது இதைத்தான்.

அப்படிப்பட்டவரிடத்தில் ஒரு ஜீவனை பால்யத்திலேயே கொண்டு சேர்த்து விடவேண்டும்.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு பிதாவுக்கும் வேத சாஸ்திரங்கள் நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. இருந்தாலும் அவரவரும் தம் பிள்ளைகளுக்குத் தாங்களே கற்றுக் கொடுக்காமல் இன்னொரு குருவிடம் கொண்டுபோய் விட்டார்கள். ஏன்? அப்பா- பிள்ளை என்றால் ரொம்பவும் ஸ்வாதீனம் கொடுத்துப் போய்விடும். அப்பாவும் செல்லம் கொடுத்து விடுவார். பிள்ளையும் ஸ்வாதீனத்தினால் அவருக்கு ரொம்பவும் அடங்கி நடக்காமல் ஸ்வாதந்திரியமாக இருக்கப் பார்ப்பான். அடக்கம் (விநயம்) என்பதான வித்யையின் ஆதாரப் பண்பே இல்லாவிட்டால் இவன் என்ன படித்துதான் என்ன பிரயோஜனம்?

உபநிஷத்துக்களைப் பார்த்தால் இது தெரியும். பாரத்வாஜர் மஹா பெரியவர். ஆனாலும் அவருடைய புத்ரரான ஸுகேசர் என்பவர் ஸமித்தும் கையுமாக குருவைத் தேடித் தேடிப்போய் பிப்பலாதரை அடைந்தார் என்று “பிரச்னோபநிஷத்” ஆரம்பிக்கிறது. (ஸமித்து என்றால் சுள்ளி. எளிதில் பிரீதி அடைந்துவிடும் அந்தக்கால குருமாருக்கு இதுதான் பெரிய காணிக்கை. அவருடைய யக்ஞ அநுஷ்டானத்துக்கு சுள்ளி தானே முக்கியம்?) இப்படி இன்னம் பல பேரையும் சொல்லியிருக்கிறது. ச்வேதகேது என்ற பிரம்மச்சாரியைப் பற்றி சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது. இவன் தகப்பனாரிடமே வித்யாப்யாஸம் பண்ணிவிட்டு ராஜ சபைக்குப் போகிறான். அங்கே ராஜாவாயிருந்த ஸத்வித்வானான ப்ரவாஹணர் இவனைக் கேள்விகள் கேட்கிறார். இவனுக்கு ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்லத் தெரியவில்லை. பிதாவிடமே வித்யாப்யாஸம் பண்ணினால் பிரயோஜனமில்லை என்று இங்கே indirect ஆக (மறைமுகமாக) சொல்லுகிற மாதிரி இருக்கிறது.

அடக்க குணம் வருகிறது ரொம்பவும் கஷ்டம். அதுவும் கல்வி கற்கக் கற்கத் “தான் அறிவாளி” என்ற அஹங்காரமும் ஏறிக் கொண்டே தான் வரும் என்பது இந்த ச்வேதகேதுவின் இன்னொரு கதையிலிருந்து தெரிகிறது. இதுவும் சாந்தோக்கியத்திலேயேதான் வருகிறது. இவன் பன்னிரண்டு வருஷங்கள் பிதாவைவிட்டு வெளி ஆசார்யர்களிடம் படித்துவிட்டுத் திரும்புகிறான். தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்ற கர்வத்துடன் திரும்புகிறான். அப்போது இவனுடைய பிதாவே கர்வத்தை ஒடுக்குகிறார். பிரம்மத்தைப் பற்றி அவனிடம் கேட்டு, அவனுக்கு அது அடியோடு தெரியவில்லை என்று அவனே உணர்ந்து, தலைகுனிந்து, தம்மிடம் உபதேசம் வேண்டும்படிப் பண்ணுகிறார்.

