பாபவிநாச முதலியாரும் கவிராயரும் நடராஜா ஸம்பந்தமாக நிந்தா ஸ்துதிப் பாடல் பாடினவர் பாபவிநாச முதலியார் என்கிறவர் அவரைப் பற்றிய வாழ்க்கை விவரம் தெரிய

பாபவிநாச முதலியாரும் கவிராயரும்

நடராஜா ஸம்பந்தமாக நிந்தா ஸ்துதிப் பாடல் பாடினவர் பாபவிநாச முதலியார் என்கிறவர். அவரைப் பற்றிய வாழ்க்கை விவரம் தெரியவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில், தஞ்சாவூரில் மஹாராஷ்டிர ராஜவம்சத்திலே வந்த துளஜா மஹாராஜா ஆட்சி செய்து கொண்டிருந்த போது அவனிடம் ஸம்மானம் பெற்றவர் அவர் என்று தெரிகிறதாம். அருணாசலக் கவிராயரும் அவனுடைய ஆட்சிக் காலத்தில் இருந்தவர்தான். அவன் ஸ்ரீரங்கத்தில் ராமநாடகம் அரங்கேற்றம் ஆனவுடன், கவிராயர் தன் ராஜ்யத்தைச் சேர்ந்தவர் என்பதால் தஞ்சாவூர் ராஜ ஸதஸிலேயும் அதற்கு அரங்கேற்றம் செய்ய நினைத்தானாம். ஆனால் அந்த ஸமயம் பார்த்து நவாப் மதர்மல்லின் படை தஞ்சாவூருக்கு வந்து முற்றுகையிட்டதால் அவன் ஆசைப்பட்டதைச் செய்ய முடியவில்லையாம். ஆனால் கவிராயர் வேறே பல இடங்களுக்குப் போய் Art Patron-களாக அந்த நாளில் இருந்த பல ப்ரபுக்களால் யதேஷ்டமாக ஸம்மானிக்கப்பட்டிருக்கிறார். மணலி முத்துகிருஷ்ண முதலியார் அவருக்குக் கனகாபிஷேகமே பண்ணியிருக்கிறார். கவிராயரின் காலத்திலேயே ராம நாடகம் தேசத்தில் நன்றாக ப்ரசாரமாகி அவரும் சீர் சிறப்போடு இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை பற்றி விவரமாகவே details கிடைத்திருக்கின்றன.

பாபவிநாச முதலியாரைப் பற்றி அப்படியில்லை. அவர் நிந்தா ஸ்துதியாகவே பாடிக் கொடுத்திருக்கிற அழகான பாட்டுக்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன; ப்ரசாரத்திலும் இருந்து வந்திருக்கின்றன. ஆனாலும் இப்போது பல வருஷமாக அவர்  பாட்டு எதுவும் என் காதில் படவில்லை. நான் சொல்லப் போகிற பாட்டு ஒரு காலத்தில் ரொம்ப ப்ரஸித்தியாய் இருந்திருக்கிறது.

முதலியார் தம்முடைய பாட்டுக்களை நாட்யத்தில் அபிநயத்துக்கு ஏற்றபடி அமைத்திருக்கிறார். அதனால் அவற்றைப் ‘பதங்கள்’ என்றே சொல்வார்கள். எல்லாம் உதிரி உதிரியான தனிப் பாட்டுக்கள்தான்; ஒரே கதையாகத் தொடர்கிறவை இல்லை.

கவிராயர் மாதிரி இல்லாமல் முதலியார் நன்றாக உடைத்தே பரிஹாஸம் பண்ணுவார். அதுவே ரஸமாகவும் இருக்கும். பரிஹாஸத்திலேயே அங்கங்கே அவருடைய கனிந்த பக்தியுள்ளமும் தெரியும். தத்வார்த்தமாகவும் சில இருக்கும். நல்ல விஷய ஞானமுள்ளவர் என்றும் தெரியும்.

அப்படி ஆட்டக்காரனிடம், ஆதிரையானிடம் பாடின ஒன்றைத்தான் சொல்ல (நான்) ப்ரியப்படுவது.