Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இங்கே முக்யமான ஒரு விஷயம் தெளிவு செய்யணும் பழைய நூல்களில் ஆரிய, திராவிட (அல்லது தமிழ்) என்று வருகிற

வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி

இங்கே முக்யமான ஒரு விஷயம் தெளிவு செய்யணும்.

பழைய நூல்களில் ஆரிய, திராவிட (அல்லது தமிழ்) என்று வருகிற இடங்களில் இந்த இரண்டும் வேறு வேறு ரேஸ்களைக் குறிப்பதாகக் கொள்வதற்கு இடமே இல்லை. ஒன்றேயான பாரதீய ஜன ஸமூகத்திலேயேதான் பாஷைகளை வைத்து – ரேஸை வைத்து அல்ல – பஞ்ச கௌடர்கள், பஞ்ச திராவிடர்கள் என்றும் பத்து பாஷைகளைப் பேசுபவர்களாகப் பாகுபாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரிவினைக்காரர்களின் கொள்கைப்படியே, ஒரே Dravidian stock – ஐச் சேர்ந்தவைதான் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்றும். ஆனாலும், தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் இவர்களுக்கிடையில் சம்பிரதாயங்களில் எத்தனை வித்தியாஸங்கள் ஏற்பட்டு ஒன்றொன்றும் கிளை மரபை உண்டாக்கியிருக்கிறது? தமிழிலிருந்து தோன்றியது மலையாளம். அப்படியிருந்தும் கேரளீய கலாசாரம் தமிழ் மரபுகளுக்கு வித்தியாசமாக ஏற்பட்டில்லையா? இப்படித்தான் ஸநாதன தர்ம விருக்ஷம் என்கிற ஒரே தாய் மரத்தில் ஸம்ஸ்கிருதத்தை base ஆகவும், தமிழை base ஆகவும் கொண்டு இரண்டு கிளைகள் பிரிந்தன. பிரிந்தாலும் முழுக்க வேறல்ல; வேர் ஒன்றுதான், அடிமரம் ஒன்றுதான் என்பதை மறக்காமல் அன்பில் இணைந்து பரஸ்பரம் வளர்ந்திருக்கின்றன. ராஜராஜன் முதலான தமிழ் அரசர்கள் இந்த வளர்ச்சிக்கே வளம் கொடுத்தவர்கள். வெள்ளைக்கார அரசாட்சி வந்தபின்தான்  divide and rule – ’பிரித்து ஆள்வது’  என்கிறார்களே – அந்தக் கொள்கைப்படி சாமர்த்தியம் செய்து, வேதத்தில் கெட்ட சக்திகளாகச் சொல்லியுள்ள தஸ்யுவிலிருந்து ஆரம்பித்து, ராமர் சண்டை போட்ட ராவணன், ஸுப்ரமண்யர் சண்டை போட்ட சூரபத்மாஸுரன் என்றிப்படி எவரை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் ஆரிய ரேஸுக்கு விரோதமான திராவிட ரேஸ் என்று நன்றாகக் கட்டிவிட்டார்கள், இந்த அபிப்ராயத்தை குழந்தைகள் ஸ்கூலில் படிக்கிறபோதே பாடமாக இன்ஜெக்ட் பண்ணிவிட்டார்கள். ஒரு premise-ஐ (அடிப்படைக் கருத்தை) ஒப்புக் கொண்டுவிட்டால் அப்புறம் எல்லாம் அதற்கு ஸாதகமாகவும் அநுகூலமாகவுமே தெரியும். அப்படித்தான் இப்போது நம்மவர்களே ‘இரண்டு ரேஸ் தியரி’யைக் கேள்வி கேட்காமல் basic-ஆக ஒப்புக்கொண்டுவிட்டதால் நம்மவர்களுக்கே எதை எடுத்தாலும் இதற்கு அத்தாட்சி கிடைப்பதாகத் தோன்றுகிறது! இதுதான் ஸநாதனிகளை ‘ஸுபர்ஸ்டீஷியஸ்’ (குருட்டு நம்பிக்கைக்காரர்கள்) என்று பரிஹஸிக்கிற இன்றைய அறிஞர்கள், பகுத்தறிவுவாதிகள் ஆகியவர்களுடைய பெரிய ‘ஸுபர்ஸ்டிஷ’னாக இருக்கிறது.

இப்போது நான் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று சொன்னதிலும், இனிமேலே நான் சொல்லப்போகிற ‘ஆரியம் பாடுவது – தமிழ் பாடுவது’, ‘ஆரியக் கூத்து – தமிழ்க் கூத்து’ என்கிறவைகளிலும் இவை ஸம்ஸ்கிருதம் – ஸம்ஸ்கிருத base-ல் உண்டான கலாசாரம், தமிழ் – தமிழ் base-ல் உண்டான மரபு இவற்றைக் குறிப்பதேயன்றி, Race difference-ஐ அல்ல. ஒரே ரேஸின் உட்பிரிவுகளாகவே இவற்றைக் கொள்ள வேண்டும்.

பிரிந்தே போகாமல் இரண்டையும் இணைக்கிற ஐக்ய பாவத்தின் உச்சியில்தான் ராஜராஜன் தன் மனஸைக் கவர்ந்த இரண்டு மூர்த்திகளில் ஒன்றுக்கு “ஆடவல்லான்” என்ற அழகான தூய தமிழ்ப் பெயரையும், இன்னொன்றுக்கு “தக்ஷிணமேரு விடங்க” என்ற ஸ்வச்சமான ஸம்ஸ்கிருதப் பெயரையும் இட்டான். இந்த இரண்டு பெயர்களைக் கேட்டாலே, ஒரே ஈச்வரன்தான் இந்த இரு பெரும் மரபுகளுக்கும் மூலமாக இருக்கிறான் என்ற உணர்ச்சி ஏற்பட்டு, பேத புத்தி போய்விடும்.

இந்த இரண்டு பேர்களும் அன்றாட வாழ்க்கையிலேயே பிரஜைகள் எல்லாருடைய நாக்கிலும் புரண்டு, ஐக்ய பாவம் குறையாமல் செய்ய வேண்டும் என்றுதானோ என்னவோ, படி, மரக்கால் மாதிரியான அளவைகளுக்குக் கூட ‘ஆடவல்லான்’, ‘தக்ஷிண மேரு விடங்கன்’ என்றே ராஜராஜன் பெயர் கொடுத்தான்! ஈச்வரன்தான் நமக்குப் ‘படி அளக்கிறான்’ என்று புரிய வைக்கிற மாதிரியும் இருக்கிறது!

htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it