அடக்கம் வேண்டும் என்பதற்காகவேதான் “குருகுல வாஸம்” என்று வைத்து, வீட்டைவிட்டுப் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள். இப்போது வீட்டை விட்டு ஹாஸ்டல் என்று வெளியே போகிறபோது, வீட்டில் வளருவதைவிட இவன் இன்னம் ஒழுங்கு தப்பிப் போகிறதைத்தான் அதிகம் பார்க்கிறோம். அந்த நாளில் இப்படி இல்லாமலிருந்ததற்கு முதல் காரணம் ஆசார்யனாக இருக்கப்பட்டவனின் வாழ்க்கை உதாரணம். இரண்டாவதாக, பிரம்மசாரிக்கு வைத்த அநேக நியமங்கள். குறிப்பாக பிக்ஷாசர்யம். பிக்ஷாசர்யம் என்றால் பிக்ஷை எடுப்பது என்று அர்த்தம்.

பூணூல் போட்டவுடன் பாலனைப் பார்த்துத் தகப்பனார் “பிக்ஷாசர்யம் சர” என்கிறார். ‘பிச்சை வாங்கி குருவிடம் கொடுத்து, அதில் அவர் கொடுப்பதைச் சாப்பிடும் நியமத்தை மேற்கொள்ளு’ என்று அர்த்தம்.

நாற்பது வேலி ஐம்பது வேலி நிலக் குடித்தனக்காரனானாலும், தன் புத்திரனை இப்படி பிக்ஷாசர்யம் பண்ணும்படி குருகுலத்தில் கொண்டு விட்டுவிட வேண்டும்.

பிதா “பிக்ஷாசர்யம் சர” என்றவுடன் “பாடம் என்று இதற்குப் புதுப் பூணூல்காரன் பதில் சொல்லவேண்டும். “பாடம் (Baadham) என்றால் “அப்படியே செய்கிறேன்” என்று அர்த்தம்.

எத்தனை பணக்காரன் வீட்டுப்பிள்ளையானாலும் குருகுலவாஸத்தின் போது ஒரு கோவணத்தைக் கட்டிக் கொண்டு வீடுவீடாகப் போய் “பவதி் பிக்ஷாம் தேஹி” என்று பிச்சை வாங்க வேண்டும். ஏன் இப்படி வைத்தார்கள்? இவனுடைய அஹங்காரத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்குப் படிப்பாளி என்ற கர்வம் வந்துவிடக் கூடாது. படிப்பின் வாஸ்தவமான பயனை இவன் அடைய வேண்டுமானால் இவனை விநயமுள்ளவனாக்க வேண்டும் என்பதற்கே இப்படி பிக்ஷாசர்யம் என்பதை வைத்திருக்கிறது.

சிஷ்யன் பிக்ஷை வாங்கி வந்ததை குருவிடம் சேர்த்து விடுவான். அவர் பத்தினியிடம் கொடுத்துப் போடச் செய்வார். அதாவது சிஷ்யர்களுக்கு குரு போட்டுத்தான் சாப்பாடு கிடைத்தாக வேண்டும்.

இவன் அகத்திலே சாப்பிட்டுக் கொண்டு, ஸ்கூலிலோ, காலேஜிலோ போய்ப் படிக்கிறபோது, “வாத்தியார் கிடக்கிறார்”என்று அலக்ஷ்ய புத்தியோடு நினைக்கிறான். அவர் போட்டுத்தான் இவன் சாப்பிட்டாக வேண்டும் என்கிற போது இப்படி நினைக்க மாட்டான். அவருக்கு அடங்கித்தான் நடப்பான்.

சிஷ்யர்கள் வாங்கிவரும் பிக்ஷை இவர்களுக்கு மட்டுமின்றி குருவின் குடும்பத்துக்கும் போதுமானதாக இருக்கும். ஆனாலும் அப்போதிருந்த ஏற்பாட்டில் சிஷ்யன் குருவுக்குச் சோறு போடுகிறான் என்கிற மாதிரித் தெரியாமல், குருவே சிஷ்யனுக்குப் போடுகிறார் என்கிற மாதிரியாகத்தான் ஒழுங்கு செய்திருந்தது.

