'குரு' இலக்கணச் செய்யுட்கள்

'குரு' இலக்கணச் செய்யுட்கள்

குரு, ஆசார்யர், தேசிகர், உபாத்யாயர், அத்யட்சகர், புரோஹிதர் என்றிப்படி நமக்கு அறிவைத் தருகிறவருக்குப் பல பேர் சொல்கிறோம். வெறுமே அறிவைத் தராமல் நற்றிவைத் தருகிறவராக அவர் இருக்க வேண்டும் என்பதே ஆதிகாலம் தொட்டு நம் மரபு வலியுறுத்தி வந்திருக்கிற விஷயம். அதாவது அறிவை வளர்த்துக் கொடுக்கும்போதே, கெட்டதற்கு அந்த அறிவு ப்ரயோஜனப்படாமல் தர்ம வழியிலேயே போய் நல்லதைச் செய்யும்படி ரூபம் பண்ணித் தருகிறவரே குரு, இன்னும் ஆசார்யர், அத்யட்சகர், உபாத்யாயர், புரோஹிதர், தேசிகர் எல்லாம். இந்த எல்லாப் பெயர்களையும் நாம் ஒரே அர்த்தத்தில் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் ஒன்றுக்கொன்று வித்யாஸம் சொல்லிப் பாகுபடுத்தியும் தனித் தனி லட்சணம், 'டெஃபனிஷன்' சொல்லியிருக்கிறது. அடிப்படையில் இந்த எல்லாருடைய கார்யமும் சிஷ்யரை நல்ல வழியில் போகச் செய்வதே என்றாலும் அதைச் செய்வதில் உள்ள வித்யாஸமான முறைகளை வைத்து வெவ்வேறாக டெஃபனிஷன் கொடுத்திருக்கிறது.

இன்னொரு தினுஸாகவும் சொல்லலாம். அதாவது, நல்வழிப்படுத்துகிற அந்த ஒரே பெரியவரின் ஒவ்வொரு விதமான கார்யத்தை - ஒவ்வொரு 'ஆஸ்பெக்'டை - வைத்து ஒவ்வொரு பெயரைக் கொடுத்து அதற்கான டெஃபனிஷன்கள் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.

'குரு' என்பதற்கு 'இருட்டைப் போக்கடிக்கிறவர்' என்று அர்த்தம் செய்திருப்பது ஸாதரணமாக ஓரளவு வித்வான்களாக உள்ள எல்லாருக்கும் தெரிந்ததே.

கு- காரஸ் - த்வந்தகார ஸ்யாத் ரு - காரஸ் - தந்நிவர்தக : 1

அந்தகார - நிரோதித்வாத் குருரித்யுச்யதே புதை : 11

என்று ச்லோக ரூபத்தில் டெஃபனிஷன் இருக்கிறது. " 'கு' என்பது அந்தகாரம். 'ரு' என்பது அதை நிவர்த்தி செய்வது. அந்தகாரத்தை நிவர்த்தி செய்வதாலேயே அப்படிச் செய்கிறவர் குரு என்று புத்திமான்களால் சொல்லப்படுகிறார்" என்று அர்த்தம். அந்தகாரம் என்பது அஞ்ஞான இருட்டுத்தான். அந்தகார நிவர்த்தி என்பது ஞான ஜ்யோதிஸ்ஸான ப்ரம்மத்தை அநுபவிப்பதுதான். 'ஹை லெவ'லில் ப்ரஹ்ம வித்யையையே கல்வியாகச் சொன்னால் அந்த அர்த்தம். ஸாதாரணமாக எல்லாரும் பெறுகிற கல்வி என்கிறபோது, அநேக ஸமாசாரங்களில். ஸயன்ஸ், ஆர்ட் என்கிறவற்றில், அறிவின்மை என்ற இருட்டிலுள்ளவருக்கு அந்தத் துறையில் அறிவொளியைத் தருபவர் குரு என்று அர்த்தம்.

இன்னொரு டெஃபனிஷனும் இருக்கிறது - அபூர்வமாகச் சில பேருக்கு மட்டுமே தெரிந்தது.

சுகார:ஸித்தித:ப்ரோக்தோ ரேப:பாபஸ்ய ஹாரக:1

உகாரோ விஷ்ணுரவ்யக்தஸ் - த்ரிதயாத்மா குரு ஸ்ம்ருத:11

'குரு' என்ற வார்த்தையில் முதலில் 'க' காரமும் 'உ'காரமும் சேர்ந்து 'கு' அப்புறம் 'ர'வும் 'உ'வும் சேர்ந்து 'ரு'. இப்படி க, உ, ர, உ என்ற நாலு சப்தங்களாக அந்த வார்த்தையைப் பிரித்து, 'க'வுக்கு இன்ன தாத்பர்யம், 'ர'வுக்கு இன்ன, 'உ'வுக்கு

இன்ன என்று ச்லோகத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறது.

க,ர,உ ஆகிய மூன்றுக்கும் என்ன அர்த்தமோ அதுவே ரூபமாக அமைந்தவர்தான் குரு என்று முடித்திருக்கிறது:த்ரிதயாத்மா குரு:ஸ்ம்ருத:'அம் மூன்றும் ஒன்றுபட்டதாக 'குரு' என்ற வார்த்தை நினைக்கப்படுகிறது.'


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'குரு' சிஷ்ய உறவு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'க':ஸித்தியளிப்பது.
Next