ஆசார்யாளும் நாராயண நாமமும் ஜகத் வியாபாரத்திற்குக் காரண சக்தி என்று சொன்னேனே, அதை ஆசார்யாள் தம்முடைய

ஆசார்யாளும் நாராயண நாமமும்

ஜகத் வியாபாரத்திற்குக் காரண சக்தி என்று சொன்னேனே, அதை ஆசார்யாள் தம்முடைய பாஷ்யப் புஸ்தகங்களில் ‘நாராயண’ என்ற பெயராலேயே குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு அநேக காரணம். இப்போது அந்த டிஸ்கஷனில் இறங்காமல் குறிப்பாக ஒன்றைச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

தத்வங்களை அலசி அலசி முடிவு கண்டு வேதாந்தம், மீமாம்ஸை, ஸாங்க்யம், ந்யாயம் என்றெல்லாம் சாஸ்திரங்களைப் படைத்த தேசம் நம்முடைய இந்த தேசம். முக்யமாக இந்த சாஸ்திரங்களில் ஈடுபட்டவர்களை உத்தேசித்துத்தான் ஆசார்யாள் பாஷ்யப் புஸ்தகங்கள் எழுதினது. ஆனாலுங் கூட…

தத்வ ஆராய்ச்சிக்கு இந்த தேசம் பெயர் போனது என்றாலும் அதைவிட இதற்கு ஜாஸ்திப் பெயர் – நல்ல பெயர், அவப்பெயர் இரண்டுந்தான் – எதில் என்றால் dry தத்வமாக இல்லாமல், ஆனாலும் தத்வ ரூபமாகவே இருக்கிற ஜீவனுள்ள மூர்த்திகளாக ஏகப்பட்ட தெய்வங்களைக் காட்டியிருப்பதற்குத்தான். ஆகையினால் ஆசார்யாள் தம்முடைய பாஷ்யங்களில் ப்ரபஞ்சகாரண சக்தியான பரமாத்மாவை அப்படியொரு தத்வமாகவே முழுக்கச் சொல்லிக் கொண்டு போய்விடாமல், மூர்த்தியாக பாவித்து உறவு கொண்டாடிப் பழகிப் போன ஸமூஹத்திற்கு ‘அப்பீ’லாகும்படியான ஒரு நாமத்திலேயும் அங்கங்கே குறிப்பிட வேண்டுமென்று நினைத்திருக்கிறார். அப்போது எந்த ஸ்வாமியின் நாமாவைப் போடுவது?

ஏகப்பட்ட ஸ்வாமிகள் இருந்தாலும் ஆதியிலிருந்து இன்றுவரை நம் ஜனங்களை சைவர்-வைஷ்ணவர் என்று இரண்டு broaddivisionகளாகவே வைத்து விடலாம். இப்படி இரண்டு பேர் சிவன், விஷ்ணு என்று இருப்பதில் எதைப் போடுவது என்று ஆசார்யாள் பார்த்திருப்பார். ஆசார்யாள் யார்? சிவ அவதாரந்தானே? அதனால், ‘தன் பெயரையே போட்டுக் கொள்ளவாவது?’ என்று நினைத்திருப்பார். சிவனுக்கு ரொம்பவும் ஆப்தம் மஹாவிஷ்ணு; அப்படியே மஹாவிஷ்ணுவுக்கும் சிவன். ஆனபடியாலேதான் ஜகத்காரண சக்தி, ப்ரபஞ்ச மஹாசக்தி, ஸகுண ப்ரம்மம், ஈச்வரன் என்றெல்லாம் வேதாந்தத்திலே சொல்கிற பரமாத்மாவுக்கு ஒரு மூர்த்தி காட்டுகிற இடத்திலெல்லாம் அவர் ‘நாராயணன்’ என்றே பேர் போட்டு விட்டார்….

