Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வியவஹாரத்தில் ஸாக்ஷி வியவஹார தசையில், லோகம் என்ற ஒன்று இருப்பதாகவும், அதிலே ஜீவ ராசிகள் வாழ்கிறதாகவும், தெ

வியவஹாரத்தில் ஸாக்ஷி

வியவஹார தசையில், லோகம் என்ற ஒன்று இருப்பதாகவும், அதிலே ஜீவ ராசிகள் வாழ்கிறதாகவும், தெரிகிற நிலையில், இது எல்லாவற்றையும் ‘ப்ளான்’ பண்ணி, ஆட்டிப் படைத்து நடத்தி வைக்கிறவன் ஈச்வரன் தான். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்கிறோம். ஆத்மாவை ஸாக்ஷி என்று சொல்லிவிட்டு அப்புறம் ஸாக்ஷி இல்லை என்று சொன்ன மாதிரி இந்த ‘அவனன்றி அணுவும் அசையாது’ கொள்கைக்கும் மாறாக இன்னொன்று சொல்ல வேண்டியிருக்கிறது. ‘மாறாக’ என்றால் முற்றிலும் ‘ஆப்போஸிட்டாக’  இல்லை. அதைக் கொஞ்சம் ‘அமெண்ட்’ பண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘எல்லாம் அவன் செயல்’ ’எல்லாம் சிவன் செயல்’ என்றால், ‘திருட்டுப் புரட்டு, அடிதடி, கொலை, கொள்ளை, ஃபோர்ஜரி, கோழிப் பெடிஷன் எதுவுமே தப்பில்லை; எல்லாம் அவன் ஆட்டிப் படைத்து நடத்துகிறது தானே?’ என்று ஆகி வியவஹாரத்தில் தர்மாதர்ம வியவஸ்தையே போய் விடும். அதனால்தான் ‘அமெண்ட்மெண்ட்’ போட வேண்டியதாகிறது. என்ன அமெண்ட்மெண்ட் என்றால், நல்லது – கெட்டது, தப்பு – ஸரி எல்லாவற்றுக்குமே அவன் தான் மூலம், ஒரு புழு பூச்சியிலிருந்து ஆனை திமிங்கலம் வரையில் அததற்கும் கொடுத்திருக்கிற சக்தி அவனொருத்தனிடமிருந்தே வந்தது தான் என்றாலும் எல்லார் செய்கிற எல்லாக் கார்யங்களையும் நேராக அவன் செய்யவில்லை. ஜீவ வர்க்கத்துக்கு தனித்தனி மனஸ்களை அவன் கொடுத்து, அவரவர்க்கும் தனக்கென்று ஒரு எண்ணம், உணர்ச்சி, ஆசை,  த்வேஷம் இத்யாதி என்று அவனிடமிருந்து பிரிந்து நினைக்கும்படியாக வைத்திருக்கிறான். எல்லாரும் அவனுடைய வேஷந்தான் என்றாலும், தன்னுடைய மஹா வினோதமான மாயா சக்தியினால்  அந்த வேஷக்காரர்களுக்குத் தங்களுடைய ஒரிஜனல், தங்களுடைய மூலஸ்வரூபம் அவனேதான் என்பது அடியோடு தெரியாமல் மயக்கி லோக நாடகம் ஆடுகிறான். ஆனாலும் வேஷத்தைக் கலைத்துத் தன்னோடு அவர்கள் ஏகீ பாவம் (ஐக்கிய உணர்ச்சி) பெறுவதற்கும் அவன் வழி காட்டாமலில்லை. நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அவனே படைத்திருந்தாலும், ஜீவ மனஸ் இவற்றிலே கெட்டதுகளில் போய்ப் போய் விழுகிற மாதிரி மயக்கப் பண்ணினாலும், அந்த ஜீவனுக்கே புத்தி என்கிற ஒன்றையும் கொடுத்து, ‘இது நல்லது இது கெட்டது’ என்று பாகுபாடு பண்ணிப் பார்த்து நல்லதிலேயே போக வேண்டும் என்று தீர்மானிக்கிற சக்தியைக் கொடுத்திருக்கிறான். வழுக்க மரத்திலே ஏறுகிற மாதிரி, புத்தியின் த்ருட ஸங்கல்ப சக்தியினாலே  ஏறுகிறதும், மனஸின் சாபல்ய (சபலத்திற்கு ஆளாகிற) சக்தியாலே வழுக்கி, வழுக்கி இறங்குகிறதுமாக ஏற்ற இறக்கங்களைப் பண்ணி வேடிக்கைப் பார்த்து, ஜன்மாந்தரங்களுக்கு அப்புறமாவது ஒரு ஜீவன் கெட்டதான மாயையிலேயே மறுபடி வழுக்கி விழாமல், நல்லதாய் அதிலிருந்து மேலே ஏறித் தன்னை ஈச்வரன் என்கிற கல்யாண் குணநிலயமான ரூபத்திலே அடையும்படியும், அதற்கும் அப்புறம் அந்த வேறான ஈச்வர ரூபமும் போய், நிர்குண ஸ்வரூபமான ப்ரம்மத்திலே ஏகாத்மாவாக ஒன்றாய்விடும்படியும் அநுக்ரஹிக்கிறான்.  தான் ஜீவனுக்குக் கொடுத்திருக்கிற புத்தியால் அவனே ஆலோசித்து நல்லது கெட்டதைத் தெரிந்து கொள்வதும் போதாது என்ற பரம கருணையால் அவற்றை எடுத்துச் சொல்லும் சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறான். தானே அவதாரங்கள் எடுத்தும், தன்னுடைய அம்சமாக மஹான்களை, ஆசார்ய புருஷர்களை அனுப்பி வைத்தும் அந்த சாஸ்திரப் பிரகாரமான ஆதர்ச வாழ்க்கையை நடத்திக் காட்டி ஜனங்களுக்கு நல்ல வழியில் பிடிப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

