அஞ்ஜலி (கும்பிடு), கைகுலுக்கல் கழி மாதிரி அஷ்டாங்கம் பூமியில் பட விழுவது, கபந்தமும் முழங்கால் வரையிலும

அஞ்ஜலி (கும்பிடு), கைகுலுக்கல்

கழி மாதிரி அஷ்டாங்கம் பூமியில் பட விழுவது, கபந்தமும் முழங்கால் வரையிலும் வளையப் பஞ்சாங்கம் மட்டும் பூமியில் பட நமஸ்கரிப்பது, முழங்காலும் புறங்காலும் மட்டும் பட மண்டி போடுவது – அப்போது தலையையும் வணக்குவது, நின்று கொண்டே ஸல்யூட் அடிப்பது – அதாவது ஒரு கையை மட்டும் வணக்குவது என்றிப்படிப் பலவித அபிநயங்களால் மரியாதையை வெளிப்படுத்துவதைச் சொன்னேன்.

இதுகளோடு முக்யமான இன்னொன்றைச் சொல்ல வேண்டும். அதுதான் இந்த இந்தியா தேசம் பூராவிலும் ஸகலமான பேரும் ஸகலமான பேருக்கும் பண்ணுவதாக இருக்கிறது. வெளிதேசத்தவர்கள்கூட இங்கே வந்தால் அப்படிச் செய்கிறார்கள். மரியாதை பண்ணுவதற்கு மட்டுமில்லாமல், அவ்வளவுக்கு ஸ்தானமில்லாதவர்களுக்கும் வாழ்த்தை, நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் ஸங்கேதமாக அது ஆகியிருக்கிறது.

இரண்டு கையையும் சேர்த்துக் குவிப்பதைத்தான் சொல்கிறேன்.

‘அஞ்ஜலி’ என்பது அதைத்தான். ‘அஞ்ஜலிஹஸ்த’மாக என்று புஸ்தகங்களில் நிறைய வரும்.

தமிழில் ‘கும்பிடு’. “கும்பிடறேன் சாமீ!” என்றுதான் இங்கே பொது ஜனங்கள் சொல்கிறார்கள். “சாமி கும்பிடுடா” என்கிறார்கள். ஏதாவது கார்யம் நடக்கணுமென்று நைச்யமாக வேண்டிக் கொள்ளும் போது, “கையெடுத்துக் கும்பிடறேன்” என்கிறார்கள். “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது” என்கிறோம். இப்படி உச்ச ஸ்தானத்துக்குச் செய்கிற அஞ்ஜலியே ஸகலருக்கும் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் ஸங்கேதமாகத் தற்போது ப்ரபலமாகி வருகிறது. இப்போதுங்கூட வயஸாலோ, ஸ்தானத்தாலோ தங்களைவிடக் கொஞ்சம் மேலே இருப்பவர்களைப் பார்த்தவுடன் ஒருவர் முதலில் அஞ்ஜலி பண்ணுகிறார். அப்புறமே அதற்கு ‘ரிடர்’னாக மற்றவரும் அதையே பண்ணுகிறார். அதோடு வடக்கத்திக்காரர்கள் “நமஸ்தே” என்று வாயாலும் சொல்வது வழக்கம். இங்கே அவ்வளவு ஜாஸ்தி வழக்கத்திலில்லாவிட்டாலும் “வணக்கம்” சொல்வதாகக் கேள்விப்படுகிறேன்.

சிறு வயஸுக்காரர்கள், யுவாக்கள் ஒருத்தரையொருத்தர் இப்படி greet செய்து கொள்வதாகத் தெரியவில்லை. இவர்கள் தங்களைவிடப் பெரியவர்களுக்கே அஞ்ஜலி செய்கிறார்கள். மத்திமப் பிராயத்தில் ஓரளவுக்கு மேலே போனவர்களிலிருந்து ஸமவயஸுக்காரர்களும் பரஸ்பரம் அஞ்ஜலி பண்ணிக் கொள்கிறார்கள்.

தன்னுடைய இரண்டு கையையும் சேர்த்துக் குவிக்கிற இந்த முறைக்கு வித்யாஸமாக வெள்ளைக்காரர்களிடம் இதைவிடவும் பரவலாகச் சின்னவர், பெரியவர் வித்யாஸமில்லாமல் ரொம்பப் பரவலாக உள்ள greeting- அபிநயம் தன்னுடைய வலது கையை மற்றவரின் வலது கையோடு சேர்த்துக் குலுக்குவதாக இருக்கிறது. Shaking hands-தான் ஒருத்தரையொருத்தர் ஸந்திக்கும் போது பண்ணும் goodwill gesture என்று (சிரித்து)   common courtesy  - ஆக இருக்கிறது. மரியாதை ஸ்தானத்திலுள்ளவர்களுக்கும் ஸல்யூட், மண்டி போடுவது முதலானதைப் பண்ணிவிட்டுக் கைகுலுக்குகிறார்கள். ஸமஸ்தான, கீழ்ஸ்தானக்காரர்களானால் முதலில் கை குலுக்கிவிட்டு அப்புறம் கட்டிக் கொள்வது, முத்தம் கொடுத்துக் கொள்வது என்றெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் தேசத்தில் கைகுலுக்குவதும், முத்தம் கொடுப்பதும் வழக்கமில்லை. என்றாலும் கட்டிக் கொள்ளும் வழக்கம் வட தேசத்திலே இருக்கிறது. தெற்கே ஸதாசாரம் அவ்வளவுக்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறது. எல்லோருமே மடியாக இருந்த ஆதிகாலத்தில் தேசம் முழுக்க ஒவ்வொரு பாலாரும் அந்தந்தப் பாலாரைக் கட்டிக் கொண்டு ஆலிங்கனம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்திருப்பதைப் பழைய இலக்கியங்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது. ஸஹோதரர்கள், ஸ்நேஹிதர்கள் ஆலிங்கனம் செய்து கொள்வதாக நிறையப் பார்க்கிறோம். இதிலே கொஞ்சம் மூத்தவர்கூட இளையவரை மடி மேலேயே உட்கார்த்தி வைத்துக் கொள்கிறது, உச்சி மோந்து பார்ப்பது என்றெல்லாமும் பார்க்கிறோம்.

முத்தம் கொடுக்கிற வழக்கம் நம்மிடம் என்றுமேயில்லை. எச்சல்-துப்பல் பார்க்கிற நம்முடைய உசந்த ஆசாரத்திலே, கலாசாரத்திலே அதற்கு இடம் கொடுக்கவில்லை.

கையைப் பிடித்துக் குலுக்கும் வழக்கமில்லாவிட்டாலும் கையோடு கை சேர்த்துக் கொள்வதுண்டு. இரண்டு கையையும் நீட்டி, மற்றவர்களின் இரண்டு கையையும் பிடித்துக் கொண்டு ‘வா’ சொல்லி வரவேற்பது உண்டு. “கை நீட்டி வரவேற்றார்” என்கிறோம். “கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போவது” என்கிறோம்.

ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி ஸுக்ரீவனோடு ஸக்யம் பண்ணிக் கொண்ட (நட்புப் பூண்ட) கதை ராமாயணத்தில் வருகிறதோல்லியோ? அங்கே முதலில் ஸ்வாமியை ஸுக்ரீவன் பார்த்தவுடன்,