பிரம்மச்சாரி சாப்பிடுவதற்குக் கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசிக்காக ஆத்மாபிவிருத்தியைப் பாதிக்கும்படியான பதார்த்தங்களை தின்னக்கூடாது. இப்போது ஹாஸ்டலில் சுதந்திரமாக இருக்கிற மாணாக்கன் எதை வேண்டுமானாலும் தின்கிறான். அதனால் மனோவ்ருத்தி [மனத்தின் போக்கு] கெட்டுப் போகிறது. குருகுல வாஸத்தில் குரு இப்படிப்பட்ட அபக்ஷ்யங்களை [உண்ணக் கூடாதவற்றை] சிஷ்யனுக்குப் போடமாட்டார்.

சாதாரணமாக ஒரு வேதத்தையும் அதன் அங்கங்களையும் மற்ற வித்யைகளையும் கற்பதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் பிடிக்கும். அதாவது எட்டு வயசுக்கு குருவிடம் வந்த பையன் சுமார் இருபது வயசு வரையில் குருகுலவாஸம் பண்ணியாக வேண்டும். பதினாலு பதினைந்து வயசுக்கு மேல் மனஸில் விகாரங்கள் ஏற்படக்கூடிய பருவம். “காளைப் பருவம்”என்று சொல்கிறபடி காளை மாதிரி இஷ்டப்படி ஓடவேண்டும் என்று வேகம் ஏற்படுகிற சமயம். இப்படிப்பட்ட சமயத்திலே சாந்தராகவும், பிரியராகவும், நல்ல சீலமுள்ளவராகவும் இருக்கிற குருவிடத்திலே படித்துக் கொண்டு பிக்ஷாசர்யம் பண்ணி வருவதானது பிரம்மசாரியின் இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, அவனை நல்ல பிரம்ம தேஜஸ் உள்ளவனாக ஆக்குகிறது. சரியாக இந்த விகாரங்கள், வேகங்கள் தோன்றுகிற காலத்திலேயே இவனுக்கு குருகுல வாஸத்தையும், பிக்ஷாசர்யத்தையும் ஏற்படுத்தினால் அது விபரீதமாகத்தான் ஆகும். பெரிதாக வெள்ளம் வருகிறபோது கரைபோடப் பார்த்தால், கரையையும் கரைபோட வருகிறவர்களையும்கூட அது அடித்துக் கொண்டு போய் விடும். அந்த மாதிரிதான் இதுவும். அதனால்தான் இவனை இதற்கெல்லாம் ரொம்பவும் முந்தி, ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு முந்தியே, எட்டு வயசுக் குழந்தையாக இருக்கிறபோதே, குருகுல வாஸத்துக்கும், பிக்ஷாசர்யத்துக்கும் பழக்கப்படுத்திவிடச் சொல்கிறது நம் சாஸ்திரம். காமம் உள்ளே புகுமுன்பே காயத்ரி புகுந்து இவனைச் சுத்தப்படுத்த ஆரம்பித்து விட்டது. அதுவும் இதரப் பிரம்மசர்ய ஆசிரம நியமங்களும், எல்லாவற்றுக்கும் மேல் பிக்ஷாசர்யமும் இவனுக்கு அடக்கத்தை உண்டாக்கி விடுகின்றன. இதில் இந்திரிய அடக்கமும் சேர்ந்துவிடுகிறது. பிரம்மசாரி என்பவன், பேருக்கு அப்படியில்லாமல், வாஸ்தவமாகவே அப்படி இருப்பான்.

