நமஸ்காரத்திற்கு உரியவராக : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆனால் அந்த மூன்று பேரை அந்த மூன்று கார்யத்துக்காக நமஸ்காரம் பண்ணமுடியாமலிருக்க, இவருக்கு (குருவுக்கு) நமஸ்காரம் – தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்று சொல்லியிருக்கிறது. இங்கேதான் உபமாலங்காரம் என்றால் அதில் ஒற்றுமை அம்சத்தோடு வேற்றுமை அம்சமும் இருக்கத்தான் செய்யுமென்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்த மூன்று பேருக்கு ஏன் நமஸ்காரம் பண்ணமுடியவில்லை?

ஒருவரை நமஸ்காரம் பண்ணுவது எப்போது? ஒன்று, அவர்கள் இதுவரை பண்ணியது நமக்கு ஸந்துஷ்டி, த்ருப்தி அளித்தால் அதற்காக நன்றி பாராட்டி, அதன் அடையாளமாக நமஸ்கரிப்போம். அல்லது நாம் வேண்டிக்கொண்டு அதன்மேல் அவர் இனிமேல் நமக்கு ஸந்தோஷமான, பிடித்தமான ஒன்றைச் செய்வாரென்றால், நமஸ்கரித்துப் பிரார்த்தனை பண்ணிக்கொள்வோம்.

ப்ரஹ்மா நம்மை ஸ்ருஷ்டித்ததிலோ, விஷ்ணு நம்மைப் பரிபாலிக்கிற விதத்திலோ, மஹேச்வரன் நம்மை ஸம்ஹரிக்கப் போவதிலோ நமக்கு ஸந்தோஷமில்லை. நம்முடைய ஸ்ருஷ்டி, இதுவரை நடந்த ‘பரிபாலிப்பு’ எனப்படுவது ஆகிய சென்றகால, நிகழ்கால விஷயங்களுக்கு நம்மால் ப்ரஹ்ம விஷ்ணுக்களிடம் நன்றி பாராட்டி நமஸ்காரம் செய்யமுடியவில்லை. இனிமேலே அவர்கள் நமஸ்காரம் பெறும் விதத்தில் ஏதாவது செய்வார்களா என்றால் – வருங்காலத்தில், இந்த ஜன்மாவில் ப்ரஹ்மா நம்மைக் குறித்து எதுவும் செய்வதற்கில்லை. ஸ்ருஷ்டித்ததோடு அவர் கார்யம் முடிந்துவிட்டது. ஸரி, அடுத்த ஜன்மா நல்லதாகத் தரச்சொல்லி வேண்டிக்கொள்ளலாமா என்றால், அதிலும் அவருக்கு ஸொந்த அதிகராம் எதுவுமில்லை. நம் கர்மாவைப் பொறுத்துப் பரமாத்மாவின் சட்டப்படி எப்படிப்பட்ட ஜன்மா வாய்க்கவேண்டுமோ அதைத்தான் அவர் தரமுடியும். ஆகையால் எதிர்காலத்தை உத்தேசித்தும் நாம் அவரை நமஸ்காரம் பண்ணுவதற்கில்லை. இதுவேதான் விஷ்ணுவுக்கும். நாம் கேட்டுக்கொள்வதற்காக அவர் இனிமேல் நல்ல ஸம்ரக்ஷணை கொடுக்கமுடியாது; கர்மாப்படி தான் பண்ணுவார்.

மஹேச்வரனுடைய தொழிலான ஸம்ஹாரம் இனிமேலே நடக்கவேண்டியதுதான்; இதுவரை அவர் செய்ததாக எதுவுமில்லை. முன் ஜன்மங்களில் ஸம்ஹாரம் பண்ணினாரே என்றால், அந்த ஜன்மங்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதனால் அப்போது பண்ணின ஸம்ஹாரத்துக்காக இப்போது அவரை நாம் ‘தாங்க்’ பண்ணி நமஸ்கரிப்பதற்கில்லை. இனிமேலே இந்த ஜன்மாவில் அவர் ஸம்ஹரிக்கப் போகிறார் என்பதிலும் நாம் ஸந்தோஷப்பட்டு நமஸ்காரம் செய்வதற்கில்லை. அல்லது, “ஸம்ஹாரம் பண்ணாதேள், ஸ்வாமீ!” என்று வேண்டுமானால் நமஸ்காரம் செய்து கேட்டுக்கொள்ளலாமா என்றால், அதற்கும் பலனிருக்காது. கர்மாவைப் பார்த்து அவர் ஆயுஸை முடிக்கிறபடி முடித்துத்தான் வைப்பார்.

இப்படியாக இவர்கள் பண்ணியது, பண்ணுவது, பண்ணப்போவது ஆகிய எதிலும் நமக்குப் பிடித்தமானதைச் செய்யவில்லை என்பதால்தான் நமஸ்காரம் செய்யத் தோன்றவில்லை.

ஆனால், குரு பண்ணியது, பண்ணுவது, பண்ணப்போவது எப்படி இருக்கின்றன?

