Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஒளவை கயிலை சேர்ந்தது: சுந்தரர் சரிதத் தொடர்பு

ஒளவை கயிலை சேர்ந்தது:சுந்தரர் சரிதத் தொடர்பு

ஸுந்தரமூர்த்தி நாயனார் கதையோடு சேர்த்து அப்படிச் சொல்கிறது. என்ன கதையென்றால்:

மலையாள தேசத்தை ஆண்டு கொண்டிருந்த சேர ராஜா.... சேரமான் பெருமாள் என்றேதான் அவருக்குப் பெயர் சொல்வது. திருமாக்கோதையார் என்பதே அவருடைய இயற்பெயர். அவர் ஸுந்தரமூர்த்திக்கு ரொம்பவும் ஆப்தம். அவருடைய தலைநகர் திருவஞ்சைக்களம். அங்கே அவரோடு தங்கியிருந்த ஸுந்தரமூர்த்தி ஒரு நாள் சேரமான் பெருமாள் ஸ்நானத்திற்குப் போயிருந்தபோது தாம் மட்டும் கோவிலுக்குப் போனார். ஸ்வாமி தர்சனம் பண்ணினவுடன் ஒரேயடியாக விரக்தி வந்து, "வெறுத்தேன் மனவாழ்க்கையை விட்டொழிந்தேன்" என்று கதறிப் பதிகம் பாடினார். இந்த பூலோகத்திலே அவர் கடைசியாகப் பாடின "தலைக்குத் தலை மாலை அணிந்ததென்னே?" என்று பதிகத்தில் அப்படிச் சொல்லி முறையிட்டிருக்கிறார்... "பூலோகத்திலே பாடின" என்று சொல்வானேனென்றால், அதற்கப்புறம் அவரை கைலாஸத்திற்குப் போகிறபோது ஆகாச வீதியிலிருந்தும் ஒரு பதிகம், "தான் எனை முன்படைத்தான்" என்று ஆரம்பித்துப் பாடினார்....

அதற்கு முந்தித்தான் ரொம்ப விரக்தியாக அவர் பாடினது. இங்கே அவர் பாட, அங்கே கைலாஸத்தில் ஸ்வாமி அதைக் கேட்டு மனஸ் இரங்கினார். பிரம்மாதி தேவர்களைப் பார்த்து, "ஸுந்தரம் என்கிட்டே திரும்பணும்னு துடிச்சுண்டிருக்கான். நிங்கள்லாம் ஐராவதத்தோட - அதுதான் இந்திரனுடைய பட்டத்து யானை, பாற்கடலைக் கடைந்தபோது உண்டானது, நாலு தந்தத்தோடே வெள்ளை வேளேரென்று இருக்கும், அதனுடன் - அஞ்சைக்களம் போய் ஸுந்தரத்தை அதுமேலே ஏத்தி, மரியாதை பண்ணி சட்னு அழைச்சுண்டு வாங்கோ" என்றார்.

மெய்யடியார்கள் என்கிற நிஜ பக்தர்களுக்கு ஸ்வாமி ப்ரம்மாதி தேவர்களும் மரியாதை தரும்படியான ஸ்தானம் தருகிறார். அவர்களும் அப்படியே போய் ஸுந்தரமூர்த்தியை ஐராவதத்து மேலே ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

ஸ்நானம் முடித்து வந்த சேரமான், ஆகாச வீதியில் அவர்கள் போவதைப் பார்த்து, 'என்னடாது!அத்தனை ஆப்தமாயிருந்தவர் ஒரு வார்த்தை சொல்லாமப் பொறப்பட்டுவிட்டாரே!' என்று தவித்துக் கொண்டு குதிரை மேலே ஏறிக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார். கொஞ்ச தூரம் போனதும் அவர்களைப் பிடித்துவிட்டார்.

போகிற வழியிலே கீழே பூமியிலே ஒளவையார் பிள்ளையார் பூஜையில் உட்கார்ந்திருப்பதை ஸுந்தர மூர்த்தியும் சேரமானும் பார்த்தார்கள். "நீயும் எங்களோட கைலாஸத்துக்குக் கிளம்பேன்" என்றார்கள்.