இருந்தாலும் அவன் அநுக்ரஹம் ஆவேசமாக ஒரு ஜீவனை ஆட்கொண்டு அவனைக் கார்யமில்லாத சாந்தத்தில் சேர்க்கிறவரை, அல்லது ஒரு ஜீவனுக்கு ஸொந்த ஆசா-த்வேஷங்களில்லாமல் ஈச்வர்னுடைய கருவி மாத்ரமாகவே அவன் கார்யம் செய்கிற நிலை வருகிற வரை, ஜீவர்கள் அவரவர்களே கார்யம் செய்கிற மாதிரியும், தங்கள் கார்யத்துக்கு ஜவாப்தாரியாக நல்லது பண்ணினால் ஸந்தோஷமும், கெட்டது பண்ணினால் துக்கமும் அடைய வேண்டுமென்றுதான் நிர்ணயித்து அப்படியே நாடகம் நடத்தி வருகிறான்.  ’கர்மா தியரி’ என்று இப்போது தேசாந்திரங்களில், மதாந்திரங்களிலும் பல பேர்  ஒப்புக் கொண்டு வருவதான நம்முடைய மதத்தின் ஒரு ஆணி வேரான கொள்கை இப்படி ஜீவனைக் கர்த்தாவாகக் கொண்டுதான் ஏற்பட்டிருப்பது. ஸகலத்துக்கும் ஈச்வர்னே கர்த்தா, எல்லாம் சிவன் செயல் என்றால் நல்ல கார்யங்கள் தான் புண்யமானவை, ஸந்தோஷத்தைத் தருகிறவை, கெட்ட கார்யங்கள் பாபமானவை, அவை துக்கத்தையே தரும் என்று பிரித்துச் சொல்ல நியாயமில்லாமல் போகும்.
ஆனபடியால், ஸாமான்ய ஜனங்களான நாமெல்லோரும் இருந்து வாழ்க்கை நடத்தும் நடைமுறை ஸ்திதியில், நம் ஸகலருடைய சக்தி ஸாமர்த்தியங்களுக்கும் ஈச்வரன் தான் மூலம் என்றாலும், அந்த அர்த்த்த்தில் ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது வாஸ்தவம்தான் என்றாலும், தனித் தனிக் கார்யம் என்று எடுத்துக் கொண்டால், ஜீவர்களான நாம்தான் அவற்றுக்கு ஜவாப் சொல்ல வேண்டிய கர்த்தா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி நம்மையெல்லாம் கார்யம் பண்ணவிட்டிருக்கிற அவன் என்ன பண்ணுகிறானென்றால் நாம் செய்கிற அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஸர்வ வியாபி அல்லவா? ‘அவனுடைய கை எல்லா இடத்திலும் விரிந்திருக்கிறது. அவனுடைய பாதம் எங்கும் பரவியிருக்கிறது. அவனுக்கே எங்கே பார்த்தாலும் கண்; எங்கே பார்த்தாலும் மூஞ்சியும் காதும் வாயும். லோகத்தில் ஸர்வத்தையும் அவன் வ்யாபித்திருக்கிறான்’ என்று அவன் வாயாலேயே கீதையில் சொல்லியிருக்கிறது.