இகலோகத்துக்கு ராஜா (ராஜாங்கம்) மாதிரிப் பரலோகத்துக்குக் குரு என்று சொன்னேன். நேராகப் பரலோகத்தைக் காட்டிக் கொடுக்கிற ஸந்நியாஸ ஆசிரம குருவைப் போலவே, இதற்கு ஆதியில் அஸ்திவாரம் போட்ட வித்யாப்யாஸ குருவும் முக்கியமானவர் என்று சொன்னேன். ராஜாங்கத்துக்கு சேவை செய்கிறோமல்லவா? வரி கொடுக்கிறோமல்லவா? இப்படியே ஆரம்ப ஆசார்யர், அந்திம ஆசார்யர் இரண்டு பேருக்கும் பண்ணவேண்டும். பணிவிடை புரிய வேண்டும். தக்ஷிணை தர வேண்டும். நாம் ஒருத்தருக்கு ஒன்றைத் தராமல், அவரிடமிருந்து மட்டும் பிரயோஜனத்தை அடைந்துவிட முடியாது. எந்த வஸ்துவானாலும் அதற்கு விலை கொடுத்து வாங்கினால்தான் நம்மிடம் நிலைத்து நிற்கும். ஸந்நியாஸ குருவுக்கு தக்ஷிணை என்று அதிகம் வேண்டாம். பணிவிடையே முக்கியம். வித்யாப்யாஸ குருவுக்கு இரண்டும் வேண்டும். அவருக்குக் குடும்பம் உண்டு. அதற்கு பிக்ஷாசர்யம் செய்து பெற்றுவந்த அன்னம் மட்டும் போதாது. இந்தக் குரு யக்ஞாதி கர்மாநுஷ்டங்கள் பண்ணவேண்டியவர். எனவே இதற்கு வேண்டிய திரவியத்தை அவருக்கு தக்ஷிணையாகத் தரவேண்டும். இப்போது படிக்கிற காலத்திலேயே ஃபீஸ் கட்டுகிற மாதிரி தக்ஷிணை கொடுத்தால், ‘நாம் கொடுத்துதான் வாத்தியார் பிழைக்கிறார்’ என்ற திமிர் வந்து, குரு பக்தி போய்விடும். இதனால்தான், ஒருவன் கல்வியை முடித்துவிட்டு, குருகுல வாஸத்தைப் பூர்த்தி பண்ணிவிட்டுத் திரும்புகிறபோதுதான், அவர் கேட்கிற தக்ஷிணையைத் தர வேண்டும் என்று சாஸ்திரத்தில் வைத்திருக்கிறது. குரு செய்ததற்கெல்லாம் பிரதி செய்யவே முடியாது என்றாலும், முடிந்த மட்டும் சேவை செய்து காணிக்கை கொடுக்க வேண்டும்.

சாந்தமும் விநயமும் இருந்த வரையில் வித்யை வளர்ந்தது. இப்போது சாந்தத்தைக் கெடுத்து சலனத்தைக் கொடுத்துத் தடுமாற வைக்க எத்தனை உண்டோ அத்தனை ஸினிமாவும் கதைப் புஸ்தகங்களும், ஸ்கூலில் படிக்கிற நாளிலேயே வந்து சேர்ந்து விடுகிறது. காமம் புகுந்து விகாரப் படுத்தாத பிரம்மச்சரியம் என்பது படிக்கிறவனுக்கு இல்லை. சாந்தத்தைக் கெடுத்துச் சலனத்தைப் பெரிதாகக் கொடுக்கிற இன்னொரு சத்ரு குரோதம். அதைத்தான் பள்ளிக்கூட நாளிலிருந்தே இன்றைய அரசியல் கட்சிகள் பசங்களுக்கு ஊட்டி வருகிறது. சாந்தம் போய், விநயம் போய், அகம்பாவமும் கர்வமும் வந்தபின் அவற்றோடுகூட உண்மையான வித்யையும் போய்விட்டது.

