Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தெரியாததை ஒரு போதும் சொல்லாதவர்

தெரியாததை ஒருபோதும் சொல்லாதவர்

தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும், தான் அறிந்ததனைத்தையும் ஒரு குருவானவர் சிஷ்யனுக்கு உபதேசித்துவிடுவார் என்று பார்த்தோம். அதோடு சேர்த்து, ஸாமான்யமான வாத்தியார்மார்கள் பண்ணக்கூடிய இன்னொன்றை அவர் பண்ண மாட்டார் என்பதையும் சொல்லவேண்டும். அதாவது தமக்குத் தெரியாத எதையும் தெரிந்த மாதிரி ஜோடித்துச் சொல்லமாட்டார்! ஸாதாரணமாக ஒரு மாணவன் வந்து ஏதோ ஒரு விஷயம் சொல்லித்தரும்படிக் கேட்டால், தெரியாத வாத்தியாருக்குத் தெரியாது என்று சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இருக்கலாம். அதனால் அவர் எதையாவது புத்தி ஜாலம், வார்த்தை ஜாலம் பண்ணிச் சொல்லிவிடலாம். உபநிஷத் காட்டுகிற குரு இப்படிச் செய்பவரல்ல. சிஷ்யனுக்கு "ஸத்யம் வத" சொல்லித் தருகிற அவர் ஸத்யஸந்தராகவே வாழ்க்கையில் இருப்பார். அதனால் "தெரியாதப்பா இந்த விஷயம் இன்னாருக்குத் தெரியும். அவர்கிட்டே போ (அ) ப்பா " என்று அனுப்பி வைப்பார்.

'ப்ரச்னோபநிஷத்' முடிவைச் சொன்னேன். ஆரம்பத்தையும் சொன்னேன். அதில் முடிவு பாகத்தின் ஆரம்பித்தில் இப்போது த்ருஷ்டாந்தம் காட்டுகிறேன்:

கோசல தேசத்து ராஜகுமாரன் ஒருத்தன். ஹிரண்ய நாபன் என்று பேர். அவன் ஸுகேசர் என்ற ரிஷியிடம் கற்றுக் கொள்ள வருகிறான். அந்த ஸுகேசர் யாரென்றால், பிப்பலாத மஹர்ஷியிடம் ஆறு பெரியவர்கள் ஆத்ம வித்யை தெரிந்து கொள்ள வந்தார்கள், ஆளுக்கொரு கேள்வி- ப்ரச்னம் - கேட்டு, அதற்கு அவர் பதில் சொல்வதுதான் ப்ரச்னோபநிஷத் என்றேனோல்லியோ? அந்த ஆறு பேரில் இந்த ஸுகேசரும் ஒருத்தர். அவர்தான் கடைசியான ஆறாவது கேள்வி கேட்டவர். இதற்கு முற்காலத்தில் இதே கேள்வியை அவரிடமே கேட்கத்தான் கோஸல ராஜகுமாரன் போனது. என்ன கேள்வி என்றால்:ஒரு ஜீவனுக்குப் பதினாறு அம்சங்கள் உண்டு. இவற்றைக் கலைகள் என்பார்கள். சந்திரனுக்குக் கலைகள் இருப்பதாக எல்லாரும் சொல்கிறோம். பிறைச் சந்திரனைச் சந்திரகலை என்கிறோம். அப்படிப் பதினாறு கலைகளோடு கூடினவன் ஜீவன். 'ஷோடச கலா புருஷன்' என்று சொல்வது. அந்த ஸமாசாரமாகவே கோஸல ராஜகுமாரன் ஸுகேசரிடம் கேட்டான். அப்போது அது அவருக்குத் தெரியாது. தெரியாததால்தான் பிற்பாடு பிப்பலாதரிடம் கேள்வி கேட்கவந்தார்.

ஏதாவது பதினாறைக் கல்பித்துச் சொல்லி, தத்வார்த்தம் என்று பொய்ப்பந்தல் போட்டு அந்த ராஜகுமாரனை அவர் அனுப்பியிருக்கலாம். ஒரு ராஜகுமாரனே வந்து கேட்கிறானென்றால் அது ஒரு பெருமை. அதோடு அவன் நிறைய ஸம்பாவனை, ஸெளகர்கயங்களும் பண்ணித்தரக் கூடியவன். ஆனாலும் பூர்வகால குருமார் ரொம்பவும் நேர்மையுள்ளவர்களானபடியால் இவர் அவனிடம் தமக்குத் தெரியாது என்று உள்ளதை உள்ளபடிச் சொன்னார்.

அவனுக்கு நம்பிக்கைப்படவில்லை.- உபநிஷத்தில் நேராக அப்படிச் சொல்லியிருக்கவில்லை. ஆனால் ஆசார்யாள் பாஷ்யத்தில் சேர்த்திருக்கிறார். அப்படிச் சேர்த்தால்தான் அப்புறம் வரும் உபநிஷத் வாக்யத்துக்குப் பொருத்தமாக link உண்டாகிறது.

இவர் எங்கேயாவது அறியாதவராக இருப்பாரா என்று ராஜபுத்ரன் ஸந்தேஹப்பட்டான். 'எனக்குத்தான் யோக்யதை போதாதோ என்னவோ? அப்படிக் குற்றம் காட்டாமல் தம்மையே குறைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறா -ரோ?' என்று நினைத்தான். அவரிடமே சொல்லவும் சொன்னான். அதற்கு மேல் அவர் அவனிடம், "எனக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிருந்தா உன்னிடம் ஏன் சொல்லாமலிருக்கப் போறேன்?" என்று கேட்கிறார். முன்னே சிஷ்யன் ச்வேதகேது வாயால் நாம் அவனுடைய குருமார்கள் பற்றிக் கேட்ட வாசகமே இங்கே நேராக ஒரு குரு வாயால் வருகிறது

இப்படிச் சொன்னவிட்டு அவர், தனக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டி போதனை என்று பண்ணுவது எப்பேர்ப்பட்ட பாபம் என்று அவனுக்குச் சொல்கிறார். 'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பதோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். உபநிஷத்தோ இங்கே அந்த KS வாயால் அதைவிட ரொம்ப பயங்கரமாகச் சொல்லியிருக்கிறது. பொய்யாக உபதேசம் என்று ஒன்று செய்கிறவன் ஒரு மரம் வேரோடு காய்ந்த போய் நசித்துவிடுகிற மாதிரி நசித்தே போய்விடுவான் என்று KS சொல்கிறார். அவன் இஹம், பரம் இரண்டையும் இழந்து நாசமடைவான் என்று இதற்கு அர்த்தம் என்று ஆசார்ய பாஷ்யம்.

இந்த உபாக்யானத்திலிருந்து இரண்டு முடிவுகள் கூறப்படுகின்றன என்று ஆசார்யாள் காட்டுகிறார். ஒன்று யோக்யதையுள்ளவன், மரியாதை முறைப்படி வந்து கேட்டால், தெரிந்தவன் சொல்லிக் கொடுத்தே ஆகணும் என்பது. இன்னொன்று தெரியாதவன் ஒருகாலும் தெரிந்ததாகப் பொய் பண்ணிவிடக்கூடாது என்பது. 'ஒருகாலும், ஒரு நிலையிலும்' - ஸர்வாஸ்யபி அவஸ்தேஷ§' என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். அப்படி குரு லக்ஷணம், தெரிந்த ஸர்வத்தையும் கற்றுக் கொடுக்கணும், தெரியாத ஒன்றைக்கூட தெரிந்த மாதிரி கற்றுக்கொடுத்து விடக்கூடாது என்றே உபநிஷத் காட்டும் குருமார்கள் இருந்திருக்கிறார்கள்.

குருஸ்தானத்திலிருந்த அந்தப் பெரியவர் - ஸுகேசர் - அவருடைய விஷயஞானம் போதாமையை நிச்சயப்படுத்தினவுடன் அந்தக் கோஸல ராஜபுத்ரன் வாயை மூடிக்கொண்டு ரதத்தில் ஏறிக்கொண்டு போய்விட்டான். 'வாயை மூடிக்கொண்டு' என்பதற்கு ஆசார்யாள் 'வ்ரீடித:' என்று காரணம் காட்டியிருக்கிறார். அப்படியென்றால், 'வெட்கமுற்றவனாக' - அந்த வெட்கத்தினால் வாய் பேசாதவனாகி - போய்விட்டான் என்று அர்த்தம்.

இவருக்குத் தெரியவில்லையென்றால் அவன் வெட்கப்படுவானேன்? 'பாவம்!ஒரு பெரியவர். எத்தனையோ தெரிந்தவர். ஏதோ கொஞ்சம் அவருக்குத் தெரியவில்லை. தெரியாததைப் போய் அவரிடம் கேட்டு, அவ்வளவு பெரியவர் தம்முடைய அறியாமையை வாய்விட்டுச் சொல்லிக்கொள்ளும்படிச் செய்து விட்டோமே!இது மரியாதைப் பண்பாகாதே!' என்று வெட்கப்பட்டிருக்கலாம். இவன் கேட்டதில் அவர் ஒன்றும் embrass ஆகிவிடவில்லை. ஆகாததால்தான் அவரே அப்புறம் பிப்பலாதரிடம் இந்த ஸம்பவத்தை ஸஹஜமாகச் சொல்லி அந்த ஷோடசகலா விஷயம் பற்றிக் கேட்கிறார். ஆனாலும் அவனுக்கு, தான் அவரை அப்படிக் கேட்டிருக்கப்படாது என்று தோன்றி, செய்யப்படாததைச் செய்தோமே

என்பதில் வெட்கம் உண்டாயிருக்கலாம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is குரு பரம்பரையிடம் ஆசார்யாளின் பக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  குருவின் யோக்கியதையைப் பார்ப்பதும், சரணாகதி செய்வதும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it