விதிமுறை வழிபாடும், அன்பு வழிபாடும்

விதிமுறை வழிபாடும், அன்பு வழிபாடும்

இன்னொரு விஷயம், வைதேய பக்தி, ராக பக்தி என்று இரண்டு உண்டு. விதிவத்தாக, அதாவது விதிப்படி ஒரு சாஸ்திர வழியிலே உபாஸனை செய்வது வைதேய பக்தி. இப்படி வழிபாட்டு க்ரமம் என்று இல்லாமல் ப்ரேமையோடு நம் அன்பில் எப்படியெல்லாம் பகவானிடம் ப்ரார்த்திக்கவும், உறவு கொண்டாடவும் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் பக்தி பண்ணுவது ராக பக்தி. (அதை) அநுராக பக்தி என்றும் சொல்வார்கள் தற்காலத்தில் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படக்கூடாது என்ற மனப்பான்மை பரவியிருப்பதால் எல்லாரும் தங்களுக்கு ராக பக்தி இருக்கிறதாகவும் அதனால் விதி ப்ரகாரம் ஒன்றும் பண்ணத் தேவையில்லை என்று நினைப்பதாக ஏற்பட்டிருக்கிறது. வாஸ்தவத்தில் நமக்கு அப்படியெல்லாம் ஒன்றும் சுத்த ப்ரேமை பகாவனிடம் பொங்கிக்கொண்டு வந்துவிடவில்லை. அது மட்டும் வந்திருந்தால் நாம் இருக்கிற தினுஸே வேறேயாக இருக்கும். பரித்யாகத்தில் (எல்லா உறவுகளையும் முற்றிலும் தியாகம் செய்வதில்) ஏற்படும் சரணாகத பாவம், ஈச்வரனிடம் வைக்கிற ப்ரேமையின் ப்ரதிபலிப்பாக ஸகல ஜீவ ஜந்துக்களிடம் ப்ரியம் என்று உத்தமமான சீலங்களோடு இருப்போம்.

வைதேய பக்தியுங்கூட வறட்டு வறட்டு என்று புஸ்தகப்படி ஒரு மெகானிக் தன் ஷாப்பில் காரியம் பண்ணுகிற மாதிரி இல்லாமல் ப்ரேம பாவத்துடனேயே பண்ண வேண்டும் என்றுதான் சாஸ்திரம். விதிப்படி ஒழுகுவதே 'வைதேயம்' என்றேனோல்லியோ? அந்த விதிகளில் அடிப்படையாக ப்ரேமை வேண்டும் என்பதும் ஒன்று. பூஜாரம்பத்தில் (பூஜையின் ஆரம்பத்தில்) ஆத்ம பூஜை என்று ஒன்று செய்துவிட்டு அப்புறந்தான் வெளியிலிருக்கிற ப்ரதிமைக்குப் பூஜை செய்யவேண்டும். அந்த ஆத்ம பூஜையில், 'பூஜை செய்கிற தன்னுடைய தேஹமே பகவான் இருக்கிற தேவாலயம், பூஜை செய்கிற ஜீவனான தானே பூஜிக்கப்படும் தேவனான பகவான், முந்தைய பூஜையில் அர்ச்சனை செய்த புஷ்பம் முதலான நிர்மால்யத்தை எடுத்துப்போட்டு இந்தப் புதுப் பூஜை ஆரம்பிக்கிற மாதிரி. ஜீவனும் தேவனும் வேறே வேறே என்று நினைக்கிற அஞ்ஞானத்தைத் தள்ளிப்போட்டு விட்டு 'அவனே நான்' என்ற 'ஸோ (அ) அஹம்' பாவனையுடன் பூஜிக்கணும்' என்று விதி செய்திருக்கிறது.

தேஹோ தேவாலய:ப்ராக்தோ ஜீவோ தேவ ஸநாதந:1

த்யஜேத் - அஜ்ஞான நிர்மால்யம் ஸோ (அ) ஹம் பாவேந பூஜயேத் 11

இப்படி அவனே நாம் என்றால் அவனிடம் எத்தனை அத்யந்த ப்ரேமை - அநுராகம் - என்பது - இருக்க வேண்டும்? அத்யந்த பந்து என்று நாம் பல பேரிடம் ப்ரியமாக அத்யந்தமாக இருப்பது நமக்கு நாமேதானே?

ஆனால் இப்படி அந்த ச்லோகத்தைச் சொல்கிற ஸ்வல்ப நேரத்திற்கு வேண்டுமானால் நமக்கு அவனிடம் 'நானே அவன்'என்பதிலிருக்கிற அதி ப்ரேமை - அநுராக பக்தி - கொஞ்சம் ஏற்படலாமே தவிர அதையே ஸதாவும் maintain பண்ணுவது (நீட்டித்துக் காப்பது) முடியவில்லை. தற்காலத்தில் அந்த

மாதிரி எல்லாரும் இருப்பதாக, அல்லது ஸுலபத்தில் இருந்துவிட முடியும் என்பதாகப் பேசுவது வெறும் புரளிதான், விதிக்குக் கட்டுப்படாத அடங்காமைக்கு ராக பக்தி என்று பொய்யாகப் பேர் தருவதுதான்.

ஒப்புக்கொள்கிறேன், அடி நாஸ்திகர் தவிர மற்ற ஜனங்கள் ஸகலருக்கும் பகவானிடம் ஸ்வல்பமாகவது ஒரு ப்ரியம், ப்ரேமை இல்லாமல் போய்விடவில்லை. அந்த ப்ரியத்திற்கு effect இல்லாமலும் போய்விடவில்லை. இப்படி எல்லா தேசங்களிலும் இருக்கிறவர்களின் ராக பக்தி நல்லது பண்ணிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அந்த நல்லதும் ஸ்வல்பமாகத்தான் இருக்கும். ஸ்வல்பமாக முதல் போட்டால் வருவாயும் ஸ்வல்பமாகத்தானே இருக்கும்?