பையன் வீட்டிலேயே ட்யூஷன் கற்றுக் கொண்டால் பையன் யஜமான், வாத்தியார் சேவகன் என்றே அர்த்தம். ஹாஸ்டலிலும், காலேஜிலும்கூடத் ‘தான் யஜமான்’ என்பதால் தான் ஸ்டிரைக் பண்ணுகிறான். வார்டனையும் ப்ரொபஸரையும் அடிக்கப் போகிறான். ஏனென்றால் இங்கெல்லாமும் முதலில் பையனிடம் கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். குருகுலத்திலோ கடைசியாகத் தான் தக்ஷிணை. இம்மாதிரி விஷயங்களில் நம் பூர்விகர்களின் ஸைகாலஜி – நுட்பம் ஆச்சரியமாயிருக்கிறது! பல வருஷம் அவரோடு சேர்ந்து அன்பாகப் பழகினபின் சிஷ்யனுக்கே “எதைத் தருவோம், எதைத்தான் தரக் கூடாது?” என்று நன்றியும் ஆர்வமுமாக இருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பத்தில் “இந்திராணியின் குண்டலத்தைக் கொண்டு வா! நாகரத்தினத்தைக் கொண்டு வா! என்று கேட்ட குருமாரும் உண்டு. ஆனால் இப்படிக் கேட்டவர்கள் அபூர்வமே. சிஷ்யனால் இம்மாதிரி அஸாத்யத்தையும் சாதிக்க முடிகிறது என்று காட்டி அவனைப் பெருமைப்படுத்தவே இவர்கள் இப்படிக் கேட்பார்கள். பொதுவில் எந்த குருவும் துராசை பிடித்து எதுவும் கேட்கமாட்டார். அல்ப ஸந்தோஷியாக எதிலும் த்ருப்திப் பட்டு விடுவார்.

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா |

 உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானின: தத்வதர்சின: ||

என்று பகவான் கீதையில் சொல்கிறார். “பரமாத்ம தத்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அப்படித் தெரிந்து கொண்டவர்களான ஞானிகளிடம் போ. அவர்களிடம் வணக்கத்தோடு, பணிவோடு (ப்ரணிபாதேன) நடந்து கொள்; அவர்களுக்கு சேவை பண்ணு (ஸேவயா) ; கவனமாகக் கேட்டுக் கேட்டு (பரிப்ரச்னேன) உபதேசங்களைப் பெற்றுக் கொள். நீ இப்படியெல்லாம் இருந்தால், அவர்கள் நிச்சயம் ஞானோபதேசம் தருவார்கள்” என்கிறார்.

தத்வதர்சிகளான ஞானிகளைப் பற்றி சொன்னதால் இங்கே தக்ஷிணையை பற்றிச் சொல்லவில்லை. சேவையை மட்டும் சொல்லியிருக்கிறது. தைத்தீரிய உபநிஷத்தில் ‘வித்யாப்யாஸம் செய்விக்கிற குரு இஷ்டப்படும் தக்ஷிணையை அவருக்கு கொடுக்க வேண்டும்’ என்று தெளிவாக சொல்லியிருக்கிறது: ஆசார்யாய ப்ரியம் தனம் ஆஹ்ருத்ய.

“இஷ்டப்பட்ட தக்ஷிணையைக் கேள்” என்றதால், அந்த குருவானவன் துராசை பிடித்துப் பெரிதாக எதுவும் கேட்டு விடமாட்டான். சிஷ்ய லக்ஷணம் மாதிரியே குரு லக்ஷணமும் உண்டல்லவா?