ஸர்வத: பாணிபாதம் த்த் ஸர்வதோக்ஷி சிரோமுகம் |
ஸர்வத: ச்ருதிமல் லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட்தி||  **

“ஸர்வதோஷி’ – ’எங்கே பார்த்தாலும் அவனுக்குக் கண்’ என்பதுதான் குறிப்பாக நமக்கு விஷயம். எங்கே பார்த்தாலும் கண்ணாயிருப்பதால் லோகத்திலே நாம் பண்ணும் அத்தனை கார்யங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிற மஹா பெரிய ஸாக்ஷியாக அவன் இருக்கிறான். ’விச்வ ஸாக்ஷிணீ’  என்று ஸஹஸ்ர நாமத்தில் அம்பாளுக்குப் பேர் சொல்லியிருக்கிறது. ‘கர்மாதி ஸாக்ஷிணீ’ என்று த்ரிசதியிலும் வருகிறது.


** XIII.13
அந்தப் பராசக்தி, அல்லது பரமாத்மாவின் பார்வையில் படாமல் யாரும் எதுவும் பண்ண முடியாது.

பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டுமே என்று நாம் பாட்டுக்கு அடாவடி பண்ணிக் கொண்டு போக முடியாது. ஏனென்றால் அவன் வெறுமனே பார்த்து ஸாக்ஷியம் சொல்கிற ‘விட்னஸ்’ மட்டுமில்லை. பார்க்கிற கார்யங்களின் பலனை நமக்குத் தீர்ப்பாக, தண்டனையாக, அல்லது ‘அவார்ட்’, ‘ரிவார்ட்’களாக வழங்குகிற ஜட்ஜும் அவன் தான். ஸாக்ஷி நியாயாதிபதி இரண்டுமாக இருக்கிறவன் அவன். பாரமார்த்திகமாக ஒரு ஸ்டேஜில் பார்த்தால் கார்யம் பண்ணுகிற (பெரும்பாலும் குற்றவாளியாகவே இருக்கிற) பேர்வழியும் அவன் தான். ஆனால் அந்தப் பாரமார்த்திகம் நமக்கு இப்போது எட்டாது என்றுதானே மெடபிஸிக்ஸைத் தள்ளி வைத்து விட்டுக் கதை பேச வந்திருக்கிறோம்? இங்கே அவன் விட்னஸ், ஜட்ஜ் இரண்டுமாக இருப்பவன் என்பதோடு நிறுத்திக் கொண்டால் போதும்.
ஸாக்ஷி, நியாயாதிபதி இரண்டும் ஒரே ஆஸாமியாக இருப்பதால் பொய் ஸாக்ஷியை நிஜமென்று நம்பி நியாயாதிபதி தீர்ப்புக் கொடுக்கிறதற்கு இடமேயில்லை. இந்த ஸாக்ஷி – நியாயாதிபதியை யாரும் ஏமாற்ற முடியாது. அநேகக் குற்றங்கள் கோர்ட்டுக்கே போகாத மாதிரி இந்தப் பெரிய கோர்ட்டாரிடமிருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது!