"எடுத்துண்ட பூஜையை மொதல்ல முடிச்சாகணும். அப்பறந்தான் மத்த எல்லாம், கைலாஸமானாலும் ஸரி" என்று அவள் ஸஹஜமாகச் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, பூஜையை நிதானமாக விதித்தாகப் பண்ணி முடித்தாள். பிள்ளையாரிடம் ராக பக்தி அப்படியே நிரம்பிய உபாஸகியான ஒ£வை இப்படி வைதேய பக்திக்கு மதிப்புக் கொடுத்துச் சொன்னதை கவனிக்கணும். வேடிக்கை பார்க்கணுமென்று நினைத்த பிள்ளையார் அன்றைக்கு அவள் நிவேதனம் பண்ணியிருந்த 'நாலும் கலந்த' நைவேத்யத்தை ரொம்ப ரொம்ப நிதானமாகச் சாப்பிட்டு ஏகமாக 'டிலே' பண்ணினார்.

அதற்காக அவள் ஒன்றும் கலங்கிவிடவில்லை. ஏனென்றால் மனங் கலங்காத யோக ஸமாதியை அவளுக்கு எப்பவுமே உள்ளூர அந்த விக்நேச்வரரே அநுக்ரஹித்திருந்தார்

நின்று நிதானமாகச் சாப்பிட்ட அப்புறம் பிள்ளையார், "ஒனக்குக் கைலாஸத்துக்குத்தானே போகணும்? போறதுக்கு முன்னாடி c ஒண்ணு பண்ணணும். ஒலகத்துல இருந்த மட்டும் ஒலகத்துக் கொழந்தைகளுக்கா நெறய்ய பாடிக் குடுத்தே அதுவே எனக்கு ப்ரீதிதான். இருந்தாலும் தெய்வக் கொழந்தையான என்னைப் பத்தியே ஒரு முழுப்பாட்டும் c பாடிக் குடுக்கணும். அப்புறந்தான் கைலாஸ ப்ராப்திக்கு ஆனதைப் பண்ணுவேன்" என்றார்.

அதற்கு ஒளவைப் பாட்டி, "எனக்கு c இருக்கிற எடமே கைலாஸந்தான். ஆனாலும் c எனக்கு லோக வாழ்க்கை போறும்னு நெனச்சுக் கைலாஸத்துல சேக்க நெனப்பியானா அதுவும் ஸரி. c எப்படிப் பண்ணினாலும் ஸரி. ஒன்னைப் பாடணும்னியே. பேஷாப்பாடறேன். ஆனா கைலாஸம் போறதுக்காகவோ, வேறே எதுக்காவோ பாடலை, ஒன்னைப் பாடறதே மோட்சானந்தம் என்கிறதுக்காகவே பாடறேன்" என்று சொல்லிவிட்டு, உள்ளுர அவளுக்கு ஸதா காலமும் அவர் அநுக்ரஹத்தால் ஏற்பட்டிருந்த யோக ஸித்தியுடைய மஹிமை லோகத்துக்கெல்லாம் தெரிகிற மாதிரி அவரைப் பற்றி ஒரு ஸ்தோத்ரம் பாடினாள். அதுதான் 'விநாயகர் அகவல்'.

பாடி முடித்ததும் பிள்ளையார் அவளை அப்படியே தும்பிக்கை நுனியாலே வளைத்துப் பிடித்துத் தூக்கி அந்தத் தும்பிக்கையை அப்படியே நீட்டி, நீட்டி, ஒரே நீட்டாகக் கைலாஸம் வரைக்கும் நீட்டி நேரே ஈச்வர ஸந்நிதானத்திலேயேச் சேர்த்துவிட்டார்!