தைத்திரீயோபநிஷத்தில் ஒரு ஆசார்யரானவர் சிஷ்யன் படிப்பை முடித்துவிட்டு அகத்துக்குத் திரும்பும் போது அவனுக்குப் பண்ணும் உபதேசத்தைச் சொல்லியிருக்கிறது. இதை உபநிஷத் காலத்திய கான்வகேஷன் அட்ரஸ் [பட்டமளிப்பு விழா உரை] என்று வேடிக்கையாகச் சொல்கிறார்கள்! அதில் “ஸத்யம் பேசு; தர்மப்படி நட; வேத அத்யயனத்தை ஒரு நாளும் விட்டுவிடாதே (அவரவரும் ஸவதர்மப்படியான தொழிலை விடக்கூடாது என்று அர்த்தம்); இந்த வேத தர்மம் என்றைக்கும் நடக்க வேண்டியதாதலால் கிருஹஸ்தாச்ரமம் ஏற்று, ஸந்ததியை உண்டாக்கி, அதற்கு இந்த வேதச் செல்வத்தை (அல்லது வேத விதிப்படி அவரவருக்கும் லோக க்ஷேமார்த்தமாக ஏற்பட்ட கர்மாவைக்) கொடு. தேவ, பித்ரு காரியங்களை ஒரு நாளும் விடாதே. தாயை தெய்வமாகக் கொள்ளு: தந்தையை தெய்வமாகக் கொள்ளு: ஆசார்யனை தெய்வமாகக் கொள்ளு: அதிதியை தெய்வமாக கொள்ளு: வேதவிதி மீறாத கர்மாக்களையே பண்ணு” என்றெல்லாம் சொல்லி விட்டு, குருவானவர், “எங்களிடம் நீ எப்பேர்ப்பட்ட நல்ல நடத்தையை (ஸுசரித்தை)ப் பார்த்திருக்கிறாயோ அதன்படியே நீயும் நட; வேறு விதமாகப் போகாதே” என்று சொல்கிறார்.

இதிலிருந்து குருவாகப்பட்டவர் மிகுந்த நல்லொழுக்கத்துடன் இருந்திருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.

இப்படி தங்களுடைய நன்னடத்தையைத் தாங்களே சொல்லிக் கொள்வதும் கூட அஹங்காரமாகிவிடும் என்பதால் உடனேயே, “எங்களைவிட சிரேஷ்டமான பிராமணர்கள் எவர்களோ” என்று ஆரம்பித்து, அப்படிப்பட்ட பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைச் சொல்கிறார். சிஷ்யன் மாதிரியே ஆசார்யனுக்கும் விநயம் இருக்கவேண்டும் என்பதால் சொன்ன வார்த்தைதான் இது; உபதேசம் பண்ணுகிற ஆசார்யரும் வாஸ்தவத்தில் ரொம்ப சிரேஷ்டர் தான் என்றே வைத்துக் கொள்ள வேண்டும்.

என்ன செய்வது, எப்படிச் செய்வது என்கிற விஷயங்களில் சிஷ்யனுக்கு சந்தேகம் வந்தால், அவன் யாருடைய உதாரணத்தைப் பார்த்து அதன்படி செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறார். “தீர விசாரித்துத் தெளிவு பெறும் திறமை வாய்ந்தவர்களும், சாஸ்திர முறைப்படியே ஒழுகுபவர்களும், பிறத்தியார் ஏவுதலுக்குக் கட்டுப்படாதவர்களும், குரூர ஸ்வபாவம் இல்லாதவர்களும், அதாவது அன்புள்ளம் படைத்தவர்களும், வெறும் விஷயகாமிகளாக இல்லாமல் தர்மகாமிகளாக, அதாவது அறவழியிலேயே பற்றுள்ளவர்களுமான வேத வித்துக்கள் எப்படி நடப்பார்களோ அப்படி நட” என்கிறார். இங்கே சொன்ன யோக்கியதாம்சங்கள் எல்லாம், உபதேசிக்கிற ஆசார்யருக்கும் இருப்பவை, இருக்க வேண்டியவை என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இத்தனைக் காலம் இவன் குருகுலவாஸம் பண்ணி ஆசார்யரோடேயே இருந்து, அவர் நடக்கிற முறைகளைப் பார்த்துக் கொண்டுவிட்டான். இப்போது அவரைவிட்டு, வீட்டுக்குத் திரும்புகிறான். இனிமேலும் அவன் இதே ஒழுக்கங்களையே பின்பற்ற வேண்டும் என்பதைத்தான் உபநிஷத்தில் ஆசார்யரானவர் எடுத்துச் சொல்கிறார்.