அந்த ப்ரக்ஞைதான் அநாதி காலமாக ஜன ஸமுதாயத்தை இந்த மட்டுமாவது நல்ல வழியில் போகும்படிப் பண்ணியிருக்கிறது. அந்த ஸர்வ ஸாக்‌ஷி நாம் பண்ணிகிறதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அப்பப்பவாவது நமக்கு ஞாபகம் வருவதால் தான் ஏதோ ஒரு அளவுக்காவது தப்புத் தண்டாக்களில் போகமலிருக்கிறோம்.

நமக்கு அதில் எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், எதிராளி ஒருவர் நம்முடைய வார்த்தையை நம்பப் பண்ண வேண்டுமானால் அதற்கு தெய்வ ஸாக்ஷியை இழுப்பது மாதிரி வேறு எதற்கும் ‘பவர்’ இல்லை என்று நன்றாகத் தெரிகிறது! நம் வார்த்தையை நம்பாதவரை நம்ப வைப்பதற்குப் பெரிய அஸ்திரம், ‘ஸ்வாமி ஸாக்ஷியா சொல்றேன்’, ‘அம்பாள் ஸாக்ஷி’, ‘ஆகாசவாணி, பூமி தேவி ஸாக்ஷி’ என்று இந்த மாதிரி ஸத்தியம் வைப்பது தான்! “ஸத்யமா சொல்றேன்” என்று நம்முடைய சொந்த ஹோதாவில் பிரதிக்ஞை பண்ணுவதைவிட தெய்வ ஸாக்ஷியைத் துணைக்குக் கூப்பிட்டால் தான் அது எதிராளியிடம் எடுபடுகிறது. தாமே செய்கிற ஸத்தியத்துக்கு ‘வெயிட்’ கொடுக்காதவர்கள் கூட, ‘ஸ்வாமி பேரைத் தைரியமா இழுத்துட்டு பொய்யைச் சொல்ல மாட்டான்’ என்று, நாம் தெய்வத்தின் மேல் ஸாக்ஷி வைப்பதற்கு ‘வெய்ட்’ கொடுப்பார்கள்.

சில ஸமயங்களில் ஸ்தூலமாகவே தெய்வ ஸாக்ஷிக்கு அடையாளம் வைத்துக் கொண்டு கார்யங்கள் செய்கிறோம். இரண்டு தரப்புக்கள் ஒன்று சேர்ந்து முக்யமான ஒப்பந்தங்கள் பண்ணிக் கொள்வது போன்ற ஸமயங்களில், ஸர்வ வ்யாபகமாக உள்ள ஸர்வ ஸாக்ஷி நம் கண்ணுக்குத் தெரியாததால் கண்ணுக்குத் தெரிகிற விதத்தில் அந்த ஸாக்ஷியை ஆக்கிக் கொண்டு ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டால் அதை மீறப்படாது என்ற பயமிருக்குமென்பதால் இப்படிப் பண்ணுகிறோம்.

நம்முடைய வைதிக மதத்தில் ஸ்வாமிக்கு அப்படிப்பட்ட முக்யமான மூர்த்தியாக இருப்பது அக்னி. அதனால்தான் அக்னி ஸாக்ஷியாகப் பண்ணுவதென்று வைத்துக் கொண்டிருக்கிறோம். வதூ-வரர்கள் (மணமகள் – மணமகன்) செய்து கொள்ளும் ஆயுஸுக்கால ஒப்பந்தம் தான் விவாஹம். அதை அக்னி ஸாக்ஷியாகவே செய்கிறோம்.
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it