'திருமுறை' கிடைக்கச் செய்தவர்

'திருமுறை' கிடைக்கச் செய்தவர்

தேவார கர்த்தா, திருவாசக கர்த்தா கதைகள் சொன்னே. அந்த தேவாரப் பதிகங்கள் அத்தனையும் நமக்குக் கிடைக்கும்படிப் பண்ணியதும் பிள்ளையார்தான்!

அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் ராஜராஜ சோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து ப்ரகாசப் படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது. 'எப்படியாவது' என்றால் நடைமுறையில் எப்படி? அதுதான் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்கு ஒரு நல்ல சேதி வந்தது. "சிதம்பரத்துக்குக் கிட்டே திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி என்று ஒரு மஹான் இருக்கிறார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம். அவர் ஆதி சைவர். அதாவது குருக்கள் ஜாதி. அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, தான் பூஜை பண்ணும் பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னாராம். இவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்யம் பண்ணினாராம். சிறு பிரயாமானதால், பிள்ளையார் நிஜமாகவே நைவேத்யத்தைச் சாப்பிடுவார்கள் என்று நினைத்தார். அவர் அப்படிப் பண்ணாததால் ஒரே அழுகையாய் அழுது கல்லிலே தலையை மோதிக் கொண்டு ப்ராணனை விட்டுவிடப் பார்த்தார். உடனே பிள்ளையார் ப்ரஸன்னமாகி அவர் ஆசைப்பட்டாற்போலேவே அத்தனை நைவேத்யத்தையும் சாப்பிட்டாராம்!

"இதற்குள் பள்ளிக்கூட வேளை தப்பி விட்டதாக நம்பி மறுபுடி அழ ஆரம்பித்தாராம். உடனே பிள்ளையாரே அவருக்கு வித்யாப்யாஸம் பண்ணி ஆத்ம வித்யை உள்பட எல்லாக் கல்வியிலும் தேர்ச்சி பெறச் செய்த விட்டாராம். அந்தப் பெரியவர் பிள்ளையாரோடு ஸஹஜமாகப் பேசுகிறாராம். அவரைக் கேட்டால் தேவார ஸமாசாரம் தெரியலாம்" என்று ராஜராஜ சோழனுக்குச் சேதி சொன்னார்கள்.

அப்படியா?" என்று அவன் உடனே நம்பியுடைய பிள்ளையாருக்காக ஏகப்பட்ட நைவேத்யங்கள் ஸித்தம் செய்து கொண்டு அவரிடம் ஓடினான்.

சொல்ல மறந்துவிட்டேன் - அந்த விநயாகமூர்த்திக்குப் 'பொல்லாப் பிள்ளையார்' என்று பெயர், 'பொல்லா' என்றால் 'துஷ்ட' என்று அர்த்தமில்லை. அவர் துஷ்ட ஸ்வாமியே இல்லை, இஷ்ட ஸ்வாமிதான்!பின்னே என்ன அர்த்தம் என்றால் பொள்ளுதல், பொல்லுதல், பொளிதல் என்றெல்லாம் சொன்னால் 'செதுக்குவது' என்று அர்த்தம். சிற்பி எவனும் செதுக்காமல் ஸ்வயம் - பூ என்று தானாகவே உண்டாகிற விக்ரஹங்களுக்குப் பொல்லா மூர்த்திகள் என்று பேர். அப்படித்தான் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரும்.