நடுவாந்தரத்தில் ‘ஈச்வரன்’ என்று ஒரு வார்த்தை சொன்னேன். ஈச்வரன் என்றாலே சிவன் என்று பொதுப்படை அபிப்ராயமாகியிருந்தாலும் வேதாந்த சாஸ்திரத்தில் ஸகுண ப்ரம்மத்துக்கே அந்தப் பேர். ராமாநுஜாசார்யார், மத்வாசார்யார் எல்லாருங்கூட அந்த அர்த்தத்தில் அதே பேரைத்தான் போட்டிருக்கிறார்கள்….

“ஆசார்யாள் ‘சிவாநந்த லஹரி’, இன்னும் அநேக சிவ ஸ்தோத்ரங்களெல்லாம் பண்ணியிருக்கிறாரே, அங்கே மட்டும் எப்படித் தன்னையே தான் ஸ்துதித்துக் கொண்டார்?” என்று கேட்டால், அதெல்லாம் பக்தி ஸ்துதிகள். பலவேறு ஸ்வாமிகளை இஷ்ட தெய்வமாகக் கொண்ட பலவேறு ஜன ஸமூஹங்களுக்கும் அவரவருடைய இஷ்ட தெய்வத்திடம் மனஸை நிறுத்துவதற்கு ஸஹாயமாக ஆசார்யாள் அத்தனை ஸ்வாமிகளையும் பற்றிப் பாட வேண்டியிருந்தது. அதிலே ப்ரதான தெய்வங்களில் ஒன்றான சிவனை எப்படி விட முடியும்? ஆகையினாலே சிவபரமான ஸ்துதிகளும் பண்ணினார்.

ஆசார்யாள் தமக்கென்று எந்த ‘ஐடெண்டிடி’யும் இல்லாத ஆத்ம ஸ்வரூபமாக இருந்தவர். அதனாலேயே அவரால் எவரெவர் மனப்பான்மையுடனும் ‘ஐடென்டிஃபை’ பண்ணிக் கொண்ட மாதிரி இருந்து கொண்டு, அவரவரையும் மேலே உசத்திக் கொண்டு போக வழிபண்ண முடிந்தது. ஒரு கலரும் இல்லாத ஜலம் கரிசல் பூமியில் பாய்கிற போது கறுப்பு மாதிரி, செம்மண் பூமியில் பாய்கிற போது சிவப்பு மாதிரி எல்லாம் தெரிகிறதோல்லியோ? அப்படி! இப்படி இருந்ததில் பக்தி வழியில் போய் விருத்தியாகக் கூடியவர்களுக்காக அவர் எல்லா ஸ்வாமிகளின் மேலேயும் ஸ்தோத்ரங்கள் பண்ணும் போது அந்தந்த ஸ்வாமிக்கும் பக்தராக ஐடென்டிஃபை ஆன மாதிரி இருந்தார். அந்த ரீதியிலே ஈச்வரபரமாக, அதாவது சிவனைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ணும் போதும் அவர் சிவாவதாரமாக இல்லாமல் சிவ பக்தராகவே பாடிக் கொடுக்க முடிந்தது. அவதாரமாயிருந்தால்தானே தன்னையே தான் ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டதாகும்? அப்படியில்லாமல் சிவ பக்தராக இருக்கும் போது தமக்கு பகவானான அந்த சிவனை எத்தனை வேண்டுமானாலும் ஸ்தோத்திரிக்கலாந்தானே?