”ரோசதே யதி வா ஸக்யம் பாஹூரேஷ ப்ஸாரித |

க்ருஹ்யதாம் பாணினா பாணிர்-மர்யாதா பத்யதாம் த்ருவா || **

”என்னோடு ஸக்யம் பண்ணிக் கொள்ள இஷ்டப் பட்டீர்களானால், இதோ என்னுடைய நீட்டிய கை! அந்தக் கையை உங்கள் கையால் பிடித்துக் கொள்ளுங்கள். அதனால் மர்யாதா கெட்டியாகக் கட்டுப் போட்டாற்போல ரக்ஷிக்கப்படட்டும்” என்று சொன்னதாக வருகிறது. ‘மர்யாதா’வைத்தான் நாம் ‘மரியாதை’ என்கிறோம். ரெஸ்பெக்டைக் குறிப்பட அந்த வார்த்தையைத்தான் நானும் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நாம் (தமிழர்கள்) தான் இப்படி அர்த்தம் செய்கிறோம். மூலத்தில் (மர்யாதா என்ற) அந்த வார்த்தைக்கு அப்படி அர்த்தமே இல்லை. ‘முறைப்படுத்திய எல்லை’ என்றுதான் அர்த்தம். எல்லைப்படுத்தப்பட்ட, அதாவது வரையறை செய்த நெறிமுறை, விதி, நாகரிக நடவடிக்கையின் வரைமுறை என்றெல்லாமும் இரண்டாம் பக்ஷமாக அர்த்தமுண்டு. இதில் கடைசியில் சொன்னதைக் கொஞ்சம் உசத்தித்தான் நாம் மரியாதை என்றாலே ரெஸ்பெக்ட் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம் போலிருக்கிறது.

*ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் 5.12

 

இவற்றோடு இன்னொரு அர்த்தமும் ஸம்ஸ்க்ருதத்தில் உண்டு; ஒப்பந்தம், உடன்படிக்கை என்கிறோமே, அதுவும் ‘மர்யாதா’ தான். இங்கே, “கெட்டியான உடன்படிக்கையாகவே நாம் நம்முடைய ஸக்யத்தை – நட்பை – கட்டுப்படுத்தி ரக்ஷிப்போம்” என்ற அர்த்தத்தில்தான் ஸுக்ரீவன் அந்த வார்த்தையை போட்டுப் பேசுவது. அதற்கேற்பவே அப்புறம் அக்னிஸாக்ஷியாகவே ப்ரமாண பூதமாக – அதாவது ‘அதிகாரபூர்வமாக’ என்கிறார்களே அப்படி – அவர்கள் ஸ்நேஹ உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள். அந்த விஷயங்கள் இருக்கட்டும். நமக்கு விஷயம், ஸுக்ரீவன் ராமரிடம் கையோடு கை பிடித்துக் கொள்ளும்படி கேட்கிறான் என்பது. அவரும் உடனே ஸந்தோஷமாகத் தம்முடைய கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டார் – (ஸம்ப்ரஹ்ருஷ்டமனா) ஹஸ்தம் பீடயாமாஸ பாணிநா’.  உபன்யாஸகர்கள் இதைச் சொல்லி, “கையைப் பிடித்துக் கொள்கிறது வானர ஜாதி வழக்கமாகவே இதிலிருந்து தெரிகிறது. ஓராங்-உடானிலிருந்தே (மனிதக் குரங்கிலிருந்தே) மநுஷ்ய ஜாதி உண்டாயிற்று என்பவர்கள் தங்களுடைய அந்த மூதாதைகளின் வழக்கத்தைத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பரிஹாஸம் செய்வதுண்டு. பரிஹாஸம் கூடாது. ஒவ்வொரு தேசாசாரம், அந்தந்த ஜனங்களின் பக்(கு)வ ஸ்திதி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கைதான் கார்யங்களைச் செய்வதில் ப்ரதானமான கருவி. ஆனபடியால் மற்றவனுக்கு ஆனதையெல்லாம் தான் செய்யத் தயார் என்று காட்டவும், மற்றவனுக்குத் தெரியாமல் தான் கையில் ஆயுதம் மாதிரி எதுவும் ஒளித்து வைத்துக் கொள்ளவில்லை என்று காட்டவுமே பரஸ்பரம் கைகளை இப்படிச் சேர்த்துக் கொள்வது என்பதாக பாவத்தையொட்டி ஒரு க்ரியை மேல்நாடு, கீழ்நாடு எல்லாவற்றிலும் ஏற்பட்டிருக்கிறது என்று அறிவாளிகள் சொல்கிறார்கள். “காரியம் யாவினும் கை கொடுத்து” என்று அடிக்கடி கேள்விப்படுகிறோமல்லவா? “அவருக்கு இவர் தான் right hand ” என்று சொல்லும் போதும் இதே தாத்பர்யந்தான்.