ராஜராஜசோழன் ஸமர்பித்த நைவேத்யங்கள் நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாருக்குப் படைத்தார். பிள்ளையார் வாஸ்தவமாகவே

தும்பிச்சுக் கையை நீட்டி அதெல்லாவற்றையும் போஜனம் பண்ணினார் ராஜாவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. நம்பியாண்டார் நம்பியிடம், "உங்களுடைய இந்த ப்ரத்ட்யச தெய்வத்தைக் கேட்டு மூவர் தேவாரங்கள் முழுக்கவும் எங்கே கிடைக்கும்

என்று தெரிந்து கொண்டு சொல்லவேணும் இன்னொரு ஆசை, இப்ப கிடைத்துள்ள தேவாரத்தில் 'திருத்தொண்டத் தொகை' என்று 63 நாயன்மார் பேர்களைத் தெரிவிப்பதாக ஸுந்தரர் பாடல் இருக்கிறதோல்லியோ? அந்த மஹாநுபாவர்களின் திவ்ய சரித்ரங்களையும் பிள்ளையார் வெளியிட்டாரானால் லோக மங்களமாக எல்லாருக்கும் ப்ரசாரம் பண்ணலாம். அநுக்ரஹிக்கணும்' என்று ப்ரார்த்தித்துக் கொண்டான்.

இவன் சொன்னதை அவர் பிள்ளையாரிடம் சொல்லி, "அநுக்ரஹிக்கணும்" என்று வேண்டிக் கொண்டார்.

இந்தத் தமிழ்த் தேசத்துக்கு, பக்த லோகத்துக்கே, பரமோபகாராகப் பிள்ளையாரும் அந்த இரண்டு விஷயங்களையும் தெரிவித்தார். "சிதம்பரத்திலே நடராஜா ஸந்நிதானமான கனக ஸபைக்கு மேலண்டையிலே ஒரு அறை இருக்கிறது. அதிலேதான் மூவரும் தங்களுடைய தேவாரச் சுவடிகள் வைத்திருக்கிறார்கள். கதவில் அவர்களே இலச்சினை வைத்திருக்கிறார்கள். (லாஞ்சனை என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையைத் தமிழில் இப்படிச சொல்வது. அதுதான் அதிகாரப்பூர்வமான அடையாளம், முத்திரை முதலானது.) அப்படி அந்தச் சிதம்பர மேலண்டை அறையில் தேவார மூவரே அதிகார பூர்வ அடையாளமாகத் தங்களுடைய கையை அழுத்திய இலச்சினைகளை வைத்து மூடியிருக்கிறார்கள். அங்கே பாய்க் கதவைத் திறந்து சுவடிகளை எடுத்துக்கோ" என்றார்

அறுபத்து மூவர் சரித்ரங்களையும் சொன்னார். 'நம்பிக்கு தும்பி சொன்னார்' என்பார்கள். தும்பி என்றால் யானை. அதன் கைதான் தும்பிக்கை. ஸாக்ஷ£த் கணபதியே சரித்ரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது!அவர் சொன்னதை நம்பி பிற்பாடு 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலாகப் பாடினார். திருத்தொண்டத் தொகையும், இந்தத் திருவந்தாதியுந்தான் பின்னாளிலே சேக்கிழார் விஸ்தாரமாகச் செய்த 'பெரிய புராண'த்துக்கு ஆதார நூல்கள். அதிருக்கட்டும்.

தேவாரக் கதை என்ன ஆச்சு என்றால், நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.

ஆனால் அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே, இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்று கேட்டார்கள். "அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய 'அதாரிடி' இல்லையே!" என்று கை விரித்து விட்டார்கள்!

சோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான்!சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும், பக்திமானும் மட்டுமில்லை;புத்திமானும்.

என்ன யுக்தி என்றால்:

ஆலய விக்ரஹங்கள் என்கிறவை வெறும் பொம்மை இல்லை, சின்னமோ, ஸிம்பலோகூட இல்லை, அவை ப்ராண பிரதிஷ்டை ஆனவையாதலால் ப்ராணனுள்ள, உயிருள்ள மூர்த்திகளே என்பதுதான் ஆஸ்திகக் கொள்கை. மநுஷ

ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் 'அர்ச்சாவதாரம்' என்றே சொல்வது வழக்கு, முக்யமாக வைஷ்ணவ ஸித்தாந்தத்திலே. அர்ச்சா என்றால் விக்ரஹம்.

இதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான். என்ன யுக்தி என்றால்,

மூவர் விக்ரஹங்களுக்கு விமிரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், "முத்ரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்" என்று கேட்டுக்கொண்டான்.

எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவார ஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.

தீக்ஷிதர்கள் மனஸ் உருகிக் கதவைத் திறந்தார்கள்.

உள்ளே போய்ப் பார்த்தால்!'ஐயோ, இத்தனை ப்ரயாஸைப் பட்டும் கடைசியில் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல, சுவடிகளையெல்லாம் ஒரேயடியாகச் செல்லு மூடிப் போயிருக்கிறதே' என்று எல்லாரும் வருத்தப்படும்படிச் சுவடிக் கட்டெல்லாம் செல்லரித்து மூடிக் கிடந்தது. மொத்தம் மூவர் பாடின லக்ஷத்து சொச்சம் பதிகங்களிலே எண்ணூறுக்கும் குறைச்சலானவை தான் அரிபடாமல் தப்பித்திருந்தன.

எல்லாரும் சோகாக்ராந்தர்களாக இருக்கும்போது அசரீரி கேட்டது. "மலையைக் கெல்லி எலி இல்லை, இந்த எலியே வரப்போகிற காலங்களில் பிறக்கப் போகிறவர்களுக்கு யானைக்கு மேலே!அது பொதுவிலே அவஸர யுகமாயிருக்கும். அந்த அவஸரத்திலும் சினிமா, கிரிக்கெட் தண்டப்பேச்சு, பாலிடிக்ஸ், பத்திரிகை என்றால் மட்டும் மணிக் கணக்காக பொழுது இருக்குமே தவிர இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மற்ற விஷயங்களில் ஒரே பறப்பாக இருக்கும். அதிலேயும் ஆத்ம ஸம்பந்தமான விஷயமென்றால் கேட்கவே வேண்டாம்!லக்ஷம் பதிகம் என்றால் யாரும் கிட்டேயே போகமாட்டார்கள்!அதனால்தான் திவ்ய ஸங்கல்பத்தினால் இப்படி ஆச்சு. அது மாத்திரமில்லாமல் இந்த 796 பதிகங்களே ஒரு ஜீவனைக் கடைத்தேற்றவும் போதும்" என்று அசரிரி சொல்லிற்று. அது சுருக்கமாக 'ஹின்ட்' பண்ணினதில் என் சரக்கும் சேர்த்துச் சொன்னேன்!

தெய்வ ஸங்கல்பம் என்றவுடன் எல்லாரும் ஸந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.

வரப்போகிற காலத்தைப் பற்றி அசரீரி ஒரு மாதிரி 'ஹிண்ட்' பண்ணி விட்டதால், அதன் நல்லது இன்னுங்கூட அநுகூலமாக ஒரு ஏற்பாடு பண்ணினால் நன்றாயிருக்குமே என்று சோழ ராஜா நினைத்தான்.

'வருங்காலத்திலே தேசம், லோகம் எப்படி வேணா போகட்டும். நாம

'ஐடியாலஜி'ன்னு ஏதோ ஒண்ணை ஜோடிச்சு வெச்சுண்டு, அதையே வீம்பாப் பிடிச்சுண்டு தற்போதைக்குக் கார்யமாக்கிட்டா போறும், அதிலே நமக்கு மட்டும் பிற்காலத்துக்காகவும் மூட்டை கட்டிண்டா போறும்' என்று குடியரசுகள் நடக்கும் தற்காலத்தில், பூர்வ கால முடியரசர்கள் எப்படி இருந்திருக்கிறார்களென்று பார்த்தால் ஆச்சர்யமாயிருக்கிறது!

எண்ணூறு பதிகங்களையும்கூட ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால

ஜனங்கள் ஜாஸ்தீ என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான்.