“தம்முடைய மடங்களிலே அவர் சந்த்ரமெளளீச்வரர் என்று சிவனைத்தானே ப்ரதானமாக வைத்து மற்ற ஸ்வாமிகளைப் பரிவாரமாக வைத்திருக்கிறார்? எல்லா ஜனங்களுக்குமான மடத்தில் எல்லா ஸ்வாமிகளுக்கும் ஸம ப்ரதான்யம் கொடுக்காமல் ஏன் இப்படிப் பண்ணினார்?” என்றால், இது அவர் உத்தேசித்து ப்ளான் போட்டுப் பண்ணிய கார்யமே இல்லை. அந்தப் பரமேச்வரனேதான் தன்னுடைய இந்த அவதாரத்திடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களைக் கொடுத்து தேசத்தில் ஐந்து இடங்களில் ப்ரதிஷ்டித்து சாச்வதமாகப் பூஜை நடக்கப் பண்ணும்படியாக ஆக்ஞை செய்தார். அப்படியே நடத்தும் போது ஆசார்யாள் தம்முடைய மடங்கள் இரண்டிலும் அந்த லிங்கங்களில் இரண்டை ப்ரதிஷ்டை பண்ணினார் – இங்கே நம் (காஞ்சி) மடத்திலும், ச்ருங்கேரி மடத்திலும் பரமேச்வரனே கொடுத்து, பூஜிக்கும்படியாகவும் ஆக்ஞை பண்ணியதால் அந்த லிங்கங்களுக்கே ப்ரதான மூர்த்தியாக ஸ்தானம் கொடுத்து மற்ற ஸ்வாமிகளைப் பரிவாரமாக வைக்க வேண்டும் என்றாகி விட்டது. இப்படி இரண்டு மடங்களில் செய்ததால் தம்முடைய மற்ற மடங்களிலும் அதே போலச் செய்தால்தானே ‘யூனிஃபார்மிடி’ இருக்கும் என்று நினைத்து எல்லா மடங்களிலும் சிவபஞ்சாயதனமாகவே ** பூஜையை ஆசார்யாள் வைக்கும்படி ஆயிர்று.

** சிவபெருமானை நடுநாயகமாகவும் அம்பிகை, திருமால், விநாயகர், ஸுர்யன் ஆகிய நால்வரைப் பரிவாரமாகவும் கொண்டதே சிவபஞ்சாயதனம்.

”எல்லாம் சரி. ஆனால் ஆத்ம சாஸ்த்ரமான பாஷ்யப் புஸ்தகங்கள் எழுதும்போது ஆசார்யாள் ‘ஒரு ஐடென்டிடியும் இல்லாத ஆத்ம ஸ்வரூபம்’ என்றீர்களே, அப்படித்தானே இருந்து கொண்டிருக்க வேண்டும்? அங்கே எதற்கு அவர் சிவ அவதார ஐடென்டிடியை வைத்துக் கொண்டு ‘நாமே நம்மைச் சொல்லிக் கொள்ளவாவது? அதனால் ‘நாராயண’ என்று போடுவோம்’ என்று நினைக்க வேண்டும்?” என்று கேட்டீர்களானால், பதில் வைத்திருக்கிறேன். (சிரித்து) ‘கொஸ்ச்சின் பேப்பர்’, ‘ஆன்ஸர் பேப்பர்’ எல்லாம் ’ப்ரிபேர்’ பண்ணிக் கொண்டுதான் கதை அளக்க வந்திருக்கிறேன்!

என்ன ஆன்ஸர் என்றால், ஆத்ம ஸ்வரூபம் புஸ்தகமே எழுதாது! எதுவும் பண்ணாது! அது பாட்டுக்கு இருக்கிறபடி இருக்கும். இருக்கும்தானே ஒழியப் பண்ணாது! எப்போது புஸ்தகம் எழுத உட்கார்ந்தாரோ அப்போதே ஆத்ம ஸ்வரூபம் போய் அவதாரம் வந்தாச்சு என்று அர்த்தம்…. ஸரியாகச் சொன்னால், ஆத்ம ஸாக்ஷாத்கார ஸமாதி நிலை போன மாதிரியும் லோகத்திலே தர்மாபிவிருத்திக்காகக் கார்யம் பண்ண வேண்டிய ‘ட்யூடி’ உள்ள அவதாரமே தாம் என்று அவர் நினைத்த மாதிரியும் உள்ளபோதுதான், ‘புஸ்தகம் எழுதறேண்டா’ என்று அவர் உட்கார்ந்து கொண்டது. அந்த நிலையில், அவதாரம் என்றால் யாருடைய அவதாரம் என்றும் கேள்வி வரத்தானே செய்கிறது? சிவாவதாரம் என்று பதில் கிடைக்கிற போது அவதார சிவனே ஆதார சிவனைச் சொல்லிக் கொள்வது ஒளசித்யமில்லை (உசிதக் குறைவானது) என்றும், விஷ்ணுவைச் சொல்வதுதான் அழகு, ஸமரஸம், கெளரவம் என்றும் ஆகிறதோல்லியோ?

