ஆசீர்வாத சக்தி ஸரி, அதற்காக நான் உங்கள் நல்லதற்கு ஆசீர்வாதம் பண்ணுகிறேனென்றால் அந்த ஆசீர்வாதம் நிஜமா

ஆசீர்வாத சக்தி

ஸரி, அதற்காக நான் உங்கள் நல்லதற்கு ஆசீர்வாதம் பண்ணுகிறேனென்றால் அந்த ஆசீர்வாதம் நிஜமாகவே நல்லது பண்ணிவிடுமா? அந்த சக்தி அதற்கு உண்டா? நிஜமாகத் தபோசக்தி பெற்றவர்களாக இருந்து கொண்டு பரமாத்மாவுடன் ‘டச்’ வைத்துக் கொண்டிருப்பவர்களுடைய ஆசீர்வசனத்திற்குத்தான் சக்தி இருக்கும். மற்றவர்கள் ஆசீர்வாதம் பண்ணுவதென்பது, எந்த சுபசிந்தனைக்கும் கொஞ்சம் நல்லது பண்ணும் சக்தி உண்டு என்ற அளவில் ஏதோ துளி, தாற்காலிகமாகப் பண்ணுவதோடு முடிந்து போய்த்தான் விடும்.

வேடிக்கை என்னவென்றால், எவன் ஸம்பந்தமே இல்லை என்று கத்திரித்திருக்கிறானோ அவனுக்குத்தான் ஆத்ம மார்க்கத்தில் இருக்கிற ‘டெடிகேஷ’னாலும், அதிலே அவன் அடைந்திருக்கிற அநுபவங்களாலும் ஆசீர்வாத சக்தி – அருள், அநுக்ரஹம் என்கிறது – ஸ்வாபாவிகமாகவே (தன்னியல்பாகவே) உண்டாகி விடுகிறது! அவனுக்கே தெரியாமலும், அவன் உத்தேசம் பண்ணாமலுங்கூட அந்த ஆசீர்வாதம், அவனை நமஸ்காரம் பண்ணுகிறவனிடம் போய்ச் சேர்ந்து அவனுக்கு நல்லது பண்ணிவிடும் – பழுத்த பழம் தானாகவே வெடித்து, யார் அதற்குக் கீழே போய் வாயைத் திறந்தாலும் சாற்றைச் சொட்டுகிற மாதிரி!

அவன் மாதிரி ஸ்வாநுபூதி ஒன்றே குறி என்றில்லாமல் ஊர் பாடெல்லாம் கால் பாடு என்று இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிற எங்கள் ஸமாசாரம் என்னவென்றால் நாங்கள் இழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிற ஈடுபாடுகளே எங்களை இழுத்துக் கொண்டு – அநுபூதிக்கானதைப் பண்ணிக் கொள்ள முடியாமல் ‘டிஸ்ட்ராக்ட்’ பண்ணி இழுத்துக் கொண்டு – போய் விடுகிற ஆபத்து இருக்கிறது. பெரிய ‘ரிஸ்க்’! அதிலிருந்து எந்த அளவுக்குத் தப்பித்து, ஆத்ம லக்ஷ்யத்திற்குக் குந்தகமில்லாமலே லோகத்திற்கான கார்யங்களை – குருவாகச் செய்ய வேண்டிய கடமைகளை – பாகுபடுத்திக் கொண்டு, இந்த இரண்டும் பரஸ்பரம் பாதகம் பண்ணிக் கொள்ளாமல், ஒன்றுக்கொன்று ஸாதகமாக, ஸாதனா பலத்தினால் குருவாகப் பண்ணும் லோக க்ஷேம கார்யம் புஷ்டி பெறுவதாகவும், இப்படி லோக க்ஷேமமாகத் தொண்டு பண்ணுவதே சித்த சுத்தியை விருத்தி பண்ணி அதன் மூலம் ஸாதனைக்கு இன்னும் பலம் தருவதாகவும் அழகாக முறைப்படுத்திக் கொண்டு வரம்பு தப்பாமல் போவதில் எந்த அளவுக்கு ஜயிக்கிறோமோ, அதைப் பொறுத்தே ஆசீர்வாத சக்தியும் உண்டாகும்.