இப்படி நல்ல சீலங்களுடன் இருக்கிற குருவிடம் சிஷ்யனுக்கு ஏற்படுகிற பக்திதான் குருகுல வாஸத்தின் உயிர் நிலை. சிஷ்யனுடைய விநயம், இந்திரிய நிக்ரஹம், பிற்பாடு இவன் படிப்படியாகப் பெறப்போகிற ஈசுவர பக்தி, ஆத்மாபிவிருத்தி எல்லாவற்றுக்கும் மூலதனம் இந்த குரு பக்திதான்.

இம்மாதிரி பக்தியைத் தாமாகப் பெறக்கூடிய ஸ்வயயோக்யதை இல்லாத குருவாக இருந்தாலும் சரி, சின்ன வயசில், “இவர்தான் உனக்கு தெய்வம் மாதிரி” என்று ஒரு குருவிடம் சேர்த்துவிட்டு, இவனை பிக்ஷாசர்யம் பண்ண வைத்து, பிக்ஷான்னத்தை அந்த குரு போட்டுத்தான் இவன் சாப்பிட்டாக வேண்டும் என்று ஒரு ஏற்பாட்டையும் பண்ணி விட்டால் இதுவே ஒரு பக்தியை உண்டாக்கிவிடும். இப்படி குருபக்தியோடு கல்வி கற்றால், இப்போது பார்க்கிற மாதிரி அடங்காமை (பல தினுசிலும் அடங்காமை) இல்லாமல், ஒருத்தன் கற்ற கல்வி அவனுக்கும் வாஸ்தவமாக க்ஷேமத்தைத் தரும்; லோகத்துக்கும் அவனால் க்ஷேமத்தை உண்டு பண்ணும்.

இதனால்தான், தற்போது போய்க் கொண்டிருக்கிற போக்கு என் ஆசைக்கு முற்றிலும் எதிர் திசையில் இருந்துங் கூட, குருகுலவாஸக் கல்வி முறையை எப்படியாவது உயிர்ப்பிக்க முடியுமா என்பதில் நான் ரொம்பவும் விசாரமாயிருக்கிறேன்.

என் ஆசை – பள்ளிக்கூடத்தில் ஒரு வருஷம் fail-ஆகி விட்டதாகவாவது நினைத்துக் கொண்டு ஒவ்வொருத்தரும் தங்கள் குழந்தைகளை ஒரே ஒரு வருஷமாவது குருகுல வாஸம், பிக்ஷாசர்யம் பண்ண வைக்க வேண்டும். பன்னிரண்டு வருஷம் என்றால் அடியோடு ஒருத்தரும் கேட்கமாட்டீர்கள். அதனால்தான் ஒரு வருஷம் என்று கேட்கிறேன். சின்ன வயஸில் ஒரு வருஷம் இந்தப் பழக்கம் இருந்தாலுங்கூட அதற்கு ஓரளவு நல்ல பலன் ஏற்படும். ஃபெயில் ஆன மாதிரி என்று நான் சொன்னாலும் வாஸ்தவத்தில் இது ‘வேஸ்ட்’டாகப் போகாது. ஒரு வருஷ பிக்ஷாசர்ய குருகுலவாஸத்தில் மாணாக்கனுக்கு மூன்று வருஷத்து புத்தி தீக்ஷண்யம் உண்டாகும். அடுத்த வருஷமே பள்ளிக்கூடத்தில் ஒரு ‘டபுள் பிரமோஷன்’ வாங்கி ஈடு பண்ணி விடுவான். அதோடு குருவிடம் ஒரு வருஷம் தங்கியதில் பிராதஸ்நானம் (விடியற்காலக் குளியல்) , ஸந்தியாவந்தனம் முதலான வழக்கங்கள் படிந்து ஆயுள் பூராவும் நிலைத்திருக்கும்.