பெரியவரானால் சின்னவரின் கையைப் பிடித்துக் கொண்டு, காப்பாக இருந்துகொண்டு நல்லவழியில் அழைத்துக் கொண்டு போகிறது. சின்னவரானால் பெரியவரின் பாதத்தைப் பிடித்துக் கொண்டு, “நீரே கதி” என்று கிடப்பது. அவர் நடக்கிறபோது, தள்ளாட்டமில்லாமலிருப்பதற்காகக் கையைப் பிடித்துக் கொண்டு போவதும் தான்!

மற்றவர் பாதத்தைத் தொட்டு நமஸ்காரம் பண்ணுவது – தொட்டே தீர்வது என்று பிடிவாதமாக அப்படிப் பண்ணுவது – வடதேசத்தில் இன்றைக்கும் இருக்கிற மாதிரி தெற்கே இல்லை என்றேன். அதே மாதிரி கட்டிக் கொள்கிற வழக்கமும் வடதேசத்தில் இப்போதும் வழங்குகிறாற்போல நம் பக்கத்தில் இல்லை.

காரணம்: போகப் போக, கலி வளர்ந்து கொண்டே போவதில் ஜனங்களின் மனஸ், வெளி லோகம் இரண்டிலுமே அசுத்தம் ஜாஸ்தியாகிக் கொண்டு வந்திருக்கிறது. அந்த மாதிரி ஆகும்போது ஒருத்தரோடு ஒருத்தர் சரீர ஸ்பர்சம் ஏற்பட்டால் அவர்களில் சுத்தி குறைந்தவரின் தோஷம் மற்றவரையும் கொஞ்சம் பாதித்து விடும். ரொம்பவும் நெருப்பாக உள்ள சுத்தாத்மாக்களின் விஷயத்தில் மட்டுந்தான் இவர்களுடைய பரிசுத்தம் மற்றவரின் அசுத்தியை அமுக்கிப் போட்டு சுத்தி செய்வது. மற்ற எல்லார் விஷயத்திலும் அசுத்தக்காரன் தான் மற்றவனை பாதிப்பது. ஒரு தொத்து வியாதிக்காரன் பல ஆரோக்யசாலிகளுக்கும் தன்னுடைய ரோகத்தை உண்டாக்குகிறானே தவிர எத்தனை ஆரோக்யசாலிகளாலும் வியாதிக்காரனுக்குத் தங்களுடைய ஆரோக்யத்தை ஊட்ட முடியவில்லையே! ஒரு அழுகல் பழம் கூடைப் பழம் முழுதையும் அழுகப் பண்ணுகிற மாதிரி அந்தப் பழங்களால் அழுகலை ஸரிப்பண்ண முடியவில்லையே! அப்படித்தான் ஒருத்தனின் துராசார ஸபர்சந்தான் மற்ற ஸதாசார சீலரையும் விழுப்பாக்கிவிடுகிறது. இதைக் கண்டு கொண்ட தக்ஷிண தேசத்து ப்ராம்மணர்கள் personal purity – ஐ – இதுவும் ஒரு தினுஸான personal hygience தான் அதை – ரக்ஷித்துக் கொள்ள வேண்டும் என்று தொட்டுக் கொள்வது, கட்டிக் கொள்வது முதலானவற்றை விலக்கி விட்டார்கள். சரீர ஸ்பர்சமில்லாமல் விலகியிருந்தாலும் ப்ரியத்திற்குக் குறைச்சலில்லை. ஸ்பர்சத்தைவிட ஸ்பர்சமில்லாமலே வெளியிடுகிற radiation-கே ஜாஸ்தி வால்யூ*. அதெப்படி என்றால், ஜலமே நெருப்பின் மேலே படுகிற மாதிரிக் கொட்டினால் நெருப்பு அணைந்து போய்விடுகிறது. அதுவே ஜலமும் அக்னியும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் அடுப்பின் மேல் பாத்ரம் வைத்து ஜலத்தை வைத்தால் அக்னியின் உஷ்ணம் ஜலத்துக்குள் போகிறதோல்லியோ?