ஆகக் கூடி, ஜகத்துக்குக் காரணப் பொருளாக இருக்கப்பட்ட மூலத்துக்கு ஆசார்யாள் நாராயணப் பேர் கொடுத்தே பாஷ்யப் புஸ்தகங்களில் எழுதியிருப்பது, அந்தப் புஸ்தகங்களின் பரம தாத்பர்யம் பரமாத்ம ஜீவாத்மாக்களின் அத்வைதம், அவற்றிலே சிவாவதாரமானவர் விஷ்ணுவின் பெயரைப் போட்டிருப்பதில் ஹரிஹராத்வைதமும் (திருமாலும் சிவ பெருமானும் ஒன்று என்பதும்) வந்து விடுகிறது!...

மஹாவிஷ்ணுவுக்கு எத்தனையோ பேர், ஸஹஸ்ர நாமமே இருக்கும் போதிலும் ஏன் நாராயண நாமத்தைப் போட்டாரென்றால் அதுதான் மஹாவிஷ்ணுவுக்குப் பரம மந்த்ரமாக இருக்கிற அஷ்டாக்ஷரீயில் வருகிற பெயர்.

அயனம் என்றால் வழி, பாதை என்று ஒரு அர்த்தம். பாதை வழியாகப் போய்ச் சேருகிற இருப்பிடம் என்றும் அர்த்தம். நரர் என்கிற ஜீவாத்மாக்களுக்கு இரண்டு அர்த்தத்திலும் அயனமாக இருக்கிறவன் நாராயணன். கடைத்தேறும் வழியான ப்ரஹ்மவித்யா சாஸ்திரமாக இருப்பவன் அவனே. “அத்யாத்ம வித்யா வித்யானாம்” என்று அவனே கிருஷ்ண பரமாத்மாவாக வந்த போது சொல்லிக் கொண்டிருக்கிறான்.** அந்த வித்யையின் முடிவாக, பலனாக சென்று சேரும் இருப்பிடமான பரப்ரஹ்மமாக இருப்பவனும் அவனே. ஆகையினாலேதான் ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையைச் சொல்லும் போது ‘நாராயணம்’ என்றே ஆரம்பிக்கிறது. *** ஆகையால் ப்ரஹம வித்யா சாஸ்திரமான பாஷ்யப் புஸ்தகத்தில் நாராயண நாமத்தைச் சொல்லுவது ரொம்பவும் பொருத்தமானதே.

** கீதை 10.32

*** ‘நாராயணம் பத்மபுவம்’ என்ற ஸ்மார்த்தர்களுக்கான குரு பரம்பரை ஸ்லோகம். 2-ம் பகுதி, “நம்மை நாமாக்குபவர்” என்ற உரை பார்க்க.

சங்கர நாமாவோடேயே நாராயண நாமாவைச் சேர்த்துத் தான் ‘சங்கரநாராயணன்’ என்றே பெயரும் இருக்கிறது. தென் பாண்டி நாட்டில் சிவ விஷ்ணு ஒற்றுமையை இரண்டு பேரும் ஒரே சரீரத்தில் ஒன்று சேர்ந்திருக்கிற மூர்த்தியால் எடுத்துக் காட்டிக் கொண்டு பெரிய க்ஷேத்ரம் இருக்கிறது. அந்த மூர்த்திக்கு சங்கரநாராயணன் என்றே பேர்…

‘ஸ்மார்த்தரான* போதிலும் ‘வீரசைவர்’ என்று சொல்கிற அளவுக்குப் பரமசிவன் மட்டுமே தெய்வம் என்று அபிப்ராயப்பட்ட ஒருத்தர் இருந்தார். அவர் நமஸ்காரம் பண்ணும்போது நான் ‘நாராயண’ சொல்வது அவருக்கு ஸங்கடமாக இருந்திருக்கிறது. நான் வாய்விட்டு அப்படி அதிகம் சொல்கிறதில்லைதான். ஆனாலும் மடத்து ஸ்ம்ப்ரதாயம் அப்படித்தான் என்று அவருக்குத் தெரியும். அதனால் ஸங்கடப்பட்டிருக்கிறார். என்னிடமே ஒரு நாள் கேட்கவும் கேட்டுவிட்டார்.