அவள் அங்கே போனதற்கு அப்புறந்தான் ஸுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் வந்து சேர்ந்தார்கள். தடியை ஊன்றிக் கொண்டு நடக்கிற தொண்டு கிழவி எப்படியடா நமக்கு முன்னாடி வந்திருக்கிறாளென்று அவர்களுக்கு ஒரே ஆச்சர்யமாகி விட்டது. ஸுந்தரர் தெய்விகமான யானை மேலே வந்ததால் அதிவேகமாக வந்தார். சேரமான் பெருமாளோ பங்சாட்சரத்தைக் குதிரை காதிலே சொன்னதால் அவருக்கிருந்த மந்த்ர ஸித்தியினாலே அந்தக் குதிரை யானைக்கும் முன்னாலே 'பைலட் கார்' மாதிரிப் போயிற்று ராஜா இப்படிப் பைலட்டாகப் புறப்பட்ட ஆகாச மார்க்கமாகப் போகிறதைப் பார்த்த அவருடைய 'பைலட்'கள் - அவர்களெல்லாம் குதிரை வீரர்கள் - யஜமான விச்வாஸத்தில், அவரைப் பிரிந்து தாங்கள் உயிர் வாழ்வதா என்று அத்தனை பேரும் தங்களைத் தாங்களே உடைவாளினால் ஹத்தி பண்ணிக் கொண்டு விட்டார்கள். அந்த த்யாக

சக்தியினாலே அவர்களுக்கு 'வீர யாக்கை' கிடைத்தாகச் சொல்லியிருக்கிறது. அதாவது, தர்ம யுத்தம் செய்து செத்துப் போகிற சுத்த வீரர்களுக்குக் கிடைக்கிற திவ்ய சரீரம் கிடைத்ததாம். அந்த சரீரத்தோடு அவர்கள் அப்படியே ஆகாசத்தில் எழும்பித் தங்கள் ராஜாவுக்கும் முன்னாடி அவரைப் பைலட் பண்ணிக் கொண்டு கைலாஸத்திற்குப் போனார்கள்.

ஸ்வாமியை விட்டுப்பிரிந்திருக்க முடியாத ஸுந்தரர் யானை மேல், அவரை விட்டுப் பிரிந்திருக்க முடியாத சேரமான் அவருக்கு முந்தி குதிரை மேல், சேரமானை விட்டுப் பிரிந்திருக்க முடியாத சேவகர்கள் அவருக்கும் முந்தி, ஸ¨ட்சம சரீரத்தில் இந்த எல்லாருக்கும் முந்தி குடுகுடு பாட்டி நர சரீரத்திலேயே!ஸுந்தரரும் சேரமானுங் கூட அப்படி (நரசரீரத்திலேயே) போனவர்கள்தான்.

அவளை அங்கே பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த இரண்டு பேரும், "என்னமா எங்களுக்கு முன்னாடி வந்தே?" என்று கேட்டார்கள்.

பாட்டி சொன்னார்:"என்னமாவா? நன்னாக் கேட்டேள் ஸாட்சாத் பராசக்தியோட தலைப் பிள்ளை ஒருத்தன் இருக்கானே, மதுரமொழி உமைபாலன், அவன் சரணாரவிந்தமே த்யானமாக இருப்பவர்களுக்கு எந்த ரத, கஜ, துரக, பதாதியும் காத தூரம் பின்தங்கித்தான் வரணும்!" என்று பாட்டாகவே சொன்னாள். ஸரியாக ஞாபகமில்லை. "குதிரையும் காதம், கிழவியும் காதம் குல மன்னனே" என்று முடியும். ஸ்வாமிக்கே தோழராக இருந்து அவரையும் ஏவி வேலை வாங்கின ஸுந்தர மூர்த்தியிடம் அப்படிச் சொல்வது மரியாதையாகாது என்பதால் சேரமான் பெருமாளைப் பார்த்துக் 'குல மன்னனே!' என்றுபாடினாள்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is வாக்கு - மனங்களுக்கு அருள்   :   தர்மத்திலிருந்து மோட்சம் வரை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  நால்வருக்கும் விநாயகர் அருள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it