இப்போது ஸ்கௌட் காம்ப் (சாரண முகாம்) என்று, குழந்தைகளை ஒரு மாஸம், அரை மாஸம் வெளியூருக்கு அனுப்புகிறீர்கள் அல்லவா? இதையே கொஞ்சம் விஸ்தரித்து ஒரு ஆசார்யனிடத்தில் ஒரு வருஷமாவது கூட வசித்து, பிக்ஷாசர்யம் பண்ணி வரும்படியாக ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்கிறேன். இதனால் அநேக நல்ல பழக்கங்கள், கட்டுப்பாடுகள் உண்டாகும்; குரு பக்தி என்பதன் த்வாரா [வழியாக] இத்தனையும் ஏற்படும்.

குழந்தைகளைத் தங்களோடு வைத்துக்கொண்டு பாடம் சொல்லிக் கொடுக்கப் பிரியப்படுகிற குருமார்களையும், அவர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைக்கக் கூடிய பெற்றோர்களையும் சமூக உணர்ச்சியின் மூலம்தான் உண்டாக்க வேண்டும். இந்த ஸஹாயத்தைச் செய்யும்படியாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். படிப்பு முடிந்தபின் தக்ஷிணை தர முடியாத ஏழைக் குடும்பத்தினருக்காகவும் மற்றவர்கள் தரவேண்டும். அநேகமாக இப்படிப்பட்ட வசதியில்லாதவர்கள்தான் குழந்தைகளைக் குருகுல வாஸத்துக்கு அனுப்பக் கூடியவர்கள். அவர்களுக்கான ஸஹாயத்தை அங்கங்கே பத்துப்பேர் சேர்ந்து பண்ணினாலும் போதும். தனியாகப் பெரிய ஸ்தாபனம் என்று ஏற்படுத்தக் கூட வேண்டாம். ஸ்தாபனம் கூடவே கூடாது என்று சொல்வதாக அர்த்தமில்லை. ஆனால் அப்படி பெரிய ஸ்கேலில் நடப்பதற்காக நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறேன். இப்போது நம்மளவில் சாத்யமான அளவுக்கு ஆரம்பித்துவிடவேண்டும் என்கிறேன். நாம் ஒவ்வொருவரும் சொந்த அக்கறை (personal interest) காட்டி, தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்பதே முக்கியம். இந்த மனோபாவம் வருவது தான் அவசியம்.

ஜாஸ்தி படிக்க படிக்கத்தான் ஜாஸ்தி நாஸ்திகம், ஜாஸ்தி அடங்காமை, ஜாஸ்தி அநாசாரம் என்று இப்பொழுது கொண்டுவிட்டிருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டுமானால் அதற்கு வழி – ஒரு உதாரணத்துக்குக் காட்டவாவது, மியூஸியக் காட்சி வஸ்து மாதிரியாகவாவது – குருபக்தி என்பதை ஏற்படுத்திக் காட்ட வேண்டும். குருகுலவாஸப்படிப்பு முறையில்தான் குருபக்தி இருந்திருக்கிறது.

போன தலைமுறை வரையில் ஸங்கீதம் ஒன்றிலாவது குருகுலவாஸம் இருந்தது. இப்போது அங்கேயும் போய்விட்டது.

எனவே நாம் இதில் முயற்சி எடுக்கவேண்டும். யார் வருவார்கள் என்று முயற்சி பண்ணாமலே இருந்து விடக்கூடாது. மனப்பூர்வமாக முயற்சி பண்ணினால் பத்துப் பேராவது பலன் அடையாமல் போகமாட்டார்கள்.

ஈசுவர பக்தியும், அந்த ஈசுவர பக்தி வாஸ்தவமாக ஏற்பட்டு நிலைத்து நிற்பதற்கு வழி செய்கிற குருபக்தியும் அழிந்து போகாமல் இருப்பது லோக க்ஷேமத்துக்கு ரொம்ப அவசியம்.


1 காமம், குரோதம், லோபத்தனம், மோஹம், மதம் (செருக்கு), மாத்ஸர்யம் (பொறாமை) எனும் ஆறு.

2 ரகு வம்சம் l.8

3 கீதை VII.1.1

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is குரு பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சரணாகதியே முக்கியம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it