அவரிடம் நான், “சிவபக்தர்கள், விஷ்ணு பக்தர்கள் முதலான அத்தனை ஹிந்து மத ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கும் உபநிஷத்துக்கள் பொதுதானே? அவற்றிலே சிவ குமாரனான ஸ்கந்தன் பேரில் ‘ஸ்கந்தோபநிஷத்’ என்று இருக்கப்பட்டதில் விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ: - ’விஷ்ணுவின் ஹ்ருதயத்தில் சிவன் இருக்கிறார்’ – என்று இருக்கிறது. அதனால், நான் சொல்கிற நாராயண நாமத்துக்கும் உயிர் கொடுக்கிற ஹ்ருதயமாக சிவன் தானே இருக்க வேண்டும்?” என்று கேட்டேன்.

அவர், “ஆமாம், ஆமாம்” என்று ஒப்புக் கொண்டு த்ருப்தராகப் போனார்.

நான் கொஞ்சம் ‘ஸாமர்த்யம்’தான் பண்ணி விட்டேன்! (ஏனென்றால்) நான் அவரிடம் சொன்னது half truth தான்! இன்னொரு half என்னவென்றால்: “விஷ்ணோச்ச ஹ்ருதயம் சிவ:”  என்பதற்கு முன் பாதமாக அதே மந்த்ரத்தில் “சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு:” – என்று ‘சிவனுடைய இதயத்தில் விஷ்ணு இருக்கிறார்’ என்றும் இருக்கிறது.

*அனைத்துக் கடவுளரையும் ஏற்கும் ஸ்மிருதிகளைப் பின்பற்றும் ஸ்ரீ சங்கராசாரிய மரபுக் குடியினர்.

அந்தத் தீவிர சிவபக்தரை ஸமாதானப்படுத்த ஸாதகமாக இருந்த ஒரு பாதியை மட்டும் சொல்லிச் சமாளித்து விட்டேன்!

(அந்த) இரண்டு வாக்யமுமே நிஜந்தான்; (சிரித்து) இரண்டுமே full truth தான். (எவ்வாறெனில்) ஆடி, ஓடி நடக்கிற கார்ய சக்தி என்ற dynamic energy-க்கும் கார்யம் இல்லாமல், அசைவு இல்லாமல் சாந்தமாக இருக்கும் ஒரு nucleus – கருப் பொருள் – ஹ்ருதயம் என்று சொல்லக்கூடிய உள்பாகம் இருக்கவே செய்கிறது; அதே மாதிரி static என்று அசையாமல் stationary- யாக இருக்கப்பட்ட வஸ்துக்களுக்குள்ளும் ஹ்ருதய ஸ்தானத்தில் dynamic energy குமுறிக் கொண்டேதான் இருக்கிறது. Static Principle-ஐத்தான் சிவன் என்பது; Dynamic Principle-ஐயே விஷ்ணு என்பது.

கார்யலோகத்தில் நடக்கும் ஸகலத்திற்கும் விஷ்ணு தான் காரணம் என்று இதிலிருந்து ஏற்படுகிறதல்லவா? அப்போது ஸகல கார்யங்களையும் அவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் ஏற்படிகிறதோ இல்லியோ?

