நாடகக் கலையின் தனி விசேஷம் நாடகக் கலையின் ஒரு தனி விசேஷம் உண்டு ஒரு லெக்சர் கேட்கிறோம் மனஸில் ஓரளவுக்குப் பதிகிறது அதோடு கொஞ்சம் பாட்டு கீட்டு சேர

நாடகக் கலையின் தனி விசேஷம்

நாடகக் கலையின் ஒரு தனி விசேஷம் உண்டு. ஒரு லெக்சர் கேட்கிறோம். மனஸில் ஓரளவுக்குப் பதிகிறது. அதோடு கொஞ்சம் பாட்டு கீட்டு சேர்த்துக் கதாகாலக்‌ஷேபம் என்று பண்ணினால் அது இன்னும் அழுத்தமாக உள்ளே போய்ப் பதிகிறது. ஆனால் இங்கே கூட ஹரிகதைக்காரர் வர்ணிக்கிற சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் நாம் நேரிலே பார்க்காமல் மானஸிகமாகத்தான் பார்க்கிறோம்; கேட்கிறோம், இதுவே ‘டிராமா’ என்றால் பல பாத்திரங்கள் நேரிலே வந்து தினுசுதினுசான உணர்ச்சிகளைக் காட்டி நடிக்கிறார்கள். ‘ஸீன்’களைப் பார்க்கிறோம். ரொம்பவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. அதனால் மனஸில் ஆழமாகப் புகுந்து விடுகிறது.

மகாகவிகள் பலவிதமான அலங்காரங்களுடன் (தமிழில் ‘அலங்காரம்’ என்பதை அணி என்றே நேர் மொழி பெயர்ப்பாகச் சொல்வார்கள்) ப்ராஸம் முதலான சப்த அழகுகளுடனும் காவியங்களைச் செய்திருக்கிறார்கள். சம்ஸ்கிருதத்தில் தண்டி செய்திருக்கிற அலங்கார சாஸ்திரத்தைப் பின்பற்றியே தமிழில் ‘தண்டியலங்காரம்’ என்று இருக்கிறது. ‘அலங்காரம்’ என்றேலே அது மேலுக்குப் போட்டுக் கொள்கிறதுதான்; அதுவே ஆசாமி இல்லை. அப்படியே காவியத்துக்கு உவமை, உத்ப்ரேக்ஷை போன்ற எத்தனை ‘அணி’களிருந்தாலும், மூலமாக இருப்பது அதன் பொருள்தான். காவியத்துக்கு ஜீவனாக இருப்பது உணர்ச்சி, அநுபவம்; இதை ‘ரஸம்’, ‘ரஸம்’ என்று விசேஷித்துச் சொல்வார்கள். Nature என்கிற இயற்கை வர்ணனை, பாத்திரங்களுடைய ஸ்வபாவம் என்கிற மன இயற்கையின் விசித்திரங்கள் எல்லாவற்றையும் ஒரு கவி எத்தனைக்கெத்தனை நன்றாகச் சித்தரித்து, அல்லது பிரதிபலித்து எழுதுகிறாரோ அத்தனைக்கத்தனை அது ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. கவிதையாக, காவியமாக வைத்துக்கொண்டு நாம் படித்தும் கேட்டும் மட்டும் சந்தோஷப்படுகிற கலாசிருஷ்டிகளுக்கு ‘ச்ராவ்ய காவ்யம்’ என்று பெயர். அதையே மேடை மேல் நடித்துப் பார்க்கிற மாதிரி ஸீன் ஸீனாகப் பிரித்து, வசனங்களைப் போட்டு எழுதிவிட்டால் ‘த்ருச்ய காவ்யம்’ என்று சொல்வார்கள். த்ருச்ய காவ்யம் தான் நாடகம்.

ஸ்தூலமாக ஸீன்களைக் காட்டிக்கொண்டு, நடிகர்கள் ஸ்தூலமாக வந்து வீரம், சிருங்காரம், கருணை இத்யாதி பாவங்களைக் காட்டுவதைவிட, நாமே மானசிகமாக பாவனை பண்ணிக் கொள்வதிலேயே சிலர் இன்னும் நுட்பமான ரஸாநுபவத்தைப் பெற முயலலாம். ஸம்ஸ்கிருத இலக்கியத்தில், எழுதுகிறவனே எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லித் தீர்த்து விடாமல் ரஸிகன் அதைப் பூர்த்தி செய்து கொள்கிற மாதிரி விட்டுவிடுவதை ஆலங்காரிகர்கள்  (அலங்கார சாஸ்திரக்காரர்கள்) விசேஷமாக மெச்சுவார்கள். இம்மாதிரி, சொல்லாமல் சொல்வதை ‘தவனி’, ‘வ்யங்க்யம்’ என்றெல்லாம் ரொம்பவும் புகழ்ந்து சொல்வது வழக்கம். காளிதாஸாதிகள் எழுதியுள்ள நாடகங்களிலும் கூட இப்படிப்பட்ட ‘த்வனி’ அழகு நிரம்ப உண்டு. ‘டிராமா’ என்பதால் எல்லாவற்றையும் நாசூக்கில்லாமல் போட்டு உடைத்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. இப்படிப்பட்ட – ‘சாகுந்தலம்’ மாதிரி, ‘மஹாவீர சரிதம்’ மாதிரி இருக்கப்பட்ட – நாடகங்களை நாம் மானஸிகமாக – ‘கற்பனைக் கண்ணால்’ என்று இந்த நாள் பத்திரிகைக்காரர்கள் எழுதுகிறார்களே, அப்படி – பார்த்துக் கொண்டாலே, ‘ஸ்டேஜ்’ மேல் பார்ப்பதைவிடக்கூட உயர்த்தியாக இருந்தாலும் இருக்கும். ஆனால் இது ரஸிகனின் தரத்தைப் பொறுத்த விஷயம்.
பொதுவாகச் சொல்லப்போனால் ஜனங்களுக்கு கவிதை என்பதை வைத்துக் கொண்டு படிப்பதில் பிடிப்பு ஏற்பட மாட்டேன் என்கிறது. அதையே நாடகம் என்று போட்டுக் காட்டினால் உத்ஹாஸத்தோடு கூட்டம் கூட்டமாகப் போய்ப் பார்க்கிறார்கள். கதாபாத்திரங்கள் என்று எழுத்திலே ‘abstract’ – ஆக இருக்கிறவர்களை நம் போலவே உள்ள மநுஷ்யர்கள் வேஷம் போட்டுக்கொண்டு கண் முன்னால் காட்டும்போது, தன்னால் அது ஜனங்களை இழுத்து விடுகிறது! புஸ்தகத்தினாலோ, லெக்சரினாலோ செய்வதைவிட ஆழமாகவும் அழுத்தமாகவும் ஜனங்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்வதற்கு நாடகமே மிகவும் சக்தியோடு உதவுகிறது.