காவேரி தடம் மாறியது

காவேரி தடம் மாறியது

அவர் இருந்த காலத்தில் காவேரி தமிழ் நாட்டுப் பக்கமாகப் பாயவே இல்லை. கொடகில் உற்பத்தியாகிற காவேரி அப்போது வேறே ஏதோ வழியில் ஓடி, கொஞ்சம் தூரத்திலேயே 'அரபியன் ஸீ'என்கிற மேற்கு ஸமுத்திரத்தில் விழுந்து கொண்டிருந்ததாம். தலைக்காவேரி, மெர்க்காராவில் எவ்வளவோ மழை பெய்த போதிலும் காவேரி பிரவாஹம் விஸ்தாரமாக ஓடி உலகத்துக்கு விசேஷமாகப் பிரயோஜனப்படாமல் சிற்றாறாக ஓடி வீணாக மேற்கு ஸமுத்திரத்தில் விழுந்து வந்ததாம்.

அந்த ஸமயத்தில் சோழ தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ராஜா, ''அடடா அகஸ்தியர் கொண்டு வந்து விட்டிருக்கும் இந்த புண்ய தீர்த்தம் இன்னும் எவ்வளவோ பெரிசாக ஓடி, இன்னும் எத்தனையோ ஜனங்களுக்கு உபயோகமாக முடியுமே!இந்தச் சோணாட்டில் ஜீவநதி எதுவுமே இல்லையே!நம்முடைய சீமைக்குக் காவேரி பாயும்படி பண்ணிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?"என்று நினைத்தார்.

உடனே தலைக்காவேரிக்குப் போய் அங்கே தபஸ் பண்ணிக் கொண்டிருந்த அகஸ்திய மஹர்ஷிக்கு நமஸ்காரம் பண்ணினார். பூர்வத்தில் அகஸ்தியருக்குப் பத்தினியாக இருந்த லோபாமுத்திரையைத்தான் பிற்பாடு அவர் காவிரியாகக் கமண்டலத்தில் கொண்டு வந்திருந்தார். அந்தக் கமண்டலத்தைப் பிள்ளையார் காக்காய் ரூபத்திலே வந்து கவிழ்த்துவிட்டு, காவேரியை நதியாக ஓடும்படி செய்திருந்தார். நதி என்றால் அது ஏதோ அசேதன ஜலப்பிரவாஹமில்லை. அது ஒரு தேவதா ஸ்வரூபமே. காவேரி தேவி பதியின் மனஸை அறிந்தே அவரை விட்டு ரொம்ப தூரம் ஓடிவிடக் கூடாதென்று தான் தன் கதியை ஒருவிதமாக அமைத்துக் கொண்டு சிற்றாறாக இருந்தாள்.

அகஸ்தியரைப் பிராத்தித்தால் அவர் கருணை கொண்டு காவேரியைச் சோழ மண்டலத்துக்கு அனுப்பி வைப்பார் என்று ராஜா நினைத்தார். அதாவது அகஸ்தியர் லோகோபகாரமாக அவள் நீளக்க ஓடட்டும் என்று நினைத்து விட்டால் அவளும் அவர் மனஸ் பிரகாரமே தன் போக்கை மாற்றிக் கொண்டு விடுவாள் என்று தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அகஸ்தயரிடம் போய்ப் பிரார்த்தித்தார். அவருக்குப் பணிவிடை செய்து, அதனால் அவர் மனஸ் குளிர்ந்திருந்தபோது, ''ஒரு வரம் தரவேண்டும்''என்று யாசித்தார். ''காவேரி விஸ்தாரமாகப் பாய்ந்தால் எத்தனையோ வறண்ட சீமைகள் பச்சுப் பச்சென்றாகும். எத்தனையோ ஜனங்களுக்குக் குடிநீரும், பயிருக்கு நீரும் கிடைக்கும். இதற்கெல்லாம் மேலாக அவள் தெய்வத் தன்மை உடையவளாதலால் அவள் தன்னில் ஸ்நானம் செய்கிறவர்களின் பாபங்களைப் போக்குவாள். அவளுடைய கரையைத் தொட்டுக்கொண்டு அநேக புண்ய க்ஷேத்திரங்கள் உண்டாகி ஜனங்களுக்கு ஈச்வர க்ருபையை வாங்கிக் கொடுக்கும்''என்றெல்லாம் விஜ்ஞாபித்துக் கொண்டு, ''ஆகவே காவேரி பெரிசாகப் பாய வரம் தரவேண்டும்''என்று முடித்தார்.

மஹா பதிவ்ரதையான லோபாமுத்ரையிடம் அகஸ்தியருக்கு இருந்த அன்பு அளவில்லாதது. அதனால் தான் அவர் அவள் அந்த சரீரத்தை விட்டுத் தீர்த்த ரூபம் எடுத்த பிறகும் தம்மை விட்டுப் போகாமல் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்தார். அவளால் லோகத்துக்குக் கிடைக்கக் கூடிய பிரயோஜனம் வீணாகப் போகக் கூடாதென்றே பிள்ளையார் காக்காயாக வந்து அதைக் கவிழ்த்து விட்டது. ஆனாலும் பதிக்குத் தன்னிடமிருந்த பிரியத்தை அவள் அறிந்திருந்ததால் அவளோ அவரை விட்டு அதிக தூரம் ஓடாமல் சிறிய நதியாகவே ஓடினாள்.

இப்போது சோழ நாட்டு அரசர் வந்து அகஸ்தியரை ரொம்பவும் பய பக்தியுடன் வேண்டிக் கொண்டவுடன் அவருக்கு மனஸ் இரங்கி விட்டது. அவர் ஸ்வபாவமாகவே கருணை நிறைந்தவர்தான். என்றாலும் என்னவோ நடுவே பத்தினிப் பாசம் அவரைக் கொஞ்சம் இழுத்து விட்டது. இப்போது ராஜா பணிவோடு எடுத்துச் சொன்னதும் லோகோபகாரமாக எவ்வளவோ செய்யக் கூடிய காவேரியைத் தாம் ஸ்வய பாசத்தால் தடுத்து வைப்பது ஸரியில்லை என்று புரிந்து கொண்டார். அவளை மனஸாரத் தியாகம் செய்தார். ''c இவளை அழைத்துக் கொண்டு போகலாம்''என்று வரம் தந்தார்

பகீரதனின் பின்னால் கங்கை போனமாதிரி சோழ ராஜாவுக்குப் பின்னால் காவேரி போனாள் - அதாவது நம்முடைய தமிழ் நாட்டுக்கு வந்து சோழ மண்டலத்தில் விசாலமாகப் பாய்ந்தாள்.

காவேரி இல்லாத சோழ தேசத்தை இப்போது நம்மால் கல்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி இந்தச் சீமையின் மஹா பெரிய கலாசாரத்துக்கே காரணமானவள் இங்கே வந்து சேர்ந்த கதை இதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஒரு ரிஷியின் தியாகம்   ஏரண்டகர் : பெயர்க்காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  நதிகளும் கலாச்சாரமும்
Next