ஆசார்யாள்தான் தம்முடைய காலத்தில் ஆரம்பித்து வைத்தார் என்றில்லாமல், அவருக்கும் எத்தனையோ காலத்திற்கு முன்னாலிருந்தே, காலமே கண்டுபிடிக்க முடியாத அத்தனை ஆதிகாலத்திலிருந்து இந்த தேசத்தில் சாஸ்த்ரங்கள் அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கின்றன:

காயேந வாசா மநஸேந்த்ரியைர் –வா

புத்த்யாந்மநா வா ப்ருக்ருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்-யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி||

கார்யம் என்றால் உடம்பால் செய்கிறது மட்டுமில்லை. மனஸினால் நினைப்பது, புத்தியினால் ஆலோசிப்பது, ஜீவாத்மா என்று இருந்து கொண்டு ப்ரக்ருதி என்ற மாயையினால் ஏற்பட்ட இயற்கைக் குணத்தில் நாம் ஸ்வபாவமாகச் செய்கிறது எல்லாமே கார்யந்தான். த்யானம் என்று பண்ணுவதுகூட கார்யந்தான். ஸமாதி நிலை ஒன்று தவிர ஸகலமுமே கார்யந்தான். அப்படி, இயற்கைக் குணத்தால் தூண்டப்பட்டு காயத்தால், வாக்கால், புத்தியால், கர்மேந்த்ரிய, ஞானேந்த்ரியங்களால், என்னென்ன செய்கிறேனோ அந்த ஸகலத்தையும் பரம்பொருளான நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன்” என்பதுதான் ஸ்லோகத்தின் அர்த்தம்…………..

Half-truth, full-truth சொன்னேனே! அப்படி ஒவ்வொருவருமே  Full Truth-ஆக இருக்கப்பட்ட சிவன், விஷ்ணு இரண்டு பேரும் ஒரே ரூபத்தில்  half-half ஆகச் சேர்ந்திருப்பதுதான் சங்கரநாராயண மூர்த்தம். அந்த மூர்த்தி உள்ள க்ஷேத்திரத்திற்கும் சங்கர நாராயணன் கோவில் என்று பெயர், அதைத்தான் ‘சங்கர நயினார் கோவில்’ என்று வழங்குவதாக ஆகியிருக்கிறது.

ஆசார்யாளே அந்தப் பெயரை ஒரு முக்யமான ஸந்தர்ப்பத்தில் போட்டிருக்கிறார். கேள்வி-பதில் ரூபத்தில் ‘ப்ரச்நோத்தர ரத்நமாலிகா’ என்று அவர் ஒன்று அருளியிருக்கிறார். அதை ஸமாப்தி பண்ணுவதற்கு முந்திய ஸ்லோகத்தில் “பகவான் என்றும் மஹேச்வரன் என்றும் சொல்கிறது எவரை?” என்று கேள்வி. பதிலாக சிவன், விஷ்ணு என்று எவரொருவரையும் நம்முடைய ஸமரஸ அத்வைத ஆசார்யாள் சொல்லாமல், ‘சிவ விஷ்ணுக்களாகச் சேர்ந்துள்ள ஒரே ஆத்மாதான்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லும் போது ‘சிவ விஷ்ணு’ என்றோ ‘ஹரிஹரன்’ என்றோ வார்த்தை போடாமல் ‘சங்கரநாராயணன்’ என்றே போட்டிருக்கிறார்:

கச்ச பகவான் மஹேச:?

சங்கரநாராயணாத்மைக:

ஆனபடியால் அந்த சங்கரரும் நாராயண நாமத்தை விசேஷித்துச் சொல்லியிருப்பது பொருத்தந்தான்.

மொத்தத்தில் விஷயம், ஜகத்காரண மஹாதத்வத்தை ஆசார்யாள் ‘நாராயணன்’ என்றே குறிப்பிடுவார். அப்படித்தான் எங்களுக்கு மற்றவர்கள் பண்ணுகிற நமஸ்காரத்தையும் காரணவஸ்துவுக்குச் சேர்த்துவிட வேண்டுமென்று சொல்லும் போது ‘நாராயணனுக்குச் சேருங்கள்’ என்று சொல்லி, அப்படி சேர்ப்பிப்பதற்கு ஈஸியாகத் தோன்றுகிற ஒரு விதி பண்ணிக் கொடுத்திருக்கிறார்.