விதிபோட்டுக் கொடுத்துள்ள க்ரமமான வழிபாட்டிலே அந்தவிதிகள், அதன்படி விதிக்கப்பட்ட மந்த்ர - ஸ்தோத்ராதிகள், உபசாராதிச் சடங்குகள், மடி - ஆசாரம் ஆகியனவே, நமக்கு ப்ரேமை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு கணிசமான அளவுக்கு நல்லது பண்ணிவிடும். போகப் போக இந்த விதி முறைகளே நம் ஹ்ருதயத்தில் ஈச்வர ப்ரேமையை வளர்த்தும் கொடுத்து விடும்.

ஆனபடியால் பெரிய அளவில் நல்லது - லோக ஷேமம், ஆத்ம ஷேமம் - உண்டாக வேண்டுமானால் அடிப்படையான ப்ரமே பாவத்தோடு வைதேய பக்தியை விருத்தி செய்து கொள்வதுதான் தற்போது நாம் இருக்கப்பட்ட நிலைக்கு ஏற்றது. ஸ்வாமியோ கொஞ்சம் பேருக்குத்தான் விதி பார்த்துப் பண்ணமுடியாதபடி அந்தராத்மாவிலிருந்து அநுராகம் பீறிட்டுக் கொண்டுவந்து பக்திப் பித்து, பக்தி போதை என்கிறார்களே, அப்படிப் பரமாத்மாவுடன் கலந்திருக்கும் மனப்பான்மையைக் கொடுத்து விளையாடுகிறார் மற்றவர்கள் விதி ப்ரகாரம் வந்துள்ள ஸ்தோத்ர - மந்த்ராதிகள், சடங்குகள் ஆகியவற்றுக்கு அவற்றுக்கென்றே உள் தெய்விக சக்தியைக் கொண்டுதான் நம்முடைய ஸ்வல்ப அநுராகத்தால் கிடைக்கக்கூடிய ஸ்வல்ப அநுக்ரஹத்தை பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆக 'பேஸிக்' ஆகக் கொஞ்சம் பக்தி பாவத்துடன்அநுஸரிக்கிற வைதேய பக்திதான் பெரும்பாலாருக்கு ஆனது. இந்த வைதேய பக்தியில் ஒவ்வொரு தேசத்திலும் ஆங்காங்கு இருக்கிற மதத்தை அநுஸரித்து விதிகள் அமைத்திருக்கிற வழிபாட்டு க்ரமங்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாமும் தெய்வாநுக்ரஹத்தைப் பெற்றுத் தருகிற சக்தி இல்லாமல் போகவில்லை. இருந்தாலும் வேத மந்த்ரங்களுக்கும், அவற்றைத் தழுவி ஆகம வழிபாட்டு க்ரமத்தில் வருகிற மந்த்ரங்கள், ஸ்தோத்ரங்கள், நாமாவளிகள், உபசார க்ரியைகள் ஆகியவற்றுக்கும் இநத் சக்தி விசேஷமாக இருக்கும்படி பகவான் வைத்திருக்கிறான். அதோடு இந்த பாரத தேசத்து மண்ணில்தான் அந்த சக்தி பூர்ணமாகப் பலன் தரும்படியும் வைத்திருக்கிறான். ஏனென்று கேட்டால் என்ன சொல்வது? ஏன் ஸ்விட்ஜர்லாண்டில் இத்தனை நல்ல க்ளைமேட்டை வைத்துவிட்டு ஸஹாராவில் பொசுக்கி எடுக்கிறான் என்றால் என்ன சொல்வது? ஒன்றும் சொல்லத் தெரியாவிட்டாலும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

மந்த்ர வீர்யமானது முழுப் பலனையும் தருவது நம்முடைய தேசத்தில்தான் -

கர்ம பூமி எனப்படும் இந்த பாரத தேசத்தில்தான். இங்கே கர்மா என்றால் மந்த்ரங்கள் ப்ரயோகமாகிற சாஸ்த்ர கர்மா என்றே அர்த்தம். அப்படிப்பட்ட இந்தக் கர்ம பூமியில் அந்த ஆத்மலிங்கமோ, ரங்கராஜ அர்ச்சையோ (விக்ரஹமோ) இருந்தால்தான் லங்கை உள்பட எல்லா தேசங்களுக்கும் அதிக ஷேமம்

என்பதால்தான் விக்நேச்வரர் இப்படிச் செய்தது. தமது விகடமான ஸ்வபாவத்தால் வேடிக்கை, கோபம், அடி - தடி - குட்டுகிறது வேறே என்ன? - பரம அநுக்ரஹம் என்று எல்லாம் கலந்த நாடகமாக இதைச் செய்தார்.

இப்படி உபயகாவேரி மத்தியில் அவர் ப்ரஸாதித்த அந்த ஷேத்ரம் விஷ்ணு ஸ்தலங்களில் ப்ரதானமாகவும், காவேரி தீரத்திலுள்ள அத்தனை சோணாட்டுசிவ - விஷ்ணு ஆலயங்களளுக்கும் மத்யமணி மாதிரியும் சிறப்புப் பெற்றுவிட்டது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பாரத தேசத்தின் தனித்தன்மை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  கலாசார வளர்ச்சி கணேசராலேயே
Next