நாடு, தனி மனிதர் இரண்டின் சுதந்திரத்தி

நாடு, தனி மனிதர் இரண்டின் சுதந்திரத்திற்காகவும் பிரார்த்தனை, வாழ்த்து

வெகு காலமாக நாடு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுள்ளது. கடவுள் அருளாலும், மகான்கள் ஆசியினாலும், மக்களின் ஒப்பற்ற தியாகத்தினாலும் கிடைத்த இந்தச் சுதந்திரத்தினால் நமது நாடு செழித்தோங்கி, பஞ்சம் விலகி, தேச மக்கள் சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் எதுவும் அறவேயின்றி, ஒற்றுமையுடன் அன்பு கொண்டு ஒரே சமுதாயமாக ஒட்டி வாழ அருள் பொழிய வேண்டுமென எங்கும் நிறைந்த கடவுளைப் பிரார்த்திப்போமாக!

நம் நாடு சுதந்திரம் அடைந்ததை ஒட்டி நாமும் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் அடைய முற்பட வேண்டும். நம்மை நாம் முற்றிலும் அறிந்து கொண்டால் தான் நாம் சுதந்திரம் அடைந்தவர்களாவோம். இந்நிலைக்கு மாறாகத் தற்போது நமது மனமோ இந்திரியங்களோ நமக்கு வசப்படவில்லை. ஆசையையும் கோபத்தையும் நம்மால் அடக்க முடியவில்லை. இவை இரண்டுமே நம்மை எப்பொழுதும் துன்புறுத்தி வருகின்றன. எந்தப் பொருளை எவ்வளவு அடைந்த போதிலும், போதும் எனும் மன நிம்மதி நமக்கு ஏற்படுவதில்லை. உலகத் துயரம் நம்மை விட்டபாடில்லை. சிறு துயரத்தைக் கண்டு விட்டாலும் மனம் கலங்கத்தான் செய்கிறது. இதனின்றும் கரை ஏற வழியென்ன?

நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியெல்லாமே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தைத் தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவேனும் முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். மனம் அடங்கிவிட்டால் நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய பூர்ண சுதந்திரமாகும்.

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனத்தை சாந்தமாக வைத்துக் கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல், கடவுளது தியானத்தில் அமர வேண்டும். வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால் நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும். இவ்வித சாதனையைப் படிப்படியாக மேற்கொண்டவனுக்குச் சீக்கிரமாக ஆத்ம ஞானம் உண்டாகும். குறைவில்லாத அந்த ஞானத்தைப் பெறுபவன் தான் உண்மையான சுதந்திரனாகிறான்.

பிற ஸ்திரீகளைத் தாயார்களாக மதிக்க வேண்டும். பிற உயிரைத் தன்னுயிர் போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாயிருந்தாலும் உண்மையே பேச வேண்டும். சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும். எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும். மக்களெல்லாம் சுகமாக வாழ வேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும். ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். இவற்றுக்கெல்லாம் புத்தியும் சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

பண்டைய பாரதம் போலவே இன்றைய சுதந்திர பாரதமும் உயரிய தியாக இலட்சியத்தில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ வேண்டுமெனப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்!