அவரும் அப்படியே தேவாரப் பதிகங்களையும், இன்னும் அப்போது தெரிந்திருந்த மற்ற சைவப் பெரியார்களுடைய பாடல்களையும் 'திருமுறைகள்' என்ற பேரில் பதினொன்றாகப் பகுத்துக் கொடுத்தார். ஸம்பந்தர் தேவாரம் முதல் மூன்று திருமுறை. அப்பருடையது அடுத்த மூன்று. ஏழாந் திருமுறையாக ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பாடல்கள். மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந் திருமுறை. திருமாளிகைத்தேவர், சேந்தனார், கண்டராதித்தர் என்று ராஜ ராஜனுடைய மூதாதையாயிருந்து பக்திப் பாக்கள் பாடியவர், இன்னும் வேணாட்டடிகள், சேதிராயர் முதலான மொத்தம் ஒன்பது அடியார்களுடைய திருவிசைப்பாக்கள் என்கிற பாடல் வகைகள் ஒன்பதாம் திருமறையாக வைத்தார். சேந்தனாரின் ப்ரஸித்தி பெற்ற 'திருப்பல்லாண்டு'ம் இந்தத் திருமுறையைச் சேர்ந்ததுதான். திருமூலர் 'திருமந்திரம்' பத்தாம் திருமுறை.

கடைசியாகப் பதினோராம் திருமுறையில்தான் நம்பியாண்டார் நம்பி தாமே பொல்லாப் பிள்ளையார் மேல் பாடியிருந்த 'இரட்டை மணிமாலை'யச் சேர்த்தார்..அதோடு முன்னே ஒரு கோடு, இரு செவி, முக்கண்' என்று வருவதாக 'மூத்த நாயனார் இரட்டை மணி மாலை' என்று ஒன்று சொன்னேனே - அதைப் பண்ணினது கபில தேவர் - அது, அதிராவடிகளுடைய 'மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை', ஆக, மொத்தம் மூன்று விநாயகத் துதிகளை ஒன்று சேர்த்தார். இரட்டை மணி, மும்மணி என்றெல்லாம் ஏன் பெயர் என்றால் அவற்றில் எல்லாப் பாடல்களும் ஒரே சந்தத்தில் இருக்காது. இரட்டை மணி மாலையில் இரண்டு விதமான சந்தங்களுள்ள பாக்கள் மாறி மாறி வரும். 'மும்மணி'யில் மூன்று விதமான சந்தங்களில் அமைந்த பாடல்கள் வரும். பரமேச்வரனின் புத்ர சிகாமணிக்குத் தினுஸு தினுஸாக மணிமாலைகள்.

இது தவிர அந்த (பதினோராம்) திருமுறையில் நக்கீரருடைய 'திருமுருகாற்றுப்படை' .... அண்ணா - தம்பிகளைப் பிரிக்கப்படாது என்ற நியாயப்படி, விநாயகத் துதிகள் உள்ள திருமுறையிலேயே முருகன் துதியும்'.. திருமுருகாற்றுப்படை பாடிய அந்த நக்கீரருடைய இதர நூல்கள், சோழர்களில் கண்டாராதித்தர் மாதிரிப் பல்லவர்களில் ஐயடிகள் காடவர்கோன் என்று ஒரு பெரிய சிவபக்தர், அறுபத்து மூவரிலேயே ஒருவர், அவர் பண்ணின 'திருவெண்பா', காரைக்காலம்மையார், சேர ராஜாவும் அறுபத்து மூவரில் ஒருத்தரும் ஸுந்தரர் ஸகாவுமான சேரமான் பெருமாள், எல்லோருக்கும் தெரிந்து பட்டினத்தார், கல்லாடனார் முதலான பன்னிரண்டு அடியார்களின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is விநாயகரும் மாணிக்கவாசகரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அருள்மொழியும் இரு அருண்மொழிகளும்
Next