*ஸ்ரீசரணர்கள் தம்மைத் தீண்டாத் திருமேனியாகவே காத்துக் கொண்டதற்கே இங்கு விளக்கமளித்துக் கொண்டதாகக் கொள்ளலாம்.

எப்போதுமே ப்ராஹமண ஆசாரத்தைத்தான் ஏனைய ஸகல ஜனங்களும் மதித்து ஏற்றுக்கொண்டு, முடிந்தமட்டும் தாங்களும் அப்படிப் பண்ணிப் பார்ப்பதாக நடந்து வந்திருக்கிறபடியால், தக்ஷிணத்தில் பொதுவாகவே ஒருத்தருக்கொருத்தர் சரீர ஸ்பர்சம் என்பது வழக்கிலில்லாமலாகிவிட்டது.

ஏன் தக்ஷிண தேசத்து ப்ராஹ்மணர்கள் மாத்திரமே இந்த மாதிரிச் செய்ய வேண்டும், வடக்கத்திக்காரர்கள் ஏன் செய்யவில்லையென்றால் – அலெக்ஸாண்டர் நாளிலிருந்து அங்கேதான் பல்வேறு அந்நிய தேசத்தார்கள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வந்து பலமாக மோதி, அங்கேயே ஸெட்டில் ஆனது. ஆனபடியால் நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலுமே அங்கே foreign influence ஜாஸ்தி ஏற்பட்டுவிட்டது. அந்த அந்நிய தேசஸ்தர் எல்லாருமே தொட்டுக் கொள்கிற, கட்டிக் கொள்கிற கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

அவர்கள் விஷயத்தில் அது கலாசாரமானாலும், மந்த்ர ரக்ஷணம் முதலான பொறுப்புள்ள நம்மவர்களுக்கு அநாசாரத்தோடுதான் சேரும். தப்பாக நினைக்கப்படாது; ஆஸ்பத்திரியிலிருந்து ஆஸ்ட்ரோனாட் வரை இன்றைக்கும் ‘ஐஸொலேட்’ செய்து வைக்கிற அதே ப்ரின்ஸிபிளை ஆத்ம ஸம்பந்தப்படுத்தியிருப்பதே இந்த ஆசார முறை.

ரொம்பவும் சக்திமான்கள் விஷயத்திலும், ரொம்பவும் அன்போ, அருளோ வெளிப்படும் போதும் விலக்கு உண்டு.

த்யான-யோகாதிகளில் கொஞ்சம் ஆழமாகப் போன மேல்நாட்டு அநுபவிகளும் சரீர ஸ்பர்சம் அவ்வளவு நல்லதல்ல, அவச்யமுமல்ல; கெட்டதை நல்லதாக்குவதை விட நல்லதைக் கெட்டதாக்குவதாகவேதான் அது ஆகிறது என்று சொல்கிறார்கள்.

ஸைகாலஜிஸ்ட்கள் கூட, கட்டிக் கொள்வது முதலானவை animal-impulse-ல் – மிருகவர்க்கங்களுக்கு உள்ள இயற்கையான வேகத்தில் – சேர்ந்தவைதான் என்கிறார்கள்.