‘ஸத்’தும் ’சித்’தும் சேர்ந்த ’ஆ

ஸத்’தும் ’சித்’தும் சேர்ந்த ’ஆனந்த’மே ஸுப்ரஹ்மண்யம்

ஷண்முகம் – ஆறுமுகம் ஸமாசாரத்துக்கு வருகிறேன். குஞ்சித ’பாதம்’ மாதிரிதான் இங்கே ’முகம்’ என்று ‘ம்’மில் முடியும் ஒரு அவயவத்தையே ஸ்வாமியாய் வைத்து மநுஷ்ய பெயர் ஏற்பட்டதா என்றால் – இல்லை! தனியாக அந்தப் பாதத்தை வைத்துப் பூஜிக்கிற மாதிரி ஸுப்ரம்மண்ய ஸ்வாமியின் ஷண்முகங்களை மட்டும் வைத்துப் பூஜிக்கிற வழக்கம் இல்லையே! மாரியம்மனுக்குத்தான் மூஞ்சி மட்டும்!

ஷண்முக ஸமாசாரம் என்னவென்றால் : பரமேச்வரனின் முகங்களிலுள்ள லலாட நேத்ரங்களிலிருந்து (நெற்றிக் கண்களிலிருந்து) சிவ தேஜஸ் ஆறு பொறிகளாக வெளிப்பட்டு, அப்புறம் ஆறு குழந்தைகளாகி, அதற்கப்புறம் ஆறு குழந்தைகளும் ஒட்டிக்கொண்டு ஷண்முகங்களோடும், த்வாதச புஜங்களோடும் ஒரே ஸுப்ரஹ்மண்ய மூர்த்தியாயிற்று என்று நிறையக் கேட்டிருக்கிறோமல்லவா? ஐந்தே முகம் என்றால் ஐந்து லலாட நேத்ரந்தான் இருக்க முடியும். ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு பொறி என்றால் ஐந்து பொறி, அப்புறம் ஐந்து குழந்தைகள் என்று தானே இருக்க முடியும்? ஆனால் ஆறு பொறி, ஆறு குழந்தைகள், ஒன்று சேர்ந்து ஆறுமுகஸ்வாமி என்பதால் ஐந்தோடு ஆறாவதான அந்தப் பராத்பர அதோமுகத்தின் பொறியும் சேர்ந்திருக்கிறது என்றுதானே ஆகிறது? அப்படித்தான் சாஸ்திரத்திலும், புராணத்திலும் சொல்லியிருக்கிறது. சிவதேஜஸால் மட்டுமில்லாமல் சிவ-சக்திகளின் தேஜஸால் மூர்த்திகரித்தவனே ஸுப்ரஹ்மண்யம் என்பதுதான் புராணமும் சாஸ்திரமும் சொல்வது. பஞ்சக்ருத்ய மூர்த்திகளில் ஒருவனான ஸதாசிவனையும் உள்ளடக்கிய அம்பாளின் தேஜஸ் ஆறாவதான அதோ முகத்தாலேயே வெளியாகி ஷண்முகனை உண்டுபண்ணினது. ஸச்சிதானந்தம் – ஸத்-சித்-ஆனந்தம் எனப்படும் பரப்ரஹ்மத்தில் ‘ஸத்’தாக இருக்கிற சிவமும், ‘சித்’தாக இருக்கிற சக்தியும் ஒன்று சேர்ந்து ‘ஆனந்த’மான ஸுப்ரஹமண்ய மூர்த்தியை உண்டுபண்ணினார்கள். அர்த்தநாரீச்வர மூர்த்தத்தில் பேர்பாதி ஸ்வாமி, பேர்பாதி அம்பாள் என்ற நியாயப்படி, இந்த மூர்த்தியை ஆறுமுகங்கள் உண்டு பண்ணினாலும், ஸ்வாமியினுடையதான ஐந்து முகங்களுக்கும் அம்பாளுடையதான ஆறாவது முகம் ஒன்றே ஸம எடை!

அம்பாள் இங்கே தன்னுடைய முக்யமான க்ருத்யமான அநுக்ரஹத்தை ஸதாசிவன் என்ற அதிகாரி மூலம் செய்விக்கிறாள். அதுதான் நமக்கான பாயின்ட். ‘போகம் தரும் அநுக்ரஹம் மோக்ஷம் தரும் அநுபவத்திலேயே சேர்க்கிறதைக் காட்டத்தான் ஸதாசிவ நாமாவோடு ப்ரணவம் சேர்த்தது; அந்த ப்ரணவமே குறுகி ‘ம்’மாகி ஸதாசிவம் என்றாயிற்று’ என்று பார்த்தோமல்லவா? அது காரணமாகவேதான் அதே ஸம்பந்தம் ரொம்ப நெருக்கமாகவுள்ள ஸுப்ரஹ்மண்ய நாமாவோடும் ப்ரணவம் சேர்த்து ‘ஸுப்ரஹ்மண்யோம்’ என்று முடிவதாக வேத மந்த்ரம் இருக்கிறது*. ஒரே ஒரு தரம் மாத்திரம் ஸதாசிவ நாமாவோடு ப்ரணவம் சேர்த்துச் சொல்லியிருக்கிறது என்றால், ஸுப்ரஹ்மண்ய நாமாவையோ மூன்று தரம் ஒவ்வொரு தடவையும் ப்ரணவம் சேர்த்துச் சொல்லியிருக்கிறது! ஸத்ய ப்ரமாணம்கூட மூன்று தரம் தானே பண்ணுகிறோம்? வெள்ளைக்காரர்களும் thrice blessed என்றுதானே சொல்கிறார்கள்? ‘ஸ்வாமி’, ’அம்பாள்’ இரண்டும் சேர்ந்த ‘குழந்தை ஸ்வாமி’ என்ற மூன்று பேருக்காகவும் ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்றுக்காகவும் மூன்று தரம் போலிருக்கிறது!

இப்படித்தான் ஸுப்ரஹ்மண்யம் என்று பேர் வந்தது.

சிவ-சக்திகளுடைய ஆறுமுகங்கள் ஐக்கியமானதில் இருக்கிற பரம தத்வமான உயர் திணை ந்யூடர் ஜென்டரைக் காட்டவே ஷண்முக-ஆறுமுகப் பெயர்களும் ‘ம்’ போட்டுக் கொண்டு முடிவதாக வைத்திருக்கிறார்கள். ‘ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்’ என்கிற போது அருணகிரிநாதர் ‘அருள’லாகிய அநுக்ரஹத்தைச் சொல்லும்போது இந்த உயர்திணைத் தத்வ ந்யூடரை உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது!