நேரில் தெரியும் நபருக்கு நமஸ்கரிப்பதிலேயே விநயத்தின் முழுமை அதோடு இன்னொன்று அதைத்தான் முக்யமாகச் ச

நேரில் தெரியும் நபருக்கு நமஸ்கரிப்பதிலேயே விநயத்தின் முழுமை

அதோடு இன்னொன்று. அதைத்தான் முக்யமாகச் சொல்ல வந்தேன். ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணுவதை விடவும், பூர்வ காலத்து மஹா புருஷர்களுக்குப் பண்ணுவதைவிடவும் நம் கண் எதிரே நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு பெரியவருக்கு இப்படி விழுந்து நமஸ்காரம் பண்ணும் போதுதான் விநய பாவம் இன்னும் நன்றாக உண்டாகிறது.

ஸ்வாமி-தெய்வங்களெல்லாம் மஹாசக்தி படைத்தவை. பூர்வகாலத்து மஹா புருஷர்களைப் பற்றியும் அவர்கள் தெய்வாம்சமாக இருந்தவர்கள் என்பதை நாம் நம்புகிறோம்; தெய்வத்தன்மை என்ற லெவலைத் தவிர வேறெதிலும் நாம் அவர்களை வைத்துப் பார்க்க முடிவதில்லை. வாஸ்தவமாகவே அவர்கள் அப்படி இருந்ததன் மஹிமையால்தான் இப்படி என்கலாம். அப்பேர்ப்பட்ட மஹாசக்தர்களின் முன்னே நாம் அல்ப சக்தர்கள்தான் என்ற உணர்ச்சியோடு நம்முடைய சரீரத்தைக் கீழே தள்ளுவதில் விசேஷமாக ஒன்றுமில்லை.

ஸரி; இப்போது நாம் நேரே பார்க்கிற பெரியவர்களைப் பற்றி நம் அபிப்ராயம் எப்படி இருக்கிறது? என்ன தான் அவர்களை தெய்வமாகச் சொன்னாலும், அவர்கள் நாம் தெய்வத்தன்மை என்று ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அந்த லெவலிலேயே எப்போதும் நடப்பதாகத் தெரியவில்லை. மாநுஷ்யமாகவே அவர்கள் அநேகம் செய்வதாகப் பார்க்கிறோம். ‘மாயை; விளையாட்டு; ஸெளலப்யத்துக்காகச் செய்கிற மநுஷ்ய விளையாட்டு’ என்றெல்லாம் இதுகளைச் சொன்னாலும் கூட, அஸல் தெய்வங்களைப் பற்றியும், பூர்வ காலப் புண்ய புருஷர்களைப் பற்றியும் கேள்வியே எழும்பாமல் நமக்கு இருக்கிற உசந்த மனோபாவம்…. நான் சொல்ல வேண்டியதில்லை! அதனால்தான் இவர்களை (நிகழ்காலப் பெரியோரை) நாம் இவர்களுக்காகவே – இவர்களாகவே – வைத்து ஸ்தோத்ரிக்காமல் ஏதாவது ஒரு ஸ்வாமி அல்லது பூர்வகால புண்ய புருஷரைச் சொல்லி அவருடைய அவதாரமேதான் இவர் என்று ஸ்தோத்ரிப்பதாக ஏற்பட்டிருக்கிறது! யதார்த்தம் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும் – நம்முடைய பார்வையில் இப்படியொரு வித்யாஸம் தெரிந்தும், நாம் இந்தப் பெரியவர்களுக்கு முன்னாடியும் சரீரத்தைத் தள்ளுகிறோமென்றால் இங்கேதானே நம்முடைய விநயபாவம் சிறப்பாக வெளியாகிறது?