அஞ்ஞானிகளாக ஸம்ஸாரத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடிக் கொண்டிருந்த நமக்கும் கொஞ்சங்கொஞ்சமாவது ஆத்ம சாந்தி என்றால் என்னவென்று தெரிவதற்கு வழி திறந்துவிட்டாரே, அந்த வழியிலே நம் கையைப் பிடித்துக்கொண்டு அடி அடியாக நடத்தி வைக்கிறாரே – இப்படி அவர் செய்த, செய்கிற அநுக்ரஹத்திற்காக அவருக்கு நாம் எத்தனை நன்றி தெரிவித்தால்தான் போதாது? எத்தனை நமஸ்காரந்தான் பண்ணக்கூடாது?

இனிமேல் செய்யப்போகிறது? – அது இதுவரை செய்ததையெல்லாம்விட மஹா பெரிசு. இதுவரை ஏதோ ஒரு சின்ன இடுக்கு வழியாக வரும் ஒன்றிரண்டு ரச்மிதான் ஆத்ம ஸ்வராஜ்யம் என்ற ஜ்யோதிலோகத்திலிருந்து நாம் அநுபவித்திருப்பது. இனிமேலே – அது எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் இருக்கட்டும் – முடிவாக என்றோ ஒரு காலத்தில் இவரால்தான் நாம் ஜ்யோதி லோகத்திலேயே ப்ரவேசித்து, இன்னும் அதற்கு மேலே, அந்த ஜ்யோதிஸ்ஸாகவே ஆகிவிடப் போகிறோம். அப்படி நம்மைப் பண்ணுவிக்கிற வரையில் அவர் ஓயமாட்டார். இந்த ஜன்மாவிலேயே நாம் அந்த லக்ஷ்யத்தை அடையாவிட்டாலும் பரவாயில்லை. நாம் எத்தனை ஜன்மா எடுத்தாலும் அவர் கூடவே வந்து நம்மை முடிவாக அதில் சேர்க்காமல் விடமாட்டார்.

நிஜமான குரு என்றால் நிஜமான சிஷ்யனுக்கு இந்த நித்யானந்த ப்ராப்தியை உண்டாக்கும்வரையில் விடவேமாட்டார் – ஜன்ம ஜன்மாந்தரமானாலும் ஸரி.

நிஜமான குருவைப் பற்றித்தான் பேச்சு. அப்படியில்லாதவரைப்பற்றி எதற்கு நம் நேரத்தை வீணாக்கிக் கொண்டு, தொண்டைத் தண்ணியை வற்ற அடித்துக் கொண்டு ச்ரமப்படணும்?

ஆனபடியால், பண்ணின, பண்ணுகிற, பண்ணப்போகிற எல்லாவற்றாலும் நமக்கு ஸந்தோஷத்தைக் கொடுப்பவராக, நம்முடைய நன்றிக்கு மிகவும் பாத்திரராக இருக்கும் குருவுக்கு நாம் எத்தனை நமஸ்காரமும் – ‘அனந்த கோடி நமஸ்காரம்’ என்று சொல்வதுண்டு, அப்படி – செய்யலாம் தான், செய்யவேண்டியதுதான்.

“குருர் – ப்ரஹ்மா குருர் – விஷ்ணு: குருர் – தேவோ மஹேச்வர:” என்று சொல்லி “தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்று முடித்ததில் ஒன்றும் தப்பாக, பொருத்தமில்லாததாக இல்லை.

ப்ரஹ்ம-விஷ்ணு-ருத்ரர்கள் நம்முடைய கர்மாப்படி மட்டுமே பலன் தருகிறவர்கள்… (ஒன்றை மறந்துவிடப்படாது – இங்கே நாம் விஷ்ணுவையும், சிவனையும் பொதுவாக முழு முதற்தெய்வமாகப் பார்ப்பது போலப் பார்க்காமல், ஸ்திதி – ஸம்ஹார கர்த்தாக்களாக மாத்திரந்தான் பார்க்கிறோம். அப்போது நம் கர்மாப்படிப் பண்ணுவதற்கதிமாக அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள்.) குருவோ நாம் கர்மாவைக் கழிப்பதற்கு ஸஹாயம் செய்கிறார். கர்மா அது பாட்டுக்கு அதன் பலனைத் தந்து கொண்டிருந்தாலும் அது நம்மை பாதிக்காதபடி பக்தி, ஞானக் கவசம் போட்டு நமக்கு அடிபடாதபடிக் காப்பாற்றி விடுகிறார். கர்மாவின் வீர்யமே குறைவதற்கும் அவர் அநுக்ரஹிக்க முடியும். அவரே நம் கர்மாவை வாங்கிக் கொண்டுகூட நம்முடைய சுமையைக் குறைக்கமுடியும்.

இப்படி வித்யாஸமிருக்கிறது – த்ரிமூர்த்திகள் கர்மாப்படி நடத்துவிக்கிறார்கள்; குருமூர்த்தி கர்மாவிலிருந்து கடத்துவிக்கிறார். ஆகையால் நம்முடைய நமஸ்காரங்களுக்கெல்லாம் உரியவராக இருக்கிறார். அதனால், “குருர் – ப்ரஹ்மா குருர் – விஷ்ணு: குருர் – தேவோ மஹேச்வர: தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்பது ரொம்பவும் ஸரிதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is வித்யாஸமான முத்தொழில்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பரப் பிரம்மமாக
Next